அன்னையின் பெருவிழா 12 டிசம்பர் |
|
|
|
மீசோஅமெரிக்கா, புதிய உலகம்,1521: அஸ்டெக் பேரரசின் தலைநகரம்
இஸ்பானிய படைகளிடம் வீழ்ந்தது. இது நடந்து இருபது ஆண்டுகளுக்குள்ளாக,
நரபலி கொடுக்ககூடிய, அஞ்ஞான மார்க்கத்தை வழி வழியாக பின்பற்றிய,
9 இலட்சம் பூர்வ குடிகள் கிறிஸ்துவத்தைப் பின்பற்றினர். இத்தகைய
அதிசயமிக்க, வரலாற்று சிறப்புமிக்க மனமாற்றம் நிகழ்ந்தது எவ்வாறு?
9, டிசம்பர் 1531 அன்று, "பரலோகத்திலிருந்து அன்னை" அமெரிக்காவின்
பூர்வ குடியைச் சேர்ந்த, யுவன் டியாகோ என்ற எளியவர் ஒருவருக்கு
தற்போதைய மேக்சிகோ நகரின் வடமேற்கில் இருந்த டேபெயக் (Tepeyac)
என்ற மலையில் காட்சியளித்தார்கள்.
அவர்கள் தன்னை, "அனைத்தையும் படைத்த, பரலோக பூலோக அரசராம், மனுக்குலத்தின்
உண்மைக் கடவுளின் தாயாராகிய, என்றும் கன்னியான பரிசுத்த மரியாள்"
என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
அந்த இடத்தில் தனக்காக ஆலயம் ஓன்று எழுப்ப வேண்டும் என்று
வேண்டுதல் ஒன்றினை யுவன் டியாகோ வாயிலாக அப்பகுதி ஆயரிடம் சமர்ப்பிக்க
வேண்டினார். அதற்கு ஆயர் நம்பாமல், மிகவும் தயங்கியபடியே, அதற்கான
அடையாளம் ஒன்றினை காட்டுமாறு கூறினார்.
12, டிசம்பர் 1531 அன்று, அன்னை மாமரி மீண்டும் தோன்றி, யுவன்
டியாகோவை அந்த கடுங்குளிரான டிசம்பர் மாத மத்தியில் அந்த மலையின்
மேல் சென்று பூத்திருக்கும் ரோஜாக்களை பறித்துச் சென்று ஆயரிடம்
காட்டுமாறு பணித்தார்கள். யுவன் டியாகோவும் சென்று அவற்றை தரம்
குறைந்த கற்றாலை நார்களினாலான தனது தளர்ச்சியான மேலங்கியில் (tilmatli)
சேகரித்துக் கொண்டு ஆயரிடம் கொண்டு சென்றார். ஆயரின் முன்னால்,
அதனை திறந்த பொழுது ரோஜாப்பூக்கள் கீழே சிதறிவிழுந்து அந்த அங்கியில்
(tilma) குவாதலூபே கன்னியின் திருவுருவம் அதில் பதிந்திருப்பதை
அனைவருக்கும் காண்பித்தது.
இருபது வருடங்களுக்குள்ளாக அழிந்து போகும் அந்த மேலங்கி, 485
வருடங்களாக அழியாமல் குவாதலூபே அன்னை காண்பித்த அதியசயத்தை
தாங்கி இன்றளவும் இருக்கின்றது. அதுமட்டுமன்றி அதிலுள்ள அன்னையின்
கண்கள் அந்த நாளில் நிகழ்ந்ததை பிரதிபலித்து சாட்சியாக இருக்கின்றது.
12 அக்டோபர் 1945 அன்று பாப்பரசர் 12-ம் பத்திநாதர் குவாதலூபே
அன்னையை "மேக்சிகோவின் அரசி மற்றும் அமெரிக்காவின் பேரரசி" என்று
அறிவித்தார்.
12 டிசம்பர் 1999 அன்னையின் பெருவிழா அன்று பாப்பரசர் இரண்டாம்
அருள் சின்னப்பர் டிசம்பர் 12-ம் நாள் அமெரிக்கக் கண்டத்திற்கான
கத்தோலிக்கர்களின் புனித நாளாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல்
பூவுலகின் நல்வாழ்வையும் கருவில் அழிக்கப்படும் குழந்தைகளின்
பாதுகாவலியாகவும் அறிவித்தார்.
=======================================================================
பரிசுத்த தேவமாதாவிற்க்கு திருத்தந்தை புனித இரண்டாம் ஜாண்பால்
பூவுலகின் நல்வாழ்விற்க்காக ஒப்புக்கொடுத்த ஜெபம்
அருள் நிறைந்த மரியே,
புதிய உலகின் வைகறை வசந்தமே,
மனுக்குலங்களின் தாயானவளே,
இந்த பூவுலகின் நல்வாழ்வை உமது கரங்களில் ஒப்புக்கொடுக்கின்றோம்.
அம்மா மரியே,
சில பெற்றோர்களின் தவறால் இவ்வுலகில் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு
கருவில் அழிக்கப்படும் மழலைகளின் மேலும்,
வாழ்வாதாரம் மறுக்கப்படும் உமது அடியார்களாகிய ஏழை எளியவர்களின்
மேலும்,
ஈவு இரக்கமற்ற வன்முறைக்கு பலியாக்கப்படும் எண்ணற்ற ஆண்கள்,
பெண்களின் மேலும்,
தவறான வழிகாட்டுதலால் இரக்கமின்றி தயவு தாட்சணியமின்றி கருணைக்கொலை
என்ற பெயரில் கொலை செய்யப்படும் நோயாளிகள் முதியவர்கள் மேலும்,
உமது திருக்கண்களை திருப்பி பாதுகாத்தருளும்.
இவ்வுலக மாந்தர் அனைவரும்,
வாழ்வின் நற்செய்தியை புதிய கொடையாக ஏற்கும் மனங்களை பெறவும்,
நன்றியோடு அதனை தங்கள் வாழ்நாள் முழுவதும் உளமகிழ்வோடு
கொண்டாடவும்,
மன உறுதியோடு அதற்காக சான்று பகரவும்,
நல்ல செயல்கள் நல்ல எண்ணங்கள் நிறைந்த உலகை கட்டி எழுப்பவும்,
உண்மை அன்பு நிறைந்த உமது திருமகனின் வாழ்வு நெறிகளை கடைபிடிக்கவும்,
இவ்வுலகை படைத்து படைப்புகள் அனைத்தையும் நேசிக்கும் எல்லாம்
வல்ல தந்தையை புகழவும்,மாட்சிமைப்படுத்தவும்,
வேண்டிய வரங்களை தந்தருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.
|
|
|