Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 தாய் மரியாள்

  துன்பங்களில் வியாகுல அன்னை  
இறை இயேசுவிலும் அவரைப் பெற்றுத்தந்த மரியிலும் பிரியமானவர்களே!

துன்பங்களில் நம் எல்லாருக்கும் முன்மாதிரி வியாகுல அன்னை

நம்மைப் போன்ற ஒரு சாதாரணக் குடும்பப் பெண்ணாகிய மரியாள் குடும்பத்தில் இன்று நாம் எதிர்கொள்ளும் அனைத்தையும் அனுபவித்தவள்.

உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்ற சிமியோனின் வாக்கு அவர் இயேசுவை கருத்தாங்கிய நாளிலே தொடங்கி விட்டது. அது இயேசுவின் கல்வாரிப் பலியிலும், இயேசுவின் விண்ணற்றத்திற்குப் பின்பும் தொடர்ந்தது. குழப்பமான சூழ்நிலைகள் பலவற்றை தாய் மரியாள் தன் வாழ்வில் சந்தித்தார்.

1. உமது உள்ளத்னதயும் ஒரு வாள் ஊடுருவி பாயும். (லூக் 2:35).
2.இயேசுவைக் காப்பாற்றும் பொருட்டு எகிப்துக்கு தப்பிச்
    செல்லுதல். (மத் 2:13-15).
3. காணாமல் போன இயேசுவைக் கண்டடைந்தது (லூக் 2:46)
4. சிலுவை சுமந்து சென்றபோது தாயும் மகனும் சந்தித்தது.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டது.
6. இயேசுவின் உடலை தாய் மரியாவின் மடியில் கிடத்தியது.
7. இயேசுவின் உடலைக் கல்லறையில் அடக்கம் செய்தது. (லூக் 23:53)

வாழ்வின் இந்தக் குழப்பமான, துன்பமானச் சூழ்நிலைகளில் நாம் மரியாளிடமிருந்து கற்றுக் கொள்ள ஏராளமான பாடங்கள் உள்ளது. ஏழு வியாகுலங்களின் தாய் நமக்கு ஏழு படிப்பினைகளைக் கற்றுத்தருகிறார்.

1. துன்பம் மீட்பின் மறைபொருள். நமது துன்பத்திற்கான காரணம் ஒருவேளை நமக்கு நாம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதுவே நம்மை மீட்கும் ஆயுதம்.

2. துன்பத்தில் தான் மரியாள் தனது சீடத்துவத்தை நிறைவு செய்தார். நாம் இயேசுவின் உண்மையான சீடர்கள் என்றால் அன்றாடம் அன்னை மரியாள் போன்று நம் துன்பச் சிலுவைகளை மனத்துணிவுடன் உள்ளார்ந்த விருப்பத்துடன் தூக்கிக் கொண்டு அவர் பின் செல்ல வேண்டும்.

3. நாம் சந்திக்கும் ஒவ்வொரு வேதனையும் கிறிஸ்துவின் பாடுகளில் நாம் பங்கெடுப்பதற்கு கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பாக உணர்வோம். அவரது பாடுகளில் குறைவானதை நாம் நிறைவு செய்கிறோம் (கொலோ 1:24) என்ற உணர்வைப் பெற்றுக் கொள்வோம்.

4. சிலுவையடியில் நிற்கும் துணிவை ஆண்டவர் மரியாளுக்குக் கொடுத்தது போல துன்பங்களைச் சந்திக்கும், ஏற்றுக் கொள்ளும் மனத்துணிவை நமக்கும் கொடுத்துள்ளார் என்பதை உணர்ந்து முழுத்துணிவுடன துன்பங்களை எதிர்கொள்வோம்.

5. எனக்குத் துன்பம் விளைந்தது எனது நன்மைக்காகவே. அதனால் உம் விதிமுறைகளை நான் கற்றுக் கொண்டேன், (திபா 119:71) என்ற திருப்பாடல் ஆசிரியரின் நேர் நிலை மனநிலையை நாம் பெற்றுக் கொள்வோம்.

6. அன்னை மரியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ்ந்து செப்டம்பர் 4ஆம் தேதி புனிதர் பட்டம் பெற்றுள்ள அன்னை தெரசாள் போல பிறர் நலனுக்காகத் துன்பங்களைத் தாங்கும் பேறுபெற்றவர்களாக வாழ்வோம். பிறரின் துன்பங்களில் நாம் பங்கெடுப்பதால், நம் சுமைகளைச் சுமக்க வலிமை பெறுகிறோம். பிறர் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பதால் நம் வாழ்வுக்கு அர்த்தம் கிடைக்கின்றது.

7. துன்பம் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது. நமது விசுவாசத்தை ஆழப்படுத்துகிறது. ஆண்டவர் என் துன்பத்தைக் களிநடனமாக மாற்றுவார் என்ற எதிர்நோக்கை நமக்குள் விதைக்கிறது. இறைபராமரிப்பின் இளைப்பாறுதலை நமக்கு வழங்குகிறது. ஒட்டு மொத்தத்தில் நமது ஆன்மீக வாழ்வில் பால்குடி மகவாக இருக்கும் நம்மை திட உணவு உட்கொள்ளும் நிலைக்கு வளர்ச்சியடையச் செய்கிறது.

மரியாள் தனது ஏழு துயர்களின் வழி நமக்குக் கற்றுத்தரும் இந்த வாழ்க்கைப்பாடங்களை நாம் பின்பற்றி அவர்வழி நடப்போம். ஆண்டவரின் ஆசீர் உங்களோடு இருப்பதாக
!
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்