Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

    ✠ புனிதர் கசிமீர் ✠(St. Casimir)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 4
  ✠ புனிதர் கசிமீர் ✠(St. Casimir)

*போலந்து இளவரசர், ஒப்புரவாளர் :
(Prince of the Kingdom of Poland and Confessor)

*பிறப்பு : அக்டோபர் 3, 1458
வாவெல், க்ரகோவ், போலந்து அரசு
(Wawel, Krakw, Kingdom of Poland)

*இறப்பு : மார்ச் 4, 1484 (aged 25)
க்ரோட்னோ, லித்துவானிய பிரபுக்கள் மாளிகை
(Grodno, Grand Duchy of Lithuania)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*புனிதர் பட்டம்: 1602
திருத்தந்தை எட்டாம் கிளமென்ட்
(Pope Clement VIII)

*பாதுகாவல் :
லித்துவானியா (Lithuania)
போலந்து (Poland)
ரஷியா (Russia)

"கசிமீர் ஜகியல்லோன்" (Casimir Jagiellon) என்ற முழுப்பெயர் கொண்ட புனிதர் கசிமீர், போலந்து நாட்டின் இளவரசரும் (Prince of the Kingdom of Poland), லித்துவானிய பிரபுவும் (Grand Duchy of Lithuania) ஆவார்.

இவர், போலந்து அரசரும், லித்துவானியா கோமகனுமான (King of Poland and Grand Duke of Lithuania) "நான்காம் கசிமீரி'ன்" (Casimir IV) குழந்தை ஆவார். இவருடைய தாயார், ஹங்கேரியின் அரசியான "எலிசபெத் ஹப்ஸ்பர்க்" (Queen Elisabeth Habsburg of Hungary) ஆவார். இவருடைய பெற்றோரின் மூன்று குழந்தைகளில், இவர் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். அரசி எலிசபெத், பிள்ளைகளின் வளர்ப்பில் ஆர்வம் காட்டிய ஒரு அன்பான தாயாக இருந்தார்.

தமது ஒன்பது வயதிலிருந்தே, கசிமீரும் அவரது சகோதரரான "விளாடிஸ்லாஸ்" (Vladislaus) இருவரும் போலிஷ் மத குருவான "ஜான் ட்ளுகோஸ்" (John Dlugosz) என்பவரிடம் கல்வி கற்றனர். இவரும் இவரது சகோதரர்களும் இலத்தீன், ஜெர்மன், சட்டம், சரித்திரம், அணியிலக்கணம் மற்றும் பண்டைய இலக்கியம் ஆகியன கற்றனர். அவர் நெறிமுறைகள், அறநெறி மற்றும் சமய பக்தி ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு கடுமையும் கண்டிப்புமான, மற்றும் பழமைவாத ஆசிரியராக இருந்தார். இளவரசர்கள் இருவரும், தங்கள் தந்தையால் அங்கீகரிக்கப்பட்ட உடல் ரீதியான தண்டனைக்கும் உட்பட்டனர். 1469ம் ஆண்டு, போலந்துக்குத் திரும்பும் தன் தந்தைக்கு வாழ்த்துக்களை வழங்குவதற்கு கசிமீர் ஆற்றிய உரையிலிருந்து அவரது நாவன்மையை கண்டு, "ஜான் ட்ளுகோஸ்" (John Dlugosz) வியந்தார். கசிமீர், பெரும் கல்வியாளரும் ராஜதந்திரியுமான "ஜோஹன்னாஸ்" (Johannes Longinus) என்பவரிடமும் கல்வி கற்றார்.

1471ம் ஆண்டு, இவரது மூத்த சகோதரர் "விளாடிஸ்லாஸ்" (Vladislaus) "போஹெமியா" அரசராக (King of Bohemia) தேர்வு செய்யப்பட்டார். ஆகவே, தமது பதின்மூன்று வயதில் கசிமிர், விளாடிஸ்லாஸின் வெளிப்படையான வாரிசானார். ஆனால், பொஹேமிய பிரபுக்கள் சிலர் விளாடிஸ்லாஸுக்கு எதிராக "மத்தியாஸ் கொர்வினஸ்" (Matthias Corvinus) என்பவரை ஆதரித்தனர். இதற்கு மாறாக வேறு சில பொஹேமிய பிரபுக்கள் இரகசியமாக அவரை எதிர்த்தனர். இதனால் அரசர் 4ம் கசிமீர் விளாடிஸ்லாஸுக்கு பதிலாக கசிமீரை ஹங்கேரி நாட்டுக்கு அரசனாக முடிசூட்ட முடிவு செய்தார்.

இவரது மூத்த சகோதரர் இரண்டாம் விளாடிஸ்லாஸ் பொஹேமியா நாட்டை ஆள, கசிமிர் போலந்து மற்றும் லித்துவானியா நாடுகளின் வெளிப்படையான வாரிசானார்.

இதனால் இவருக்கு எதிராக மத்தியாஸ் கோர்வினஸ் (Matthias Corvinus) செயல்பட்டான். ஏனென்றால், தானும் அரசராக வேண்டுமென்று மத்தியாஸ் ஆசை கொண்டான். இவன் கசிமீர் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்தே மிகவும் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தான். அவர் செய்த அனைத்துப் பணிகளுக்கும் தடைவிதித்துக் கொண்டே எதையும் செய்யவிடாமல் தடுத்தான். இதனால் ஒரு பக்கம் கசிமீர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

வரும் தடைகள் அனைத்திற்கும் கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டே இருந்தார். அரசர் பதவியிலிருந்து விலகிச் சென்று, இறைவனை பிடித்துகொள்ள கடவுள் செய்யும் உதவிகளை நினைத்து, இடைவிடாது இறைவேண்டல் செய்து நன்றி கூறினார்.

1481ம் ஆண்டு, இவர் பேரரசர் மூன்றாம் ஃபிரடெரிக்கின் (Emperor Frederick III) மகளான "குனிகுண்டை" (Kunigunde of Austria) இளவரசர் கசிமீருக்கு மொழி செய்துவைக்க இவரது தந்தையார் முயன்றார். திருமண வாழ்க்கையையும் பாலியல் உறவுகளையும் வெறுத்துவந்த இளவரசர் கசிமீர், அடிக்கடி நடந்த இதுபோன்ற திருமண ஏற்பாடுகளை நிராகரித்தார். திருமணத்திற்கு பதிலாக கற்பு என்னும் வார்த்தைப்ப்பாட்டை எடுத்துகொண்டார். தாம் தமது மரணத்தை நெருங்குவதை இவர் உணர்ந்திருந்தார். இவர் லிட்டவுனிலிருந்த வில்னா (Wilna) என்ற ஊரிலிருந்த கல்லூரியில் அமைந்திருந்த பேராலயத்தில் தனது இறுதி நாட்களைக் கழித்தார்.

இவர் இறந்த பிறகு அங்கேதான் அடக்கம் செய்யப்பட்டார். சில ஆண்டுகள் கழித்து இவரின் உடல் வில்னாவில் உள்ள செயிண்ட் பீட்டர் பவுல் பேராலயத்திற்கு மாற்றப்பட்டது.

இவர், தான் இறக்கும் வரை கிறிஸ்தவப் புண்ணியங்களில் சிறப்பாக, கற்பு நெறியிலும், ஏழை எளியவர்க்கு இரங்கி அன்பு செய்வதிலும் சிறந்து விளங்கினார். திருமறையைப் பரப்புவதில் ஆர்வமிக்கவராய் திகழ்ந்தார். தூய நற்கருணைமீது பக்தியும், கன்னிமரியின்மீது பற்றுதலும் கொண்டு வாழ்ந்தார்.

   ✠ தூய கசிமிர் ✠ (St. kasimir)


"மனிதன் உலகம் முழுவதும் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழப்பானெனில் அதனால் வரும் பயனென்ன? (மத் 16: 26)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் கசிமிர், போலந்து நாட்டு மன்னர் நான்காம் கசிமிர் என்பவருக்கு மகனாக 1458 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் பிறந்தார். சிறு வயதிலே மிகுந்த பக்தியோடு வளர்ந்து வந்த கசிமிர், துளுகோஸ் என்பவரிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது பாடங்களை கற்று வந்தார்.

இந்த சமயத்தில் துருக்கி நாட்டவரால், ஹங்கேரி நாட்டு மக்களுக்கு பயங்கர அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ஹங்கேரி நாட்டு மக்கள், மன்னர் நான்காம் கசிமிரை அணுகி வந்து அவருடைய மகனான கசிமிரை தங்களுக்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக்கொண்டார்கள். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னர் தன் மகன் கசிமிரை அவர்களுக்குத் தலைமை தாங்கப் பணித்தார். சில ஆண்டுகள் கசிமிர் ஹங்கேரி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று சீரும் சிறப்புமாக மக்களை வழிநடத்தி வந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 13 தான். அந்த சிறிய வயதிலும் ஒரு நாட்டை தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய திறமையை இறைவன் கசிமிருக்குக் கொடுத்திருந்தார்.

ஒருசில ஆண்டுகள் ஹங்கேரியில் இருந்து பணியாற்றிவிட்டு, கசிமிர் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பினார். ஹங்கேரிக்கு வந்த சமயத்தில் அவருடைய தந்தை, லித்துவேனியாவில் இருக்கின்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, அரச பதவியை கசிமிரிடம் கொடுத்துவிட்டு அங்கு சென்றார். அவர் திரும்பி வரும்வரை கசிமிர் மக்களை நல்லமுறையில் வழி நடத்திச் சென்றார். தன் மகனுக்கு இருக்கின்ற இந்த அசாதாரண திறமையைப் பார்த்துவிட்டு மன்னர், அவரை ஜெர்மன் நாட்டு மன்னரின் மகளுக்கு மணமுடித்துக் கொடுக்கத் திட்டமிட்டார். ஆனால், அவரோ அதற்கு இசையாது, ஆண்டவருக்கு தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழத் தொடங்கினார்.

கசிமிர், ஜெப வாழ்க்கையிலும் மேலோங்கி விளங்கினார். குறிப்பாக மரியன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு விளங்கினார். தினமும் வாழ்த்துவோம், ஓ அன்னையே என்ற பாடலை அவர் எப்போதும் பாடி ஜெபித்துக்கொண்டே இருந்தார். சில நேரங்களில் அவர் இரவில் தூங்காமல் ஜெபித்துவந்தார். இப்படி இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்த கசிமிர், மிகக் குறைந்த வயதிலே, அதாவது அவருக்கு 24 வயது நடந்துகொண்டிருக்கும்போதே இறைவனடி சேர்ந்தார். கசிமிர் இறந்து 122 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய கல்லறையைத் தோண்டிப் பார்த்தபோது அவருடைய உடல் அழியாது இருப்பது கண்டு மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அவர் தன்னோடு வைத்திருந்த ஜெபப்புத்தகம் கூட அழியாமல் இருந்தது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம

தூய கசிமிரின் நினைவுநாளைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. மரியன்னையிடம் பக்தி

தூய கசிமிரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்றபோது அவர் மரியன்னையின் மீது கொண்டிருந்த பக்தி, அந்த பக்தியினால் அவர் வாழ்ந்த தூய வாழ்க்கை நம்மை வியக்க வைக்கின்றது. புனிதரைப் போன்று நாமும் மரியன்னையிடம் ஆழமான பக்தி கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு வரலாற்று நிகழ்வை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இடைக்காலத்தில் உரோமையில் பத்திரிசியா அருளப்பர் என்ற பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மரியன்னையிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அதன் பொருட்டு அவர் ஏழைகளுக்கும் பிச்சைகாரர்களுக்கும் நிறைய தான தர்மங்களைச் செய்து வந்தார். அப்படிப்பட்டவர் ஒருசில தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாய் இருந்தார். சில ஆண்டுகள் கழித்து அவர் மூப்பெய்தி இறந்துபோனார்.

இதற்கிடையில் உரோமையில் இருந்த செசிலியம்மாள் ஆலயத்தில் குருவானவர் ஒருவர் ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில், விண்ணகத்தில் மரியன்னை வானதூதர்கள் புடைசூழ அரியணையில் வீற்றிருக்க, அவருக்கு முன்பாக ஒரு பிச்சைக்காரி அழுது புரண்டு மன்றாடினாள். "அன்னையே! உன் அடியாராகிய பத்திரிசியா அருளப்பர், மண்ணுலகில் செய்த ஒருசில தீயச் செயல்களுக்காக இப்போது உத்தரிக்க தளத்தில் வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். அவர் நிறைய தான தர்மங்களைச் செய்தவர். இதோ நான் போர்த்தியிருக்கின்றனே இந்த போர்வை, இதுகூட அவர் போர்த்தியதுதான்" என்றார். உடனே மரியன்னை அவரிடம், "பத்திரிசிய அருளப்பரை எனக்குக் காட்டும்" என்றார். அந்தப் பிச்சைக்காரியும் அவரை மரியன்னையிடம் காட்ட, மரியன்னை அவர்மீது இரக்கம்கொண்டு அவருக்கு விண்ணகத்தில் இடமளிக்க தன் மகனை வேண்ட, அவரும் அவருக்கு விண்ணகத்தில் இடமளித்தார்.

மரியன்னையிடம் வேண்டுவோருக்கும் அவரிடம் உண்மையான பக்தி கொண்டு வாழ்வோருக்கும் இறைவன் அளப்பெரிய காரியங்களைச் செய்வார் என்பதை இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம். இன்று நாம் நினைவுகூரும் கசிமிர், மரியன்னையியம் மிகுந்த பக்தி கொண்டிருந்ததால்தான் என்னவோ அவருடைய உடல் நீண்ட நாட்கள் அழியாமல் இருக்க மரியா துணைபுரிந்தார் என்று நம்பத் தோன்றுகின்றது.

ஆகவே, தூய கசிமிரின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மரியன்னையிடமும் அவர் மகன் இயேசுவிடமும் மிகுந்த பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா