✠ பொப்பி நகர தூய டோரெல்லா✠(St. Poppi City Pure Tōrellā) |
|
|
|
நினைவுத் திருநாள் :
மார்ச்
16 |
✠ பொப்பி நகர தூய டோரெல்லா✠(St. Poppi City Pure Torella)
நிகழ்வு
டோரெல்லாவின் இறப்புக்குப் பிறகு அவருடைய கல்லறைக்கு ஒருவர் வந்தார்.
வந்தவரோ சியென்னாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர். அவர்
டோரெல்லாவிடம், "எப்படியாவது நான் எனது சொந்த நாட்டிற்குத்
திருப்பிச் செல்ல உதவியருளும். அப்படி நீர் எனக்கு உதவும்பட்சத்தில்,
நான் இங்கே இருக்கின்ற பாறையில் உம்முடைய திருவுருவத்தை வரைவேன்"
என்று வேண்டினார். அவர் இந்த வேண்டுதலை பல நாட்களாகச் செய்துவந்தார்.
அவருடைய வேண்டுதல் வீண்போகவில்லை. ஆம், தூய டோரெல்லாவின் உதவியால்
அம்மனிதர் தம் சொந்த நாட்டிற்கு வேற்று உருவில் சென்றார்.
இந்த நன்றிப்பெருக்கின் அடையாளமாக அந்த மனிதர் ஒருசில மாதங்கள்
கழித்து, மீண்டுமாக டோரெல்லாவின் கல்லறைக்கு வந்து, அதற்குப்
பக்கத்தில் இருந்த பாறையில் அவருடைய திருவுருவத்தை வரைந்துவிட்டுப்
போனார்.
தூய டோரெல்லா இறைவனின் கையில் வல்லமையுள்ள கருவி என்பதற்கு இந்தப்
புதுமை ஒரு சான்றாக இருக்கின்றது.
வாழ்க்கை வரலாறு
டோரெல்லா, இத்தாலியில் உள்ள பொப்பி என்னும் ஊரில் 1202 ஆம் ஆண்டு
பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். எனவே,
இவர் எல்லா வசதிகளும் கிடைக்கப்பெற்று மிகவும் மகிழ்ச்சியாக
வாழ்ந்து வந்தார். டோரெல்லாவுக்கு 18 வயது நடக்கும்போது அவருடைய
தந்தை அவரைவிட்டுப் பிரிந்தார். ஏற்கனவே அவருடைய தாயார் சிறுவயதிலே
அவரை விட்டுப் பிரிந்ததால் அவர் தனிமரமானார். எனவே, அவர் தன்னுடைய
உடைமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு துறவற
வாழ்வை மேற்கொள்ள நினைத்தார். இத்தகைய சமயத்தில் அவரோடு இருந்த
இரண்டு தீய நண்பர்கள், "உலகில் அனுபவிக்க எவ்வளவோ இருக்கின்றது,
அதைவிடுத்து துறவற வாழ்க்கையை மேற்கொள்வது சுத்தப் பைத்தியக்காரத்தனம்" என்று சொல்லி அவருடைய மனதை மாற்றினார்கள். இதனால் அவர் நண்பர்கள்
சொல்வதுதான் சரியென்று நினைத்து, எல்லாத் தீயப் பழக்கவழக்கங்களுக்கும்
அடிமையாகி தன்னுடைய வாழ்வைத் தொலைத்தார்.
டோரெல்லாவுக்கு 36 வயது நடந்துகொண்டிருக்கும்போது அவர் தன்னுடைய
(தீய)நண்பர்களோடு ஒரு மைதானத்தில்
விளையாடிக்கொண்டிருக்கும்போது, காகம் ஒன்று அவருடைய கையில் அமர்ந்து
மூன்றுமுறை கத்தியது. இதனை அவர் இறைவனின் அழைப்பாக இருக்குமோ
என்னவோ (பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தபோது சேவல் கூவியதே
அதுபோன்று இது இருக்குமோ) என்று நினைத்து அவர் உலக
மாயையிலிருந்து விடுபட்டு, சான் பிடலியில் இருந்த ஒரு துறவியிடம்
சென்று, பாவ சங்கீர்த்தனம் செய்தார். பின்னர் அவர் பொப்பிக்கு
அருகே இருந்த கொன்சாண்டினோ மலைக்குச் சென்று, அங்கே இருந்த ஒரு
குகையில் தவவாழ்க்கை வாழத் தொடங்கினார்.
டோரெல்லா, கொண்டாண்டினோ மலையில் தவ வாழ்க்கை வாழ்ந்து வருவதைக்
கேள்விப்பட்ட நிறையப் பேர் அவரிடத்தில் வந்து, ஆசிர் பெற்றுச்
சென்றார்கள். டோரெல்லா மிகவும் குறைவான உணவையே உண்டு, மிகக் கடுமையான
ஒறுத்தல் முயற்சிகளைச் செய்து வந்தார். சில நேரங்களில் அவருக்குச்
சோதனைகள் வந்தபோது உறைபனியில் அப்படியே படுத்துக்கிடந்தது சோதனைகளை
வெற்றி கொண்டார். டோரெல்லா வாழ்ந்து வந்த மலைப்பகுதியில் ஓநாய்களின்
தொல்லைகள் அதிகமாக இருந்தன. சில நேரங்களில் ஓநாய்கள் அந்த வழியாக
வரக்கூடிய சிறு பிள்ளைகளைப் பிடித்துச் சென்றபோது டோரெல்லா அற்புதமாக
அக்குழந்தைகளைக் காப்பிற்றினார். இதனால் எல்லாரும் அவரை சின்ன
அசிசியார் என்றே அவரை அழைத்து வந்தார்கள். டோரெல்லா தன்னுடைய
வாழ்வின் கடைசிக் காலத்தில் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில்
சேர்ந்து தூய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவர் 1282 ஆம் ஆண்டு
இறையடி சேர்ந்தார்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
தூய டோரெல்லாவின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து
என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
1. இறைவனின் அழைப்பை உணர்தல்
தூய டோரெல்லா ஒருகாலத்தில் கடவுளை மறந்து உலகப் போக்கிலான
வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்படிப்பட்டவர் ஒரு சமயம் மைதானத்தில்
விளையாடிக்கொண்டிருக்கும்போது காகம் வந்து அவருடைய கையில் அமர்ந்து,
மூன்று முறை கரைந்தபோது அதனை கடவுளின் அழைப்பாக உணர்ந்து, எல்லாவற்றையும்
துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். காகத்தின் வழியாக இறைவன்
டோரெல்லாவை அழைத்தபோது, அவர் உடனே செவிமடுத்தி, இறைவழியில் நடந்தது
போன்று, பல்வேறு வழிகளில் நம்மை அழைக்கின்றபோது இறைவனின் குரலுக்கு
நாம் செவி மடுத்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நிறைய நேரங்களில் இறைவன் நம்மை நேரடியாக அழைத்தால்கூட அதனைக்
கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றோம். இத்தகைய நிலை மாற
வேண்டும்.
ஆகவே, தூய டோரெல்லாவின் விழாவைக் கொண்டாடும் நாம், இறைவனின் அழைப்பை
நம்முடைய வாழ்வில் உணர்ந்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- Fr. Maria Antonyraj, Palayamkottai. |
|
|