Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மெட்டில்டா ✠ (St. Matilda of Ringelheim)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 14
 ✠ புனிதர் மெட்டில்டா ✠ (St. Matilda of Ringelheim)

*ஜெர்மன் நாட்டு அரசி : (German queen)

*பிறப்பு : கி.பி. 894/97
என்ஜெர், சக்ஸனி, கிழக்கு ஃபிரான்ஸியா
(Enger, Saxony, East Francia)

*இறப்பு : மார்ச் 14, 968
குயிட்லின்பர்க், சக்ஸனி, புனித ரோம பேரரசு
(Quedlinburg, Saxony, Holy Roman Empire)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

*முக்கிய திருத்தலங்கள் :
குயிட்லின்பர்க் மடம், சக்ஸனி-அன்ஹல்ட், ஜெர்மனி
(Quedlinburg Abbey, Saxony-Anhalt, Germany)

புனிதர் மெட்டில்டா, கி.பி. 912ம் ஆண்டு முதல் சக்ஸனி (Duchess of Saxony) சீமாட்டியாகவும், கி.பி. 919ம் ஆண்டு முதல் ஜெர்மன் நாட்டு (German queen) அரசியாகவும் ஆட்சி புரிந்தவர் ஆவார். இவரது கணவர் "ஹென்றி" (Henry the Fowler) "ஒட்டோனியன்" (Ottonian dynasty) வம்சத்தின் முதல் அரசராவார். 936ம் ஆண்டு, அவரது கணவர் ஹென்றி இறந்ததும் அவரது ஞாபகார்த்தமாக "குயிட்லின்பர்க் துறவற மடத்தினை" (Quedlinburg Abbey) நிறுவினார். இவரது காலத்திலேயே இவரது மூத்த மகனான "ஓட்டோ" (Otto) 962ம் ஆண்டு, "தூய ரோமப் பேரரசராக" (Holy Roman Emperor) முடிசூடி மேற்கத்திய ஏகாதிபத்திய ஆட்சியை மீண்டும் அமல் படுத்தினார்.

ஜெர்மன் நாட்டின் சக்ஸனி பிராந்தியத்தின் "என்ஜெர்" (Enger) எனுமிடத்தில் பிறந்த மெட்டில்டாவின் தந்தை, உள்ளூர் பிரபுவான "டயட்ரிச்" (Dietrich) ஆவார். இவரது தாயார் "ரெய்ன்ஹில்ட்" (Reinhild) ஆவார்.

இவர் தமது இளம் வயதில், தமது பாட்டி மடாதிபதியாக இருந்த "ஹெர்ஃபோர்ட்" (Herford Abbey) துறவு மடத்தில் கல்வி கற்றார்.

சக்ஸனி பிரபுவான "ஓட்ட" (Otto the Illustrious) தமது மூத்த மகனான ஹென்றிக்கு (Henry) மெட்டில்டாவை திருமண ஒப்பந்தம் செய்துகொண்டார். ஹென்றி, மெட்டில்டாவைவிட இருபது வயது மூத்தவர் ஆவார். மற்றும், அவருக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். அவர் தமது முதல் மனைவியான "ஹத்தேபர்க்" (Hatheburg of Merseburg) என்பவரை விவாகரத்து செய்திருந்தார். ஹென்றி - மெட்டில்டா ஆகியோருக்கு இரண்டு பெண்களும் மூன்று ஆண்களுமாக ஐந்து குழந்தைகள் பிறந்தன.

936ம் ஆண்டு, மெட்டில்டாவின் கணவர் ஹென்றி மரணமடைந்த பிறகு, அவரும் அப்போதைய "கிழக்கு ஃபிரான்ஸியாவின்" (East Francia) அரசனாக இருந்த இவரது மகனான "முதலாம் ஒட்டோவும்" (King Otto I) "குயிட்லின்பர்க்" (Quedlinburg Abbey) எனும் துறவு மடத்தினை நிறுவினர்.

ஹென்றியின் மரணத்தின் பின்னர் முப்பத்திரண்டு வருட காலம் வாழ்ந்த மெட்டில்டா, 968ம் ஆண்டு, மார்ச் மாதம், 14ம் நாளன்று, தமது "குயிட்லின்பர்க்" (Quedlinburg Abbey) மடத்திலேயே மரணமடைந்தார்.

"லியுட்பிராண்ட்" (Liutprand of Cremona) மற்றும் "தியெட்மார்" (Thietmar of Merseburg) போன்ற மத்திய கால வரலாற்றாசிரியர்கள் மெட்டில்டாவை அவரது பக்தி, செப வாழ்வு மற்றும் பரோபகார செயல்களுக்காக கொண்டாடினர். மெட்டில்டா பல மத நிறுவனங்களை நிறுவினார். தமது காலத்தில் பல கல்வி நிறுவனங்களையும் நிறுவினார்.

பின்னாளில், "சக்ஸனி" மற்றும் "பவரியா" (Saxony and Bavaria) மட்டுமல்லாது ஜெர்மனி முழுதும் அவரை வழிபட தொடங்கினர். 185658 ஆண்டுகளில், "குயிட்லின்பர்க்" (Quedlinburg) எனுமிடத்தில் "நியோ கோதிக்" புனிதர் மெட்டில்டா தேவாலயம் (Neo-Gothic St. Matilda's Church) அர்ச்சிக்கப்பட்டது. மற்றுமொரு புனிதர் மெட்டில்டா தேவாலயம் "லாட்ஸன்" (Laatzen, Lower Saxony) எனுமிடத்தில் 1938ல் அர்ச்சிக்கப்பட்டது. 1964ம் ஆண்டு, மற்றுமோர் தேவாலயம் "அல்லேபோ" (Aleppo) எனுமிடத்தில் அர்ச்சிக்கப்பட்டது.



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


தூய மெட்டில்டா


வாழ்க்கை வரலாறு

மெட்டில்டா 895 ஆம் ஆண்டு ஜெர்மனியை ஆண்டுவந்த அரசகுடும்பத்தில் (Dietrich) மகளாக பிறந்தார். இவருக்குப் பதினான்கு வயது நடந்துகொண்டிருந்த போதே இவருடைய பெற்றோர் இவரை ஹென்றி என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டனர். அப்படி இருந்தாலும் திருமண வாழ்க்கையில் இவர் தன்னுடைய கணவருக்கு மிகவும் பிரமாணிக்கமாக இருந்தார்.

மெட்டில்டாவிற்கு ஆடம்பரமான வாழ்க்கை வாய்க்கப்பட்டிருந்தாலும் இவருடைய மனம் அதில் நாட்டம் கொள்ளவில்லை. மாறாக, கடவுளோடு ஜெப தவ வாழ்க்கையில் ஈடுபடுவதிலும் விதவைகளை, கைவிடப்பட்டோர், அனாதைகள் இவர்களுக்கு சேவை செய்வதிலுமே மனம் அதிக ஈடுபாடு கொண்டது. அதனால் இவர் தன்னுடைய நாட்டில் வாழ்ந்துவந்த ஏழைகள், கைவிடப்பட்டோர், அனாதைகள், விதவைகள் போன்றோருக்கு உதவிசெய்வதில் மும்முரமாக இருந்தார். இவருடைய கணவரும் இதற்கு மறுப்பேதும் சொல்லாமல், இவரைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே வந்தார். கடவுள் இந்தத் தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகளைக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார்.

இப்படி எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் 936 ஆம் ஆண்டு மெட்டில்டாவின் கணவர் ஹென்றி திடிரென்று நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி அப்படியே இறந்துபோய்விட்டார். இதனால் மெட்டில்டா அடைந்த துயருக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அவர் அந்தத் துயரத்திலிருந்து மீண்டு வருவதற்கு வெகுநாட்கள் ஆனது. கணவரின் இறப்புக்குப் பிறகு மெட்டில்டாதான் ஜெர்மனியின் அரசியாக உயர்ந்தார். மக்களை நீதிவழியில் வழிநடத்திச் சென்றதோடு மட்டுமல்லாமல், ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர் கைம்பெண்கள் இவர்களுக்கு ஆற்றி வந்த சேவையினைத் தொடர்ந்து செய்து வந்தார்.

இதற்கிடையில் மெட்டில்டாவின் இரண்டு புதல்வர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். அவர்கள் இருவரும் வளர்ந்த பின்னர் அரசியான மெட்டில்டா தங்களுடைய தாய் - அரசாங்கச் சொத்துகளை தேவையில்லாமல் விரையம் செய்கின்றார் என்று குற்றம் சுமத்தி அவரை அரசாங்கப் பொறுப்பிலிருந்து நீக்கி, பதவியை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். தன்னுடைய பதவி போனதைப் பற்றிக்கூட கவலைப்படாத மெட்டில்டா தன்னுடைய பிள்ளைகள் அப்படி நடந்து கொண்டதை நினைத்துப் பெரிதும் வருந்தினார். மெட்டில்டா தன்னுடைய கடைசி நாட்களை எல்லாவற்றையும் துறந்து ஒரு துறவற மடத்தில் கழித்து 968 ஆம் ஆண்டு அங்கேயே தன்னுடைய ஆவியை இறைவனிடம் ஒப்படைத்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மெட்டில்டாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நாமும் ஒருநாள் புனிதர் ஆகலாம்


தூய மெட்டில்டாவின் வாழ்வை ஒருகணம் நாம் சிந்தித்துப் பார்க்கும்போது மேலே இருக்கும் தலைப்புதான் நமக்கு நினைவுக்கு வருகின்றது. மெட்டில்டா ஓர் அரசியாக, செல்வச்செழிப்பான வாழ்க்கை அமையப் பெற்றவர். அப்படியிருந்தாலும் அவர் அதில் நாட்டம் கொள்ளாமல், கடவுளுக்குத் தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்து, ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதில் தன்னுடைய வாழ்வைச் செலவழித்தார். இந்தப் பாடத்தைத் தான் நாம் இவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். நாம் எந்த நிலையில் இருந்தாலும் பணக்காரராகவோ, ஏழையாகவோ இருந்தாலும் நம்மாலும் புனிதராக முடியும் என்பதைத்தான் தூய மெட்டில்டா நமக்குக் கற்றுத் தருகின்றார்.

2. தாழ்ச்சியோடு சேவ

தூய மெட்டில்டாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய இரண்டாவது பாடம் தாழ்ச்சியோடு சேவை செய்வதாகும். மெட்டிலா ஓர் மிகப்பெரிய சாம்ராஜியத்தின் அரசியாக இருந்தபோதும் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் தாழ்ச்சியோடு சேவைசெய்து, கிறிஸ்துவின் விழுமியங்களின்படி வாழ்ந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் தாழ்ச்சியோடு சேவை செய்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராய் இருக்கட்டும். இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுக்க வந்தார்" என்று (மத் 20: 26-28). ஆம், இயேசுவைப் பொறுத்தளவில் ஒரு தலைவர் என்றால் அவர் தொண்டரே, பணியாளரே. இயேசுவின் இத்தகைய மனநிலையைப் புரிந்தவராய் தூய மெட்டில்டா ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வந்தார். அவரைப் போன்று நாமும் ஏழை எளிய மக்களுக்கு தாழ்ச்சியோடு சேவை செய்வதுதான் இன்றைய நாளில் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதாக இருக்கின்றது.

ஆகவே, தூய மெட்டில்டாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று தாழ்ச்சியோடு சேவை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா