Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் கேதரின் ட்ரெக்ஸல் ✠ (St. Katharine Drexel)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 3
  ✠ புனிதர் கேதரின் ட்ரெக்ஸல் ✠ (St. Katharine Drexel)

*அருட்சகோதரி, கல்வியாளர், நிறுவனர் :
(Religious Sister, Educator, and Foundress)

*பிறப்பு : நவம்பர் 26, 1858
ஃபிலடெல்ஃபியா, பென்ஸில்வேனியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
(Philadelphia, Pennsylvania, U.S.)

*இறப்பு : மார்ச் 3, 1955 (வயது 96)
பென்சலேம், பென்ஸில்வேனியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
(Bensalem, Pennsylvania, U.S.)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : நவம்பர் 20, 1988
திருத்தந்தை 2ம் ஜான் பால்
(Pope John Paul II)

*புனிதர் பட்டம் : அக்டோபர் 1, 2000
திருத்தந்தை 2ம் ஜான் பால்
(Pope John Paul II)

*முக்கிய திருத்தலம் :
பென்சலேம் நகர், பென்ஸில்வேனியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
(Bensalem Township, Pennsylvania, U.S.)

*பாதுகாவல் :
மனித நேயம், இன நீதி
(Philanthropy, Racial Justice)

புனிதர் கேதரின் ட்ரெக்ஸல், ஒரு மனித நேயமிக்க அமெரிக்க பெண் வாரிசு ஆவார். இவர் ஒரு அருட்சகோதரியும், கல்வியாளரும், நிறுவனரும் ஆவார். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பிறந்து, புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்ட ஒரே புனிதர் இவரேயாவார்.

"கேதரின் மேரி ட்ரெக்ஸல்" (Catherine Mary Drexel) என்ற இயற்பெயர் கொண்ட இவர், முதலீட்டு வங்கியாளரான "ஃபிரான்சிஸ் ஆன்டனி ட்ரெக்ஸல்" (Francis Anthony Drexel) என்பவரது மகளாவார். இவரது தாயாரின் பெயர் "ஹன்னா" (Hannah Langstroth) ஆகும். கேதரின் இவர்களது இரண்டாவது மகளாவார். இவர் பிறந்து ஐந்து வாரங்களில் இவர்களது தாயாரான ஹன்னா மரித்துப் போனார். கேதரினும் அவரது மூத்த சகோதரியும் இரண்டு வருடங்கள் வரை அவர்களது மாமன் வீட்டில் வளர்ந்தனர். பின்னர், அவர்களது தந்தை 1860ம் ஆண்டு, "எம்மா" (Emma Bouvier) என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். தமது இரண்டு மகள்களையும் வீட்டுக்கு அழைத்து வந்தார். அவர்களுக்கு 1863ம் ஆண்டு, மூன்றாவதாக "லூய்ஸா" (Louisa) என்றொரு பெண் குழந்தையும் பிறந்தது.

தனிப்பட்ட முறையில் வீட்டிலேயே கல்வி கற்ற மூன்று சிறுமிகளும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர். அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்துடன் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டனர். வாரத்தில் மூன்று நாட்கள் தமது வீட்டில் ஏழை எளிய மக்களுக்கு உணவு ஆடைகள் கொடுத்தனர்.

அதிக வசதிகள் கொண்ட உலக அளவிலான முதலீட்டு வங்கியாளர் ஒருவரின் மகளான, குடும்பப்பெண் ஒருவர், ஒருக்காலும் தன்னைத்தானே வறுமை வாழ்க்கைக்கு இழுத்துக்கொள்ள மாட்டார்.

ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த தமது வளர்ப்புத் தாயாருக்கு மூன்று வருட காலம் சிசுருக்ஷை செய்த கேதரின், தமது தந்தையின் குடும்ப சொத்துக்களாலோ, மொத்தமிருந்த பணத்தாலோ, மரணத்திலிருந்தும், வேதனையிலிருந்தும் பாதுகாப்பினை வாங்கிவிட முடியாது என்பதனை புரிந்துகொண்டார். இது அவரது வாழ்க்கையின் ஆழ்ந்த திருப்புமுனையாக அமைந்தது.

இந்தியர்களின் அவல நிலை கண்டு அவர்கள்பால் பற்றுதல் கொண்டிருந்த கேதரின், "ஹெலன் ஹன்ட் ஜாக்சன்" (Helen Hunt Jackson) என்பவர் எழுதிய புத்தகமான "அவமதிப்பின் ஒரு நூற்றாண்டு" (A Century of Dishonor) எனும் புத்தகத்தைப் படித்து அதிர்ச்சியடைந்திருந்தார். ஒருமுறை, ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ" (Pope Leo XIII) அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அவர் திருத்தந்தையிடம், அதிக மறைப்பணியாளர்களை "வயோமிங்" (Wyoming) நகருக்கு தமது நண்பரும் ஆயருமான "ஜேம்ஸ் ஓகானரிடம்" (Bishop James OConnor) அனுப்பிவைக்குமாறு வேண்டினார். ஆனால் திருத்தந்தையோ, "நீயே ஏன் ஒரு மறைப்பணியாளராகக் கூடாது" என்று கேட்டார். திருத்தந்தை அவர்களின் இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த கேதரின், அதன் சாத்தியக்கூறுகளைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்.

வீடு திரும்பிய கேதரின், "ரெட் க்லௌட்" (Red Cloud) என்றழைக்கப்படும் "ஸியோக்ஸ்" (Sioux) இன மக்களின் தலைவரை "டகோடாஸ்" (Dakotas) சென்று சந்தித்தார். பின்னர், இந்திய இன மக்களுக்கான தமது முறையான உதவிகளை ஆரம்பித்தார்.

(19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட அமெரிக்காவின் மாநிலங்களாகிய "வட டகோடா" (North Dakota) மற்றும் "தென் டகோடா" (South Dakota) ஆகிய மாநிலங்களின் பிராந்தியங்கள் "டகோடாஸ்" (Dakotas) என்று அழைக்கப்பட்டன. அங்கே வாழ்ந்த "ஓக்லாலா ஸியோக்ஸ் இந்தியர்" (Oglala Sioux Indians) இன மக்களின் தலைவர் "ரெட் க்லௌட்" (Red Cloud) என்று அழைக்கப்பட்டார்).

கேதரின் ட்ரெக்ஸல் விருப்பப்பட்டிருந்தால் இலகுவாக மொழி முடித்திருக்கலாம். ஆனால் அவர், ஆயர் "ஜேம்ஸ் ஓகானருடன்" (Bishop James OConnor) மேற்கொண்ட விவாதங்களின் பின்னர், "எஞ்சிய என் வாழ்நாட்களை இந்திய மற்றும் கருப்பு இன மக்களுக்குக் கொடுக்கும் கருணையை புனித சூசையப்பரின் திருவிழா என்னில் கொண்டுவந்தது" ("The feast of St. Joseph brought me the grace to give the remainder of my life to the Indians and the Colored") என்று 1889ல் எழுதினர். பத்திரிகைகள் தலையங்கங்களில் அலறின.

மூன்றரை வருட தமது பயிற்சியின் பின்னர் அன்னை ட்ரெக்ஸலு'ம் அவரது "நற்கருணையின் அருட்சகோதரிகளின்" (Nuns-Sisters of the Blessed Sacrament) முதல் குழுவினரும் இந்திய மற்றும் கருப்பு இன மக்களுக்கான முதல் உறைவிட பள்ளியை
"சான்டா ஃபே" (Santa Fe) என்னுமிடத்தில் தொடங்கினர். அவரது பணிகளின் அடித்தளங்கள் சங்கிலித்தொடராக தொடங்கின.

1942ல் பதின்மூன்று அமெரிக்க மாநிலங்களில் கருப்பு இன மக்களின் குழந்தைகளுக்கான கத்தோலிக்க பள்ளிகளின் அமைப்புகள் தொடங்கப்பட்டிருந்தன. நாற்பது பணி மையங்களும் 23 கிராமப்புற பள்ளிகளும் இருந்தன. பிரிவினையாளர்கள் கடுமையாக தொந்தரவு செய்தனர். "பென்ஸில்வானியா" (Pennsylvania) நகரிலிருந்த ஒரு பள்ளியை எரிக்கவும் செய்தனர். அனைத்திற்கும் மேலாக, அவர் பதினாறு மாநிலங்களில் இந்தியர்களுக்காக 50 பணி மையங்களை தொடங்கினார்.

"அன்னை கேப்ரினி" (Mother Cabrini), அன்னை ட்ரெக்ஸல் நிறுவியிருந்த கல்வி அமைப்புகளுக்கான ஒப்புதலை ரோமிலிருந்து பெறுவதற்கான வழிமுறைகளையும் அதிலுள்ள சிக்கல்களையும் ஆலோசனையாக எடுத்துக் கூறினார். "நியூ ஓர்லியன்ஸ்" (New Orleans) மாநிலத்தில் அவர் கட்டி நிறுவிய "சேவியர் பல்கலைக்கழகம்" (Xavier University), ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள கருப்பு இன மக்களுக்கான முதல் கத்தோலிக்க பல்கலைக்கழகம் என்பது அன்னை ட்ரெக்ஸலுக்கு சிகரமாக அமைந்தது.

77 வயதில் அன்னை மாரடைப்பினால் பாதிக்கப்பட்டார். ஓய்வெடுக்கும்படி வற்புறுத்தப்பட்டார். வெளிப்படையான அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிவந்த சுறுசுறுப்பான மேல்தட்டு வர்க்க பெண்மணியின் மீதமிருந்த இருபது வருட வாழ்க்கை ஒரு சிறு அறைக்குள் முடங்கிப்போனது. அமைதியான, தீவிர செபங்களில் மூழ்கிப்போனார். வெவ்வேறான செபங்களுள்ள சிறு தாள்களும், சிறு குறிப்புப் புத்தகங்களும், முடிவற்ற அபிலாஷைகளும், தியானங்களுமாகவே வாழ்க்கை ஓடியது.

அன்னை ட்ரெக்ஸல் தமது 96 வயதில் மரணமடைந்தார்
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா