Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠புனித யோசேப்பு ✠(St. Joseph)
வேண்டுதல்
லீலி மலரே தூய வளனாரே
என்றும் நீ துணை மாவளனே
எங்கள் காவலரே புனித
சூ
சையே
வழிகாட்டும் நீதிமான்

தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித
சூசையப்பர்:
ஏழையாக பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்!
துன்பத்தில் துவண்டாலும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்!
கஷ்டங்களுக்கு மத்தியிலும் கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்!

யார் இந்த
சூசையப்பர்?
01.மரியாளின்கணவர்
சூசையப்பர். அவர் ஒரு நேர்மையாளர், நீதிமான், அயராது உழைப்பவர். (மத். 1:19)

02. தாவீதின் வழிமரபினர்தான் புனித
சூசையப்பர். (லூக் 2:4)

03. இயேசு யோசேப்பின் மகன். இவர் யேசுவின் வளர்ப்புத் தந்தையாக இருந்தார்.
(அருளப்பர் 1:45, 6:42)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 19
 ✠ புனிதர் சூசையப்பர் ✠(St. Joseph)

*அருள்நிறை கன்னி மரியாளின் கணவர் :
(Spouse of the Blessed Virgin Mary)

*பிறப்பு : கி.மு. 39/38
நாசரேத்து

*இறப்பு : கி.பி. 21/22
நாசரத்து (பாரம்பரியம்)

*ஏற்கும் சமயம் :
அனைத்துலக கிறிஸ்தவ திருச்சபைகள்
(Universal Church)

*பாதுகாவல் :
தந்தையர், நற்படிப்பு, தொழிலாளர்கள், நல் மரணம்,
அனைத்துலக கிறிஸ்தவ திருச்சபைகள்

புனிதர் சூசையப்பர் (Saint Joseph), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித அருள்நிறை கன்னி மரியாளின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

புனிதரின் வாழ்வு :
சூசையப்பர், தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த சூசையப்பர், தச்சுத்தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாளுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், மரியாள், தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். மரியாள் திடீரென கருவுற்றதால் சூசையப்பர் குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கிவிட நினைத்தார். மரியாள் கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாளை ஏற்றுக்கொண்டார்.
இயேசு, பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும், மரியாளையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் சூசையப்பர் பாதுகாத்தார்.

பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் ஆலயத்தில் தங்கிவிட்டபோது, சூசையப்பர் மிகுந்த கவலையுடன் தேடியலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். மரியாளும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார்.

சூசையப்பர் இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். மரியாளுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் சூசையப்பர் விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட சூசையப்பர், திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமை தாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் மரியாளும் அருகில் இருக்க சூசையப்பர் பாக்கியமான மரணம் அடைந்தார்.

நற்செய்திகளில் :
மத்தேயு நற்செய்தி :
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாளுக்கும் சூசையப்பருக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும்முன் மரியாள் கருவுற்றிருந்தது தெரியவந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் சூசையப்பர் நேர்மையாளர். அவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "சூசையப்பரே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில், அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். சூசையப்பர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியாள் தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை சூசையப்பர் அவரோடு கூடி வாழவில்லை. சூசையப்பர் அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
~ மத்தேயு 1:18-21,24-25

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் சூசையப்பருக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச்செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்" என்றார். சூசையப்பர் எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் சூசையப்பருக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார். எனவே, சூசையப்பர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.
~ மத்தேயு 2 : 13 - 14, 19 - 21

இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியாள் என்பவர்தானே? யாக்கோபு, சூசையப்பர், சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள்.
~ மத்தேயு 13:54-56

லூக்கா நற்செய்தி :
தாவீதின் வழிமரபினரான சூசையப்பரும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாளோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியாள் கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாளுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
~ லூக்கா 2:4-7

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.
~ லூக்கா 2 : 21 - 22

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் ஆலயத்தில் கண்டார்கள்.
~ லூக்கா 2:41-46

வணக்கம் :
கிறிஸ்தவ புனிதர்களில், புனித கன்னி மரியாளுக்கு அடுத்ததாக புனிதர் சூசையப்பர் வணங்கப்படுகிறார். கிறிஸ்தவ வரலாற்றின் தொடக்க காலம் முதலே இவர் புனிதராக போற்றப்படுகிறார். இவர் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார்.

புனிதர் சூசையப்பர் அகில உலகத் திருச்சபை, கற்பு, கல்வி, மொழி , குடும்பங்கள், நல்ல மரணம் ஆகியவற்றுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாவலராக விளங்குகிறார்.

நினைவுத் திருவிழாக்கள் :
கத்தோலிக்கத் திருச்சபையில் இவருக்கு இரண்டு விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன.
அவை :
1. புனிதர் சூசையப்பர், கன்னி மரியாளின் கணவர்
(மார்ச் 19).
2. புனிதர் சூசையப்பர் தொழிலாளர்களின் பாதுகாவலர்
(மே 1)

திருக்காட்சி பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிழக்கு மரபுவழி திருச்சபையினர் புனிதர் சூசையப்பரின் விழாவை சிறப்பிக்கின்றனர்.
=================================================================================

புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர்


நிகழ்வு

யோசேப்பை குறித்து சொல்லப்படும் ஒரு நிகழ்வு. மரியாளுக்கு மூன்று வயதானபோது அவருடைய பெற்றோர்கள் அவரை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டுச் சென்றனர். அதன்பிறகு மரியாள் பதினான்கு வயது வரை அங்குதான் இருந்தார். அவருக்கு பதினான்கு வயது வந்தபோது ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு, "பதினான்கு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்று, தங்களுக்குப் பிடித்தமான கணவரை மணந்துகொள்ளுமாறு" சொன்னார். தலைமைக் குருவின் வார்தைகளுக்குக் கீழ்படிந்து மரியாவோடு இருந்த பதினான்கு வயது நிரம்பிய மற்ற பெண் குழந்தைகள் எல்லாம் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள். மரியாள் மட்டும், "நான் ஆண்டவருக்கு அடிமை" என்று சொல்லி அங்கேயே இருந்தாள்.

இதற்கிடையில் ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு காட்சி ஒன்று கண்டார். அந்தக் காட்சியில், தாவீதின் குலத்தைச் சேர்ந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்து, அதனை தலைமைக் குருவிடம் கொடுப்பார்கள். யார் கொண்டுவந்த தளிர் மலர்ந்து பூப்பூக்கிறதோ அவரை மரியாள் கணவராக மணந்துகொள்ள வேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டார். இச்செய்தியை தலைமைக் குரு மரியாளிடம் எடுத்துச்சொல்லி, குறிப்பிட்ட அந்த நாளுக்காக அவரும் மரியாவும் காத்திருந்தார்கள்.

காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று, ஒரு நாளில் தாவீதின் குலத்தைச் சேர்ந்த திருமண வயதில் இருந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் யோசேப்பும் வந்திருந்தார். எல்லாரும் தாங்கள் கொண்டுவந்த தளிர்களை தலைமைக் குருவிடம் கொண்டுவந்து கொடுத்தார்கள். யோசேப்பைத் தவிர. யோசேப்பு தான் வயது மிகுந்தவர் என்பதனால் அப்படிச் செய்யவில்லை. மாறாக அவர் தான் கொண்டு வந்த தளிரை பீடத்தில் போய் வைத்தார். நீண்ட நேரமாகியும் யாருடைய தளிரும் பூப்பூக்கவில்லை. இதனால் குழம்பிப் போன தலைமைக் குரு இறைவனிடத்தில் மன்றாடியபோது, "யார் தன்னுடைய தளிரை பீடத்தில் வைத்திருக்கிறாரோ அவரே மரியாளுக்கு கணவராக ஆக வேண்டியர். நீ சிறிது நேரம் பொறுத்திருந்து பார், அவருடைய தளிர் பூப்பூக்கும். அப்போது தூய ஆவியானவர் அதன்மேல் இறங்கி வருவார்" என்றார்.

இதனால் தலைமைக் குரு சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்தார். காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று யோசேப்பு பீடத்தில் வைத்த தளிர் திடிரென்று பூப்பூத்தது. பின்னர் அதன்மேல் தூய ஆவியானவர் புறாவடிவில் இறங்கி வந்தார். இதைப் பார்த்த தலைமைக் குரு யோசேப்பை மரியாளுக்கு கணவராக மண ஒப்பந்தம் செய்தார். மண ஒப்பந்தத்திற்குப் பிறகு, யோசேப்பு தன்னுடைய சொந்த ஊரான பெத்லகேமிற்குச் சென்றார். மரியாள் நாசரேத்திற்குச் சென்றார். நாசரேத்தில் தான் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னார்.

வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் மரியாளின் கணவர் தூய யோசேப்பின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். தாவீதின் வழிமரபில் தோன்றிய யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவிற்கு ஒரு சிறந்த கணவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால் திருமணத்திற்கு முன்பாகவே மரியாள் கருவுற்றிருப்பது யோசேப்புக்கு தெரிய வந்ததும் அவளை கல்லால் எறிந்துகொல்ல முற்படவில்லை மாறாக பெருந்தன்மையோடு அவரைத் யாருக்கும் தெரியாமல் விளக்கி விட நினைக்கின்றார். பின்னர் கடவுளின் தூதர் அவருக்கு எல்லாவற்றையும் கனவில் வெளிப்படுத்திய பிறகு மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார்.

மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்ட பிறகு யோசேப்பு அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார். குழந்தை இயேசுவை ஏரோது மன்னன் கொல்ல நினைத்தபோது, குழந்தையையும் தாய் மரியாவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பின்னர் கொடுங்கோலன் இறந்த பிறகு அவர்களைக் கூட்டிக்கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். இவ்வாறு மரியாளின் உணர்வுகளை மதிக்கின்ற, அவரை எல்லாவிதங்களிலும் சிறப்பாகப் பராமரிக்கின்ற ஒரு நல்ல கணவராக யோசேப்பு விளங்கினார் என்று சொன்னால் அது மிகையில்லை. யோசேப்பு, இயேசுவுக்கு ஒரு நல்ல வளர்ப்புத் தந்தையாக இருந்தும் செயல்பட்டார். இயேசுவை உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வளர்த்தெடுத்ததில் யோசேப்பின் பங்கை நாம் மறந்து விட முடியாது.

இவ்வாறாக யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவுக்கு ஒரு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு ஒரு நல்ல, சிறந்த முன்மாதிரியான வளர்ப்புத் தந்தையாவும் இருந்து செயல்பட்டு, ஒரு கணவர் எப்படி இருக்கவேண்டும், ஒரு தந்தை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக விளங்குகின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியாளின் கணவர் தூய யோசேப்பின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

1. தன்னை முன்னிலைப் படுத்தாத கணவர்

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கணவன்மார்கள் தங்களுடைய மனைவியரிடத்தில், "நான் சொல்வதைதான் கேட்கவேண்டும், நான் சொல்வதைக் கேட்டுத்தான் நடக்க வேண்டும்" என்று அதிகாரம் செலுத்துவதைப் பார்க்கின்றோம். இன்னும் ஒரு சிலர் தங்களுடைய மனைவியருக்கும் உணர்வு இருக்கிறது என்பதை அறியாதவர்களாய், புரியாதவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட குடும்பம் எப்படி நல்ல குடும்பமாக மாறும் என்பது இறைவனுக்குத் தான் வெட்ட வெளிச்சம்.

வேடிக்கையாகச் சொல்லப்படும் கதை.

ஒரு கிராமத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த, ஒரு தம்பதியருக்கு திருமண வெள்ளிவிழா நடைபெற்றது. திருமண வெள்ளிவிழா மேடையில் வெள்ளிவிழா கொண்டாடும் பெண்ணுக்கு அருகே இருந்த ஒரு வயதான பாட்டி அவளிடத்தில், "ஊரில் இருக்கின்ற எல்லாரும் உங்களுடைய குடும்பத்தை உயர்வாகப் போற்றுகிறார்களே! இந்த இருபத்தைந்து ஆண்டுகால இல்லற வாழ்வில் உனக்கும் உன்னுடைய கணவருக்கும் இடையே சண்டையே வந்தில்லையா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், " அது ஒரு பெரிய கதை" என்று தன்னுடைய கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

திருமணமான புதிதில் நாங்கள் இருவரும் தேனிலவுக்காக ஒரு மலைவாசஸ்தலத்திற்கு சென்றோம். அப்போது போக்குவரத்து வசதி எல்லாம் இன்று இருப்பது போல் கிடையாது. ஆதலால் எங்களுடைய துணிமணி மற்றும் பெட்டியை ஒரு கழுதையில் ஏற்றிவைத்து, பயணமானோம். நன்றாக மேலேறிக் கொண்டிருந்த கழுதை திடிரென்று சுமை தாங்காமல் கீழே இடறி விழுந்தது. இதைப் பார்த்து சினமடைந்த என்னுடைய கணவர், வேகமாக கழுதையிடம் சென்று, அதன் ஒரு காதைத் திருகி "இது முதல் எச்சரிக்கை" என்றார். பின்னர் துணிமணி மற்றும் பெட்டியை அதன்மேல் ஏற்றி வைத்துவிட்டு, மீண்டுமாகப் பயணமானோம். நன்றாக மேலேறி வந்துகொண்டிருந்த கழுதை மீண்டுமாக இடறிக் கீழே விழுந்தது. இதைப் பார்த்த என்னுடைய கணவர் அதன் இன்னொரு காதைப் பிடித்துக்கொண்டு, "இது இரண்டாவது எச்சரிக்கை, இன்னொரு முறை கீழே விழுந்தால் அப்புறம் நடக்கிறது வேறு" என்று சொல்லி எச்சரித்துவிட்டுச் சென்றார்.

பின்னர் கழுதையின் மேல் துணிமணிகளை ஏற்றி வைத்து நாங்கள் இருவரும் மேலே பயணமானோம். நாங்கள் போகவேண்டிய இடத்திற்கு மிக அருகே வந்தபோது, மீண்டுமாக கழுதை சுமை தாங்காமல் கீழே இடறி விழுந்தது. இதைப் பார்த்த என்னுடைய கணவருக்கு கோபம் தலைக்கேறியது. எனவே, அவர் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, கழுதையை சுட்டு வீழ்த்தினார். கழுதை துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்துபோனது. இதைப் பார்த்து பதறிப்போன நான் அவரிடம், "எதற்காக அந்த வாயில்லாத ஜீவனை இப்படிச் சுட்டுக் கொன்றீர்கள்" என்று கேட்டடேன். அதற்கு அவர், என்னுடைய காதைத் திருகி, "இது முதல் எச்சரிக்கை" என்றார். அவ்வளவுதான் இனிமேலும் ஏதாவது பேசினால் கழுதைக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும் என உணர்ந்துகொண்டு, அன்று பேச்சை நிறுத்தியவள்தான் இன்று வரைக்கும் நான் அவரிடம் எதுவும் பேசியதில்லை" என்றாள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அந்த வயதான பாட்டி மயங்கி விழாதுதான் தாமதம்.

இப்படியும் ஒருசில கணவன்மார்கள் தங்களுடைய மனைவியரை அடக்கி ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். ஆனால் யோசேப்பு அப்படியில்லை. அவர் தன்னுடைய மனைவியான மரியாளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார். அவருக்கே அதிக முன்னுரிமை தந்தார். இன்னாருடைய மனைவி இன்னார் என்று அழைக்கப்படும் இந்த காலகட்டத்தில் யோசேப்போ, மரியாளின் கணவர் என்று தன்னுடைய மனைவியாள் பெயராலே அடையாளப்படுத்தப்படுகிறார். இதிலிருந்தே தெரிகிறது அவர் எந்தளவுக்கு மனைவிக்கு முன்னுரிமை தருபவர் என்று. மேலும் குழந்தை இயேசு கோவிலில் காணமால் போய், கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தான் பேசாமல் தன்னுடைய மனைவி பேசுவதற்கு முன்னுரிமை தருகிறார். இவற்றையும் வைத்துப் பார்க்கும்போது அவர் தன்னுடைய மனைவிக்கு எந்தளவுக்கு முன்னுரிமை வாழ்ந்திருப்பார் என நாம் புரிந்துகொள்ளலாம்.

2. இறைத்திருவுளத்திற்கு பணிந்து வாழ்ந்த கணவர்

தூய யோசேப்பு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைத்திருவுளத்திற்கு பணிந்து வாழ்ந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. திருமணத்திற்கு முன்பாக தனக்கு மண ஒப்பந்தமான மரியாள் ஏற்கனவே கருவுற்றிருப்பது தெரிந்ததும், மறைவாக விலக்கிவிட நினைத்தபோது, ஆண்டவரின் தூதர் அவருக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொல்ல, மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார். கொலைகாரன் ஏரோது குழந்தை இயேசுவை கொல்ல இருக்கும் செய்தியை ஆண்டவரின் தூதர் அவருக்கு அறிவித்தபோது, உடனே அவர் குழந்தையையும் அதன் தாயையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடி, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார். கொடுங்கோலன் இறந்தபிறகு ஆண்டவரது தூதரின் கட்டளைப் படி தாய் சேயோடு தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி வருகிறார். இவ்வாறு யோசேப்பு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனின் திருவுளத்திற்கு பணித்து நடந்த ஒரு கணவராக விளங்குகிறார். அவர் ஒருபோதும் தன்னுடைய விருப்பத்தின்படி நடக்கவில்லை, நடக்கவும் நினைக்கவில்லை.

3. நேர்மையாளரான கணவர் யோசேப்பு

விவிலியம் யோசேப்பைக் குறித்து சொல்கிற ஒரே ஒரு செய்தி அவர் நேர்மையாளர் என்பதாகும் (மத் 1:19). நேர்மையாளர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய இறுதித்தீர்ப்பு உவமையில் நாம் தெளிவாகக் கண்டுகொள்ளலாம். அந்த உவமையில் நேர்மையாளர்கள் என்பவர்கள், பசியாய் இருந்தோருக்கு உண்ணக் கொடுத்திருப்பார்கள். தாகமாக இருந்தவரின் தாகத்தை தனித்திருப்பார்கள்; அன்னியராய் இருந்தோரை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்; ஆடையின்றி இருந்தோரை உடுத்தியிருப்பார்கள்; நோயுற்று இருந்தோரை கவனித்திருப்பார்கள்; சிறையில் இருப்போரை பார்க்கச் சென்றிருப்பார்கள். யோசேப்பு நேர்மையாளர் என்பதால் இத்தகைய காரியத்தையும், இதுபோன்று காரியத்தையும் செய்திருப்பார் என நாம் உறுதிபடச் சொல்லலாம்.

ஆகவே, தூய யோசேப்பு நேர்மையாளராய் இருந்து எல்லார்மீதும் இரக்கம்கொண்டு வாழ்ந்திருப்பார் என உண்மையாக நம்பலாம்.

எனவே, மரியாளின் கணவரான தூய யோசேப்பின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் ஒவ்வொருவரும்  பெண்களுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்களாக, அவர்களுக்கு முன்னுரிமை தருபவர்களாக, இறைத் திருவுளத்திற்கு பணிந்து நடப்பவர்களாக, நேர்மையாளர்களாக வாழ முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

"தூய யோசேப்பிடம் நான் கேட்ட வரங்களை எப்போதும் அவர் தராமல் இருந்ததில்லை - தூய அவிலாத் தெரசம்மாள்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
புனித வளனார்

இன்று நம் தாய்த்திருஅவை "புனித வளனார் - புனித கன்னி மரியாளின் துணைவர்" திருநாளைக் கொண்டாடுகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 1:16, 18-21,24) புனித மத்தேயு பதிவு செய்யும் நிகழ்வில் உள்ள யோசேப்பு பற்றிய சில குறிப்புக்களைச் சிந்திப்போம்.

1. யாக்கோபின் மகன் மரியாளின் கணவர் யோசேப்பு:
'யோசேப்பு' பற்றிய முதல் செய்தியைத் தரும் மத்தேயு, அவரை, 'யாக்கோபின் மகன்,' 'மரியாளின் கணவர்' என்ற இரு நிலைகளில் அறிமுகம் செய்கிறார். இங்கே, 'மகன்' என்பது யோசேப்பின் 'வேர் பதித்தலையும்,' 'கணவர்' என்பது அவரின் 'விழுது பரப்புதலையும்' குறிக்கிறது. மனித வாழ்வு ஒரு குடும்பத்தில் தொடங்கி மற்றொரு குடும்பத்தில் தொடர்கிறது. இதை ஆதாம் நிகழ்வில்கூட பார்க்கிறோம். ஆதாம் மண் என்ற வேரில் தொடங்கி தன் விலா எலும்பு என்னும் ஏவாளில் தன் வாழ்வைத் தொடர்கிறார். இவ்வாறாக, திருமண உறவு என்பதில் அடங்கியுள்ள மாண்பை அழகுற உரைக்கிறார் மத்தேயு. மணத்துறவு கொண்டவர்கள் இதை எப்படிப் புரிந்துகொள்வது. இவர்களுக்கு இவர்களுடைய உறவு தங்களுடைய குடும்பத்தில் தொடங்கி ஒட்டுமொத்த இறையாட்சிக் குடும்பத்தை நோக்கி நீள்கிறது. அவ்வளவுதான். ஆக, மணத்துறவு மேற்கொண்டவர் உறவை மறுப்பவராக அல்லாமல் உறவை அதிகரித்துக்கொள்ளவே மணத்துறவு மேற்கொள்கிறார்.

2. மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம்:
யூதர்களின் முறைமைப்படி முதலில் ஒப்பந்தம் நடந்து, சில மாதங்கள் கழித்தே மொழி நடக்கும். இது குஞ்சுபொறிக் காலம் போல. அதாவது, ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், தொடர்ந்து முன்னெடுக்கப்போகும் வாழ்க்கையைத் திட்டமிடவும் எடுக்கும் காலம் இது.

3. மரியாள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது:
யோசேப்பு இதை எப்படி அறிந்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. மரியாளே சொல்லியிருக்கலாம். அல்லது மரியாளின் பெற்றோர் வழியாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், இங்கே தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பவராக இருக்கிறார் யோசேப்பு. இது ஒரு முக்கியமான குணம். இந்தக் குணம் எல்லாருக்கும் வராது. தன்னிலே அமைதியாய் இருப்பவர், தன்னை முழுமையாக அறிந்தவர் மட்டுமே தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பார். மேலும், இப்படிப்பட்ட நபர் தன்னை மற்ற எல்லாரோடும் இணைந்த ஒருவராகவும் பார்ப்பார்.

4. யோசேப்பு நேர்மையாளர்:
'நேர்மை' என்பதற்கு இங்கே கிரேக்கத்தில் 'டிகாயுசுனே' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள், தன்னை நேர் கோட்டில் வைத்துக்கொள்வது. இங்கே 'நேர்மையாளர்' என்று அறிமுகம் செய்வதன் வழியாக, இவர் ஒரு ஸ்ட்ரிக்ட் பேர்வழி. அடுத்த என்ன செய்வாரோ? என்ற எதிர்பார்ப்பை வாசகரின் மனத்தில் விதைக்கிறார் மத்தேயு. கொஞ்ச நேரத்தில், இவரின் நேர்மையாளர் நிலை என்பது சட்டம் சார்ந்தது அல்ல. மாறாக, இரக்கம் சார்ந்தது என்று நாம் அறிகின்றோம். இயேசுவுக்கு இதே இரக்க குணம் வருவதற்கு யோசேப்பின் இக்குணம் காரணமாக இருக்கலாம்.

5. மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டிருந்தார்:
தன்னைவிட பிறரை மையமாக வைத்து - மரியாளை மையமாக வைத்து - முடிவெடுக்கிறார் யோசேப்பு. உறவு நிலைகளை முறித்துக்கொள்ளும்போது பல நேரங்களில் நாம் நம்மை மட்டுமே முன்வைத்து முடிவெடுக்கிறோம். ஆனால், உறவில் அடுத்தவரும் இருக்கிறார் என்பதை மனத்தில் வைப்பது மிக அவசியம்.

6. சிந்தித்துக்கொண்டிருக்கும்போது:
மிகுதியான சிந்தனை, மிகுதியான களைப்பைத் தரும். பிரச்சினைகள் பற்றி மனம் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது பலருக்குத் தூக்கம் வருவதில்லை. ஆனால், யோசேப்பு தூங்கிவிடுகிறார். இதுவும் அவரின் ஆழ்மன அமைதியைக் காட்டுகிறது. என்ன நேர்ந்தாலும் சஞ்சலப்படாத ஒரு பக்குவம் இது.

7. தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து மனைவியை ஏற்றுக்கொண்டார்:
கனவு என்பது இறைவெளிப்பாட்டு ஊடகம் என்பதை யோசேப்பு அறிந்தவராக இருக்கிறார். தன் மூதாதையர்கள் ஆபிரகாம், யாக்கோபு, யோசேப்பு போன்றவர்களைக் கனவுகளின் வழியாகவே கடவுள் வழிநடத்தினார் என்பதை உணர்ந்திருந்தார் யோசேப்பு. ஆகையால்தான், கனவில் இறைத்திருவுளம் காண்கிறார்.

ஒருமுறை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த யோசேப்பு தன் முடிவிலிருந்து பின்வாங்கவே இல்லை. நல்லவற்றிக்காகவும், மற்றவர்களுக்காகவும் தன் வாக்குறுதிகளை மாற்றிக்கொள்ளவும், தன் திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் தயங்கவில்லை யோசேப்பு.

'எல்லாம் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும்' என்பது யோசேப்பின் கொள்கை அல்ல.

அந்த நொடி மரியாளை ஏற்றுக்கொண்ட யோசேப்பு, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். பெத்லகேம், எகிப்து, நாசரேத், எருசலேம் என இவர் ஓடுகின்றார். ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நிகழ்விலும் இறைத்திருவுளம் அறிகிறார்.

எனினும், எல்லாவற்றிலும் மௌனம் காக்கிறார்.

மௌனத்தைப் புரிந்துகொள்பவர்களே வார்த்தைகளையும் புரிந்துகொள்ள முடியும்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)

 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா