Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஜான் ஓகில்வீ ✠(St. John Ogilvie)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 10
 ✠ புனிதர் ஜான் ஓகில்வீ ✠(St. John Ogilvie)

*இயேசு சபை குரு மற்றும் மறைசாட்சி :
(Jesuit Priest and Martyr)

*பிறப்பு : கி.பி. 1579
ட்ரம்நகேத், பன்ஃப்ஷைர், ஸ்காட்லாந்து
(Drumnakeith, Banffshire, Scotland)

*இறப்பு : மார்ச் 10, 1615
க்ளஸ்கோவ் க்ராஸ், ஸ்காட்லாந்து
(Glasgow Cross, Scotland)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)

*முக்திபேறு பட்டம் : 1929
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

*புனிதர் பட்டம் : 1976
திருத்தந்தை ஆறாம் பால்
(Pope Paul VI)

புனிதர் ஜான் ஓகில்வீ, ஒரு ஸ்காட்லாந்து நாட்டின் இயேசு சபை குருவும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

இவர் "வால்ட்டர் ஓகில்வீ" (Walter Ogilvie) என்பவரது மூத்த மகன் ஆவார். இவரது தந்தை ஒரு மதிப்பு மிக்க "கால்வினீய" (Calvinist) சமுதாயத்தைச் சார்ந்த செல்வந்தர் ஆவார்.

ஜான் பன்னிரெண்டாவது வயதில் கல்வி கற்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். அவர், ஜெர்மனியில், "பெனடிக்டைன்" (Benedictines) சபையினரின் கீழுள்ள பல்வேறு கத்தோலிக்க கல்வி நிறுவனங்களிலும், "மொராவியா" (Moravia) நாட்டிலுள்ள இயேசு சபையின் (Jesuits) கீழுள்ள கல்வி நிறுவனங்களிலும் கல்வி கற்றார்.

அக்காலத்தைய சமய சர்ச்சைகளும் கொந்தளிப்புகளும் ஐரோப்பா கண்டத்தையே மூழ்கடித்திருந்தன. ஜான் ஒரு கத்தோலிக்கராக மாற முடிவெடுத்திருந்தார். 1596ம் ஆண்டில், தமது பதினேழாவது வயதில் ஜான் "பெல்ஜியம்" (Belgium) நாட்டில் கத்தோலிக்க திருச்சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இயேசு சபையில் இணைந்த இவர், 1610ம் ஆண்டு, "பாரிஸ்" (Paris) நகரில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

குருத்துவ அருட்பொழிவு பெற்ற ஜான், அதன்பின்னர் "நார்மண்டி" (Normandy) எனுமிடத்தில் பணியாற்றினார். ஸ்காட்லாந்து நாட்டில் மீதமிருந்த ஒரு சில கத்தோலிக்க மக்களுக்கு பணியாற்ற அனுப்பும்படி அடிக்கடி வேண்டினார். (அக்காலத்தில், 1560ம் ஆண்டுகளில், ஸ்காட்லாந்து நாட்டில் கத்தோலிக்க மறை போதனை செய்வதோ, மதமாற்றம் செய்ய முயற்சிப்பதோ கூட சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டிருந்தது.)

கத்தோலிக்க பிரபுக்கள் யாராவது தமக்கு உதவுவார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், யாரும் உதவ முன்வராததால் அவர் அங்கிருந்து லண்டன் நகர் சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் பாரிஸ் நகர் திரும்பினார். இறுதியில், 1613ம் ஆண்டு நவம்பர் மாதம், "ஜான் வாட்ஸன்" (John Watson) என்ற பெயரில் ஒரு குதிரை வியாபாரி போன்று மாறுவேடத்தில் ஸ்காட்லாந்து நாட்டில் நுழைந்தார். அதன்பின்னர், அவர் இரகசியமாக மறை போதனை செய்யத் தொடங்கினார். பிரத்தியேக வீடுகளில் மறைவாக திருப்பலிகள் நிறைவேற்றினார்.

சுமார் ஒன்றரை வருடங்களே ஸ்காட்லாந்து நாட்டில் மறைப்பணியாற்றிய ஜான், கண்டுபிடிக்கப்பட்டு, 1614ம் ஆண்டு, அக்டோபர் மாதம், கைது செய்யப்பட்டார். அங்கிருந்த எதிர்கத்தோலிக்க பேராயர் "ஸ்பாட்டிஸ்வுட்" (Archbishop Spottiswood) என்பவரது உத்தரவின்படி சிறையிலடைக்கப்பட்டார். 26 மணி நேரத்துக்கு மேலாக அவருக்கு உணவு ஏதும் கொடுக்கப்படவில்லை. அவர், தமது செய்கைக்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். கொடூரமாக துன்புறுத்தப்பட்டார். சிறையில் அவரை உறங்க விட மறுத்தனர். அவரது கூட்டாளிகளைக் காட்டிக்கொடுக்குமாறு வற்புறுத்தப்பட்டார். ஆனால், அவர் எவர் பெயரையும் சொல்ல மறுத்துவிட்டார்.

அரசன் "ஜேம்சுக்கு" (King James) விசுவாசம் காட்டும் உறுதிமொழி ஏற்க மறுத்ததால் அவரது நிலை மேலும் மோசமடைந்தது. எட்டு நாட்கள் இரவும் பகலும் அவர் அங்குமிங்கும் இழுத்துச் செல்லப்பட்டார். கூரிய மரக்குற்றிகளால் குத்தப்பட்டார். அவரது தலை மயிர்கள் பிடுங்கப்பட்டன. இருப்பினும் அவர் தமது கூட்டாளிகளைக் காட்டிக்கொடுக்க மறுத்துவிட்டார். அத்துடன் அரசனுக்கு தமது மத விசுவாசத்தினையும் அறிக்கையிட மறுத்துவிட்டார்.

நீதிமன்ற இறுதி விசாரணையின்போது ஜான் கூறியதாவது:
"நான் என் அரசனின் அனைத்து ஆணைகளுக்கும் ஒரு அடிமையாக கீழ்படிய தயாராக இருக்கிறேன். அவரது ஆட்சிக்கு ஏதும் ஆபத்து வருமெனில், நான் என்னுடைய கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்த தயாராக இருக்கிறேன். ஆனால், எனது ஆன்மீக வரம்பினை அவர் அநியாயமாக குலைப்பதனை என்னால் பொறுத்துக்கொள்ளவோ, கீழ்படியவோ இயலாது."

துரோகி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜானுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. "கத்தோலிக்கர் எவராவது இங்கே மறைந்து இருப்பின், அவர்கள் எனக்காக ஜெபிக்கட்டும். ஆனால், கத்தோலிக்கர்களுக்கு எதிரானவர்களின் ஜெபம் எனக்கு வேண்டாம்" என்று ஜான் இறுதியாகக் கூறினார்.

தூக்கு மேடைக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஜான், படிக்கட்டுகளில் தள்ளி விடப்பட்டார். அப்போது, ஜான் தம்மிடம் மறைத்து வைத்திருந்த ஜெபமாலையை தூக்கி கூட்டத்தினரிடையே விட்டெறிந்தார். அதனை எம்பிப் பிடித்த அவரது எதிரி ஒருவன் பக்தி விசுவாசமுள்ளவனாக மாறினான். இறுதிவரை அவன் கத்தோலிக்கனாகவே வாழ்ந்தான் என்றும் கூறப்படுகின்றது.

இறுதிவரை, தூக்குமேடையிலும் அவர் உண்மையாக இருந்தார். சிறைச்சாலையிலும், மரணம் வரையிலும் அவரது தைரியம் ஸ்காட்லாந்து நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது.

ஜானின் மரணத்தின் பின்னர், அவரைப் பின்பற்றிய அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அனைவருக்கும் கடும் தண்டனைகள் அளிக்கப்பட்டன. ஆனால் ஒருவருக்குக் கூட மரண தண்டனை அளிக்கப்படவில்லை.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா