Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஃபிரான்செஸ் ✠(St. Frances of Rome)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 9
✠ புனிதர் ஃபிரான்செஸ் ✠(St. Frances of Rome)

*நிறுவனர் : (Founder)

*பிறப்பு : கி.பி. 1384
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

*இறப்பு : மார்ச் 9, 1440
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*புனிதர் பட்டம் : 1608
திருத்தந்தை 5ம் பவுல்
(Pope Paul V)

*முக்கிய திருத்தலம் :
புனிதர் ஃபிரான்செஸ் ரோமானா தேவாலயம், ரோம்
(Church of Santa Francesca Romana, Rome, Italy)

பாதுகாவல் :
சத்தியப் பிரமாண உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளாத பெனடிக்டைன் மறைப் பணியாளர் அமைப்பு (Benedictine Oblates)
வாகனம் ஓட்டுநர் (Automobile Drivers)
கைம்பெண்கள் (Widows)

புனிதர் ஃபிரான்செஸ், ஒரு ஆத்ம பலம் கொண்ட இத்தாலிய புனிதர் ஆவார். இவர் ஒரு மனைவியும், தாயும், தொண்டு - சேவை அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். இவர், "சத்தியப் பிரமாண உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளாத பெனடிக்டைன் மறைப் பணியாளர்" (Benedictine Oblates) அமைப்பினை நிறுவியவரும் ஆவார்.

ரோம் நகரின் ஒரு பிரபுத்துவ செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை "பவோலா புஸ்ஸா" (Paolo Bussa) ஆவார். இவரது தாயாரின் பெயர், "லகொபெல்லா" (Iacobella dei Roffredeschi) ஆகும். தமது 11 வயதில், இவர் ஒரு அருட்சகோதரியாக துறவறம் பெற விரும்பினார். ஆனால், இவரது பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஃபிரான்செஸின் 12 வயதில், மிகவும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், திருத்தந்தையரின் போர்ப்படையின் ரோம் நகர தளபதியுமான "லோரன்ஸோ போன்ஸியானி" (Lorenzo Ponziani) என்பவருக்கு வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தனர். இவர்களது திருமண வாழ்க்கை சுமார் நாற்பது வருடங்கள் நீடித்தது. லோரன்ஸோ தமது மனைவியை மிகவும் போற்றியதால் இவர்களது மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது.

லோரன்ஸோ அடிக்கடி போர் நடவடிக்கைகள் காரணமாக வெளியூர்கள் சென்றதால், அவர் அப்படி போகும் காலங்களிலெல்லாம் ஃபிரான்செஸ் தமது கணவரின் சகோதரரின் மனைவியான "வன்னோஸ்ஸா" (Vannozza) என்பவருடன் ஏழைகளுக்கும் நோயுற்றோர்க்கும் சேவை மற்றும் பணிவிடைகள் செய்யச் சென்றார். இருவரது கணவர்மாரின் ஆசீர்வாதங்களுடன் இவர்கள் பணியாற்றினர். நகரின் பிற செல்வந்தர் குடும்பங்களின் பெண்களையும் ஏழை மற்றும் நோயுற்றோரின் சேவை செய்ய ஃபிரான்செஸ் மற்றும் வன்னோஸ்ஸா ஊக்குவித்தனர்.

ஒருமுறை ஃபிரான்செஸ் தீவிர நோய்வாய்ப்பட்டார். அவரது கணவன், மாய வித்தைகள் செய்யும் ஒருவனை அழைத்து வந்தார். ஆனால், ஃபிரான்சஸ் அவனை விரட்டிவிட்டார். பின்னர், புனித அலெக்சிஸ் அவருக்கு தோன்றி அவரை குணப்படுத்தியதாக வன்னோஸ்ஸாவுக்கு நினைவுபடுத்தினார். நோயினால் ஏற்பட்ட வேதனைகளும் துன்பங்களும் எழைகளின்பாலும் நோயுற்றோரின்பாலும் அவரது அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பினை மேலும் ஆழப்படுத்தியது.

ஃபிரான்செஸின் மாமியார் மரணமடைந்ததன் பின்னர், வீட்டின் முழு பொறுப்பும் இவரிடம் வந்தது. ஒருமுறை வெள்ளமும் பஞ்சமும் வந்த காலத்தில், தமது குடும்ப சொத்தான பண்ணை தோட்டத்தின் ஒரு பகுதியை மருத்துவமனையாக மாற்றினார். ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்களும் ஆடைகளும் வழங்கினார். இவரது நடவடிக்கைகளால் கோபமுற்ற இவரது மாமனார், ஒருமுறை உணவுப்பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் பண்டகசாலைகளின் சாவிகளை எடுத்துக்கொண்டு சென்றார். ஆனால், ஃபிரான்செஸ் தமது வழக்கமான செபத்தை முடித்ததும் சோள மூட்டைகளும் திராட்சை இரச பீப்பைகளும் அதிசயிக்கும் விதமாக நிரம்பியதைக் கண்டு, எடுத்துச் சென்ற சாவிகளை திரும்ப கொடுத்தார்.

வருடங்கள் செல்ல, ஃபிரான்செஸ் இரண்டு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் ஈன்றார். குழந்தைகள் பிறக்க, அவரது குடும்பப் பொறுப்பும் அதிகரித்தது. குடும்பத்தின்மேல் அதிக அக்கறை காட்ட தொடங்கினார். ஃபிரான்செஸின் அக்கறை மற்றும் கவனிப்பினால் அவரது குடும்பம் தழைத்தோங்கி செழித்தது.

ஆனால் சில வருடங்களில், இத்தாலி நாடு முழுதும் பரவிய பிளேக் நோய், கோர தாண்டவமாடியது. ரோம் நகரம் முழுதும் பேரழிவு கொடுமை ஏற்பட்டது. அதன் காரணமாக, ஃபிரான்செஸின் இரண்டாவது மகன் மரித்துப் போனான். பிளேக்கினால் பாதிக்கப்பட்டோரின் துயரங்களைப் போக்கும் முயற்சியாக, ஃபிரான்செஸ் தமது பணம் முழுவதையும் உபயோகித்தார். நோயுற்றோரின் அத்தியாவசிய தேவைகளை வாங்கும் பொருட்டு, தமது சொத்து முழுவதையும் விற்றார்.

அனைத்து வளங்களும் சொத்துக்களும் தீர்ந்து போயின. ஃபிரான்செஸும் வன்னோஸ்ஸாவும் வீடு வீடாக ஏறி இறங்கி, நோயுற்றோரின் தேவைகளுக்காக பிச்சை எடுத்தனர். பின்னர், ஃபிரான்செஸின் மகளும் மரித்துப் போனார். இப்புனிதர் தமது வீட்டின் ஒரு பகுதியை மருத்துவமனையாக மாற்றினார்.

இத்தகைய வாழ்க்கைமுறை உலகிற்கு மிகவும் அவசியமானதென்று ஃபிரான்செஸ் மென்மேலும் நம்பிக்கையும் உறுதியும் கொண்டார். 1425ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாள், அன்னை மரியாளின் விண்ணேற்பு திருவிழாவன்று, "சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்ளாத மரியாளின் ஒலிவேட்டன் மறைப் பணியாளர்" (Olivetan Oblates of Mary) எனும் அமைப்பினை நிறுவினார். எவ்வித துறவற பிரமாணங்களுக்கும், உறுதிமொழிகளுக்கும் கட்டுப்படாத பெண்களின் சமூகம் உதித்தது. இப்பெண்கள் தம்மை இறைவனுக்கும், ஏழைகளின் சேவையிலுமே அர்ப்பணித்தனர். 1433ம் ஆண்டு, மார்ச் மாதம், "கோம்பிடோக்லியோ" (Campidoglio) எனும் இடத்திற்கு அருகிலுள்ள "டோர் டி ஸ்பெச்சி" (Tor de' Specchi) எனுமிடத்தில், துறவு மதத்தினை நிறுவினார். அதே ஜூலை மாதம் நான்காம் தேதி, இதற்கு திருத்தந்தை "நான்காம் யூஜின்" (Pope Eugene IV) அவர்களின் அங்கீகாரம் கிட்டியது.

"பெனடிக்டைன் மறைப் பணியாளர்" அமைப்பு நிறுவப்பட்டதும் ஃபிரான்செஸ் அச்சமூகத்தினருடன் தங்கவில்லை. மாறாக தமது கணவருடன் தமது வீட்டிலேயே வாழ்ந்தார். சுமார் ஏழு வருடங்கள் இங்ஙனம் வாழ்ந்த ஃபிரான்செஸ், 1436ம் ஆண்டு, தமது கணவரின் மரணத்தின் பின்னர், அவரது சமூகத்தினருடன் தங்கி வாழ்ந்தார். ஏழைகளின் ஏழையாக பணியாற்றினார்.

புனிதர் அன்னை தெரசா, செபித்தல் மூலமாக இறைவனை அன்பு செய்வது மட்டுமல்லாது, ஏழைகளுக்கு சேவை செய்வதன் மூலமும் இறைவனை அன்பு செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். அவ்வாறே, சேவை செய்வதன் மூலம் இறைவனை அன்பு செய்ய, மத பிரமாணங்களும், உறுதிமொழிகளும் எடுத்துக்கொண்ட துறவிகளாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்பதனை புனிதர் ஃபிரான்செஸ் நிரூபித்துள்ளார்.




உரோமை நகர தூய பிரான்செஸ் (மார்ச் 09)

"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (மத் 25: 40)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் பிரான்செஸ், 1384 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த ஒரு செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சிறுவயதிலே துறவியாகப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், இவர் வளர்ந்து பெரியவரானபோது இவருடைய பெற்றோர் இவருடைய விருப்பத்திற்கு மாறாக லொரென்சோ என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டனர். தன்னுடைய வாழ்க்கை இப்படி மாறிவிட்டதே என முதலில் வருத்தப்பட்ட பிரான்செஸ், பின்னாளில் அதனை இறைத்திருவுளம் என ஏற்றுக்கொண்டார்.

திருமண வாழ்க்கையில் தன்னுடைய கணவருக்கு மிகவும் பிரமாணிக்கமாகவும் எடுத்துக்காட்டான ஒரு பெண்மணியாகவும் வாழ்ந்துவந்தார். குறிப்பாக இவர் ஏழை எளிய மக்களிடத்தில் காட்டிய அன்பு எல்லாரையும் வியக்க வைத்தது. ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது, பிரான்செஸ் தன்னுடைய நகைகளையெல்லாம் விற்று ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவி செய்தார். இன்னொரு சமயம் நாட்டில் கொள்ளை நோய் ஏற்பட்டபோது, வீடு வீடாகச் சென்று எல்லாரிடத்திலும் உணவுப் பொருட்களை வாங்கி, அதனைத் தேவையில் இருநத மக்களுக்குக் கொடுத்து உதவினார். இந்தக் கொள்ளைநோயில் பிரான்செசின் இரு பிள்ளைகளும் இறந்து போனார்கள். அப்போது அவர் அடைந்த துயரை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது.

பிரான்செஸ், எப்போதுமே தன்னுடைய வாழ்வில் ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவந்தார். அவர் செய்துவந்த ஜெபம் எல்லாப் பணிகளையும் சிறப்புடன் செய்ய உதவி புரிந்தது. ஏழை நோயாளிகள் தங்க இடமில்லாமல் தவித்தபோது அவர்களையெல்லாம் தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தார். இப்படி அவர் எந்நேரமும் ஏழைகளைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவருடைய கணவர் அவருக்கு எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அத்தகைய செயல்களைத் தொடர்ந்து செய்வதற்கான எல்லா ஊக்கத்தையும் அளித்தார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் பிரான்செசின் கணவர் அவரை விட்டுப் பிரிந்தார். இதனால் தனிமரமான பிரான்செஸ் தன்னுடைய உடமைகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஏழைகளுக்குப் பணிசெய்வதையே தன்னுடைய முழுநேரப் பணியாக மாற்றிக்கொண்டார்.

இப்படி எந்நேரமும் ஏழைகளைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருந்த பிரான்செஸ், அவர்களுக்காக ஒரு சபையை நிறுவினார். அந்த சபையின்மூலம் அவர் தன்னாலான உதவிகளை ஏழைகளுக்குச் செய்து வந்தார். இப்படி ஏழைகள் வாழ்வுபெற தன்னையே கரைத்துக்கொண்ட பிரான்செஸ், 1440 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பிரான்செசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஏழை எளியவரிடத்தில் அக்கறை

தூய பிரான்செசின் வாழ்வை ஒருமுறை படித்துப் பார்க்கும்போது அவர் ஏழை எளியவரிடத்தில் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் நமக்குப் புரியும். அவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஏழைகளுக்கு நற்செய்தி, ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர் என்று ஏழைகளை மையப்படுத்திய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவரைப் போன்று நாமும் ஏழைகளை மையப்படுத்திய வாழ்கையை வாழ்கின்றபோது, அவரது அன்புச் சீடர்களாவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

அன்னைத் தெரசா அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஓர் அருமையான நிகழ்ச்சி. அன்னைத் தெரசா கன்னியர் மடத்தை விட்டுவிட்டு, கல்கத்தாவின் சேரிப் பகுதிகளில் பணிசெய்யத் தொடங்கிய முதல் நாளன்று, சாலையோரத்தில் உடல் முழுவதும் புண்களாக இருந்த ஒருவர் கவனிப்பாரற்றுக் கிடந்தார். அவரைப் பார்த்த அன்னைத் தெரசா அவரைத் தூக்கி எடுத்துக் குளிப்பாட்டி, அவருக்கு புத்தாடை அணிவித்தார். இவற்றையெல்லாம் பார்த்த அந்த நோயாளி, "அம்மா! என்னை நீங்கள் இந்தளவுக்குப் பரிமாரித்துக் கொள்கின்றீர்களே. எது உங்களை இவற்றையெல்லாம் எனக்கு செய்யத் தூண்டியது?" என்று கேட்டார். அதற்கு அன்னை அவரிடத்தில், "உன்மீது நான் வைத்திருக்கும் அன்புதான் என்னை இவ்வளவு காரியங்களையும் செய்யத் தூண்டியது" என்றார்.

ஆம், அன்னைத் தெரசா ஏழைகள், அனாதைகள், நோயாளிகள் போன்றோரிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அந்த அன்புதான் அவரை எல்லாப் பணிகளையெல்லாம் சிறப்பாகச் செய்ய தூண்டியது. நாமும் அன்னைத் தெரசாவைப் போன்று, இன்று நாம் நினைவுகூரும் தூய பிரான்செஸ் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான அன்பு கொண்டிருக்கும்போது, நம்மால் அவர்களுக்காக எதையும் செய்ய முடியும் என்பது உறுதி.

ஆகவே, பிரான்செசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா