✠ புனிதர் ஃபீனா ✠(St. Fina) |
|
|
|
நினைவுத் திருநாள் :
மார்ச்
12 |
✠ புனிதர் ஃபீனா
✠(St. Fina)
*கன்னியர் : (Virgin)
*பிறப்பு : கி.பி. 1238
சான் கிமிக்னானோ, இத்தாலி
(San Gimignano, Italy)
*இறப்பு : மார்ச் 12, 1253
சான் கிமிக்னானோ, இத்தாலி
(San Gimignano, Italy)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
*பாதுகாவல் :
மாற்றுத் திறனாளிகள், நெசவாளர்கள்
புனிதர் ஃபீனா அல்லது புனிதர் செரஃபினா (Saint Fina or Saint
Serafina) ஓர் இத்தாலிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த சிறுமி
ஆவார்.
"ஃபினா டே சியார்டி" (Fina dei Ciardi) எனும் இயற்பெயர் கொண்ட
இவர், வட-மத்திய இத்தாலியின் "டுஸ்கனி" (Tuscany) மாகாணத்தின்,
"சியேனா" (Siena) பிராந்தியத்தின் "சேன் ஜிமிக்நானோ" (San
Gimignano) எனும் மலை நகரில் 1238ம் ஆண்டு பிறந்தவர் ஆவார்.
இவரது பெற்றோர், "காம்பியோ சியார்டி" மற்றும் "இம்பீரியேரா" (Cambio
Ciardi and Imperiera) ஆவர். ஒருவேளை உணவு கூட வயிறார உண்ணமுடியாத
அளவிற்கு ஏழ்மையாக வாழ்ந்தவர். அவ்வாறு இருந்தபோதிலும், தன்னிடம்
உள்ள உணவில் சிறிதளவை மற்ற ஏழைகளுடன் பகிர்ந்து வாழ்ந்தார்.
இவர், அதிதூய கன்னி மரியாளிடம் தீவிர பக்தியுள்ளவர். தமது
வாழ்நாளில், திருப்பலிக்காக ஆலயத்திற்குச் செல்வதைத் தவிர்த்து
வீட்டை விட்டு வெளியே சென்றறியாதவர். இவர் பிறரிடம் தீவிர அன்பு
செலுத்துபவராக அறியப்படுகிறார்.
1248ம் ஆண்டு, ஃபீனா காசநோய் சம்பந்தப்பட்ட எலும்பு அல்லது எலும்பு
மஜ்ஜையில் அழற்சி (Tuberculous Osteomyelitis) போன்ற பெரும்
நோயால் தாக்கப்பட்டு, மிகக் கொடுமையான வேதனைகளை அனுபவித்தார்.
நோயின் வேதனை தாங்க முடியாமல் துடித்தபோதும், பொறுமையை இழக்காமல்,
இறைவனை இறுக பற்றி வாழ்ந்தார். படுக்கையை மறுத்து, மரக்
கோரைப்பாயில் படுத்து உறங்கினார். தான் படும் வலிகளை இறைவனுக்காக
அனுபவிக்கிறேன் என்று புன்னகையோடு ஏற்றார். இவரது இந்த ஆழ்ந்த
தீவிர விசுவாசம் இவரது வேதனைகளைக் குறைத்தது.
நெடுநாளைய நோய்ப்படுக்கையால் இவரது உடல் இவர் படுத்திருந்த மரக்
கோரைப்பாயுடன் ஒட்டிக்கொண்டதாக கூறுகின்றனர். இவரது உடலில் ஏற்பட்ட
புண்களை புழுக்களும் எலிகளும் கடித்தனவாம். இவர் நோயில் இருக்கையிலேயே
இவரது தந்தை மரித்துப்போனார். இவரது தாயாரும் பின்னர் கீழே
விழுந்து மரணமடைந்தார். தமது துரதிர்ஷ்டத்திலும் ஏழ்மையிலும்
இவர் இறைவனுக்கு நன்றி கூறிக்கொண்டேயிருந்தார். தமது ஆத்மா
விரைவில் இவ்வுடலை விட்டு வெளியேறி இறைவனை காணவேண்டுமென்ற தமது
விருப்பத்தை சொல்லிக்கொண்டேயிருந்தார்.
இப்புனிதரின் ஆழ்ந்த பக்தியானது, அவரை அடிக்கடி வந்து
பார்த்துச் சென்ற சான் கிமிக்னானோ நகர மக்களுக்கு ஒரு சிறந்த
எடுத்துக்காட்டாக அமைந்தது.
வாழும் போதே புனிதர் என்று போற்றப்பட்ட இவர், நோயுற்று, நீண்ட
ஐந்து வருட வேதனையின் பிறகு, 1253ம் ஆண்டு, மார்ச் மாதம்,
நான்காம் நாளன்று, அவருடைய செவிலியர்களான "பெல்டியா" (Beldia)
மற்றும் "பொனவென்சுரா" (Bonaventura) ஆகியோர் அவரது இறப்புக்காக
காத்திருக்கையில், "புனிதர் பெரிய கிரகோரி" (Saint Gregory the
Great) அவரது அறையில் தோன்றி, அவர் மார்ச் 12ம் தேதியன்று
மரணமடைவார் என்று முன்னறிவித்தார். புனிதர் பெரிய கிரகோரி முன்னறிவித்தபடியே
ஃபீனா மார்ச் 12ம் தேதி மரணமடைந்தார். அவர் இறக்கும்போது அவருக்கு
வயது பதினைந்து.
இவரது இறப்பை முன்னறிவிக்க புனிதர் பெரிய கிரகோரி தோன்றியது,
பெரும் அதிசயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவர் "சேன் ஜிமிக்நானோ" (San Gimignano) நகரில் உள்ள பேராலயத்தில்
அடக்கம் செய்யப்பட்டார். அப்பேராலயத்தின் அருகில் இவர் பெயரில்
ஆலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. |
|
|