Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் யூலோஜியஸ் ✠(St. Eulogius of Córdoba)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 11
 ✠ புனிதர் யூலோஜியஸ் ✠(St. Eulogius of Córdoba)

*குரு & மறை சாட்சி :
(Priest and Martyr)

*பிறப்பு : கி.பி. 819க்கு முன்னர்
கொர்டோபா நகரின் கலிபா (தற்போதைய ஸ்பெயின்)
(Caliphate of Cordoba (Modern day Spain)

*இறப்பு : மார்ச் 11, 857
கொர்டோபா (Córdoba)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

*முக்கிய திருத்தலம் :
ஒவியேடோ தேவாலயம்
(Cathedral of Oviedo)


புனிதர் யூலோஜியஸ், "கொர்டோபா" (Córdoba) நகரின் மறைசாட்சியருள் ஒருவராவார். ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் கொர்டோபா'வை ஆண்ட அரசர்கள் "இரண்டாம் கொர்டோவன் எமிர்ஸ் அப்-டேர்-ரஹ்மான்" (Cordovan emirs Abd-er-Rahman II) மற்றும் "முதலாம் முஹம்மத்" (Muhammad I) ஆகியோரது காலத்தில் இவர் வளர்ச்சியடைந்தார்.

ஒன்பதாம் நூற்றாண்டில், ஸ்பெயின் நாட்டை வெற்றி கண்ட முஸ்லிம் வெற்றியாளர்கள், கொர்டோபா நகரை தமது தலைநகராக ஆக்கினார்கள். அவர்கள், ஸ்பெயின் நாட்டின் கிறிஸ்தவர்கள் சமாதானமாக வாழ அனுமதித்தனர். மாதாந்த வரி செலுத்த உத்தரவிட்டனர். கிறிஸ்தவர்கள் தமது சமய வழிபாடுகளை செய்யவும் அனுமதித்தனர். யூலோஜியஸின் இளைய சகோதரர் போன்றோர் அரசாங்கத்தின் உயர் பதவி வரை உயர அனுமதிக்கப்பட்டனர்.

அக்காலத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களும் ஆராதனைகளும், கிறிஸ்தவ சொத்துக்களும் தாராளமாக அனுமதிக்கப்பட்டன. பிறப்பு மட்டுமல்லாது, இறப்புக்கும் வரி தாராளமாக விதிக்கப்பட்டது. அவ்வாறு வரி செலுத்த இயலாத கிறிஸ்தவ விசுவாசிகள் அநேகர் ஸ்பெயின் நாட்டின் வடக்கு பிராந்தியங்களுக்கு புலம்பெயர்ந்து போயினர். இன்னும் பலர் "ஸியெர்ரா" (Sierras) மாநிலத்திலுள்ள துறவு மடங்களில் அடைக்கலம் புகுந்தனர். இங்ஙனமாக, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இங்கே சுருங்கிப்போயிற்று.

இரண்டாம் அப்-டேர்-ரஹ்மானி'ன் ஆட்சி காலத்தில், ஆட்சியாளர்களின் அணுகுமுறையில் மாற்றம் வந்தது. கடுமையான துன்புறுத்தலின் பின்நிகழ்வாய், முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் நுழைந்து முஹம்மதுவின் நினைவுச் சின்னங்களை அவமதித்ததாகவும், அரசுக்கு எதிராக சதி செய்ததாகவும் கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆரம்ப வாழ்க்கை :
புனிதர் யூலோஜியசின் பிறந்த நாள், வருடம் பற்றிய சரியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், அவர் கி.பி. 819ம் ஆண்டுக்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும். காரணம், 848ம் ஆண்டில் அவர் "கடலோனியா மற்றும் நவர்ரெ" (Catalonia and Navarre) ஆகிய பிரதேசங்களிலிருந்த கிறிஸ்தவ மக்களின் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற மத குருவாக இருந்திருக்கிறார். குருத்துவ அருட்பொழிவு பெற குறைந்த பட்ச வயது முப்பது ஆகையால் அவர் 819ம் ஆண்டுக்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும்.

ரோமர்களின் காலத்தில், யூலோஜியசும் அவரது ஐந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் "கொர்டோபா" (Córdoba) நகரில் அவர்களது தாயாரான "இஸபெல்லின்" (Isabel) மேற்பார்வையில் உயர்தர கல்வி கற்று வளர்ந்தனர்.

புனிதர் ஸோய்லஸ் (St. Zoilus) அவர்களின் குரு மடத்தில் தங்கி கல்வி பயின்ற யூலோஜியஸ், கல்வி பூர்த்தி பெற்றதும் தமது தாயாரை கவனித்துக்கொள்வதற்காக வீட்டிலேயே தங்கினார். அவரது நல்லொழுக்கம் மற்றும் கற்றலின் காரணமாக அவர் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். பின்னர், அவர் "கொர்டோவா" (Cordova) என்னுமிடத்திலுள்ள தலைமை திருச்சபை பள்ளியில் பணியமர்த்தப்பட்டார்.

850ம் ஆண்டு, முஹம்மதுவுக்கு எதிராக பேச ஆரம்பித்த சில கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் சிலரை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றினர். இதனால் கடும் கோபமுற்ற மொகம்மதிய ஆட்சியாளர்கள், கிறிஸ்தவர்களை துன்புறுத்த ஆரம்பித்தனர். அவர்கள், யூலோஜியஸ் உள்ளிட்ட குருக்கள், கொர்டோபா நகர ஆயர் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

சிறையில், யூலோஜியஸ் தம்முடன் சிறையில் இருந்த மற்றவர்களுக்கு புனித விவிலியத்தை படித்துக் காட்டி, அவர்களுக்கு கிறிஸ்தவ விசுவாசத்தை போதித்தார்.

857ம் ஆண்டு, "லியோகிரிஷியா" (Leocritia) எனும் உயர் இஸ்லாமிய குடும்ப முஸ்லிம் கன்னி, யூலோஜியஸின் போதனையால் கிறிஸ்தவராக மதம் மாறினார். அவர், தமது பெற்றோர் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்பு கோரினார். யூலோஜியஸ் அவரை தமது நண்பர்களிடையே ஒளித்து மறைத்து பாதுகாத்தார். ஆனால் நெடுநாள் வரை அந்த பாதுகாவல் நீடிக்கவில்லை. அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு மரண தண்டனை அறிவிக்கப்பட்டனர். 857ம் ஆண்டு, மார்ச் மாதம், 11ம் நாளன்று, புனிதர் யூலோஜியஸ் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அது போலவே நாலு நாட்கள் கழித்து, புனிதர் லியோகிரிஷியாவும் (St. Leocritia) 857ம் ஆண்டு, மார்ச் மாதம், 15ம் நாளன்று, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

புனிதர் யூலோஜியஸ், டோலேடோ (Toledo) உயர்மறை மாகாணத்தின் பேராயராக (Archbishop of Toledo) தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவரது சிறை வாசமும், அதன் தொடர்ச்சியாக அவர் சிரச்சேதம் செய்யப்பட்டதும் அவர் பேராயராக அருட்பொழிவு செய்யப்படாமல் போனது.

தாம் பாதுகாத்து வந்த மிக நேர்த்தியான கிறிஸ்தவ கோட்பாடுகளை விட்டுச் சென்றிருக்கும் புனிதர் யூலோஜியஸ் "ஒவியேடோ" பேராலயத்தில் (Cathedral of Oviedo) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தூய யூலோசியஸ் (மார்ச் 11)


"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" (யோவா 12: 24)

வாழ்க்கை வரலாறு

யூலோசியஸ், ஸ்பெயின் நாட்டில் உள்ள கோர்டோவா என்னும் இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்திருக்கலாம் என்று சொல்வர்.

தொடக்கக் கல்வியை யூலோசியஸ், சோய்லஸ் என்பவரிடத்தில் கற்றார். இந்த சோய்லஸ் பின்னாளில் மறைசாட்சியாக உயிர்துறந்தார் என்பது வரலாறு. கல்வியை தகுந்தமுறையில் கற்றுக்கொண்ட பிறகு யூலோசியஸ் திருமறையைப் போதிக்கும் பள்ளிக்கூடத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றார். தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் யூலோசியஸ் எப்போதும் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் உண்மையான அன்போடும் வாழ்ந்து வந்தார். அதனால் எல்லாரும் அவர்மீது நன்மதிப்பு கொண்டிருந்தார்கள். யூலோசியஸ் எப்போதும் விவிலிய அறிவில் சிறந்து விளங்கி வந்தார். பல நேரங்களில் அவர் விவிலியத்தை வாசிக்கும்போது இறைவனின் வல்லமையை உணர்ந்தார்.

850 - களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை நடைபெறத் தொடங்கியது. நிறையக் கிறிஸ்தவர்கள் மூர் இனத்தவரால் சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். அந்நேரத்தில் யூலோசியசும் சிறைபிடிக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது 'கிறிஸ்தவ விசுவாசத்தில்" நம்பிக்கை தளர்வுற்று இருந்த நிறைய கிறிஸ்தவர்களை நம்பிக்கையில் தேற்றினார். அப்படி அவரால் நம்பிக்கையில் தேற்றப்பட்ட ப்ளோராவும் மரியாவும் 851 ஆம் ஆண்டு கிறிஸ்துவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் தந்தார்கள். அவர்களைப் போன்று இன்னும் பலர் ஆண்டவர் இயேசுவுக்காக மறைசாட்சிகளானார்கள். யூலோசியஸ், சிறையில் இருந்துகொண்டே 'Memorial of the Saints' என்னும் நூலை எழுதினார். இந்நூல் விசுவாசத்திற்காக வேதசாட்சிகளாக உயிர்துறந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எடுத்துக்கூறுவதாக இருந்தது. இந்நூலின் வழியாக யூலோசியஸ், கிறிஸ்தவ விசுவாசத்தில் தளர்வுற்றிருந்த கிறிஸ்தவர்களைத் தேற்றி, நம்பிக்கையில் உறுதிபடுத்தினார்.

ஒருசில ஆண்டுகள் சிறைவாழ்விற்குப் பிறகு யூலோசியஸ் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்பு அவர் டோலேடோ நகரின் ஆயராக நியமிக்கப்பட்டர். ஆயர் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதற்காக யூலோசியஸ் டோலோடோ நகருக்குச் சென்றுகொண்டிருக்கும்போது அவர் லூக்ரசியா என்ற இஸ்லாமியரை மதம்மாற்றிவிட்டார் என்ற குற்றத்திற்காக மீண்டுமாகக் கைதுசெய்யப் பட்டு, நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்றது. விசாரணை சமயத்திலும் யூலோசியஸ் அங்கிருந்தவர்களுக்கு ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைத்தார். இதனால் சினம் கொண்ட அதிகாரிகள் யூலோசியசையும் அவரோடு இருந்த லூக்ரசியாவையும் தலைவெட்டிக் கொன்றுபோட்டார்கள். இவ்வாறு யூலோசியஸ் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி மறைசாட்சியானார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய யூலோசியசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. விவிலியம் வாசித்து வேதத்தில் வேரூன்றி இருப்போம்

தூய யூலோசியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது, விவிலியத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வமும் பற்றும்தான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. கிறிஸ்தவர்கள் எல்லாம் உயிருக்குப் பயந்து, கிறிஸ்தவ மறையை மறுதலித்தபோது, அவர்களையெல்லாம் நம்பிக்கையில் உறுதிபடுத்துவதற்கு யூலோசியசிற்கு விவிலியம்தான் தூண்டுகோலாக இருந்தது. யூலோசியசின் விழாவைக் கொண்டாடுகின்ற நாம், விவிலியம் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கின்றோமா? அதில் ஆழமான பற்று கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது விவிலியத்தில் இருக்கின்ற எல்லா நூல்களும் ஒன்றாகத் தொகுக்கப்படுவதற்கு முந்தைய கால கட்டத்தில், சிசிலியைச் சார்ந்த ஒருவர் விவிலியத்தில் இருக்கின்ற ஒவ்வொரு நூலையும் தனித்தனியாக விற்றுக்கொண்டு வந்தார். ஒருநாள் அவர் தன்னுடைய விற்பனையை முடித்துவிட்டு ஒரு காட்டுப் பாதை வழியாக போய்க்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கொள்ளைக் கும்பல், "பையில் என்ன இருக்கின்றது?" என்று கேட்டது. அதற்கு அவர், "விவிலிய நூல்கள்" என்று சொல்ல, உடனே அந்த கொள்ளைக் குப்பல், "எல்லாவற்றையும் தீயிலிட்டுப் பொசுக்கு, இல்லையென்றால் நீ உயிரோடு ஊருக்குப் போகமுடியாது" என்று மிரட்டியது. அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிதுநேர யோசனைக்குப் பின் அவர் அவர்களிடம், "ஐயா! இந்த நூல்களையெல்லாம் எரித்துவிடுகின்றேன். அதற்கு முன்னதாக இந்த நூல்களிலிருந்து ஒருசில பகுதிகளை வாசிக்கின்றேன். அவை உங்களுக்குப் பிடித்திருந்தால் வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் இதனை தீயிலிட்டு எரித்துவிடுகிறேன்" என்றார். அவர்களும் அதற்குச் சரியென்று சொல்ல, அவர் ஒவ்வொரு நூலிருந்தும் ஒரு பகுதியை எடுத்து வாசித்தார்.

முதலில் அவர் ஒருநூலிருந்து திருப்பாடல் 23 யையும், இன்னொரு நூலிலிருந்து மலைப்பொழிவையும், மற்றறொரு நூலிருந்து நல்ல சமாரியன் உவமையையும் வேறொரு நூலிருந்து அன்பைப் பற்றிய கவிதையையும் (1 கொரிந்தியர் 13) வாசித்தார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அந்தக் கொள்ளைக் கும்பல், இவையெல்லாம் சாதாரண நூல்கள் மாதிரித் தெரியவில்லை, நல்ல நூல்களாகத் தெரிகின்றன. அதனால் இவற்றை எரிக்கவேண்டாம். எல்லாவற்றையும் எம்மிடத்தில் கொடுத்துவிடு" என்றது. அவரும் அதற்குச் சரியென்று சொல்லி, நூல்கள் அனைத்தையும் அந்தக் கொள்ளைக் கூட்டத்திடம் கொடுத்துவிட்டு வீடு திரும்பினார். சில ஆண்டுகள் கழித்து, அந்த நூல்களை எல்லாம் படித்துப் பார்த்துவிட்டு, தாங்கள் செய்துவந்த கொள்ளையடிக்கும் தொழிலை விட்டுவிட்டு அவர்கள் குருக்களாக மாறினார்கள்.

விவிலியம் ஒருவருடைய வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. இன்று நாம் நினைவுகூறும் யூலோசியசும் விவிலியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதனைப் படித்துப் படித்து ஆற்றலையும் வல்லமையையும் பெற்றார்.

ஆகவே, யூலோசியசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம், விவிலியம் வாசிப்பப்பதில் ஆர்வம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா