Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ தூய கத்பர்ட்✠(St. Cuthbert )
   
நினைவுத் திருநாள் : மார்ச் 20

 ✠ தூய கத்பர்ட்✠(St. Cuthbert )

"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத் 16: 24)


வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் கத்பர்ட், இங்கிலாந்து நாட்டில் உள்ள நார்த்தம்பிரியா என்னும் இடத்தில் 635 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சிறுவயதிலே தன்னுடைய பெற்றோரை இழந்ததால், கென்ஸ்வித் என்பவருடைய பாதுகாப்பில்தான் வளர்ந்து வந்தார்.

கத்பர்ட், சிறுவயதில் பள்ளிக்குச் செல்லவில்லை, மாறாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு மெல்ரோஸ் என்ற மலைச்சரிவில் மேய்க்கச் சென்றார். அப்போது அங்கிருந்த ஆசிர்வாதப்பர் துறவற மடத்தைக் கண்டு, ஒருநாள் தானும் ஒரு துறவியாகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். இதற்கிடையில் வயது வந்த இளைஞர்கள் யாவரும் நாட்டிற்காக இராணுவத்தில் சேர்ந்து போராடவேண்டும் என்றொரு நிலை உருவானது. எனவே, கத்பர்ட் இராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமாக தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, ஏற்கனவே செய்து வந்த வேலையைச் செய்து வந்தார்.

இச்சமயத்தில் ஒருநாள் தூய ஆர்டன் என்பவருடைய ஆன்மாவை வானதூதர்கள் தூக்கிக்கொண்டு போகும் காட்சியைக் கண்டார். இதனைக் கண்ட கத்பர்ட், தன்னுடைய ஆன்மாவையும் இவ்வுலக மாசுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும், அதற்கு நாம் துறவற வாழ்க்கையை மேற்கொள்வதே சரியானது என்று முடிவுசெய்து மெல்ரோஸ் மலைச்சரிவில் இருந்த தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியானார். கத்பர்ட், சிறுவயதில் பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் துறவற மடத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடங்களை மிக எளிதாகக் கற்று, கல்வியில் சிறந்து விளங்கினார்.

இப்படி கத்பர்ட்டின் வாழ்க்கை மகிழ்ச்சியாய் போய்கொண்டிருந்த தருணத்தில், அவர் இருந்த துறவற மடத்தில் நிறையப் பேர் குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருந்த தூய பாசில் உட்பட தொற்றுநோய் தாக்கி இறந்துபோனார்கள். அதனால் கத்பர்ட் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்காலத்தில் வழிபாடுகள் ஒழுகில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதனைக் கவனித்த ஆயர் பேரவை உரோமை வழிபாட்டு முறையை எங்கும் அமுல்படுத்தக் கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் கத்பர்ட் தான் இருந்த பகுதியில் உரோமை வழிபாட்டு முறையை அமுல்படுத்தினார். இது பிடிக்காத ஒருசிலர் அவருக்கு எதிராகக் கிளர்தெழுந்தார்கள். கத்பர்ட் அதற்கெல்லாம் அஞ்சாமல் மிகவும் துணிச்சலாக இருந்து இறைப்பணியைச் செய்து வந்தார்.

இதற்குப் பின்பு, அவர் பார்னா என்ற தீவிற்குச் சென்று, அங்கு தனிமையில் இறைவனிடம் ஜெபித்து வந்தார். அப்போது அவருக்கு லின்டிஸ்பர்னே என்னும் இடத்திற்கு ஆயராகப் பொறுபேற்க வேண்டும் என்றொரு அழைப்பு வந்தது. கத்பர்ட் அதனைக் கீழ்ப்படிதலோடு ஏற்றுக்கொண்டு சிறப்பான முறையில் இறைப்பணியைச் செய்து வந்தார். இப்படி அவர் ஓயாது பணிசெய்து வந்ததால் அவருடைய உடல் நலம் குன்றியது. இதனால் அவர் 686 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கத்பர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவனின் அழைப்பை உணர்ந்து, அவர் பணி செய்ய விரைதல்

தூய கத்பர்ட்டின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதன்மையான பாடமே இறைவனின் அழைப்பை உணர்ந்து அவருடைய வழியினில் நடப்பதுதான். அவர் இளைஞனாக இருந்த சமயத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது வானத்தூதர்கள் தூய ஆர்டனின் ஆன்மாவை எடுத்துக்கொண்டு போவதைக் கண்டு அதை இறைவன் கொடுக்கின்ற அழைப்பாக உணர்ந்து, அவர் பணி செய்ய விரைந்தார் என்றும் தொடக்கத்தில் பார்த்தோம். இறைவன் அவரை அந்த நிகழ்வின் வழியாக அழைத்ததுபோல், நம்மையும் அவர் பல்வேறு நிகழ்வுகளின் வழியாக அழைக்கின்றார். நாம் அவரது குரலுக்கு செவிகொடுத்து, அவர் பணி செய்ய விரைகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பஞ்சாப் பகுதியில் நற்செய்திப் பணியைச் செய்து வந்த சாது சுந்தர் சிங் சொல்லக்கூடிய கதை. ஒரு ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார். அந்தப் பணக்காரருக்கு ஒரு மகன் இருந்தான். ஒருநாள் அவர் தன்னுடைய மகனிடம், "மகனே! நம்முடைய வயல் அறுவடைக்காக நெருங்கி இருக்கின்றது. அதனால் அதனைப் போய் பார்த்துக்கொள்" என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லி, வயலுக்குச் சென்றான். அவன் சென்ற நேரத்தில் வயலில் பறவை இனங்கள் எல்லாம் கதிர்களைக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாது, தந்தை நம்மை வயலைப் பார்த்துக்கொள்ளத்தானே சொன்னார், பறவையினங்களை விரட்டச் சொல்லவில்லையே என்று பேசாதிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ஆடு மாடுகள் எல்லாம் அந்த வயலில் நுழைந்து அதனை நாசம் செய்தன. அப்போதும் அவன் ஒன்றும் செய்யாதிருந்தான்.

இதற்கிடையில் பணக்காரர் வயலுக்கு வந்தார். வந்தவர் வயலில் ஆடுமாடுகள் மேய்வதையும் பறவையினங்கள் கதிர்களைக் கொத்தித் தின்பதையும் பார்த்துவிட்டு, தன்னுடைய மகனைப் பார்த்து, "உன்னை வயலைப் பார்த்துக்கொள்ளச் சொன்னால், இப்படி ஒன்றும் செய்யாமல் இருகின்றாயே" என்றார். அதற்கு அவன், "அப்பா, நீங்கள் என்னை வயலைப் பார்த்துக்கொள்ளத்தான் சொன்னீர்களே ஒழிய, அதில் வந்து மேயும் ஆடுமாடுகளை விரட்டச் சொல்லவில்லை" என்றான். இதைக் கேட்ட அவனுடைய தந்தை, "வயலைப் பார்த்துக்கொள் என்று சொன்னால், வயலில் ஆடுமாடுகள் மேயாமல் பார்த்துக்கொள் என்பதுதானே அர்த்தம், இதுகூடத் தெரியாத மரமண்டையாக இருக்கின்றாயே" என்று அவனை அடியடி என அடித்தார்.

கதையில் வரும் முட்டாளைப் போன்றுதான் நாமும் கடவுள் தம்மை எவ்வளவோ வகையில் வெளிப்படுத்தினாலும் நாம் அதனைப் புரிந்துகொள்ளாமலே இருக்கின்றோம்.

ஆகவே, தூய கத்பர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரை போன்று இறைவனின் அழைப்பினை உணர்ந்து, அவருடைய பணியைச் செய்ய விரைவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா