Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் கொலெட் ✠ (St. Colette of Corbie)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 6
✠ புனிதர் கொலெட் ✠ (St. Colette of Corbie)

*மடாதிபதி, நிறுவனர் : (Abbess and Foundress)

*பிறப்பு : ஜனவரி 13, 1381
கோர்பீ, அமியேன்ஸ், பர்கண்டி
(Corbie, County of Amiens, Duchy of Burgundy)

*இறப்பு : மார்ச் 6, 1447 (வயது 66)
கெண்ட், ஃப்லேண்டர்ஸ், பர்கண்டி
(Ghent, County of Flanders, Duchy of Burgundy)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஃபிரான்சிஸ்கன் சபை, கொலேட்டின் புவர் க்ளேர் சபை
(Franciscan Order, especially the Colettine Poor Clares)

*முக்திபேறு பட்டம் : ஜனவரி 23, 1740
திருத்தந்தை பன்னிரெண்டாம் கிளெமென்ட்
(Pope Clement XII)

*புனிதர் பட்டம் : மே 24, 1807
திருத்தந்தை ஏழாம் பயஸ்
(Pope Pius VII)

*முக்கிய திருத்தலம் :
பெத்லேஹெம் துறவுமடம், கென்ட், பெல்ஜியம்
(Monastery of Bethlehem, Ghent, Belgium)

*பாதுகாவல் :
குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள்
(Women seeking to conceive)
தாயாகக் காத்திருக்கும் பெண்கள்
(Expectant mothers)
நோய்வாய்ப்பட்ட குழந்தைகள்
(Sick children)

புனிதர் கொலெட் (St. Colette of Corbie), ஒரு ஃபிரெஞ்ச் துறவுமடாதிபதியும், "புனிதர் கிளாரா சபையின்" (Order of Saint Clare) சீர்திருத்தப்பட்ட கிளையான "கொலேட்டின் எளிய கிளாரா" (Colettine Poor Clares) எனும் சபை நிறுவனரும் ஆவார். எண்ணற்ற அதிசயச் சம்பவங்கள் இவர் வாழ்க்கையின் நிகழ்ந்ததால், இவர் "குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள்", "தாயாகக் காத்திருக்கும் பெண்கள்", மற்றும் "நோய்வாய்ப்பட்ட குழந்தைகள்" ஆகியோரின் பாதுகாவலராக வணங்கப்படுகிறார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை இவரை புனிதராக அருட்பொழிவு செய்தது.

"நிகோல் போல்லெட்" (Nicole Boellet) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் கொலெட், ஃபிரான்ஸ் நாட்டின் "பிகார்டி" (Picardy) பிராந்தியத்திலுள்ள "கோர்பீ" (Corbie) எனும் கிராமத்தில் 1381ம் ஆண்டு, ஜனவரி மாதம், 13ம் நாள், பிறந்தார். "கோர்பீ" கிராமத்திலுள்ள "பெனடிக்டைன் துறவு மடத்தின் (Benedictine Abbey of Corbie) ஏழைத் தச்சரான "ராபர்ட் போல்லெட்" (Robert Boellet) இவரது தந்தை ஆவார். இவரது தாயாரின் பெயர் "மார்கரெட் மோயோன்" (Marguerite Moyon) ஆகும்.

இவரது பெற்றோர் முதிர் வயதுவரை குழந்தைப் பாக்கியமின்றி இருந்ததாகவும், பின்னர் அவர்கள் "புனிதர் நிக்கோலசை" (Saint Nicholas) நோக்கி குழந்தைப்பேறு வேண்டி ஜெபித்ததால் அவர்களது அறுபதாவது வயதில் பிறந்த பெண் குழந்தைக்கு புனிதர் நிக்கோலசுக்கு நன்றி கூறுவதற்காக பிறந்த குழந்தைக்கு "நிக்கோல்" என்று பெயரிட்டதாகவும், அவரது பெற்றோர் அவரை அன்புடன் "நிகொல்லெட்" (Nicolette) என அழைத்ததாகவும் பின்னர் அந்த பெயராலேயே அவர் அறியப்பட்டதாகவும் அவரது சமகால வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

நிகொல்லெட்டின் பதினெட்டு வயதில் அவரது பெற்றோர் மரித்தனர். பின்னர் அவர் "பெகுய்ன்ஸ்" (Beguines) எனப்படும் சகோதரிகளின் (மத வார்த்தைப்பாடுகள் பெறாத) சபையில் இணைந்தார். அச்சபையோரின் இணையற்ற வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டார். 1402ம் ஆண்டு, புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபையில் (Third Order of St. Francis) இணைந்தார். கோர்பீ தேவாலயத்தின் அருகேயுள்ள கோர்பீ மடாதிபதியின் ஆலோசனையின் பேரில் அவர் ஒரு துறவியாக மாறினார்.

நான்கு வருட துறவுப் பணியின் பின்னர், அவர் கண்ட பல்வேறு கனவுகள் மற்றும் திருக்காட்சிகளின் அடிப்படையில், "ஃபிரான்சிஸ்கன் இரண்டாம் நிலை" (Franciscan Second Order) சபையை சீரமைத்து, அதன் முழுமையான எளிமை மற்றும் தாழ்ச்சிக்கே திருப்பித் தர தாம் அழைக்கப்படுவதாக நம்பினார். அதன்படியே செய்தார்.

1406 முதல் 1412ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் அவர் பல்வேறு துறவு மடங்களை நிறுவினார். தமது வாழ்நாள் முழுதும் அவர் 18 துறவு மடங்களை நிறுவினார். துறவு மட காரியங்களுக்காக அவர் பயணித்த ஊர்களுக்கு காலணிகள் அணியாது வெறும் கால்களுடனேயே பயணித்தார். நித்திய விரதம், எளிமை மற்றும் தாழ்ச்சியின் அடையாளமாக திகழ்ந்தார்.

1447ம் ஆண்டு, மார்ச் மாதம், ஆறாம் நாளன்று, "கென்ட்" (Ghent) என்னுமிடத்தில் கொலெட் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா