✠ புனிதர் கிளெமன்ட் மேரி ஹொஃபௌவர் ✠
(St. Clement Mary Hofbauer) |
|
|
|
நினைவுத் திருநாள் :
மார்ச்
15 |
✠ புனிதர் கிளெமன்ட் மேரி
ஹொஃபௌவர் ✠(St. Clement Mary Hofbauer)
*மறைபணியாளர், மத குரு, வியன்னாவின்
அப்போஸ்தலர்:
(Religious, Priest and Apostle of Vienna)
*பிறப்பு : டிசம்பர் 26, 1751
டப்விட்ஸ், ஸ்நோஜ்மோ மாவட்டம், போஹெமியா அரசு, ஹப்ஸ்பர்க் பேரரசு
(Tawitz, Znojmo District, Kingdom of Bohemia, Habsburg
Empire)
*இறப்பு : மார்ச் 15, 1820
வியன்னா, ஆஸ்டிரியன் பேரரசு
(Vienna, Austrian Empire)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(அதிதூய மீட்பர் சபை மற்றும் வியன்னா உயர்மறை மாவட்டம்)
(Roman Catholic Church)
(Congregation of the Most Holy Redeemer & Archdiocese of
Vienna)
*முக்திபேறு பட்டம் : ஜனவரி 29,
1888
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)
*புனிதர் பட்டம் : மே 20, 1909
திருத்தந்தை பத்தாம் பயஸ் (Pope Pius X)
*பாதுகாவல் :
வியன்னா, ஆஸ்திரியா
(Vienna, Austria)
புனிதர் கிளெமன்ட் மேரி ஹொஃபௌவர், ஒரு "மொராவியன் துறவியும்"
(Moravian Hermit) பின்னர், "மீட்பர் சபையின்" (Redemptorist
Congregation) மத குருவும் ஆவார். இவர் தமது சபையை இத்தாலியின்
"ஆல்ப்ஸ்" மலைகளின் வடக்கே நிறுவினார். ஐரோப்பாவின் கொந்தளிப்பான
வறுமையின் கோரப்பிடியில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியான காலகட்டத்தில்,
இவர் தமது வாழ்நாள் முழுவதையும் ஏழைகளின் சேவையில் அர்ப்பணித்தார்.
போலிஷ் (Polish people) மக்களின் சேவையில் தம்மை ஈடுபடுத்திய
இவர், அங்கிருந்து ஆஸ்திரியா நாட்டுக்கு நாடுகடத்தப்படும்வரை
போலிஷ் மக்களுக்கு சேவை புரிந்தார். "வியன்னாவின்" (Vienna)
இணை பாதுகாவலரான இவர், தமது அளப்பற்ற தன்னலமற்ற சேவைகளுக்காக
"வியன்னாவின் அப்போஸ்தலர்" (Apostle of Vienna) என்று அழைக்கப்பட்டார்.
"ஜோஹன்னஸ் ஹொஃபௌவர்" (Johannes Hofbauer) எனும் இயற்பெயர்
கொண்ட இவர், புனிதர் ஸ்தேவானின் (Saint Stephen) நினைவுத்
திருநாளான 1751ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 26ம் நாளன்றும், "மரியா
ஸ்டீர்" (Maria Steer) மற்றும் "பவுல் ஹொஃபௌவர்" (Paul
Hofbauer) ஆகிய பெற்றோருக்கு பிறந்த பன்னிரண்டு குழந்தைகளில்
ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். கிளமென்ட்டுக்கு ஆறு வயதாகையில்
இவரது தந்தை மரித்தார். ஏழை விதவைத் தாயார் இவர்களை வளர்க்க கஷ்டப்பட்டார்.
குரு மாணவராக சேர அல்லது மத சபையொன்றில் இணைய கிடைத்த சிறு
வாய்ப்பைப் பயன்படுத்தி, இலத்தீன் மொழி கற்க தொடங்கினார். அவரது
உள்ளூர் பங்கின் பங்குத்தந்தையே அவருக்கு கற்பித்தார். கிளமென்ட்டின்
குருத்துவ வாழ்வின் நெடிய பயணம் தொடங்கியது. இவருக்கு பதினான்கு
வயதாகையில், இவருக்கு இலத்தீன் மொழி கற்பித்த பங்குத்தந்தையின்
திடீர் மரணம் காரணமாக, சட்டென இவரது படிப்பு நின்றுபோனது.
புதிதாக வந்த பங்குத்தந்தைக்கு, இவருக்கு கற்பிப்பதற்கான நேரம்
கிடைக்கவில்லை.
தொடர்ந்து குருத்துவம் கற்க கையில் பணம் இல்லாத நிலையில், ஏதாவது
ஒரு கைத்தொழிலோ, வியாபாரமோ கற்க வேண்டிய அவசியத்திலிருந்த கிளமென்ட்,
ஒரு துறவு மடத்தின் ரொட்டி முதலானவை செய்து விற்கும் பணியகம் (Bakery)
ஒன்றில் பயிற்சியாளராக சேர்ந்தார். துறவு மடமென்பதால் அங்கேயே
உள்ள இலத்தீன் பள்ளியின் வகுப்புகளுக்குச் சென்று கற்றுக்கொள்ள
அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறிது காலத்தில் அத்துறவு மடத்தின்
மடாதிபதியின் மரணத்தின் பின்னர், கிளமென்ட் துறவு வாழ்க்கைக்கு
முயற்சித்தார். ஆனால், "பேரரசர் இரண்டாம் ஜோசப்" (Emperor
Joseph II) "ஹப்ஸ்பர்க்" (Habsburg Empire) பேரரசிலுள்ள அனைத்து
ஆசிரமங்களை ஒழித்தார். இதன் காரணமாக கிளமென்ட் மீண்டும் வியன்னா
திரும்பி ரொட்டித் தொழிலில் இணைந்தார்.
மழைக்காலத்தின் ஒருநாள், புனித ஸ்தேவான் பேராலயத்தில் (Cathedral
of St. Stephen), திருப்பலியின் பின்னர் மழையில் காத்திருந்த
இரண்டு பெண்களுக்காக வண்டி ஒன்றை அழைத்து வந்தார் கிளமென்ட்.
அவருடன் அப்பெண்கள் நடத்திய சிறு சம்பாசனையில், வறுமையின் காரணமாக
அவரால் குரு கல்வி கற்க இயலவில்லை என்பதனை அறிந்துகொண்டனர்.
தாராள மனம் கொண்ட அப்பெண்களிருவரும் குரு கல்வி கற்க கிளமென்ட்டுக்கும்
அவருடைய நண்பரான "தடேயஸ்" (Thaddeus) என்பவருக்கும் உதவுவதாக
கூறினர்.
மகிழ்ச்சியுடன் ரோம் நகர் சென்ற நண்பர்கள் இருவரும் புனிதர் அல்ஃபோன்சஸ்
லிகொரியின் (Saint Alphonsus Liguori) "மீட்பர் சபையினரால்" (Redemptorist
Congregation) ஈர்க்கப்பட்டனர். 1785ம் ஆண்டு, இவ்விரு இளைஞர்களும்
குருத்துவ அருட்பொழிவு பெற்றனர்.
புதிதாக குருத்துவம் பெற்ற இருவரும் வியன்னாவுக்கு அனுப்பப்பட்டனர்.
ஆனால், அங்கிருந்த மதச் சிக்கல்களால் அவர்கள் அங்கிருந்து கிளம்பி,
போலந்தின் "வார்சாவ்" (Warsaw, Poland) சென்றனர். அங்கே அவர்கள்
இயேசு சபையினர் ஒடுக்கப்பட்டதால், குருக்கள் இல்லாது விடப்பட்ட
ஜெர்மன் மொழி பேசும் எண்ணற்ற கத்தோலிக்கர்களை காண நேர்ந்தது.
ஆரம்பத்தில் மிகவும் வறுமையிலேயே வாழ நேர்ந்த அவர்களால் வெளியிடங்களிலேயே
மறை போதனை செய்ய இயன்றது. இறுதியில், அவர்களுக்கு புனித
"பென்னோ" (St. Benno) தேவாலயம் கொடுக்கப்பட்டது. பின்னர்
சுமார் ஒன்பது வருடங்கள் வரை அவர்கள் தினமும் ஐந்து முறை மறைபோதனை
நிகழ்த்தினர். மூன்று மறைபோதனைகள் போலிஷ் மொழியிலும் இரண்டு மறைபோதனைகள்
ஜெர்மன் மொழியிலும் நிகழ்த்தினர். எண்ணற்ற பிற இன மக்களை கத்தோலிக்க
விசுவாசத்துக்கு மனம் மாற்றினர். அவர்கள் ஏழைகளுக்கான சமூக
சேவைகளிலும் சுறுசுறுப்பாக இயங்கினர். அனாதைகளுக்கான இல்லம் ஒன்றினை
நிறுவினர். ஆண்களுக்கான பள்ளி ஒன்றினையும் நிறுவி நடத்தினர்.
மேலும் பலரை சபைக்கு ஈர்த்த இவர்கள் போலந்து (Poland), ஜெர்மனி
(Germany) மற்றும் ஸ்விட்ஸர்லாந்து (Switzerland) ஆகிய நாடுகளுக்கு
மறை பணியாளர்களை அனுப்பினர். ஆனாலும், அப்போதிருந்த மத, அரசியல்
பதற்ற சூழ்நிலைகளால் இவர்களது நிறுவனங்கள் அனைத்தும் இறுதியில்
கைவிடப்பட்டன. இருபது வருட கடின உழைப்பின் பின்னர் கிளமென்ட்
கைது செய்யப்பட்டு சிறை செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து
நாடு கடத்தப்பட்டார்.
மீண்டுமொரு கைதின் பின்னரே அவரால் வியன்னா சென்றடைய முடிந்தது.
அங்கேயே பன்னிரண்டு வருடங்கள் தமது வாழ்க்கையின் இறுதி கால பணி
புரிந்தார். ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் பாவ
மன்னிப்பு வழங்கினார். நோயுற்றோரை காணச் சென்றார். அதிகார வர்க்கத்தினருக்கு
ஆலோசகராக இருந்தார். தமது தூய்மையை நகரின் அனைவருக்கும் பகிர்ந்தார்.
அவர் மிகவும் நேசித்த அவரது நகரில் ஒரு கத்தோலிக்க கல்லூரியை
ஸ்தாபித்ததுவே அவர் செய்த சீரிய பணிகளில் சிகரமாய் அமைந்தது.
விரைவிலேயே அவர் "வியன்னாவின் அப்போஸ்தலர்" (The Apostle of
Vienna) என்றழைக்கப்பட்டார்.
துன்புறுத்தல்கள் அவரையும் தொடர்ந்தன. அதிகாரத்திலிருந்த சிலரால்
அவரின் மறை போதனைகளை சில காலம் வரை நிறுத்தி வைக்க இயன்றது.
அவரை அகற்றிவிட உயர் பதவி வகித்தவர்களால் ஒரு முயற்சி கூட நடந்தது.
ஆனால் அவரது தூய்மையும் புகழுமே அவரை இரட்சித்ததுடன், "மீட்பர்
சபையினரின்" (Redemptorist Congregation) வளர்ச்சிக்கு
தூண்டுகோலாக இருந்தது. அவரது மரணம் சம்பவித்த 1820ம் வருடம்,
கிளமென்ட்டின் பெருமுயற்சியால் "மீட்பர் சபை" "வடக்கு ஆல்ப்ஸ்"
(North of the Alps) பகுதியில் ஸ்திரமாக நிறுவப்பட்டது. |
|
|