Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் சிலுவையின் ஆஞ்செலா ✠ (St. Ángeles of the Cross)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 2
    ✠ புனிதர் சிலுவையின் ஆஞ்செலா ✠ (St. Ángeles of the Cross)

*அருட்கன்னியர்/ நிறுவனர் : (Virgin and Foundress)

*பிறப்பு : ஜனவரி 30, 1846
செவில், ஸ்பெயின் (Seville, Spain)

*இறப்பு : மார்ச் 2, 1932

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : நவம்பர் 5, 1982
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

*புனிதர் பட்டம் : மே 4, 2003
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

*முக்கிய திருத்தலம் :
சிலுவையின் சகோதரியர் கான்வன்ட், கால் சான்டா ஆஞ்செலா டி ள க்ருஸ், செவில், ஸ்பெயின்
(Convent of the Sisters of the Cross, Calle Santa Ángeles de la Cruz, Seville, Spain)

புனிதர் சிலுவையின் ஆஞ்செலா, ஒரு ஸ்பேனிஷ் அருட்சகோதரியும் (Spanish religious sister), "சிலுவையின் சமூகத்தினரின் சகோதரியர்" (Sisters of the Company of the Cross) எனும் ரோமன் கத்தோலிக்க நிறுவனத்தை நிறுவியவருமாவார். அவர் நிறுவிய இந்நிறுவனம், கைவிடப்பட்ட ஏழைகளுக்கும், நோயுற்றோர்க்கும், அக்கறை காட்ட யாருமில்லாத மக்களுக்கும் உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

"மரிய டி லாஸ் ஆஞ்செலஸ் ஜியுரெர்ரோ ஒய் கொன்ஸாலெஸ்" (María de los Ángeles Guerrero y González) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஸ்பெயின் (Spain) நாட்டின் "செவில்" (Seville) எனும் நகரில், 1846ம் ஆண்டு, ஜனவரி மாதம், 30ம் நாள் பிறந்தார். ஃபெப்ரவரி மாதம் 2ம் நாளன்று, "தூய லூசியா தேவாலயத்தில்" (Church of Santa Lucia) "மரிய டி லாஸ் ஆஞ்செலஸ்" (María de los Ángeles) எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்றார்.

"அன்டலூசியாவின்" (Andalusia) "கேடிஸ்" (Cádiz) பிராந்தியத்தைச் சேர்ந்த "க்ரசல்மா" (Grazalema) எனும் கிராமத்தைச் சேர்ந்த "ஃபிரான்சிஸ்கோ குரேரோ" (Francisco Guerrero) இவரது தந்தையார் ஆவார். இவர், அங்கிருந்து செவில் நகருக்கு புலம்பெயர்ந்து வந்தார். இவரது தாயாரான "ஜோசேஃபா கொன்சாலெஸ்" (Josefa González) செவில் நகரைச் சேர்ந்தவராவார். இவரது பெற்றோரின் 14 குழந்தைகளில், இவர் உள்ளிட்ட ஆறு பேரைத் தவிர்த்து, மீதமுள்ள எட்டு பேரும் சிறுவயதிலேயே மரித்துப் போயினர்.

இவரது பெற்றோர் இருவரும், செவில் நகரிலுள்ள "திரித்துவ சபையைச்" (Trinitarian Order) சேர்ந்த துறவியரின் துறவு மடமொன்றில் பணி செய்தனர். இவரது தந்தை சமையல்காரராகவும், தாயார் ஆடைகள் துவைப்பராகவும், தையல்காரராகவும் பணியாற்றினார். அந்த சமயத்தில் அந்த சமூக வர்க்கத்தின் இளம் பெண்களைப் போலவே அவருடைய பள்ளிப் படிப்பு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எட்டு வயதாகையில் புது நன்மை பெற்ற இவர், தமது பன்னிரண்டு வயதில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றார். தமது 12 வயதில் தமது குடும்ப வருவாய்க்கு உதவி செய்வதற்காக காலணிகள் பழுதுபார்க்கும் கடைக்கு வேலை செய்ய சென்றார். கிட்டத்தட்ட தமது 29 வயதுவரை அங்கேயே பணியாற்றினார்.

மத விழிப்புணர்வு:
காலணிகள் பழுதுபார்க்கும் கடையின் மேற்பார்வையாளரான "அன்டோனியா மல்டோனடோ" (Antonia Maldonado) எனும் பெண்மணி, மிகவும் பக்தியானவர். அவர், தம்மிடம் பணியாற்றுபவர்களை ஒன்றாக செபிக்கவும், செபமாலை செபிக்கவும், புனிதர்களின் வரலாறுகளை படிக்கவும் ஊக்குவித்தார். ஆஞ்செலாவுக்கு பதினாறு வயதாகையில், அவருக்கு தமது மேற்பார்வையாளர் மூலம் அவரது ஆன்மீக வழிகாட்டியான, "கனரி தீவுகளைச்" (Canary Islands) சேர்ந்த கத்தோலிக்க குருவான அருட்தந்தை "ஜோஸ் டொர்ரெஸ்" (Fr. José Torres y Padilla) அறிமுகமானார். அவர் ஆஞ்செலாவின் ஆன்மீக வழிகாட்டியாகவும், ஒப்புரவாளராகவும் ஆனார். அத்துடன், அவரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

1865ம் ஆண்டு, தமது 19 வயதில், செவில் (Seville) நகரிலுள்ள கார்மேல் சபை அருட்சகோதரியர் (Discalced Carmelite) துறவு மடத்தில் இணைய இவர் விண்ணப்பித்தார். ஆனால், சம்பந்தப்பட்ட துறவு மடத்தின் உறுப்பினர்களுக்கு வேண்டிய கடினமான உடல் உழைப்பை தருமளவுக்கு அவர் ஆரோக்கியமாக இல்லாத காரணத்தால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

பின்னர், அருட்தந்தை "ஜோஸ் டொர்ரெஸ்" அறிவுரைப்படி, அவர் நோய்வாய்ப்பட்டவர்களிடையே சேவை செய்யத் துவங்கினார். குறிப்பாக காலரா நோயால் துன்பப்படுபவர்களுக்காக சேவையாற்றினார்.

மூன்று வருடங்களின் பின்னர், 1868ம் ஆண்டு, செவில் நகரிலுள்ள "கருணையின் மகள்கள்" (Daughters of Charity of Saint Vincent de Paul) சபையில், "அர்ப்பண வாழ்வுக்காக" (Consecrated life) விண்ணப்பித்தார். இம்முறையும் அவரது உடல்நிலையில் குறிப்பிட்ட முன்னேற்றம் இல்லாவிடினும், அவர் அச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அங்குள்ள அருட்சகோதரியர், அவரது பூரண உடல் நலனுக்கான முயற்சிகளை செய்தனர். அவரை கிழக்கு ஸ்பெயினிலுள்ள "வலென்சியா" (Valencia) நகருக்கு மருத்துவத்திற்காக அனுப்பினார்கள். ஆனால் ஆஞ்செலா, இறுதியாக தனது பயிற்சி நிலையிலேயே கான்வென்ட் விட்டுவிட்டு காலணிகள் தொழிற்சாலை வேலைக்குத் திரும்பினார். இந்த நேரத்தில் அவர் விரிவான ஒரு ஆன்மீக நாட்குறிப்பை வைத்திருந்தார். இது, வாழ்க்கையின் சீர்மை மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது.

1875ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 2ம் நாள், தமது 29 வயதில், ஆஞ்செலா காலணிகள் தொழிற்சாலையை விட்டு வெளியேறினார். பின்னர், அவருடன் மூன்று பெண்கள் இணைந்தனர். அவர்களுள், "ஜோசஃபா" (Josefa de la Pea) என்றொருவர், பண வசதிகள் படைத்தவராக இருந்தார். "ஜுவானா மரியா" (Juana María Castro) என்றொருவரும், "ஜுவானா மகடன்" (Juana Magadán) என்றோருவரும் இருந்தனர். இவர்கள் இருவரும் சற்றே வசதி குறைந்தவர்களாயிருந்தனர். மூவரும் இணைத்து, ஒரு ஆன்மீக சபையை நிறுவினார்கள். அருட்தந்தை "ஜோஸ் டொர்ரெஸ்," புதிய சமூகத்தின் இயக்குனராக பொறுப்பேற்றார். அவரே ஆஞ்செலாவை அதன் தலைவராக (Sister Superior) நியமித்தார். "ஜோசஃபாவின்" (Josefa de la Pena) பண உதவியால் ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்தபடியே அவர்கள் ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு இரவு பகலாக சேவை செய்ய தொடங்கினார்கள். அந்த சமயத்தில், அவர்கள் ஒரு மத சீருடையை அணிய ஆரம்பித்தார்கள். ஜியுரெர்ரோ, "அன்னை சிலுவையின் ஆஞ்செலா" (Mother Ángeles of the Cross) என்ற பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார்.

1876ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 5ம் நாளன்று, இவர்களது சமூகத்திற்கு செவில் நகரின் கர்தினால் பேராயரான (Cardinal Archbishop of Seville) "லூயிஸ் டி லா லஸ்ட்ரா ஒய் கிஸ்டா" (Luis de la Lastra y Cuesta) அவர்களின் அலுவலகபூர்வமான அங்கீகாரம் கிடைத்தது. 1877ம் ஆண்டு, தென்மேற்கு ஸ்பெயினின் செவில் பிராந்தியத்திலுள்ள "உடேரா" (Utrera) நகரசபையில் தமது இரண்டாவது ஆன்மீக சமூகத்தை தொடங்கினார்கள். அதன் பின்னர், ஸ்பெயினின் "ஹ்யூல்வா" (Huelva) பிராந்தியத்திலுள்ள "அயன்மொன்ட்" (Ayamonte) நகரில் இவர்களது மூன்றாவது சமூகமும் தொடங்கப்பட்டது. அதே வருடம், அருட்தந்தை "ஜோஸ் டொர்ரெஸ்" மரணமடைந்தார். அவர் வகித்த இயக்குனர் பதவி, அவருடைய இடத்திலிருந்த அவரது ஆதரவாளரான "ஜோஸ் மரியா அல்வாரெஸ்" (José María Alvarez y Delgado) என்பவரால் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதே வருடம், சிலுவையின் ஆஞ்செலா தமது நிரந்தர மத உறுதிப்பாடுகளை எடுத்துக்கொண்டார். விரைவிலேயே இவர்களது சபையின் 23 சமூகங்கள் நிறுவப்பட்டன. அவை அனைத்துமே "அண்டலூசியா" (Andalucia) மற்றும் "எக்ஸ்ட்ரீமடுரா" (Extremadura) பிராந்தியங்களிலேயே நிறுவப்பட்டன.

அன்னை சிலுவையின் ஆஞ்செலா, 1932ம் ஆண்டு, மார்ச் மாதம் இரண்டாம் தேதி, தமது 86 வயதில், செவில் (Seville) நகரில் மரணமடைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா