Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ அருளாளர் ஆஞ்செலா சலாவா ✠(Blessed Angela Salawa)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 12
 ✠ அருளாளர் ஆஞ்செலா சலாவா ✠(Blessed Angela Salawa)

*பொதுநிலைப் பெண் : (Laywoman)

*பிறப்பு : செப்டம்பர் 9, 1881
சியேப்ராவ், மலோபோல்ஸ்கீ, போலந்து
(Siepraw, Małopolskie, Poland)

*இறப்பு : மார்ச் 12, 1922 (வயது 40)
க்ரகோவ், மலோபோல்ஸ்கீ, போலந்து
(Krakow, Małopolskie, Poland)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : ஆகஸ்ட் 13, 1991
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

*பாதுகாவல் :
ஃபிரான்சிஸ்கன் துறவகங்கள்
(Franciscan tertiaries)
மாணவர்கள்
(Students)
சாவான நோய்களுக்கு ஆளான மக்கள்
(People with terminal illnesses)
மூளை மற்றும் முதுகு தண்டு நரம்பு செல்களில் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள்
(People with multiple sclerosis)

அருளாளர் ஆஞ்செலா சலாவா (Blessed Angela Salawa) முதலாம் உலகப்போரின்போது மருத்துவமனைகளில் பணியாற்றிய ஒரு போலந்து நாட்டுப் பெண்மணியாவார். சார்புநிலையற்ற ஃபிரான்சிஸ்கன் சபையின் (Secular Franciscan Order) உறுப்பினரான இவர், மிகவும் பக்திவாய்ந்த குடும்பமொன்றில் பதினோராவது குழந்தையாகப் பிறந்தவர் ஆவார். முதலாம் உலகப்போரின்போது மருத்துவமனைகளில் நோயாளிகளினூடே பணியாற்றியதால், பின்னாளில் இவரும் நோய்த்தொற்று ஏற்பட்டு, தமது நாற்பது வயதிலேயே மரித்துப்போனார்.

"பர்ட்லோமியேஜ் சலாவா" (Bartłomiej Salawa) என்ற தந்தைக்கும் "ஈவா பொச்சேநெக்" (Ewa Bochenek) என்ற தாய்க்கும் பிறந்த பன்னிரண்டு குழந்தைகளில் பதினோராவது குழந்தையான ஆஞ்செலா, பிறந்த நான்காவது நாளில் திருமுழுக்கு பெற்றார். இவரது தந்தை ஒரு கொல்லன் ஆவார். மிகவும் ஏழ்மையான குடும்பம். இதன்காரணமாகவே ஆஞ்செலா இலகுவாக நோய்வாய்ப்படுபவராகவும் பலவீனமானவராகவும் இருந்தார். மிகவும் கீழ்படியும் குணமுள்ள இவர், தமது குடும்பத்திற்கு தம்மாலான உதவிகள் செய்துவந்தார். சிறு வயதிலேயே தாம் கிறிஸ்துவில் அழைக்கப்படுவதாக உணர்ந்தார்.

பதினாறு வயதிலேயே "க்ரகோவ்" (Kraków) நகரில் பணிப்பெண் பணி புரிவதற்காக வீட்டை விட்டு சென்றார். அங்கே, உலக நாட்டங்களில் ஈடுபாடு கொண்ட இவர், தமது சமய ஆர்வங்களிலிருந்து விலகிப்போனார். இவ்வுலக நாட்டங்களில் ஏற்பட்ட ஈடுபாடுகளை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்ட தமது சகோதரி தெரெசா (Teresa) இறந்தபோது மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டார்.

ஒருமுறை, திருமண வரவேற்பு நிகழ்ச்சியொன்றில் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது, இயேசு கிறிஸ்து தமதருகில் நிற்பது போலவும், "என்னைப் பின்தொடர விரும்பும் நீ இங்ஙனம் நடனம் போன்றவற்றில் நாட்டம் கொள்வதேன்" என்று கேட்பதாக உணர்ந்தார். மனம் வருந்திய ஆஞ்செலா, உடனே அங்கிருந்து விலகிச் சென்றார். தேவாலயம் ஒன்றிற்கு சென்று செபித்தார். நற்கருணை ஆண்டவரை வழிபட தொடங்கினார்.

சமயப் பணியாற்ற விரும்பிய ஆஞ்செலாவுக்கு அவரது பலவீன உடல்நிலை தடையாக இருந்தது. தூய்மை மற்றும் நல்லொழுக்கத்திற்காக தனிப்பட்ட முறையில் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்ட இவர் 1912ம் ஆண்டு, "சார்புநிலையற்ற ஃபிரான்சிஸ்கன் சபையின்" (Secular Franciscan Order) உறுப்பினரானார்.

1914ம் ஆண்டு, முதலாம் உலகப்போர் வெடித்தபோது, அவர் மத இன வேறுபாடுகளின்றி காயமடைந்த போர் வீரர்களுக்கு சேவை புரிந்தார். ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஆஞ்செலா, இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டதை எவரும் கவனிக்கவில்லை. ஆனாலும் மனம் தளராது பணியாற்றினார்.

1916ம் ஆண்டு, இவர் மீது திருட்டுப் குற்றம் சாட்டிய இவரது முதலாளி, இவரை பணியிலிருந்து நீக்கினார். வீடற்ற ஆஞ்செலா, நோய்களின் தாக்கத்தால் வேதனைகளால் துயருற்றார். பார்க்க நலமடைந்த பெண்போல காட்சியளித்த காரணத்தால், மருத்துவமனையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். இறுதியில், குடும்பத்தால் கைவிடப்பட்டு, சொந்தங்களிழந்து, சுற்றத்தாரும் நண்பர்களும் இல்லாத அனாதையாக வாழ்ந்த ஆஞ்செலா 1922ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் நாளன்று, மரணமடைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா