✠ இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு
✠(Annunciation of the Lord) |
|
|
|
நினைவுத் திருநாள் :
மார்ச்
25 |
✠ இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு
✠(Annunciation of the Lord)
வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன விழா
(மார்ச் 25)
நிகழ்வு
பிரபல ஆங்கில எழுத்தாளரான ஜே. மாரூஸ் (J. Maurus) என்பவர் சொல்லக்கூடிய
ஒரு கதை.
ஒருமுறை வானத்தில் நீண்ட நேரமாக வட்டமடித்துக் கொண்டிருந்த கழுகு
ஒன்று ஒரு குடிசையின் வெளிமுற்றத்தில் தூக்கிக்கொண்டிருந்த
சிறு குழந்தையையைக் கண்டது. உடனே அது வேகமாகச் சென்று, தன்னுடைய
இரண்டு கால்களுக்கும் இடையே அந்தக் குழந்தையை தூக்கி
வைத்துக்கொண்டு மேலே பறந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில்
இருந்தவர்கள் எல்லாம் அந்தக் குழந்தையை கழுகிடமிருந்து
காப்பாற்றுவதற்கு எவ்வளோ முயற்சித்தார்கள். ஆனால் அந்தக் கழுகு
குழந்தையை தூக்கிக்கொண்டு ஊருக்கு வெளியே இருந்த மலையில் உள்ள
தன்னுடைய கூட்டினில் போய் வைத்துக்கொண்டது.
குழந்தையை மீட்பதற்காக அந்த ஊரில் இருந்த நாட்டாமை மலையேற முயற்சி
செய்தார். ஆனால் சிறுது தூரத்திலேயே அவர் கால்கள் வலிக்கிறது
என்று சொல்லிக்கொண்டு கீழே இறங்கிவிட்டார். அவருக்குப் பின் அந்த
ஊரில் இருந்த ஓர் ஆடு மேய்க்கும் இளைஞன் தான் மலையேறுவதில்
கெட்டிக்காரன் சொல்லிவிட்டு மலையேறினான். மலையில் பாதிதூரம் ஏறிய
அந்த ஆடுமேய்க்கும் இளைஞன் இனிமேலும் தன்னால் மலையேற முடியாது
என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டான். இறுதியாக ஒரு சாதாரண
ஏழைப் பெண்மணி மலைமீது ஏறத் தொடங்கினாள். செங்குத்தாக உயர்ந்து
நின்ற அந்த மலையில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறி, மலைமேல் இருந்த
கழுகின் கூட்டினை அடைந்தார். அங்கே இருந்த கழுகை ஒரு கம்பால்
அடித்து விரட்டிவிட்டு, குழந்தையை கையோடு தூக்கிக்கொண்டு கீழே
வந்தார்.
அங்கே கூடியிருந்த மக்களுக்கு எல்லாம் ஆச்சரியம். "எப்படி உன்னால்
மட்டும் முடிந்தது?" என்று எல்லாரும் அவளைக் கேட்டார்கள். அதற்கு
அந்தப் பெண்மணி, "அது என்னுடைய குழந்தை" என்று ஒரே
வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள்.
தாயானவள் தன்னுடைய பிள்ளைக்காக எதையும் செய்வாள், ஏன் தன்னுடைய
உயிரையும் தருவாள். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
வரலாற்றுப் பின்புலம்
இன்று நாம் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை
சொன்னதை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். தொடக்கத்தில் இவ்விழா
"இயேசுவின் மனித அவதாரப் பெருவிழா" என்று கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர்தான் இன்று நாம் வழங்கும் இப்பெயரால் அழைக்கப்பட்டது.
வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன இந்த நிகழ்வு
ஒரு சாதாரண நிகழ்வு கிடையாது. அது மனித வரலாற்றையே
மாற்றிப்போட்ட நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் மரியாள்
சொன்ன ஆம் என்ற ஒற்றைச் சொல்லால்தான் "வார்த்தை வடிவான கடவுளால்
நம்மிடையே குடிகொள்ள முடிந்தது" (யோவா 1:14); மீட்பு இந்த உலகிற்கு
வந்தது. ஆகையால் இந்த நிகழ்வின் முக்கியத்துவதை முதலில் நாம்
உணர்ந்துகொள்ள வேண்டும்.
கபிரியேல் அதிதூதர் மரியாளிடம், "அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர்
உம்முடனே!" என்று சொன்னவுடன், இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்
மரியாள் கலங்குகிறார். இதைக் குறித்து தூய பெர்னார்டின் இவ்வாறு
கூறுவார், "மரியாளிடம் வானதூதர் "உலகத்திலேயே நீதான் மிகப்பெரிய
பாவி" என்று சொல்லியிருந்தால்கூட அவள் ஏற்றிருப்பாள். ஆனால்
அவரோ அருள்மிகப்பெற்றவரே என்று சொன்னதால்தான் மரியாள் கலங்குகிறார்.
காரணம் தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டு
கலங்கத்தான் செய்யும்".
தொடர்ந்து வானதூதர் மரியாவிடம், "இதோ, கருவுற்று ஒரு மகனைப்
பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராய்
இருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை
தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர்
யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார்.
அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்று சொன்னபோது, மரியாள்,
"இது எப்படி நிகழும்?", நான் கன்னி ஆயிற்றே!" என்கிறார். மரியாள்
இப்படிக் கேட்பதில் அர்த்தமில்லாமல் இல்லை. ஏனென்றால் விவிலியத்தில்
வயது முதிர்ந்தோர் கருவுற்று குழந்தையைப் பெற்ற நிகழ்வு இருக்கிறது.
ஆனால் கன்னி ஒருத்தி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்வு
இல்லை. அதனால் மரியாள் அப்படிக் கேட்கிறார். மரியாளுடைய
கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்ட வானதூதர், "தூய ஆவி உம்மீது
வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம்
பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்"
என்று சொன்னபிறகு மரியாள், "நான் ஆண்டவரின் அடிமை. உமது சொற்படி
எனக்கு நிகழட்டும்" என்கிறார். உடனே தூய ஆவியார் அவர்மீது இறங்கி
வர இயேசுவை கருத்தரிக்கிறார்.
ஆகவே, மரியாள் "ஆம்" என்று சொன்ன அந்த ஒரு சொல்லில் மீட்பு இந்த
மண்ணுலகிற்கு வந்துவிட்டது என நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆதிபெற்றோரான
ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை மறுத்ததால் பாவம் இந்த மண்ணுலகில்
நுழைந்தது. அந்தப் பாவத்தை மரியாள் தான் சொன்ன ஆம் என்ற
சொல்லினால் விரட்டியடிக்கிறார். வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு
மங்கள வார்த்தை சொன்ன இந்த நிகழ்வு கி.பி. 431 ஆம் ஆண்டிற்குப்
பிறகு இன்றுவரை விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியாளுக்கு வானதூதர் கபிரியேல் மங்கள வார்த்தை சொன்ன விழாவைக்
கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி
என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
இறைத்திருவுளத்திற்கு பணிந்து நடத்தல்
நாம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள், எனவே நாம் ஒவ்வொருவரும்
நம்முடைய விருப்பத்தின்படி அல்ல, இறைவிருப்பத்தின் படி நடக்கவேண்டும்.
இதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார். ஆனால் பல
நேரங்களில் இந்த உண்மையை மறந்து, நாம் நம்முடைய விருப்பத்தின்படி
தான்தோன்றித் தனமாக வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
ஆனால் இன்று நாம் நினைவுகூறும் மரியா தன்னுடைய வாழ்நாள் முழுவதும்
இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து நடந்தவர் என்று சொன்னால்
அது மிகையாகாது. ஆண்டவரின் தூதர் மரியாவிடம் இறைவிருப்பத்தை எடுத்துச்
சொன்னபோது, தொடக்கத்தில் தயங்கினாலும் எல்லாவற்றையும் உணர்ந்துகொண்டு,
"உமது வார்த்தையின் படியே ஆகட்டும்" என்று சொல்லி மரியாள் தன்னுடைய
வாழ்வின் இறுதிக்கட்டம் வரை இறை விருப்பத்தின்படியே நடக்கின்றார்.
இறை விருப்பத்தின் நடப்பதனால் தனக்கு எத்தகைய துன்பம் வரும் என்பதை
அவர் நன்றாக உணர்ந்திருந்தார். இருந்தாலும் அவர் எல்லாத் துன்பங்களையும்
சவால்களை மனத்துணிவோடு எதிர்கொண்டார்.
இன்று நாம் இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து நடக்கின்றோமா? அல்லது
இறைவன் நம் வழியாய் செயலாற்ற நாம் கருவியை விளங்குகின்றோமா? என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும். யோவான் நற்செய்தி 6:38 ல் இயேசு
கூறுவார், "ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை
அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்தேன். இயேசுவிடம், அன்னை மரியாவிடம் விளங்கிய இத்தகைய
மனநிலையை நமதாக்குவோம்.
தாழ்ச்சியோடு வாழ்தல்
"தாழ்நிலையில் இருப்போரை ஆண்டவர் உயர்த்துகிறார்" (லூக் 1:53)
என்று மரியாள் இறைவனை நோக்கி பாடல் பாடுவார். இப்பாடல்
யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மரியாவுக்கு நன்றாகவே
பொருந்துகிறது. மரியாள் தாழ்ச்சியோடு வாழ்ந்தார். அதனால்தான்
ஆண்டவர் அவரைத் தேடி வந்தார். மரியாள் ஆண்டவர் இயேசுவைப்
பெற்றெடுத்த பின்னும் அவர் தாழ்ச்சியோடுதான் வாழ்ந்தார். அதனால்தான்
அவர் எங்கோ இருந்த எலிசபெத்தைத் தேடிச் சென்று உதவுகிறார்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் தாழ்ச்சியோடு இருக்கிறோமா?
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நான் பெரியவன்,
மெத்தப் படித்தவன், எல்லாம் தெரிந்தவன் என்ற ஆணவத்தில், அகங்காரத்தில்
அலைகிறோம். இத்தகைய மனநிலையை மாற்றிக்கொண்டு நாம் தாழ்ச்சியை
ஆடையாக அணிந்துகொண்டு வாழ்வவேண்டும். இயேசு கூறுவார், "தம்மைத்
தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்படுவர், தம்மைத்தாமே தாழ்த்துவோர்
உயர்த்தப்படுவர்" (மத் 23:12). ஆகவே, மரியன்னைக்கு விழா எடுக்கும்
இந்த நல்ல நாளில், அவரிடம் விளங்கிய தாழ்ச்சியை, இறை விருப்பத்திற்கு
பணிந்து வாழும் பண்பை நமதாக்குவோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு அல்லது மங்கள வார்த்தை அறிவிப்பு
என்பது லூக்கா நற்செய்தி 1:26-38ல் உள்ளபடி கபிரியேல் தேவதூதர்,
கன்னி மரியாளுக்கு தோன்றி, அவர் தூய ஆவியினால் கருவுற்று ஒரு
மகனைப் பெற்று இயேசுவின் தாயாவார் என்பதனை அறிவித்த நிகழ்வாகும்.
இந்த நிகழ்வின்போதே மரியாளிடம் கபிரியேல் தூதர் பிறக்கவிருக்கும்
குழந்தைக்கு, இயேசு என பெயரிடச்சொன்னார். மேலும், திருமுழுக்கு
யோவானின் பிறப்பையும் மரியாளிடம் எடுத்தியம்பினார். மரியாளின்
உறவினராகிய எலிசபெத்தும் தமது முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார்
எனவும் கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம்
மாதம் எனவும் கபிரியேல் மரியாளுக்கு அறிவித்தார்.
பல கிறிஸ்தவ பிரிவுகள் இந்நிகழ்வை மார்ச் 25ம் நாளன்று
கொண்டாடுகின்றனர். இது இயேசு பிறப்புக்கு ஒன்பது மாதங்களுக்கு
முன் என்பதுவும் இது இயேசுவின் பாடுகளின் காலத்தில் நிகழ்கின்றது
என்பதும் குறிக்கத்தக்கது. இத்தேதியினை முதன் முதலில் இவ்விழாவுக்கென
கொண்டவர் இரனேயு (காலம்.130-202) ஆவார்.
முக்காலத்தில் சம இரவு-பகல் நாளினை ஒட்டி இவ்விழா நிகழ்ந்ததால்,
இது புத்தாண்டாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. கத்தோலிக்க
திருச்சபையினரால் இந்நிகழ்வு முன்னறிவிப்பு பேராலயத்தில் நடந்ததாக
நம்பப்படுகின்றது. ஆயினும் பிற கிறிஸ்தவ சபைகளிடையே இது
குறித்த ஒத்த கருத்தில்லை.
கத்தோலிக்க திருச்சபையில், இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்வு,
செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் முதல் மறைபொருள் ஆகும். |
|
|