|
|
|
பாத்திமா அன்னையின் மூன்று இரகசியங்கள் |
=================================================================================
லூசியா
சான்டோஸ், பிரான்சிஸ்கோ மார்ட்டோ, ஜெசிந்தா மார்ட்டோ,
1917.
=================================================================================
முதல் இரகசியம்: அன்னை
மரியா பாத்திமாவில் காட்சி அளித்தபோது, மக்கள் பாவத்தில்
இருந்து மனந்திரும்பவில்லை என்றால் மீண்டும் ஓர் உலகப்
போர் தோன்றும் என்றும், காரணமின்றி இரவு வானில்
தோன்றும் ஓர் ஒளியே அதற்கு அடையாளமாக இருக்கும் என்றும்
கூறினார். அன்னை முன்னறிவித்த அந்த ஒளி, 1938 ஜனவரி
25ந்தேதி வானில் தோன்றி, பூமியின் வட அரைக்கோளம் முழுவதும்
ஒளிர்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் மூண்டது.
இரண்டாம் இரகசியம்: அன்னை மரியா பாத்திமாவில்
காட்சி அளித்தபோது ரஷ்யா தனது மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட
வேண்டுமென்றும், ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து
மனந்திரும்ப கிறிஸ்தவர்கள் அனைவரும் செபிக்க
வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். திருத்தந்தை 12ம்
பயஸ் முதலில் உலகத்தையும், 1952 ஜூலை 7ந்தேதி சாக்ரோ
வெர்ஜென்ட்டே (Sacro Vergente) என்ற தனது திருத்தூது
மடல் வழியாக ரஷ்யாவையும் மரியாவின் மாசற்ற இதயத்துக்கு
அர்ப்பணித்தார். 1984ல் திருத்தந்தை 2ம் ஜான் பால்
உலகத்தை மீண்டும் மரியாவின் மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணித்தார்.
1990களில் ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்பியது.
மூன்றாம் இரகசியம்: அன்னை
மரியா பாத்திமாவில் காட்சி அளித்தபோது, இறுதி காலத்தில்
மக்கள் கடவுளை மறந்து தீய வழிகளில் ஆர்வமாக இருப்பார்கள்
என்றும், தீவிரவாதமும், வன்முறைகளும், பயமும் அதிகரிக்கும்
என்றும், கத்தோலிக்க திருச்சபையும் திருத்தந்தையும் அதிகம்
துன்புற வேண்டியிருக்கும் என்றும், கடவுள் பல்வேறு
துன்பங்களை உலகில் அனுமதிப்பார் என்றும், உண்மை கடவுள்
மீது உறுதியான நம்பிக்கை கொள்வோர் அழிவில் இருந்து தங்களை
காத்துக்கொள்வர் என்றும், இறுதியில் தனது மாசற்ற இதயம்
வெற்றிபெறும் என்றும் அறிவித்தார்.
இந்த இரகசியங்கள் லூசியா சான்டோசின் குறிப்புகளின்படி,
கத்தோலிக்க திருச்சபையால் வெளியிடப்பட்டன. இரகசியங்களின்
செய்தி சில வேளைகளில் வேறுவிதமாகவும் கூறப்படுகிறது.
இந்த மூன்று இரகசியங்களைத் தவிர மற்றும் சில செய்திகளையும்
அன்னை வழங்கினார். ஜெசிந்தாவும், பிரான்சிஸ்கோவும்
சிறு வயதிலேயே இறந்துவிடுவர் என்றும், தனது செய்தியைப்
பரப்ப லூசியா பல ஆண்டுகள் உயிரோடு இருப்பார் என்றும்
மரியன்னை முன்னறிவித்திருந்தார். அதுவும் அவ்வாறே நிகழ்ந்தது.
1981 மே 13ந்தேதி பாத்திமா அன்னையின் திருவிழா அன்று,
திருத்தந்தை 2ம் ஜான் பால் அலி ஆக்கா என்ற துருக்கிய
இளைஞனால் துப்பாக்கியால் சுடப்பட்டபோது, தான் அன்னையின்
கரங்களால் பாதுகாக்கப்பட்டதை உணர்ந்ததாக அவர்
கூறினார். அவரது உடலில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா,
பின்பு பாத்திமா அன்னையின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது.
திருத்தந்தை 2ம் ஜான் பால் துப்பாக்கியால் சுடப்பட்ட
இந்த சம்பவம், பாத்திமாவின் மூன்றாவது இரசியத்தின்
நிறைவேறுதலாக கருதப்படுகிறது.
1917 மே
13ந்தேதி, சிறார் மூவர் முன்னும் தோன்றிய
வானதூதர் கையில் நற்கருணையை ஏந்தி இருந்தார். அவரது
கையில் இரசக் கிண்ணமும், அதன் மேலே அந்தரத்தில் மிதந்தவாறு
நற்கருணை அப்பமும் காட்சி அளித்தன. நற்கருணையில் பிரசன்னமாகி
இருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் கூறுமாறு பின்வரும் செபத்தை
வானதூதர் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
"என் கடவுளே,
நான் உம்மை விசுவசிக்கிறேன், நான் உம்மை ஆராதிக்கிறேன்,
நான் உம்மை நம்புகிறேன், நான் உம்மை நேசிக்கிறேன்.
உம்மை விசுவசிக்காதவர்களுக்காகவும்,
உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும்,
உம்மை நம்பாதவர்களுக்காகவும்,
உம்மை நேசிக்காதவர்களுக்காகவும்
உம்மிடம் மன்னிப்பு கேட்கின்றேன்."
|
|