Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ தொழிலாளர்களின் பாதுகாவலரான தூய யோசேப்பு ✠
 (St. Joseph the Worker)
   
நினைவுத் திருநாள் : (மே / Mai 01)
 ✠ புனிதர் சூசையப்பர் ✠(St. Joseph the Worker)

*இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை (Foster-father of Jesus Christ)
*ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி அன்னை மரியாளின் கணவர் (Spouse of the Blessed Virgin Mary)
*உலக திருச்சபையின் இளவரசரும் பாதுகாவலரும் (Prince and Patron of the Universal Church)

*பிறப்பு : கி.மு. 90
பெத்லஹெம் (Bethlehem)

*இறப்பு : கி.பி. 18
நாசரேத்து (பாரம்பரியம்) (Nazareth)

*ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
லூதரனியம்
(Lutheranism)
மெதடிஸ்ட்
(Methodism)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)

*நினைவுத் திருவிழா :
மார்ச் 19 - மே 1 (கத்தோலிக்கம்)
திருக்காட்சி பெருவிழாவை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (கிழக்கு மரபு)

*பாதுகாவல் :
கத்தோலிக்க திருச்சபை, பிறக்காத குழந்தைகள், தந்தைகள், குடிவரவாளர்கள், தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு, ஆய்வுப்பயணம் செய்பவர், யாத்ரீகர்கள், பயணிகள், தச்சுப்பணியாளர், மனை முகவர், சந்தேகம் மற்றும் தயக்கங்களுக்கு எதிராக மற்றும் ஒரு மகிழ்ச்சியான மரணம், கனடா, குரோஷியா, கொரியா, இந்தோனேசியா, ஸபோட்லன் (Zapotlan), வியட்நாம், டக்பிலரண் நகரம் (Tagbilaran City), போஹோல் (Bohol), மண்டவ் நகரம் (Mandaue city), நகரம் (Cebu), பிலிப்பைன்ஸ், மற்றும் பல

புனிதர் யோசேப்பு அல்லது புனித சூசையப்பர் (Saint Joseph), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரியாளின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெரும் தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

புனிதரின் வாழ்வு :
சூசையப்பர், தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பு, தச்சுத் தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாளுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், மரியாள் தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். மரியாள் திடீரென கருவுற்றதால் யோசேப்பு குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கிவிட நினைத்தார். மரியாள் கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாளை ஏற்றுக் கொண்டார்.

இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் மரியாளையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் யோசேப்பு பாதுகாத்தார். பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, யோசேப்பு மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். மரியாளும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார்.

சூசையப்பர் இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். மரியாளுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட யோசேப்பு, திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் மரியாளும் அருகில் இருக்க சூசையப்பர் பாக்கியமான மரணம் அடைந்தார்.

நற்செய்திகளில் :
மத்தேயு நற்செய்தி :
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியாள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியாள் தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
~ மத்தேயு 1:18-21, 24-25

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச்செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்" என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.
~ மத்தேயு 2:13-14,19-21

இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியாள் என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள்.
~ மத்தேயு 13:54-56

லூக்கா நற்செய்தி :
தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாளோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியாள் கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாளுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
~ லூக்கா 2:4-7

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.
~ லூக்கா 2:21-22

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள்.
~ லூக்கா 2:41-46

வணக்கம் :
கிறிஸ்தவ புனிதர்களில், அன்னை கன்னி மரியாளுக்கு அடுத்தபடியாக, புனிதர் சூசையப்பர் வணங்கப்படுகிறார். கிறிஸ்தவ வரலாற்றின் தொடக்க காலம் முதலே இவர் புனிதராக போற்றப்படுகிறார். இவர் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார்.

நாத்திக பொதுவுடைமையாளர்கள் மே தினத்தை தொழிலாளரின் நலனுக்கென்று முதன்முறையாக உருவாக்கினர். இதற்கு முழுமையான பொருள் கிடைக்கும் வகையில் 1955ம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் "தொழிலாளரான புனித சூசையப்பர்" திருநாளை மே மாதம் முதலாம் நாளில் திருச்சபை முழுவதிலும் கொண்டாட பணித்தார். இயேசு ஒரு தச்சு தொழிலாளி என்பதற்கு நம் தாயாம் திருச்சபை முக்கியத்துவம் கொடுக்கிறது. இயேசுவை இப்பணிக்கு உருவாக்கியவர் சூசையே. மனிதன் தன் கைகளாலும், தன் அறிவாற்றலாலும் கிறிஸ்துவின் மறையுடலைக் கட்டி எழுப்பக் கடமைப்பட்டவன் என்பதை புனித சூசையப்பர் தன் வாழ்வின் வழியாக உணர்த்தியுள்ளார். உழைப்பை பரிசுத்தபடுத்தவும் உழைக்கிறவர்களுக்கு ஒரு மேல் வரிச்சட்டத்தை, ஒரு பரலோக பாதுகாவலரைக் கொடுக்கும்படியும் 12- ஆம் பத்திநாத பாப்பு 1995-ல் இந்த விழாவை ஏற்படுத்தினர்.

இன்றைய உலகில் மனிதன், தனது முயற்சியினாலும், திறமையாலும் அடைந்த மாபெரும் வெற்றியை நினைக்க நினைக்க அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. அனைத்து நாட்டு மக்களும் கைகோர்த்துப் பணியாற்றுகிறார்கள் என்பது வெற்றிக்கு மூல காரணமாக உள்ளது. உலக மாந்தர் அனைவரும் ஒரு குடும்பத்தினர்போல் சுருங்கிவிட்ட காட்சி வியப்பானது. புதிய சாதனங்களும், கண்டுபிடிப்புகளும் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதை திருச்சபை உலக மக்களுக்கு எடுத்துரைத்துவருகிறது. கடவுளின் திட்டம், மனித வரலாற்றில் நிறைவேற, மனிதன் எவ்வாறு ஒத்துழைக்கவேண்டும் என்பதை சூசை தன் வாழ்வில் உணர்த்தியுள்ளார். உலகின் பல பகுதிகளிலும் மனித உழைப்பின் மாண்பினைப் பாராட்டும் விழா மே மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படவேண்டுமென்று இத்திருவிழா நிறுவப்பட்டது.

ஏழையாக பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்! துன்பத்தில் துவண்டாலும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்! கஷ்டங்களுக்கு மத்தியிலும் கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்! இவ்வாறு வாழ்ந்தவர்தாம், புனித சூசையப்பர்.

இன்று நம் தாய் திருச்சபையானது தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரை நினைவு கூர்கின்றது. ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தினம் தினம் தம்தம் தகுதிக்கும், அறிவுத்திறனுக்கும் உடல் வலிமைக்கும் ஏற்ப, உழைக்கும் கரங்களை போற்றும் நாள் இந்நாள். இறைவனின் படைப்புத் தொழிலின் பங்காளிகளான தொழிலாளர்களை கரம் குவித்து வணங்கி வாழ்ந்திடும் நன்னாள் இன்று. இந்த விழா எவ்வாறு தோன்றியது?

உழைப்பை பரிசுத்தபடுத்தவும், உழைக்கிறவர்களுக்கு ஒரு மேல் வரிச்சட்டத்தை கொடுக்கவும் நம் அனைவருக்கும் ஒரு பரலோக பாதுகாவலரை கொடுக்கும்படியும் 12ம் பத்திநாதர் 1955ல் இவ்விழாவை ஏற்படுத்தினார்.

=================================================================================
தொழிலாளர்களின் பாதுகாவலரான தூய யோசேப்பு


நிகழ்வு

நீயூ மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊர் சான் ஜோஸ் என்பதாகும். இந்த ஊரில் இருந்த பங்குத்தந்தை, "என்ன இந்த மக்கள் கோவிலுக்கும் சரியாக வருவதுமில்லை,  காணிக்கையும் சரியாகச் செலுத்துவதில்லை" என்று சொல்லி தன்னுடைய நிலையை நொந்துகொண்டார். இதனை அந்த ஊரில் இருந்த ஒரு கடைக்காரரிடமும் பகிர்ந்துகொண்டார். அதற்கு அந்த கடைக்காரர், "தந்தையே! நீங்கள் சரியாக மறையுரை ஆற்றுவதில்லையா?" என்று கேட்டார். "தகுந்த தயாரிப்போடு நன்றாகத் தானே ஆற்றுகிறேன்" என்றார் பங்குத்தந்தை. "நன்றாக மறையுரை ஆற்றுவது இருக்கட்டும், அதில் நம் ஊரின் பாதுகாவலர் தூய யோசேப்பைக் குறித்து மறையுரை ஆற்றுகிறீர்களா?" என்றார் அவர். "இல்லை" என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னார் பங்குத்தந்தை. "யோசேப்பை பாதுகாவலராக வைத்துக்கொண்டு, அவரைக் குறித்து மறையுரை ஆற்றாமல் இருந்தால் எப்படி இருக்கும்?. முதலில் தூய யோசேப்பைக் குறித்து மறையுரை ஆற்றுங்கள். அதன்பிறகு மாற்றத்தை உணருங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட பங்குத்தந்தை அடுத்தவாரம்  வந்தபோது தூய யோசேப்பின் சுரூபத்தை தன்னருகே வைத்துக்கொண்டு மறையுரை ஆற்றத் தொடங்கினார். "அன்பார்ந்த மக்களே! இன்றைக்கு நான் உங்களுக்கு தூய யோசேப்பைக் குறித்து மறையுரை ஆற்றப்போகின்றேன். இவர் தூய பிரான்சிஸ் அசிசியாரைப் போன்று பறவைகள், உயிரினங்களிடத்தில் பேசவில்லை. மாறாக இவர் தன்னோடு வாழ்ந்தவர்களுக்கு தன்னுடைய உழைப்பால் தன்னாலான உதவிகளை செய்தவர். இவரிடத்தில் நீங்கள் தொடர்ந்து மன்றாடினீர்கள் என்றால், நீங்கள் கேட்டது கிடைக்கும்" என்றார். இவ்வாறு அவர் போதிப்பதைக் கேட்டு ஊரில் இருந்த நிறைய மக்கள் ஆலயத்திற்கு வரத்தொடங்கினார்கள், காணிக்கையும் அதிகமாகவே விழுந்தது. பங்குத்தந்தை இப்படி ஒவ்வொரு வாரமும் தூய யோசேப்பைக் குறித்து ஏதாவது பேசுவதைப் பார்த்து கோவிலில் கூட்டம் அதிகமாக வரத்தொடங்கியது. இதைப் பார்த்து பங்குத்தந்தை மிகவும் சந்தோசப்பட்டார்.

ஒருநாள் அவர் தற்செயலாக முன்பு சந்தித்த கடைக்காரரைப் பார்த்து பேச்சுக் கொடுத்தார். அப்போது அந்தக் கடைக்காரர், "போகிற போக்கைப் பார்த்தால், ஊரில் உள்ள மக்களின் பணம் அனைத்தும் ஆலயத்தில் காணிக்கையாக விழுந்துவிடும்போல, இப்படியே போனால் கடை வைத்து பிழைப்பை ஓட்டும் என் போன்றவர்களின் நிலை திண்டாட்டம்தான்" என்று வேடிக்கையாகச் சொன்னார். அவர் இவ்வாறு சொல்வதைக் கேட்டு, சத்தமாகச் சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார் பங்குத்தந்தை.

வரலாற்றுப் பின்னணி 

இன்று நாம் தொழிலாளர்களின் பாதுகாவலரான தூய யோசேப்பின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இவ்விழாவானது 1955 ஆம் ஆண்டு  மே மாதம் 01 ஆம் தேதி  திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதரால் தொடங்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாக தொழிலாளர்களின் உழைப்பு அதிகமாகவே சுரண்டப்பட்டது. இதனால் அவர்கள் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்படித் தோன்றியதுதான் தொழிலாளர்களின் தினமாகிய மே 1 ஆகும். திருச்சபையும் தன்னுடைய பங்கிற்கு சமூகப் போதனைகள் வழியாக (Social Teachings of the Church) தொழிலார்களின் நலன்மீது அக்கறை காட்டத் தொடங்கியது. அப்படி வந்ததுதான் இந்த விழாவாகும். இதனைத் தொடங்கி வைத்துப் பேசும்போது திருந்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் இவ்வாறு சொன்னார், "தொழிலாளர்களாகிய உங்களுக்கென ஒரு பாதுகாவலர் உண்டு. அவர் வேறு யாருமல்ல, தூய யோசேப்பே. அவரிடத்தில் நீங்கள் பரிந்துபேசினால் உங்கள் மன்றாட்டு கேட்கப்படும்" (You have beside you a Shepherd, a defender and a father in Saint Joseph. the Carpenter whom God in his providence chose to be the the virginal father of Jesus and the head of the the Holy Family. He is silent but has excellent hearing, and his intercession is very powerful over the Heart of the Savior)"       

விவிலியத்திலிருந்து தூய யோசேப்பைக் குறித்து நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்திகள் மிகவும் சொற்பமாகும். அவர் நேர்மையாளர் (மத் 1:19), அவர் தன்னுடைய குடும்பத்தை தச்சுவேலை செய்துதான் காப்பாற்றி வந்தார் (மத் 13:55) என்றுதான் அவரைக் குறித்துப் படிக்கின்றோம். அதைக் கடந்து வேறு ஒன்றுமில்லை நாம் வாசிப்பதற்கு. இருந்தாலும் தாவீதின் வம்சாவழியில் பிறந்த தூய யோசேப்பு வேலை செய்வதை அதிலும் குறிப்பாக தச்சு வேலை செய்வதை இழிவாகப் பார்க்காமல் செய்தார் என்பதுதான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது. ஆகவே, அவருடைய வாழ்வும், இன்று நாம் கொண்டாடும் தொழிலாளர் தினமும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் 

தொழிலாளர்களின் பாதுகாவலரான தூய யோசேப்பின் விழாவைக் கொண்டாடும் நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

எந்த உழைப்பும் இழிவானது அல்ல

இன்றைக்கு மனிதர்களிடம் இருக்கும் மிகவும் தவறான கருத்துக்களில் ஒன்று (உடல்) உழைப்பு என்பது மிகவும் இழிவானது. உழைக்காமல் எல்லார்மீதும் ஆதிக்கம் செலுத்துவதுதான் உயர்ந்தது என்பதாகும். இத்தகைய எண்ணத்தை நம்முடைய வாழ்விலிருந்து அகற்றவேண்டும்.

தொடக்கநூலில், ஆண்டவராகிய கடவுள் ஆறுநாட்கள் வேலைசெய்துவிட்டு, ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் என்று படிக்கின்றோம் (தொநூ 2:2). அப்படியானால் கடவுளே ஓர் உழைப்பாளி, தொழிலாளி என்று நாம் புரிந்துகொள்ளலாம். தமதிருத்துவத்தில் இரண்டாம் ஆளாகிய இயேசு கிறிஸ்து மக்களால் "இவர் தச்சருடைய மகன்" என அழைக்கப்படுகின்றார் (மத் 13:55). இயேசுவும் தன்னுடைய வளர்ப்புத் தந்தை யோசேப்பு செய்த தச்சுத் தொழிலையே செய்திருப்பார் என இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டும். புறவினத்தாரின் திருத்தூதர் என அன்போடு அழைக்கப்படும் தூய பவுல், "நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். அதற்குக் கைமாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருள்வார்" என்பார் ( கொலோ 3: 23- 24). இங்கே பவுல் உழைப்பை உளமாரச் செய்யவேண்டும் என்று சொல்லி, உழைப்பை உயர்வாகப் பேசுகின்றார்.

ஆகவே, நாம் செய்வது எந்த வேலையாக இருந்தாலும் அது சரித்திரம் எழுதுவதிலிருந்து சாக்கடை அள்ளுவது வரை உழைப்பை உயர்வாகப் பார்க்கக்கூடிய மனநிலையை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் உழைப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பாராட்டுவதை நம்முடைய வாழ்விலிருந்து தவிர்க்க வேண்டும்.

வேலைக்கேற்ற கூலி கிடைக்கச் செய்யவேண்டும்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, "வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே" என்பார் (மத் 10:10). உழைக்கின்ற ஒவ்வொருவரும் அதற்கேற்ற ஊதியம் பெறவேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆழமான போதனையாக இருக்கின்றது. ஆனால் இன்றைக்கு நிறைய இடங்களில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை. "சூரியனை நாள்தோறும் முதுகில் சுமந்தோம். வியர்வையால் பூமியை நனைத்தோம். ஆனால் எங்களுக்கு மிஞ்சியது என்னவோ ஓர் உழக்கு நெல்தான்" என்று சாதாரண விவசாயிகள் படும் வேதனைச் சுட்டிக்காட்டுவார் கவிஞர் இன்குலாப். இத்தகைய நிலை விவசாயத் துறையில் மட்டும் இல்லை. எல்லா நிலைகளில் இருக்கின்றது. ஆகவே இத்தகைய ஒரு நிலை மாறவேண்டும். எல்லா மக்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறவேண்டும்.

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவேண்டும் என்று சொல்லும் விவிலியம் உழைக்காமல் சோம்பித் திரியும் நிலையையும் வன்மையாகக் கண்டிக்கிறது. தூய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய திருமுகத்தில் " உழைக்க மனமில்லாதவர் உண்ணலாகாது" என்பார் (2 தெச 3:8). ஆகவே நம்முடைய வாழ்வில் இந்த இரண்டு நிலைகளையும் உணர்ந்து வாழவேண்டும்.

உழைப்பால் உயர்வு

இந்த நாள் விழா நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான பாடம் உழைப்பால் உயர்வு என்பதாகும். இன்றைக்கு சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் எல்லாரும் திடிரென்று அந்த நிலையை அடைந்த்துவிடவில்லை. தங்களுடைய கடின உழைப்பால்தான் அத்தகைய ஒரு நிலை அடைந்தார்கள். ஆண்டவர் இயேசு சொல்லும் தாலந்து உவமை இதற்கு மிகச் சிறந்த உதாரணம். ஆகவே, நாம் நம்முடைய வாழ்க்கையில் உழைப்பால் உண்டாகும் மகத்துவத்தை நாம் உணர்ந்துகொண்டு, அதற்கேற்ப வாழவேண்டும்.

இயக்குனர் பாக்கியராஜிடம் ஒருவர், "சாமானியனுக்கும் சாதனையாளனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?" என்று கேட்டார். அதற்கு அவர், "சாமானியன் வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்று வாழ்பவன். சாதனையாளன் அப்படியில்லை. அவன் தன்னுடைய கடின உழைப்பால் ஒவ்வொருநாளும் ஒருபடி உயர்ந்து கொண்டிருப்பவன். அப்படிப்பட்டவனே சாதனையாளன்" என்றார். ஆம், கடினமாக உழைத்தவர் கஷ்டப்பட்டதாக வரலாறு இல்லை.

ஆகவே, தொழிலாளர்களின் பாதுகாவலரான தூய யோசேப்பின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நாம் அவரிடம் விளங்கிய நற்பண்புகளை நமதாக்குவோம். உழைப்பை உயர்வாகப் பார்ப்போம். உழைப்பால் உயர்வு பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா