Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ரீட்டா ✠(St. Rita of Cascia)
  Limage contient peut-tre : 1 personne, plein air  
நினைவுத் திருநாள் : (மே/ May 22)
✠ புனிதர் ரீட்டா ✠(St. Rita of Cascia)

* தாய், விதவை, அருள் வடுவுற்றவர், அர்ப்பணிக்கப்பட்ட மறைப் பணியாளர் :
(Mother, Widow, Stigmatist, Consecrated Religious)

* பிறப்பு : கி.பி. 1381
ரொக்கபொரேனா, பெருஜியா, உம்ப்ரியா, இத்தாலி
(Roccaporena, Perugia, Umbria, Italy)

* இறப்பு : மே 22, 1457
கேஸியா, பெருஜியா, உம்பிரியா, இத்தாலி
(Cascia, Perugia, Umbria, Italy)

* ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
அக்லிபாயன் திருச்சபை (1902ல் ரோமன் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்தது)
(The Aglipayan Church - Separated from the Roman Catholic Church in 1902)

* அருளாளர் பட்டம் : கி.பி. 1626
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

* புனிதர் பட்டம் : மே 24, 1900
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

* முக்கிய திருத்தலங்கள் :
கேஸியா, இத்தாலி
(Cascia, Italy)

* நினைவுத் திருநாள் : மே 22

* சித்தரிக்கப்படும் வகை :
நெற்றியில் காயம், ரோஜா, தேனீக்கள்,
திராட்சைக் கொடி

* பாதுகாவல் :
தொலைந்த மற்றும் இயலாத காரணங்கள், நோய்கள், காயங்கள், திருமணம் சார்ந்த பிரச்சினைகள், அதிகாரம் மற்றும் உரிமை, முதலியவற்றைத் தவறாகப் பயன்படுத்துதல், தாய்மார்கள்

புனிதர் ரீட்டா, இத்தாலிய நாட்டின் விதவைப் பெண்ணும், அகஸ்தீனிய சபையின் (Augustinian nun) பெண் துறவியும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். திருமணமான இவர், இவரது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், தமது கணவனை தவறான பாதையிலிருந்து மீட்க முயற்சி செய்ததிலேயே முடிவடைந்தது.

வாழ்க்கைக் குறிப்பு :
"மார்கரிட்டா லோட்டி" (Margherita Lotti) எனும் இயற்பெயர் கொண்ட ரீட்டா, இத்தாலி நாட்டிலுள்ள கேஸியா (Cascia) நகருக்கு அருகிலுள்ள ரொக்கபொரேனா (Roccaporena) கிராமத்தில் கி.பி. 1381ம் ஆண்டு, பிறந்தார். அவரது பெற்றோர் "ஆண்டனியோ", (Antonio) மற்றும் "அமடா ஃபெர்ரி லோட்டி" (Amata Ferri Lotti) ஆவர்.

இவர், கால்நடைகளை வைத்து வாழ்க்கை நடத்தியவர்களின் ஒரே மகள். இவர்கள் மத்திய இத்தாலி நாட்டில், ஊம்ப்ரியா (Umbria) என்ற பிராந்தியத்தில் வாழ்ந்து வந்தார்கள். பல காலமாக இவரின் பெற்றோர்கள் குழந்தைபேறு இல்லாமல் வாழ்ந்தார்கள்.

ரீட்டாவின் பிறப்பிற்கு பின் இவ்வேதனை இவர்களைவிட்டு நீங்கியது. ரீட்டா தன் தாயின் வளர்ப்பால், இறை இயேசுவை முழுமையாக அன்பு செய்வதில் ஊறிக் கிடந்தார். ஏழை எளியவர்களின்மேல் அன்பு கொண்டு, வாரி வழங்கினார். ரீட்டா துறவு வாழ்வை தேர்ந்து கொள்ள விரும்பினார். ஆனால் இவரின் பெற்றோர் தங்களின் வயதான காலத்தில், தங்களை பராமரித்து கவனிக்க வேண்டுமென்று விரும்பி, மகளை துறவறத்திற்கு அனுப்பாமல் திருமணத்திற்கு சம்மதம் தர மீண்டும் மீண்டும் வற்புறுத்தினர். இதற்கு சம்மதம் தெரிவித்து தன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றினார் ரீட்டா.

தன் பெற்றோரின் விருப்பப்படி "பவோலோ மன்சினி" (Paolo Mancini) என்பவரை தமது 12 வயதிலேயே மணந்தார். செல்வம் படைத்த இவரது கணவர் எளிதில் சினமடையக் கூடிய, ஒழுக்கக்கேடான மனிதராக இருந்தார். இவருக்கு கேஸியா பிராந்தியத்தில் அநேக விரோதிகள் இருந்தனர்.

கணவர் மிக கோபம் கொண்டவர். கொடூர குணங்களை தன் மனைவியிடம் காட்டிவந்தார். ரீட்டா தளரா நெஞ்சத்துடன் அனைத்து துன்பங்களையும் ஏற்றுக் கொண்டார். கணவர் மனம் மாற தன் துன்பங்களை ஒப்புக்கொடுத்தார். பல ஆண்டுகளாக ரீட்டா சொல்லொனா அவமானங்களையும், உடல் ரீதியான வன்கொடுமைகளையும் மற்றும் துரோகங்களையும் சகித்தபடியே வாழ்ந்தார்.

பன்னிரண்டு வயதில் தமது முதல் குழந்தையை ஈன்றார். இவருக்கு ஜான், பவுல் என்ற 2 மகன்கள் பிறந்தனர். இவர்களும் தந்தையைப்போலவே மூர்க்கர்களாக நடந்தனர். ரீட்டா எதையும் தாங்கும் இதயம் கொண்டு வாழ்ந்தார். இதன் மத்தியில் நோயுற்றோரையும், ஏழைகளையும் சிறப்பாக வழிதவறி சென்றோரையும் சந்தித்து, அவர்கள் அருட்சாதனங்களை பெற வழிகாட்டியாக வந்தார்.

இறைவன் ரீட்டாவின் மன்றாட்டுக்கு நல்ல பலன் அளித்தார். பவுலோ முற்றிலும் மனம் மாறினார். இதனால் பவுலோவின் நண்பர்கள் அவர்மேல் கோபம் கொண்டு அவரின் பகைவர்கள் ஆனார்கள். பிறகு அவரை குத்திக் கொன்றார்கள். இதனால் ரீட்டாவின் மகன்கள் கோபம் கொண்டு, தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்க சபதம் செய்தனர். இதனால் ரீட்டா தன் மகன்களின் மனமாற்றத்திற்காக கடுமையாக ஜெபித்துவந்தார். இவர்கள் மனம் மாறவில்லை என்றால் இறைவன் அவர்களை அழைத்துக் கொள்ள மன்றாடினார். ஓராண்டிற்குள் இறைவன் அவரின் மன்றாட்டை கேட்டு இருவரையும் அவரிடம் அழைத்துக்கொண்டார்.

ரீட்டா இவர்களின் இறப்பிற்குப் பின் தனிமையில் விடப்பட்டார். இந்நிலையில் ஜெப, தவ, அற முயற்சிகளில் ஈடுபட்டு, துறவறத்தை நாடினார். எனவே, புனித அகுஸ்தினாரின் சபையைத் தேர்ந்துகொண்டார். அதிகமாக புனித அருளப்பர், புனித அகஸ்டீன், புனித நிக்கோலாஸ் இவர்களின் பரிந்துரையை நாடி ஜெபித்து வந்தார்.

ஒருநாள் இரவு தூங்கும்போது யாரோ தனது பெயர் சொல்லி அழைப்பது அவரின் காதில் விழுந்தது. அதைக்கேட்ட ரீட்டா உடனே எழுந்தார். அப்போது இம்மூன்று புனிதர்களும் ரீட்டாவை, மடத்தின் கதவு பூடப்பட்டிருந்த நிலையில், மடத்திற்குள் இருந்த சிற்றாலயத்திற்குள் கொண்டுபோய் விட்டனர். அங்கு ரீட்டா மறுநாள் காலைவரை மெய்மறந்து தியானத்தில் மூழ்கி, ஜெபித்துக்கொண்டிருந்ததை கன்னியர்கள் கண்டார்கள். அப்போது எப்படி ஆலயத்திற்குள் வந்தாய் என்று ரீட்டாவிடம் கேட்டதற்கு, மூன்று புனிதர்களும் தன்னை இங்கு அழைத்து வந்ததாகக் கூறினார். இவர் கூறுவது உண்மை என்றுணர்ந்த கன்னியர்கள், அவரை தங்களின் துறவு மடத்தில் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டார்கள்.

அவர் அவ்வப்போது சிலுவையில் அறையுண்ட இயேசுவை காட்சி தியானத்தில் கண்டார். அக்காட்சியை அவர் இங்கும் கண்டு, அதிலேயே தன் நேரத்தை செலவிட்டார். ரீட்டா அவரின் தலையில் முள்முடி வைத்து கொண்டு ஜெபித்தார். இதனால் ஏற்பட்ட காயம் ஆறாமல் வலித்துக்கொண்டே இருந்தது. அக்காயத்தில் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. அப்புண்ணில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இச்சிலுவையின் நிமித்தம் அவர் தம் அறையைவிட்டு வெளியேறாமல் இருந்தார்.

ஆனால் இவரிடமிருந்து அருள் பொழியப்படுவதைப் பார்வையாளர் யாவரும் உணரமுடிந்தது. பல அருஞ்செயல்கள் இவரது இறப்பிற்குப் பின் நிகழ்ந்த வண்ணமாய் இருந்தது. 76ம் வயதில் தனது தூய ஆன்மாவை எல்லாம் வல்லவரிடம் ஒப்படைத்த இவர் வாழும் போதும், இறந்துவிட்ட பிறகும் நன்மைகளை இவ்வுலக மக்களுக்கு செய்து கொண்டே இருந்தார். இயலாதவைகளை பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்தவராக இப்புனிதர் திகழ்ந்தார்.

ரீட்டா பிறந்த சமயத்தில் ஒரு விநோத நிகழ்ச்சி நடந்தேறியது. பெரிய பெரிய தேனீக்களின் கூட்டம் ஒருவித சத்தத்துடன் ரீட்டா பிறந்த வீட்டிற்குள் புகுந்தது. அவரிடமிருந்த அறைக்குள்ளும் புகுந்தது. ஆனால் யாரையும் ஒரு தேனீயும் கொட்டியதில்லை. இந்நிகழ்ச்சி இன்றுவரை ஆண்டுதோறும் புனித வாரம் முழுவதும், ரீட்டாவின் திருநாளன்று நடைபெறுகிறது. இது உண்மைதானா என்று சோதித்துப் பார்க்கப்பட்டு, உண்மைதான் என்று கண்டறியப்பட்டது.

இந்நிகழ்வானது, இவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பதற்கான தயாரிப்புத் தணிக்கையில் இடம் பெற்றுள்ளது.

இப்புனிதர், 1457ம் ஆண்டு, மே மாதம், 22ம் நாள், மரித்தார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 தூய ரீட்டா (மே 22)

நிகழ்வு

திருமணத்திற்கு முன்பே ரீட்டாவிற்கு அகுஸ்தினாருடைய மடத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்று ஆசை. ஆனால் அவருடைய பெற்றோர்களுடைய கட்டாயத்தின் பேரில் அவர் மணந்துகொண்டார். தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகள் இறந்தபிறகும் தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் துறவியாக மடத்தில் சேரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் துறவு மடத்தில் இருந்தவர்கள் திருமணமான ஒருவரை துறவுமடத்தில் சேர்ப்பது நல்லதல்ல என்று சொல்லி மறுத்துவிட்டனர். இப்படிப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய இஷ்டப் புனிதர்களான தூய அகுஸ்தினார், தூய திருமுழுக்கு யோவான், தூய நிக்கோலாஸ் ஆகியோரிடம் இடைவிடாது மன்றாடினார் எப்படியாவது தான் துறவுமடத்தில் சேரவேண்டும் என்று.ஒருநாள் அவர் தனக்கு விருப்பமான அந்த மூன்று தூயவர்களிடம் மன்றாடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் மூவரும் இவரை கைபிடித்து அழைத்துக்கொண்டு போய் அகுஸ்தினாருடைய திருவுமடத்தில் இருந்த சிற்றாலயத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கதவை அடைத்துவிட்டுச் அங்கிருந்து போய்விட்டனர்.

அடுத்தநாள் துறவு மடத்தில் இருந்தவர்கள் சிற்றாலத்திற்கு வந்தபோது அது அடைக்கப்பட்டுக் கிடந்தது. ஒருவழியாக மடத்தில் இருந்தவர்கள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனபோது அங்கே ரீட்டா முழந்தாள் படியிட்டு இறைவனிடம் உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். "எப்படி இங்கே வந்தாய்?" என்று அவர்கள் அவரிடம் கேட்க அகுஸ்தினாரும் திருமுழுக்கு யோவானும் தூய நிக்கோலாசம் தன்னை இங்கு வந்து விட்டுச்சென்றதாக கூறினார். உடனே அங்கிருந்த அனைவரும் இறையருளால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அவரை துறவுமடத்தில் துறவியாக சேர்த்துக்கொண்டார்கள்.

வாழ்க்கை வரலாறு

ரீட்டா 1381 ஆம் ஆண்டு இத்தாலில் உள்ள ஸ்போலேடோ என்ற ஊரில் இருந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு நீண்டநாட்களாக குழந்தையே இல்லை. இடைவிடாத ஜெபத்தினால்தான் இவர்கள் ரீட்டாவைப் பெற்றெடுத்தார்கள். இவருடைய தாய் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். அதனால் இவர் தன்னுடைய மகளான ரீட்டாவை இறைபக்தியில் சிறப்பாக வளர்த்தெடுத்தார். ரீட்டா சிறுவயது முதற்கொண்டே ஜெபத்திலும் ஏழைகளுக்கு உதவும் நல்ல பண்பிலும் சிறந்து விளங்கினாள்.

இவருக்கு பதினெட்டு வயது நடந்துகொண்டிருந்தபோது இவர் தூய அகுஸ்தினாருடைய சபையில் துறவியாகச் சேரவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் இவருடைய பெற்றோர் வயதானவர்கள் என்பதாலும் இவர்களைப் பராமரிக்க ஆள் இல்லை என்பதாலும் இவர் பெற்றோருடைய கட்டாயத்தில் பேரில் பெர்டினான்ட் என்ற மனிதனை மணந்துகொண்டார். அவர் சாதாரண மனிதாக இல்லை. முரடனாகவும் ரீட்டாவை எப்போதும் அடித்துத் துன்புறுத்துபவனாகவும் இருந்தான். ரீட்டா மிகவும் பொறுமையாக தன்னுடைய கணவர் மனந்திரும்பும்படியாக இறைவனிடம் எப்போதும் வேண்டிக்கொண்டே இருந்தார். இந்த நேரத்தில் ரீட்டாவிற்கு ஜான், பால் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். குழந்தைகள் பிறந்த பின்பாவது தன்னுடைய கணவர் திருந்துவார் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவரோ ரீட்டாவை மேலும் மேலும் அடித்துத் துன்புறுத்திக்கொண்டே இருந்தார்.

நாட்கள் செல்ல செல்ல ரீட்டா தன்னுடைய கணவருக்காக தொடர்ந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். அவர் செய்த ஜெபம் வீண்போகவில்லை. ஆம், அவருடைய கணவர் மனம்மாறினார், புதிய வாழ்க்கை வாழத் தொடங்கினார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடிரென்று ஒருநாள் அவருடைய கணவரை மர்ம நபர்கள் சிலர் கொன்றுபோட்டார்கள். அப்போது ரீட்டா அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. ஆனாலும் அவர் ஆண்டவர் இயேசு சிலுவையில் தொங்கியபோது தன்னுடைய பகைவர்களை மன்னித்ததுபோன்று தன்னுடைய கணவரைக் கொன்றவர்களை மன்னித்தார். அவர் மன்னித்தாலும் அவருடைய பிள்ளைகளான ஜானும் பாலும் தங்களுடைய தந்தையைக் கொன்றுபோட்ட கயவர்களைக் கொன்றுபோட துடித்துக்கொண்டிருந்தார்கள். இதை நினைத்து ரீட்டா பெரிதும் கவலைப்பட்டார். அப்போது அவர் கடவுளிடம், "இறைவா! என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் மனமாறச் செய்யும். இல்லையென்றால் அவர்களை உம்மிடத்தில் எடுத்துக்கொள்ளும்" என்று உருக்கமாக மன்றாடினார். அடுத்த ஓராண்டில் ரீட்டாவின் இரண்டு மகன்களும் இறையடி சேர்ந்தார்கள்.

இப்படி கணவரும் பெற்ற பிள்ளைகளும் தன்னைவிட்டுப் போன அவர் தனிமைச் சிறையில் வாடினார். அப்போது அவருக்கு துறவுமடத்தில் சேர்ந்து வாழ்நாளெல்லாம் துறவியாகவே வாழலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதற்காக அவர் அகுஸ்தினாருடைய துறவுமடத்தை அணுகியபோது, திருமணமான யாரையும் உள்ளே சேர்த்துக்கொள்வது கிடையாது என்று சொல்லி மறுத்துவிட்டனர். இதனால் அவர் மன வருத்தத்திற்கு உள்ளானார். இத்தகைய வேளைகளில் அவர் இறைவனிடமும் தன்னுடைய இஷ்ட புனிதர்களிடம் ஜெபிக்கத் தவறியதில்லை. அப்போதுதான் அவர் அவருடைய இஷ்ட புனிதர்களால் அழைத்துச்செல்லப்பட்டு அகுஸ்தினாருடைய துறவுமடத்தில் கொண்டுபோய் விடப்பட்டார். இதைப் பார்த்த துறவுமடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இவரை துறவுமடத்தில் துறவியாக ஏற்றுக்கொண்டார்கள்.

துறவுமடத்தில் சேர்ந்தபிறகு இவர் ஜெபத்திலும் கீழ்ப்படிதலிலும் நற்கருணை பக்தியிலும் சிறந்து விளங்கினார். குறிப்பாக இவர் இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தை பார்த்து அதிகமாக தியானித்தார். அத்தகைய தருணத்தில்தான் 1441 ஆம் ஆண்டு இயேசுவின் தலையில் இருந்த முள்முடியில் இருந்த ஒரு முள்ளானது அவரது நெற்றியில் பதிந்து அவருக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது. அவர் இறைவனிடத்தில் தன்னுடைய நெற்றியில் பதிந்து வேதனையை ஏற்படுத்தும் முள்ளை நீக்குமாறு எவ்வளவோ கேட்டார். ஆனால் இறைவனோ அது அவருடைய நெற்றியில் என்றைக்கும் இருக்குமாறு செய்தார். நெற்றியில் ஏற்பட்ட காயத்திலிருந்து வழிந்த இரத்தம் சில நேரம் நாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் துறவுமடத்தில் இருந்தவர்கள் அவரை அவருடைய அறையிலிருந்தே ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இதனால் அவர் தன்னுடைய அறையிலே தங்கி இறைவனிடம் ஜெபித்து வந்தார். அந்த நாட்களில் எல்லாம் (ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு மேல்) அவர் நற்கருணையை மட்டுமே உண்டு வந்தார்.

இப்படி ஜெபத்திலும் தவத்திலும் தன்னுடைய வாழ்வைச் செலவழித்த ரீட்டா 1457 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். 1900 ஆம் ஆண்டு திருத்தந்தை பனிரெண்டாம் சிங்கராயரால் இவர் புனிதையாக உயர்த்தப்பட்டார். திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்கள் தூய ரீட்டாவிடம் ஜெபித்தால் நல்ல கணவர் கிடைப்பார் என்பது ஒரு நம்பிக்கை.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ரீட்டாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1.விடாமுயற்சி

தூய ரீட்டாவை விடாமுயற்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகது. ஏனென்றால் அவர் இளமைப் பருவத்தில் இருந்தபோது துறவுமடத்தில் சேரவேண்டும் என்று விருப்பம் கொண்டார். அது அவருடைய பெற்றோரால் மறுக்கப்பட்டது. பின்னர் அவர் தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகளை இழந்துநின்றபோதும் துறவறமடத்தில் சேர விரும்பினார். அப்போதும் துறவு மடத்தில் இருந்தவர்களால் அது மறுக்கப்பட்டது. இப்படியாக துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் அவருக்குப் பலமுறை மறுக்கப்பட்டபோதும் அவர் விடாமுயற்சியோடு போராடிக்கொண்டிருந்தார். இறுதியாக அது இறையருளால் நிறைவேறியது. மத்தேயு நற்செய்தி 7:7 ல் ஆண்டவர் இயேசு கூறுவார்,"கேளுங்கள் உங்களுகுக் கொடுக்கப்பட்டும், தேடுங்கள் நீங்கள் கண்டைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும் என்று. ஆம், நாம் தொடர்ந்து விடாமுயற்சியோடு ஒரு காரியத்திற்காக போராடும்போது அது நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் தான் தூய ரீட்டா அவருடைய அவருடைய வாழ்க்கை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஒரு நகரில் இருந்த மிக முக்கியான கடையின் வாசலில் ஜோடி புறாக்கள் கூடிகட்டு இருந்தன. இதைப் பார்த்த அந்த கடையில் இருந்த பணியாளர் புறக்கூண்டை அகற்றி அந்த ஜோடிப் புறாக்களை விரட்டியடித்தார். ஆனால் அந்த புறாக்கள் மீண்டும் மீண்டுமாக அதே இடத்தில் வந்து கூடுகட்டின. இதைப் பார்த்த அந்தக் கடையின் முதலாளி பணியாளிடம், "மீண்டும் மீண்டுமாக அந்தப் பறவைகள் இங்கேயே வந்து கூடுகட்டுவதால் அது இங்கேயே இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்லி, அவற்றை அங்கேயே தங்க அனுமதித்தார். விடாமுயற்சியோடு ஒரு காரியத்தை செய்தால், அது இப்போது இல்லாவிட்டாலும் ஒருநாள் கைகூடும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. தூய ரீட்டாவின் வாழ்வும் நமக்கு அதைத்தான் நமக்கு எடுத்துக்கூறுகின்றது

2.துன்பத்தை ஏற்றுக்கொண்டு வாழ்தல்

தூய ரீட்டா தனக்கு ஏற்பட்ட துன்பத்தை (முள்ளால் ஏற்பட்ட காயத்தை) நினைத்து வருந்தவில்லை. தொடக்கத்தில் அவர் வருந்தினாலும் பின்னாளில் அதனை இறை விருப்பமாக ஏற்றுக்கொண்டார். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்களை எப்படிப் பார்க்கிறோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். துன்பத்தை நினைத்து வருந்துகின்றோமா? அல்லது அந்தத் துன்பம் இன்பத்திற்கான நுழைவாயில் என ஏற்றுக்கொள்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தூய பவுல் தன்னுடைய உள்ளத்தைத் தைக்கும் முள்ளை நீக்குமாறு இறைவனிடம் கேட்டார். ஆனால் இறைவனோ என் அருள் உனக்குப் போதும், வலுவின்மையில் வல்லமை சிறந்தோங்கும் என சொல்லி அதனை ஏற்றுக்கொள்ளப் பணித்தார். (2 கொரி 12:9) பவுலும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டார். தூய ரீட்டாவின் விழாவைக் கொண்டாடும் நாம் துன்பத்தைக் குறித்த நமது பார்வை எப்படிப்பட்டதாக இருக்கின்றது என நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

American Anthem என்ற சிறுகதையில் வரும் நிகழ்ச்சி. இரண்டு நண்பர்கள் வாகனத்தில் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானார்கள். இரண்டு பேருக்குமே காலில் சரியான அடி. அதனால் அவர்கள் தங்களுடைய காலை இழக்க வேண்டிய சூழல். இந்த விபத்துக்குப் பிறகு ஒரு நண்பன் தன்னை வீட்டுக்குள்ளே அடைத்துக்கொண்டு தனக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து வாழ்நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்தான். ஆனால் இன்னொரு நண்பனோ தன்னுடைய கால் போனாலும் சக்கர நாற்காலில் உட்கார்ந்துகொண்டு மக்கள் அதிகமாகக் கூடும் தெருக்களில் பாடிக்கொண்டே சென்று மக்களை மகிழ்ச்சிப் படுத்தினான். அவனும் தனக்கு ஏற்பட்ட இழப்பை ஒரு பொருட்டாக நினைக்காமல் மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.

நமக்கு வரும் துன்பத்தை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில் நம்முடைய வாழக்கை அடங்கி இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய ரீட்டாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழத் துணிவோம், விடாமுயற்சியோடு எதையும் செய்வோம். துன்பத்தை துணிவோடு ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா