✠ புனிதர்
பிலிப்புநேரி ✠(St. Philip Neri) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(மே/ May 26) |
✠ புனித ஃபிலிப் நேரி ✠(St.
Philip Neri)
*
ஒப்புரவாளர்; நிறுவனர் :
(Confessor and Founder)
*பிறப்பு
: ஜூலை 22, 1515
ஃப்ளோரன்ஸ், ஃப்ளோரன்ஸ் குடியரசு
(Florence, Republic of Florence)
*இறப்பு
: மே 25, 1595 (வயது 79)
ரோம், திருத்தந்தையர் மாநிலம்
(Rome, Papal States)
*ஏற்கும்
சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
*முக்திபேறு
பட்டம் : மே 11, 1615
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)
*புனிதர்
பட்டம் : மார்ச் 12, 1622
திருத்தந்தை 15ம் கிரகோரி
(Pope Gregory XV)
*நினைவுத்
திருநாள் : மே 26
*சித்தரிக்கப்படும்
வகை :
லீலி மலர்; குருத்துவ உடை; பற்றியெரியும் இருதயம்
*பாதுகாவல்
:
ரோம், "மண்டலுயோங்" (Mandaluyong), அமெரிக்க சிறப்பு படைகள்,
"தலைமை குரு கிறிஸ்து அரசர் கல்வி நிலையம்" (Institute of
Christ the King Sovereign Priest), "பிக்ஸோன் கிராமம்" (Piczon
Vill), "கேட்பலகொன்" (Catbalogan), சிரிப்பு, நகைச்சுவை, மகிழ்ச்சி
புனிதர் ஃபிலிப் நேரி, கத்தோலிக்க திருச்சபையின் குருவும்,
புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் (Saints Peter and Paul) ஆகியோருக்குப்
பிறகு "ரோம் நகரின் மூன்றாம் திருத்தூதர்" (Third Apostle of
Rome) என்னும் சிறப்புப் பெயர் கொண்டவரும், மறைமாவட்ட குருக்களுக்கான
"இறைவேண்டல் சபை" (Congregation of the Oratory) என்றொரு அமைப்பை
நிறுவியவரும் ஆவார்.
இளமைப் பருவம் :
ஃபிலிப் நேரி, இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் 1515ம் ஆண்டு,
ஜூலை மாதம், 22ம் நாளன்று, பிறந்தார். வழக்குரைஞரான
"ஃபிரான்செஸ்கோ நேரி" (Francesco di Neri) என்பவருக்கும் அவருடைய
மனைவி "லூக்ரேசியா தா மோஷியானோ" (Lucrezia da Mosciano) என்பவருக்கும்
கடைசிக் குழந்தையாக அவர் பிறந்தார். அவருடைய பெற்றோர் அரசுப்
பணி சேர்ந்த மேல்குடி மக்கள்.
சிறு பருவத்தில் ஃபிலிப் நேரி ஃப்ளாரன்ஸ் நகரில் "சான் மார்கோ"
(San Marco) என்ற இடத்திலுள்ள புகழ் பெற்ற "டோமினிக்கன் துறவு
மடத்தில்" (Dominican monastery) கல்வி பயின்றார். அவருக்குப்
பதினெட்டு வயது ஆனபோது அவருடைய பெற்றோர் ஃபிலிப்பின் மாமனாகிய
ரோமோலோ (Romolo) என்பவரிடம் அனுப்பினார்கள். ரோமோலோ நேப்பிள்ஸ்
நகருக்கு அருகே "சான் ஜெர்மானோ" (San Germano) என்னும் நகரில்
பெரிய வணிகராக இருந்தார். ஃபிலிப் தம் மாமனாரிடமிருந்து வணிகக்
கலையைக் கற்றுத் தேர்ச்சிபெற்று, அவருடைய சொத்துக்கு
உரிமையாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரோமுலோவின் அன்பும் மதிப்பும் பிலிப்புக்கு கிடைத்தாலும்,
அவருக்கு இவ்வுலக சொத்துக்களில் ஆர்வம் இருக்கவில்லை. எனவே
அவர் தனது 26ம் வயதில் வணிகத் தொழிலை விட்டுவிட்டு, தமது
ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை
முன்னிட்டும் 1533ம் ஆண்டு ரோம் நகருக்குச் சென்றார்.
ரோமில் ஆற்றிய பணி :
ரோம் நகருக்கு வந்த ஃபிலிப் நேரி, முதலில் உயர்குடியைச்
சேர்ந்த கலேயோட்டோ காச்சியா (Galeotto Caccia) என்பவரின்
வீட்டில் தனிப்பயிற்சி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இரண்டு
ஆண்டுகளுக்குப் பின் மூன்றாண்டு காலமாக அவர் அகுஸ்தீன்
(Augustinians) சபைத் துறவியரின் கீழ் கல்வி பயின்றார்.
அதன்பின், அவர் ரோம் நகரில் ஏழைமக்கள் மற்றும் நோயுற்றோர்
நடுவே பணிபுரிந்தார். அதன் காரணமாக மக்கள் அவரை "ரோம் நகரின்
திருத்தூதர்" (Apostle of Rome) என்று அழைக்கலாயினர். அதே
சமயம் அவர் சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பாலியல்
தொழிலாளரின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களிடையேயும்
பணிபுரிந்தார்.
1538ம் ஆண்டிலிருந்து ஃபிலிப் நேரி ரோம் நகரின் எல்லாப்
பகுதிகளுக்கும் சென்று, மக்களை நேரடியாக சந்தித்து, உரையாடி,
அவர்களைக் கடவுள் பற்றியும் ஒழுக்க நெறி பற்றியும் சிந்திக்கத்
தூண்டினார்.
மூவொரு கடவுள் குழு உருவாக்கம் :
1548ம் ஆண்டு, ஃபிலிப் நேரி "பெர்ஸியானோ ரோஸ்ஸா" (Persiano
Rossa) என்னும் குருவோடு இணைந்து "திருப்பயணிகள் மற்றும்
நோயுற்று குணமானோருக்கான மகா பரிசுத்த திரித்துவத்தின் குழு"
(Confraternity of the Most Holy Trinity of Pilgrims and
Convalescents) என்றொரு இயக்கத்தைத் தொடங்கினார். அக்குழுவின்
நோக்கங்கள் இவை: ரோம் நகருக்குத் திருப்பயணமாக வரும்
ஆயிரக்கணக்கான மக்களுக்கு பணிபுரிவது; மருத்துவ மனைகளிலிருந்து
வெளியேறியும் வேலை செய்யத் திறனற்ற நிலையிலிருந்தோரின் துயரம்
போக்குதல்.
அக்குழுவைச் சார்ந்தவர்கள் ரோமில் "சான் சால்வட்டோர் இன்
காம்போ" (Church of San Salvatore in Campo) என்னும் கோவிலில்
கூடி இறைவேண்டல் செய்தனர்; 40 மணி நற்கருணை ஆராதனை செய்தனர்.
இந்த பக்தி முயற்சியை முதன்முதலாக ரோமில் அறிமுகம் செய்தவர்
ஃபிலிப் நேரி தான்.
இறைவேண்டல் சபை உருவாக்குதல் :
ஃபிலிப் நேரி 1551ம் ஆண்டு, மே மாதம், 23ம் நாள், குருத்துவ
அருட்பொழிவு பெற்றார். அதற்குமுன் அவர் கீழ்நிலைப்
பட்டங்களையும், திருத்தொண்டர் பட்டத்தையும் பெற்றிருந்தார்.
குருவாகத் அருட்பொழிவு பெற்ற ஃபிலிப் நேரிக்கு இந்தியா சென்று
அங்கு கிறிஸ்தவ மறையை அறிவிக்க வேண்டும் என்னும் பேரவா
இருந்தது. ஆனால் அவருடைய நண்பர்கள் அவரிடம், கிறிஸ்தவத்தை
அறிவிக்க இந்தியா போக வேண்டிய தேவையில்லை, ரோம் நகரிலேயே
அவருக்கு போதுமான வேலை இருக்கிறது என்று கூறியதைத் தொடர்ந்து,
அவர் ரோமிலேயே தமது பணியைத் தொடர்ந்தார்.
1556ம் ஆண்டு, ஃபிலிப் நேரி ஒருசில பணித் தோழர்களோடு புனித
ஜெரோம் கோவிலில் ஒரு சிறு குழுவைத் தொடங்கினார். அதுவே பின்னர்
"இறைவேண்டல் குழு" (Congregation of the Oratory) என்னும்
பெயர் கொண்ட சபையாக மலர்ந்தது. தொடக்கத்தில் குழுவினர் மாலை
வேளைகளில் கூடிவந்து, இறைவேண்டல் செய்வதிலும், திருப்பாக்கள்
பாடுவதிலும், விவிலியம், திருச்சபைத் தந்தையர்களின் நூல்கள்
மற்றும் மறைச்சாட்சியர் வரலாறு ஆகிய ஏடுகளிலிருந்து
வாசிப்பதிலும் ஈடுபட்டனர். பின்னர் மறை சார்ந்த உரை
நிகழ்த்தப்படும். தொடர்ந்து மறை சார்ந்த பொருள்கள்
விவாதிக்கப்படும்.
இறைவேண்டல் குழுவினர் கூடியபோது விவிலியம் விளக்குகின்ற மீட்பு
வரலாற்றிலிருந்து சில காட்சிகள் இசையாக வழங்கப்பட்டன.
இதிலிருந்தே "Oratorio" என்னும் இசைப் பாணி தோன்றியது.
அக்குழுவினர் ரோம் நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று
அங்குள்ள கோவில்களில் ஒவ்வொரு மாலை வேளையிலும் மறையுரை
ஆற்றினர். இது முற்றிலும் புதியதொரு முயற்சியாக அமைந்தது.
ஃபிலிப் நேரி பல கோவில்களில் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார்.
இவ்வாறு, பல மக்களைக் கடவுள்பால் ஈர்த்து, அவர்களை மறை
நம்பிக்கையில் வளரச் செய்தார்.
பணி விரிவாக்கம் :
ரோமில் குடியேறியிருந்த ஃப்ளோரன்ஸ் நகர் மக்கள் 1564ல், தம்
மண்ணின் மைந்தரான ஃபிலிப் நேரி புதிதாகக் கட்டப்பட்ட தங்கள்
கோவிலாகிய "ஃப்ளோரன்ஸ் நகரத்தாரின் புனித யோவான்" (San
Giovanni dei Fiorentini) ஆலயம் வந்து பணிபுரிய வேண்டும் என்று
விரும்பி வேண்டினர். நேரி அவ்வேண்டுகோளை ஏற்கத் தயங்கினார்.
ஆனால், திருத்தந்தை நான்காம் பயசின் இசைவோடு அப்பணியை ஏற்றார்.
ஆயினும் தொடக்கத்தில் இருந்த புனித ஜெரோம் கோவிலில்தான்
அவருடைய சபை இருந்தது.
1574ம் ஆண்டு, ஃப்ளோரன்ஸ் மக்கள் தம் கோவிலை அடுத்து ஒரு
பெரும் நீளறை (Oratory) கட்டியெழுப்பி, அதை ஃபிலிப் நேரியின்
சபையின் பயன்பாட்டுக்கு அளித்தார்கள். எனவே சபையின் தலைமையிடம்
அங்கு மாற்றப்பட்டது. சபை வளர்ந்து, அதன் பணிகளும்
விரிவடைந்தன. எனவே புதியதொரு கோவில் தேவைப்பட்டது. சாந்தா
மரியா இன் வால்லிச்செல்லா என்னும் ஒரு சிறு கோவில் ஃபிலிப்
நேரிக்கு அளிக்கப்பட்டது. அக்கோவில் ரோம் நகரின் மையத்தில்
அமைந்தது.
ஆயினும் அக்கோவில் மிகச் சிறியதாக இருந்ததால் பெரிய அளவில் ஒரு
புதுக்கோவில் அவ்விடத்தில் கட்டப்பட்டது. அக்கோவிலின் பொறுப்பை
ஏற்றதும் 1575ம் ஆண்டு, ஜூலை மாதம், 15ம் நாள், திருத்தந்தை
கொடுத்த ஆணையேட்டின்படி, ஃபிலிப் நேரி "இறைவேண்டல் குழு"
(Congregation of the Oratory) என்னும் சபையை அதிகாரப்பூர்வமாக
அமைத்தார். அதன் உறுப்பினர் மறைமாவட்ட குருக்கள் ஆவர்.
புதிய கோவில் 1557ம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது. இறைவேண்டல்
குழுக் குருக்கள் ஃப்ளோரன்ஸ் கோவிலின் பொறுப்பைத் துறந்தனர்.
ஃபிலிப் நேரி 1583ம் ஆண்டு வரையிலும் புனித ஜெரோம் கோவிலிலேயே
இருந்தார். சபைத் தலைவரான அவர் சபையின் தலைமையிடத்தில் தங்கி
இருப்பதே முறை என்று திருத்தந்தை ஆணை பிறப்பித்த பின்னரே
ஃபிலிப் நேரி புதிய தலைமையிடம் சென்று தங்கினார். முதலில் அவர்
மூன்று ஆண்டு பணிப்பொறுப்பு ஏற்றார். பின்னர் சபையினர் 1587ம்
ஆண்டு, அவரை வாழ்நாள் முழுதும் தலைவராக இருக்கக்
கேட்டுக்கொண்டனர்.
ஆனால் ஃபிலிப் நேரி சபை முழுவதற்கும் தாமே தலைவராக
இருக்கவேண்டும் என்று கருதவில்லை. எனவே, ரோமுக்கு வெளியே
நிறுவப்பட்ட சபை இல்லங்கள் தன்னாட்சி கொண்டு செயல்படும் என்று
அறிவித்தார். அந்த இல்லங்கள் வேறு இல்லங்களை நிறுவினால்
அவையும் தனித்து செயல்படும் என்று வழிவகுத்தார். இந்த முறை
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் 1622ம் ஆண்டு
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அரசியல் செயல்பாடு :
ஃபிலிப் நேரி தம் காலத்தில் வழக்கமாக அரசியலில் நேரடியாக
ஈடுபடவில்லை. ஒருமுறை மட்டும் அவர் அரசியலில் தலையிட்டார்.
1593ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அது வெளிப்பட்டது.
ஃபிரான்ஸ் நாட்டு மன்னன் நான்காம் ஹென்றி (Henry IV of France
) கத்தோலிக்க சமயத்தைக் கைவிட்டு கால்வின் (Calvinism) சபையை
ஆதரிக்கத் தொடங்கினார். எனவே திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட்
(Pope Clement VIII) மன்னனை சபைநீக்கம் செய்தார். மன்னனின்
தூதுவரை ஏற்க மறுத்தார். மன்னன் தான் தவறுசெய்ததை ஏற்றுக்கொண்ட
பிறகும் திருத்தந்தை தண்டனையை அகற்ற முன்வரவில்லை. திருத்தந்தை
பிடிவாதமாக இருந்தால் மன்னன் மீண்டும் கத்தோலிக்க சபையை விட்டு
அகன்றுபோகும் இடர் இருந்ததை ஃபிலிப் நேரி உணர்ந்தார். அதோடு
ஃபிரான்ஸ் நாட்டில் உள்நாட்டுப் போர் எழும் ஆபத்தும் இருந்தது.
உடனே, ஃபிலிப் நேரி தம் குழுவைச் சார்ந்தவரும் திருத்தந்தைக்கு
ஆன்ம ஆலோசகராகவும் இருந்த பரோனியுஸ் என்பவரை அழைத்து,
திருத்தந்தை மன்னனுக்கு எதிரான தண்டனையை விலக்கிக்
கொள்ளாவிட்டால் அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்க வேண்டாம்
என்றும், ஆன்ம ஆலோசகர் பதவியைத் துறந்துவிட வேண்டும் என்றும்
பணித்தார். உடனடியாக திருத்தந்தை, கர்தினால்மார்களின் ஆலோசனைக்
குழுவுக்கும் எதிராகச் சென்று, பிலிப்பு நேரியின் கருத்தை
ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு தமக்கு சார்பாக ஃபிலிப் நேரி துணிச்சலோடு செயல்பட்டதை
மன்னன் ஹென்றி பல ஆண்டுகளுக்குப் பின்னரே அறிந்தார்.
சாதுரியமாகச் செயல்பட்ட ஃபிலிப் நேரிக்கு மன்னன் தமது
உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
தாம் உருவாக்கிய இறைவேண்டல் குழுவின் தலைமைப் பதவியை ஃபிலிப்
நேரி தாம் இறக்கும்வரை வகித்தார். அவருக்குப் பின் பரோனியுஸ்
தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
இறப்பும் வணக்கமும் :
ஃபிலிப் நேரி 1595ம் ஆண்டு, மே மாதம், 25ம் நாள், தமது
எண்பதாவது வயதில் இறந்தார். அன்று நற்கருணைத் திருநாள் (Feast
of Corpus Christi). நாள் முழுதும் அவர் ஒப்புரவு அருட்சாதனம்
வழங்கினார். தம்மைக் காணவந்தவர்களைப் பார்த்து உரையாடினார்.
ஏறக்குறைய நள்ளிரவில் ஃபிலிப் நேரிக்கு இரத்தக்கசிவு
ஏற்பட்டது. பரோனியஸ் (Baronius) இறுதி மன்றாட்டுகளை
செபித்தார். தம் குழு உறுப்பினரை ஆசிர்வதிக்க வேண்டும் என்று
பரோனியஸ் கேட்டார். பேசும் திறனை இழந்துவிட்ட ஃபிலிப் நேரி கை
சைகையால் சிலுவை அடையாளம் வரைந்து ஆசிர் வழங்கினார். அவரது
உயிர் பிரிந்தது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குரு, ஆரட்டரி போதகர் சபை நிறுவுனர் (Priest,
Founder of the folk preacher Aratorimus)
பிறப்பு
21 ஜூலை 1515
புளோரன்ஸ் (Florence), Italy
இறப்பு
25 மே 1595
உரோம்
முத்திபேறுபட்டம்: 11 மே 1615 திருத்தந்தை ஐந்தாம் பவுல்
புனிதர்பட்டம்: 12 மார்ச் 1622 திருத்தந்தை 15ஆம் கிரகோரி
இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் பிறந்த இவர், தனது 26 ஆம்
வயதில் வணிகத் தொழிலைவிட்டுவிட்டு, தமது ஆன்மீக நலனைக்
குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் உரோம்
நகர் சென்றார். அங்கு இவர் வேதக்கலை, தத்துவக்கலையைப் பயின்றார்.
அவற்றோடு ஜெபத்திலும், தவ முயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
அப்போது உரோம் நகரில் 12 மைல் சுற்றளவில் இருந்த புகழ்மிக்க 7
தேவாலயங்களையும், தினமும் மாலை பொழுதில் நடந்தே சென்று சந்திக்கும்
முயற்சியில் ஈடுபட்டு, இரவில் புனித செபஸ்தியாரின் புதைக்குழி
வளாகத்தில் தங்கினார். அதோடு நலிவுற்ற, ஏழை மக்களின் நலன்களை
கருதி மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளை சந்தித்தார். அவர்
தெரு வழியாக நடந்துசெல்லும்போது, ஆன்மீகத்தில் அக்கறையற்றவர்களை
இனங்கண்டு, தமது திறமையான பேச்சியினாலும், அணுகுமுறைகளினாலும்
அவர்களை இறைவன் பால் ஈர்த்து மனம்மாற செய்தார்.
பிறகு 1548 ஆம் ஆண்டு தமது குறிக்கோளை ஏற்றுக்கொண்டவர்களை ஒருங்கிணைத்து,
திவ்விய நற்கருணை ஆராதனை வைத்து, பல பக்திமுயற்சிகளை பரப்பி மக்களை
இறைவன்பால் ஈர்த்ததோடு, இறைவனைப்பற்றி ஊர்களில் எடுத்துரைக்கவும்
வழிவகுத்தார். இவ்வாறு இப்பணியில் 10 ஆண்டுகளை கழித்தார். அப்போது
இவரின் ஆன்ம குரு, இவரிடம் குருத்துவதை நாட பணித்தார். பின்னர்
இவர் குருமடத்தில் சேர்ந்து, குருவானார். குருப்பட்டம் பெற்றபின்
33 ஆண்டுகள் ஆரட்டரி(Aratery) என்று அழைக்கப்பட்ட ஜெபக்குழுவை
உருவாக்கி, பல குருக்களின் துணையோடு அச்செபக்குழுவை தொடர்ந்து
நடத்தினார். இதன்வழியாக ஏராளமான ஞானப்பலன் கிடைத்ததை கண்டு அளவில்லா
மகிழ்ச்சி அடைந்தார். அதன்பிறகு இக்குழுவை உயர்த்தி "ஆரட்டோரியன்ஸ்
செபக்குழுவினர்" என்று பெயரிட்டு, அக்குழுவை தொடர்ந்து வழிநடத்தினார்.
இன்றுவரை இக்குழு செயல்பட்டு வருகின்றது. நாள்தோறும் தொழிலாளர்
பலர் இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெறவும், ஆன்மீக ஆலோசனை பெறவும்
வந்த வண்ணமாய் இருந்தனர். பல குருக்களும், கர்தினால்களும் இவரது
ஆலோசனையை நாடி வந்தனர். இவர் எப்போது திருப்பலி
நிறைவேற்றினாலும், தன்னை மறந்து பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார்.
இளைஞர்கள் பலரை ஆன்மீக வாழ்வுக்குக்கொண்டு சேர்த்தார். எப்போதும்
மகிழ்ச்சியாக இருக்கவும், ஆழமான இறை அனுபவம் பெறவும்,
தாழ்ச்சி, ஒறுத்தல், ஆசைகளை கட்டுப்படுத்துதல், அடிக்கடி ஒப்புரவு
அருட்சாதனத்தை பெறுதல் ஆகியவற்றால் தம்மிடம் வந்தவர்களுக்கு பயிற்சி
அளித்தார்.
இளைஞர் ஒருவர் திவ்விய நன்மை உட்கொண்ட உடனே தம் அலுவலகத்திற்கு
விரைந்து ஓடி போய்விடுவார். பூசையின் இறுதிவரை இருக்கமாட்டார்.
ஒருமுறை இவரது குற்றத்தை உணர்த்தும்முறையில், பூசை உதவி
செய்யும் இருவரிடம் எரியும் மெழுகுவர்த்திகளைக் கொடுத்து, அந்த
இளைஞரின் பின்னால் ஓடுங்கள் என்றார். இளைஞரும் தன் தவற்றை உணர்ந்து
அதை திருத்திக்கொண்டார். சிலருக்கு மற்றவர்களின் நற்பெயரைக்
கெடுக்கும் பழக்கம் இருந்ததைக் கண்டு, அவர்களைத் திருத்தும் பணியில்
ஈடுபட்டார். இன்னொரு முறை, பிறரைப் பழி தூற்றும் ஒரு பெண்ணிடம்
ஒரு வாத்தின் இறகுகளைப் பறிக்க சொன்னார். பறித்து முடித்தபின்
அவற்றைக் காற்றில் பறக்கவிட சொன்னார். இதன்பின் அப்பெண்ணிடம்
இன்னொன்று செய்யுமாறு கேட்டார். பறித்த இறகுகளை ஒன்று சேர்த்து
அவற்றைப் பறக்கவிட சொன்னார். பின்னர் பறக்கவிட்ட இறகுகளை ஒன்று
சேர்த்து, தன்னிடம் கொண்டுவரச்சொன்னார். அப்போது அப்பெண் அவரிடம்,
அது என்னால் முடியாதே என்றார். "அப்படித்தான் நீ மற்றவர்களின்
பெயரைக் கெடுத்தபின் அதை நீ சரிப்படுத்த முடியாமல் என்பதை
புரிந்துக்கொள், திருத்திக்கொள்" என்று கூறினார். அப்பெண்ணும்
தன் தவற்றை உணர்ந்து திருந்தினார்.
இவர் உரோம் நகரின் இரண்டாம் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகின்றார்.
இவரது பெயருக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருந்தது.
நாள்தோறும் பிலிப்பு, வைகறையில் தாழ்ச்சியுடன் எழுப்பிய மன்றாட்டு,
ஆண்டவரே பிலிப்பை உமது அருட்கரம் கொண்டு நடத்தும். இல்லாவிட்டால்
பிலிப்பு உம்மைக் காட்டிக்கொடுத்து விடுவான், என்று நாள்தோறும்
மறவாமல் ஜெபிப்பார்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல். |
|
|