Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஆறாம் பவுல் ✠ (St. Paul VI)
   
நினைவுத் திருநாள் : (மே / Mai- 29)

✠ புனிதர் ஆறாம் பவுல் ✠ (St. Paul VI)


262ம் திருத்தந்தை:  (262nd Pope)

பிறப்பு: செப்டம்பர் 26, 1897
கொன்சேசியோ, ப்ரேசியா, இத்தாலி அரசு
(Concesio, Brescia, Kingdom of Italy)

இறப்பு: ஆகஸ்ட் 6, 1978 (வயது 80)
கன்டோல்ஃபோ கோட்டை, இத்தாலி
(Castel Gandolfo, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

திருப்பட்டங்கள்:

குருத்துவத் அருட்பொழிவு (Ordination) : மே 29, 1920
ஜாச்சிந்தோ காஜ்ஜியா (Giacinto Gaggia)

ஆயர்நிலை திருப்பொழிவு (Consecration): டிசம்பர் 12, 1954
யூஜீன் டிஸ்செரன்ட் (Eugne Tisserant)

கர்தினாலாக உயர்த்தப்பட்டது: டிசம்பர் 15, 1958
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
(Pope Saint John XXIII)

முத்திப்பேறு பட்டம்: அக்டோபர் 19, 2014
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருவிழா: மே 29

பாதுகாவல்:
மிலன் உயர்மறைமாவட்டம் (Archdiocese of Milan)
ஆறாம் பால் போண்டிஃபிகல் இன்ஸ்டிடியூட் (Paul VI Pontifical Institute)
இரண்டாம் வத்திக்கான் கவுன்சில் (Second Vatican Council)
ப்ரெஸ்ஸியா மறைமாவட்டம் (Diocese of Brescia)
கான்செஸியோ (Concesio)
மெஜந்தா (Magenta)
பதர்னோ டுக்னானோ (Paderno Dugnano)

திருத்தந்தை ஆறாம் பவுல், கி.பி. 1963ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரையான காலத்தின் கத்தோலிக்க திருச்சபையின் 262ம் திருத்தந்தையும், ரோம் ஆயரும் ஆவார். "ஜியோவன்னி பட்டிஸ்டா என்ரிக்கோ அன்டோனியோ மரிய மோன்டினி" (Giovanni Battista Enrico Antonio Maria Montini) என்னும் நீண்ட திருமுழுக்கு பெயர் கொண்ட இவர், 1962ம் ஆண்டு, கூட்டியிருந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை (Second Vatican Council) தொடர்ந்து நடத்தி நிறைவுக்குக் கொணர்ந்தார். மரபுவழி கிறிஸ்தவ சபையோடும், எதிர் திருச்சபைகளோடும் கத்தோலிக்க திருச்சபை நல்லுறவுகளை வளர்க்க இவர் பாடுபட்டார். இக்குறிக்கோளை அடைய இவர் பல திருச்சபைகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதோடு அச்சபைகளோடு பல ஒப்பந்தங்களையும் செய்தார்.

2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 14ம் நாள் அன்று, வத்திக்கான் நகரின் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள், இவருக்கு புனிதர் பட்டம் அளித்தார். கடந்த 2019ம் ஆண்டுவரை, இவரின் நினைவுத் திருவிழா நாள், இவரின் பிறந்த நாளான செப்டம்பர் 26ம் தேதி நினைவுகூரப்பட்டது. 2020ம் ஆண்டுமுதல், இவரது நினைவுத் திருநாள் மே மாதம் 29ம் நாளன்று நினைவுகூரப்படும்.

திருத்தந்தை ஆவார் என்னும் எதிர்பார்ப்பு:
குருத்துவப் பட்டம் பெற்றதும் தந்தை மோன்டினி" (Montini) வத்திக்கான் நகரத்தின் வெளியுறவுத் துறையில் 1922ம் ஆண்டு முதல் 1954ம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது மோன்டினியும், (Domenico Tardini) டோமினிக்கோ டர்டினி என்னும் மற்றொரு குருவும் அன்று ஆட்சியிலிருந்த திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் என்பவருக்கு மிக நெருக்கமான உடனுழைப்பாளர்களாகக் கருதப்பட்டார்கள். பன்னிரண்டாம் பயஸ், மோன்டினியை மிலான் நகரத்தின் பேராயராக உயர்த்தினார். வழக்கமாக, மிலான் உயர் மறைமாவட்டத்தின் ஆயர் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படுவதுண்டு. ஆனால் பன்னிரண்டாம் பயசின் ஆட்சிக்காலம் முழுவதும் மோன்டினி கர்தினாலாக நியமிக்கப்படவில்லை. திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இறந்தபின்னர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் யோவான் பேராயர் மோன்டினியை 1958ல் கர்தினால் நிலைக்கு உயர்த்தினார். 1962ல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் இறந்ததும் கர்தினால் மோன்டினி அவருக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் எதிர்பார்ப்பு வலுவாக இருந்தது.

பவுல் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தல்:
கர்தினால் மோன்டினி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் "பவுல்" என்னும் பெயரைத் தெரிந்துகொண்டார். கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் அயராது உழைத்த புனிதர் பவுலைப் போல, தாமும் கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க அழைக்கப்பட்டதாகப் புதிய திருத்தந்தை உணர்ந்ததால் "பவுல்" என்னும் பெயரைத் தமதாக்கிக் கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே அவர் எடுத்த முக்கியமான முடிவு, அவரது முன்னோடியாகிய இருபத்திமூன்றாம் யோவான் தொடங்கியிருந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தாம் தொடர்ந்து நடத்தப்போவதாக அறிவித்ததுதான்.

1965ம் ஆண்டு, பொதுச்சங்கம் நிறைவுற்றதும் அச்சங்கம் எடுத்த முடிவுகளையும், பரிந்துரைத்த கருத்துகளையும், செயல்படுத்தும் பெரும் பொறுப்பு ஆறாம் பவுல் கைகளில் சேர்ந்தது. பொதுச்சங்கம் முன்மொழிந்த சீர்திருத்தங்கள் யாவை என்று வரையறுப்பதில் கருத்துவேறுபாடுகள் எழுந்த பின்னணியில் ஆறாம் பவுல் தீவிரப் போக்குகளைத் தவிர்த்து நடுநிலை நின்று செயல்பட்டார்.

அன்னை மரியாள் மீது பக்தி:
ஆறாம் பவுல், அன்னை மரியாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலங்களை அவர் சென்று சந்தித்து, அங்கு பல முறை உரையாற்றினார். அன்னை மரியாளைப் பற்றிச் சுற்றுமடல்கள் எழுதினார். அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன், மிலான் நகரின் ஆயராக இருந்த புனித அம்புரோசு என்பவரைப் போல, ஆறாம் பவுலும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது மரியாளைத் "திருச்சபையின் தாய்" என்னும் சிறப்புப் பெயரால் அழைத்து பெருமைப்படுத்தினார்.

உலக மக்களோடு உரையாடல்:
ஆறாம் பவுல் உலக மக்களோடும், கத்தோலிக்கரல்லாத பிற கிறிஸ்தவர்களோடும், பிற சமயத்தவரோடும், ஏன், கடவுள் நம்பிக்கையற்றவர்களோடு கூட உரையாடலில் ஈடுபட முன்வந்தார். அவருடைய அணுகுமுறை எந்த மனிதரையும் விலக்கிவைக்கவில்லை. துன்பத்தில் உழல்கின்ற மனித இனத்திற்குப் பணிசெய்யும் எளிய ஊழியனாகக் கடவுள் தம்மைத் தேர்ந்தெடுத்ததாக அவர் உணர்ந்தார். எனவே "மூன்றாம் உலகம்" (Third World) என்று அழைக்கப்பட்ட ஏழை நாடுகளின் வளர்ச்சிக்குச் செல்வம் படைத்த நாடுகள் மனமுவந்து உதவிட வேண்டும் என்று அவர் அடிக்கடி கோரிக்கை விடுத்தார். செயற்கை முறைகளைப் பயன்படுத்தி குடும்பக் கட்டுப்பாடு செய்வது அறநெறிக்கு மாறானது என்று திருத்தந்தை 1968ம் ஆண்டு, தாம் எழுதிய "மானிட உயிர்" (Humanae Vitae) என்னும் சுற்றுமடலில் போதித்தார். அது மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. ஆயினும் கிழக்கு ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் அப்போதனைக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.

உலக நாடுகளில் நிகழ்ந்த பெரும் மாற்றங்கள்:
ஆறாம் பவுல் திருத்தந்தையாகப் பணியாற்றிய காலம் அரசியல், கலாச்சாரம், சமூக உறவுகள் ஆகிய பல துறைகளிலும் பெரிய மாற்றங்களைச் சந்தித்த காலம் ஆகும். 1960களில் வெடித்த மாணவர் போராட்டம், வியட்நாம் போருக்கு எதிர்ப்பு, மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட போராட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிற்கு நடுவே கத்தோலிக்க திருச்சபையின் போதனையை எடுத்துரைத்து, மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஆறாம் பவுல் ஆற்ற வேண்டியிருந்தது.

மரணம்:
திருத்தந்தை ஆறாம் பவுல் 1978ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 6ம் நாள், இயேசு கிறிஸ்து தோற்றம் மாறிய திருவிழாவன்று மரித்தார்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா