Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் பங்க்ராஸ் ✠(St. Pancras of Rome)
   
நினைவுத் திருநாள் : (மே/ May 12)
✠ புனிதர் பங்க்ராஸ் ✠(St. Pancras of Rome)

* மறைசாட்சி : (Martyr)

*பிறப்பு : கி.பி. 289
  சின்னாடா (Synnada)

*இறப்பு : மே 12, 303-304 (வயது 14)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

*முக்கிய திருத்தலம் :
சேன் பங்க்ராசியோ, ரோம், இத்தாலி
(San Pancrazio, Rome, Italy)

*பாதுகாவல் :
குழந்தைகள், வேலைகள், ஆரோக்கியம் மற்றும் தசைப்பிடிப்பு, பொய் சாட்சிகள், தலைவலி மற்றும் பொய்யுரை ஆகியவற்றுக்கு எதிராக

*நினைவுத் திருநாள் : மே 12

புனிதர் பங்க்ராஸ், கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மனம் மாறிய ரோம பிரஜையாவர். அவர், தாம் கொண்ட கிறிஸ்தவ விசுவாசத்திற்காக தமது பதினான்கு வயதிலேயே தலை துண்டிக்கப்பட்டு மறை சாட்சியாக மரித்தார்.

புனிதர் பங்க்ராஸ், "சின்னாடா" (Synnada) எனும் நகரின் அருகே ரோம பிரஜைகளான பெற்றோருக்கு பிறந்தவர் ஆவார். இவரது தாயார் "சிரியாடா" (Cyriada) இவர் பிறந்தபோதே மரித்துப் போனார். இவரது தந்தை "க்ளயோனியஸ்" (Cleonius) இவருக்கு எட்டு வயதாகையில் மரித்தார். பங்க்ராஸின் மாமா "டயோனிசியஸ்" (Dionysius) இவரை வளர்த்தார்.

இருவரும் ரோமிலுள்ள "செலியியன்" (Caelian Hill) மலையில் வசிப்பதற்காக புலம்பெயர்ந்தனர். கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறிய இருவரும் விசுவாசம் மிக்கவர்களாக வாழ்ந்தனர். பங்க்ராஸ் தமது விசுவாசத்தில் தீவிர வைராக்கியம் கொண்டிருந்தார்.

ரோமப் பேரரசன் "டயக்ளீசியன்" (Emperor Diocletian) காலத்தில் சுமார் கி.பி. 303ம் வருடம் கிறிஸ்தவர்களை துன்புறுத்த தொடங்கினர். பங்க்ராஸும் அவரது மாமனும் கிறிஸ்தவ விசுவாசிகள் என்பதை அறிந்த அதிகாரிகள், இருவரையும் கொண்டுவந்து, ரோமானிய கடவுளர்களுக்கு தியாகம் ஒப்புவிக்க வற்புறுத்தினர். அவர்களின் விசுவாசம் கண்ட பேரரசன் "டயக்ளீசியன்", அவர்களுக்கு தேவையான செல்வமும், வசதிகளும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தான். ஆனால், தமது விசுவாசத்தில் உறுதியாய் இருந்த அவர்களிருவரும் தீர்க்கமாக மறுத்துவிடவே, ஆத்திரமுற்ற பேரரசன், அவர்களிருவரையும் தலையை வெட்டி கொலை செய்ய உத்தரவிட்டான்.

கிறிஸ்துவின் மீது மிகுந்த பக்திகொண்ட பங்க்ராஸ், தனது 14ம் வயதிலேயே கொடிய சித்ரவதைக்கும், சாவுக்கும் உள்ளானார்.

ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தே பங்க்ராசின் பக்தி இருந்து வருகின்றது. இவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட பேராலயம் (Basilica of Saint Pancras), திருத்தந்தை சைமச்சஸ் (Pope Symmachus) அவர்களால், (498-514) பங்க்ராஸ் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் கட்டப்பட்டது. இளைஞர் பங்க்ராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப் பெற்றவரெனில், லண்டனில் புனித பங்க்ராஸ் பெயரில் தொடர்வண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனிதர் பெரிய கிரகோரி (Pope Gregory the Great) மறைபரப்பு பணிக்கென இங்கிலாந்து சென்றபோது, இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிகளுக்கு துறவு மடம் கட்டினார். அப்போது இச்சபையை சேர்ந்த துறவியும் ஆயருமான அகஸ்டின் (Augustine) பதவிக்கு வந்தார். அப்போது அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனிதர் பங்க்ராஸ் பெயரை சூட்டினார்.

கர்தினால் வைஸ்மன் "பபியோலா" என்ற புனைப்பெயரில் எழுதிய பங்க்ராஸின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதினார். பங்க்ராஸின் வாழ்க்கை வரலாற்றில் நமக்கு கிடைக்கும் தகவல் மிக மிக குறைந்ததே. ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி, அன்று முதல் இன்று வரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

=================================================================================
தூய பங்கிராஸ் (மே 12)

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவா 12: 24)

வாழ்க்கை வரலாற

பங்கிராஸ், பிரிஜியா நாட்டில் (தற்போதைய துருக்கி) மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். இவர் பிறந்த ஒருசில மாதங்களிலே இவருடைய பெற்றோர் இறந்து போனார்கள். இதனால் இவர் தனது மாமாவின் வளர்ப்பிலே வளர்ந்து வந்தார்.

ஒரு சமயம் வேலை விசயமாக பங்கிராசின் மாமாவிற்கு உரோமைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை பெறப்பட்டது. எனவே அவர் பங்கிராசை தனியாக விட்டுவிட விரும்பாமல், அவரை தன்னோடு கூட்டிக்கொண்டு உரோமை நகருக்குச் சென்றார். அங்கு சென்ற சில நாட்களிலேயே இருவரும் இயேசுவின் வார்த்தையால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள்.

இதற்கிடையில் உரோமையை ஆண்டுவந்த டையோகிளசியன் என்ற மன்னன் கிறிஸ்தவர்கள் தனக்கு எதிராகச் செயல்படுகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு அவர்களை கொலை செய்ய ஆணையிட்டான். அதன்பேரில் வெறும் 14 வயதே ஆன பங்கிராசும் அவருடைய மாமாவும் மறைசாட்சியாக உயிர் துறந்தார்கள்.

பங்கிராசின் இறப்புக்குப் பிறகு அவருடைய புகழ் எங்கும் பரவியது. தூய அகுஸ்தினார் தான் கட்டி எழுப்பிய முதல் ஆலயத்திற்கு பங்கிராசின் பெயரையே சூட்டினார். பங்கிராசை சிறப்பிக்கும் வண்ணமாக இங்கிலாந்தில் உள்ள லண்டனில் இருக்கக்கூடிய ஓர் இரயில் நிலையத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. மேலும் 508 ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை பங்கிராசின் கல்லறையில் ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். அது இன்றளவும் புகழ்பெற்ற ஒரு திருத்தலமாக விளங்கி வருகின்றது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய பங்கிராசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம்

தூய பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் தோன்றுகின்ற எண்ணமெல்லாம், பங்கிராஸ் வெறும் 14 வயதிலே மறைசாட்சியாக உயிர்துறந்திருக்கின்றாரே, அவரைப் போன்று நம்மால் உயிர்துறந்து ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர முடியுமா? என்பதுதான்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சொல்வார், "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கின்ற எவரும் வாழ்வடைவார் (மத் 16: 24,25). ஆம், இயேசுவுக்காக உயிர் துறக்கின்ற யாரும் அதைக் காத்துக்கொள்வார் என்பதுதான் உண்மை. தூய பங்கிராஸ் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரைத் தந்தார், அதனால் நம்முடைய மனங்களில் நிறைந்திருக்கின்றார். நாமும் இயேசுவுக்காக நம்முடைய உயிரை இழக்கத் துணிந்தோம் என்றால் என்றும் வாழ்வடைவோம் என்பது உறுதி.

இந்த இடத்தில் பிரேசில் நாட்டில் மறைப்பணி செய்து, கிறிஸ்துவுக்காக உயிர் துறந்த ஆர்தர் டிலீ (Arthur Tylee) என்பவருடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இணைத்துக் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

அவர் பிரேசிலுக்கு மறைப்பணி செய்யப் புறப்பட்டபோது அவருடைய உறவினர் ஒருவர் அவரிடம், "நீங்கள் தயவு செய்து பிரேசில் நாட்டிற்கு மறைப்பணி செய்யப் போகவேண்டாம், அப்படிச் சென்றால் அங்கு உங்களுடைய உயிருக்கு உத்திரவாதம் இல்லை" என்று சொன்னார். அதற்கு ஆர்தர் டிலி அவரிடம், "கிறிஸ்துவுக்காக உயிர் துறப்பதை நான் பெருமையாகக் கருதுகின்றேன். ஒருவேளை நான் அங்கு சென்று பணியாற்றுகின்றபோது அங்கிருப்பவர்கள் என்னுடைய உயிரை எடுத்தால், அதை நான் இறைத் திருவுளமாக எடுத்துக்கொள்வேன். அப்படி இல்லையென்றால் நான் என் வாழ்நாள் முழுக்க இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வேன்" என்றார்.

அவர் இவ்வாறு சொல்லிவிட்டு பிரேசில் நாட்டிற்குச் சென்று மறைப்பணி ஆற்றி வந்தார். ஒருசில ஆண்டுகள் கழித்து அங்கிருந்த கயவர்களால் அவர் கொலை செய்யப்பட்டார்; இயேசுவுக்கு சான்று பகர்ந்தார்.

இயேசுவுக்கு தன்னுடைய உயிரைத் தருவது மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயம் என்று சொல்லி, அதன்படியே உயிர் துறந்த ஆர்தர் டிலி நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். தூய பங்கிராசும் அப்படித்தான் கிறிஸ்துவுக்காக உயிர்துறப்பதை பெருமையாக கருதினார்.

ஆகவே, தூய பங்கிராசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா