✠ புனிதர் மத்தியா ✠(St. Maththia) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(மே/ May 14) |
✠ புனிதர் மத்தியா ✠(St. Maththia)
*திருத்தூதர் : (Apostle)
*பிறப்பு : 1ம் நூற்றாண்டு
யூதேயா, ரோம பேரரசு
(Judaea, Roman Empire)
*இறப்பு : கி.பி. சுமார் 80
யெரூசலம், யூதேயா அல்லது கோல்ச்சிஸ் (தற்போதைய ஜார்ஜியா)
(Jerusalem, Judaea or in Colchis (Modern-day Georgia)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனிய திருச்சபை
(Lutheran Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்
(Oriental Orthodox Churches)
*நினைவுத் திருநாள் :
கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கன் ஒன்றியம் : மே 14
கிழக்கு மரபுவழி திருச்சபை : ஆகஸ்ட் 9
*சித்தரிக்கப்படும் வகை : கோடரி
*பாதுகாவல் :
குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்; தச்சர்கள்; மொன்டானா;
பெரியம்மை; தையற்கலைஞர்
புனித மத்தியா, அப்போஸ்தலர் பணிகளின்படி (Acts of the Apostles),
யூதாசின் (Judas Iscariot) இடத்தை நிரப்ப திருத்தூதர்களால்
தேர்வு செய்யப்பட்டவர். இவரின் தேர்வு இயேசுவால் நேரடியாக நடக்காததாலும்,
தூய ஆவியின் வருகைக்கு முன்பே நிகழ்ந்ததாலும் முக்கியத்துவம்
பெறுகின்றது.
*வரலாறு :
ஒத்தமை நற்செய்தி நூல்களில் உள்ள இயேசுவின் சீடர்களின் பட்டியலில்
மத்தியாவின் பெயர் இல்லை. திருத்தூதர் பணிகள், முதலாம் அதிகாரத்தின்
படி, இயேசுவின் விண்ணேற்பை அடுத்து ஒருநாள், ஏறக்குறைய
நூற்றிருபது பேர் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது யூதாசுவின்
இடத்தை நிரப்ப இருவரை அங்கிருந்தவர்கள் முன்னிருத்தினார்கள்.
ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா மற்றவர் மத்தியா.
இறைவனிடம் வேண்டிக்கொண்டபின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள்.
சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும்
சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
ஆண்டவர் விண்ணகம் சென்றபின், பேதுரு ஒருநாள் சீடர்கள் மத்தியில்
எழுந்து நின்றார். இறந்துபோன யூதாசுக்கு பதிலாக நாம் ஒருவரை
தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். அப்போஸ்தலராக தேர்ந்தேடுக்கப்படுவர்
தொடக்கமுதல் இயேசுவோடு இருந்தவராகவும், அவரின் விண்ணேற்பை
நேரில் பார்த்தவராகவும், அவரைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும்
இருக்க வேண்டும் என்று கூறினார். அதனால் அனைவரும் கூடிவந்து ஒரு
மனதாக ஆண்டவரை நோக்கி செபித்தனர். ஆண்டவரே, மக்களின் மனங்களை
அறிபவரே, உமக்குரிய சீடர் ஒருவரை எங்களுக்கு காண்பியும் என்று
மன்றாடினர்.
அப்போது கூட்டத்திலிருந்த பர்சபா என்பவரையும், மத்தியா என்பவரையும்
தேர்ந்தெடுத்தனர். பர்சபாவுக்கு "யுஸ்து" என்னும் மற்றொரு பெயரும்
இருந்தது. சீடர்கள் இருவரின் பெயரையும் தனித்தனி சீட்டுகளில்
எழுதி குலுக்கினர். அப்போது சீட்டு மத்தியாவின் பெயருக்கு
விழுந்தது. உடனே சீடர்கள் மத்தியாவை ஆண்டவரின் பெயரால் தங்களோடு
சேர்த்துக்கொண்டனர்.
(தி.பணி 1:15-26)
அதன்பிறகு மத்தியா, யூதேயா மற்றும் எத்தியோப்பியா நாடெங்கும்
சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் இயேசுவின் நற்செய்தியை
அறிவிக்கும்போது, யெருசலேம் நகரில் கற்களால் அடிக்கப்பட்டும்,
தலைவெட்டப்பட்டும், மறைசாட்சியாக இறந்தார் என கூறப்படுகிறது.
"பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன்" (Emperor Constantine I) அவர்களின்
தாயாரும், "கான்ஸ்டன்டினோபிள் பேரரசியுமான ஹெலெனா" (Empress
Helena of Constantinople) அவர்களால் மத்தியாவின் புனித பண்டங்கள்
கொண்டு வரப்பட்டு, ஜெர்மனி நாட்டின் "ட்ரையர்" (Trier) நகரில்,
பழமைவாய்ந்த புனித மத்தியாஸ் (Abbey of St. Matthias) துறவற
மடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
================================================================================
தூய மத்தியாஸ் (மே 14)
நிகழ்வு
கத்தோலிக்கத் திருச்சபையின் மரபுப்படி, ஆண்டவர் இயேசுவின்
விண்ணேற்றத்திற்குப் பிறகு திருத்தூதரான தூய மத்தியாஸ்
யூதேயாவிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் நற்செய்தி அறிவித்தபோது
கயவர்கள் அவரை வாளால் வெட்டிக் கொலைசெய்தார்கள். அவருடைய உடலானது
எருசலேம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. தூய ஹெலனது ஆட்சிக்காலத்தில்
மத்தியாசின் உடல் உரோமை நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வாழ்க்கை வரலாறு
இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு திருதூதர்கள் அனைவரும் ஒன்றாகக்
கூடி, யூதாஸ் இஸ்காரியோத்துவினால் திருத்தூதர்கள் அணியில் ஏற்பட்ட
வெற்றிடத்தை நிரப்ப முயன்றார்கள். அப்போது பேதுரு அவர்களுக்கு
முன்பாக எழுந்து நின்று, பேசத் தொடங்கினார், "ஆகையால் ஆண்டவர்
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக விளங்க, அவர் நம்மிடையே
செயல்பட்ட காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள
நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக்
கொடுத்துவந்த காலம் முதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து
விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்"
(திப 1:21-26)
இங்கே பேதுரு பனிரெண்டாவது திருத்தூதராக தேர்தெடுக்கப்படவேண்டியவர்
எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்கவேண்டும் என விளக்கிச்
சொல்கிறார். ஒன்று அவர் இயேசுவின் திருமுழுக்கிலிருந்து, அவர்
விண்ணேற்றம் அடைந்தது வரை உடன் இருந்திருக்கவேண்டும், இரண்டாவது
அவர் இயேசுவின் உயிர்ப்பை கண்ணால் கண்டிருக்கவேண்டும். இத்தகைய
தகுதிகளைக் கொண்ட இருவரை சீடர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவர்
யோசேப்பு எனப்படும் பர்சபா. இன்னொருவர் மத்தியாஸ். பின்பு சீடர்கள்
அனைவரும் ஒருமனதாக இறைவனிடம் வேண்டிவிட்டு, இருவருடைய பெயரையும்
சீட்டுக் குலுக்கிப் போடுகிறார்கள். சீட்டு மத்தியாசின் பெயருக்கே
விழுகிறது. இவ்வாறு மத்தியாஸ் திருதூதர்கள் அணியில் இடம்பெறுகிறார்.
மத்தியாசைக் குறித்த செய்திகள் விவிலியத்திலும் சரி, திருச்சபை
வரலாற்றிலும் சரி அவ்வளவாக காணக்கிடைக்கவில்லை. அலெக்ஸ்சாண்ட்ரியா
நகரைச் சேர்ந்த தூய கிளெமென்ட், "மத்தியாஸ் ஆண்டவர் இயேசு பணித்தளத்திற்கு
அனுப்பிய எழுபத்தி இரண்டு சீடர்களில் ஒருவர் எனவும், அவர் உடல்
ஒருத்தல்களை அதிகமாகச் செய்வார்" எனக் குறிப்பிடுவார்.
இவருடைய நற்செய்தி அறிவிப்புப் பணியைக் குறித்தும் சரியான
செய்தி இல்லை. ஒருசிலர் இவர் கப்பதோசியாவிற்கு சென்று நற்செய்தி
அறிவித்ததாகவும், அங்கே உள்ள கோல்சிஸ் என்ற இடத்தில் கொல்லப்பட்டதாகும்
சொல்வர். இன்னும் ஒருசிலர் யூதேயாவிலும் அதன் சுற்றுப்புறம் எங்கிலும்
நற்செய்தி அறிவித்தார் என்றும் சொல்வர். எப்படி இருந்தாலும்
அவர் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரைத் துறந்தார் என்பது
உண்மை. மத்தியாஸ் தையல்காரர்கள், குடிப்பழக்கத்திலிருந்து மனம்மாறியவர்கள்,
தச்சு வேலை செய்பவர்கள் ஆகியோருக்குப் பாதுகாவலாராக இருக்கின்றார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
திருத்தூதரான தூய மத்தியாசின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல
நாளில் அவருடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்
என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. இக்கட்டான வேளைகளில் இறையுதவியை நாடவேண்டும்
பழைய பக்திப் பாடலான "நீயே எமது ஒளி" என்பதில் வரக்கூடிய வரிகள்
"நான்கு திசையும் பாதைகள், சந்திக்கின்ற வேலைகள், நன்மை என்ன
தீமை என்ன அறியாத கோலங்கள்". வாழ்க்கையில் பல நேரங்களில் நாம்
எதைச் செய்யவேண்டும், எந்த வழியைத் தேர்ந்துகொள்ளவேண்டும் என்ற
குழம்பம் வரலாம். அத்தகைய தருணங்களில் நாம் நம்முடைய மனத்தில்
என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வோம் என நினைத்துக்கொண்டு தவறான வழியைத்
தேர்ந்துகொள்கிறோம். ஆனால் இன்றைய விழா நமக்கு உணர்த்தும்
செய்தி இக்கட்டான வேளைகளில் இறையுதவியை நாடவேண்டும் என்பதாகும்.
பனிரெண்டாவது திருத்தூதரைத் தேர்ந்தெடுக்கும் குழப்பம் ஏற்பட்டபோது
சீடர்கள் ஒருமனதாக இறைவனிடம் வேண்டிவிட்டு சீட்டுக் குலுக்கிப்
போடுகிறார்கள். இறைவன் அவர்களுக்கு சரியானவரை தேர்ந்தெடுத்துத்
தருகின்றார். ஆகவே, நம்முடைய வாழ்க்கையில் நாம் இக்கட்டான,
முடிவெடுக்கவேண்டிய குழப்பமான சூழலில் மாட்டிக்கொள்ளும்போது இறையுதவியை
நாடுவது மிகவும் சிறப்பாகும்.
2. ஆண்டவர் இயேசுவுக்காக எதையும் செய்யத்
துணிதல்
தூய மத்தியாஸ் ஆண்டவர் இயேசுவுக்காக எதையும் செய்யத்
துணிந்தார், ஏன் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார் என்று
சொன்னால் அது மிகையாது. அவர் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரையும்
இழக்கத் துணிந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப்
போன்று ஆண்டவர் இயேசுவுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றோமா?
என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஒரு பழைய உரோமை நாணயத்தில் காளைமாடு ஒன்று பீடத்தையும், ஏர்தனையும்
(Plow) பார்ப்பது போன்று இருக்கின்றது. அதற்குக் கீழே "Ready
for Either" என்ற வசனம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவ்வசனம் உணர்த்தும்
செய்தி இதுதான்: நாம் இயேசுவுக்காக பலியாகவும், சுமைகளை தாங்குவதற்கும்
தயாராக இருக்கவேண்டும். நாம் இயேசுவுக்காக எதற்கும் தயாராக இருக்கின்றோமா?
என சிந்தித்துப் பாப்போம். தூய மத்தியாஸ் அப்படி எதற்கு தயாராக
இருந்தார். நாமும் எதற்கும் தயாராக இருப்போம்.
ஆகவே, தூய மத்தியாசின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில்
அவரைப் ஒன்று இயேசுவைப் பற்றிய நற்செய்தி எல்லாருக்கும் அறிவிப்போம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai. |
|
|