✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி ✠(St. Mary
Magdalene de Pazzi) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(மே/ May 24) |
✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி ✠(St. Mary
Magdalene de Pazzi)
* கன்னியர் : (Virgin)
*பிறப்பு : ஏப்ரல் 2, 1566
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Duchy of Florence)
*இறப்பு : மே 25, 1607 (வயது 41)
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Grand Duchy of Tuscany)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholic Church)
*அருளாளர் பட்டம் : 1626
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)
*புனிதர் பட்டம் : ஏப்ரல் 28,
1669
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)
*முக்கிய திருத்தலம் :
புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி துறவு மடம், கரேக்கி, ஃப்ளாரன்ஸ்,
இத்தாலி
(Monastery of Santa Maria Maddalena de Pazzi, Careggi,
Florence, Italy)
*நினைவுத் திருவிழா : மே 24
*பாதுகாவல் :
நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்) (Naples (co-patron), நோய்களுக்கெதிராக
(Against bodily ills), பாலின தூண்டுதளுக்கே எதிராக (Against
sexual temptation), நோயாளிகள் (Sick people)
புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க
புனிதரும், கார்மேல் சபை துறவியும், கிறிஸ்தவ சித்தரும் ஆவார்.
"கதெரீனா" (Caterina) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் மரிய மகதலின்
டி பஸ்ஸி, 1566ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் நாளன்று,
ஃப்ளாரென்ஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை நகரின் புகழ்பெற்ற
செல்வந்தர் ஆவார். அவரது பெயர், "கமிலோ டி கெரி டே பஸ்ஸி" (Camillo
di Geri de Pazzi) ஆகும். இவரது தாயாரின் பெயர், "மரிய
பௌன்டெல்மொன்டி" (Maria Buondelmonti) ஆகும். பஸ்ஸி சிறுமியாக
இருக்கையிலேயே ஆன்மீக மற்றும் பக்தி மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார்.
ஒன்பது வயதிலேயே பஸ்ஸி இறைவனின் திருப்பாடுகளை தியானிக்கக் கற்றுக்கொண்டார்.
தமது பத்து வயதிலேயே புது நன்மை பெற்றுக்கொண்ட அவர், தமது கன்னிமைக்காக
பிரமாணம் செய்துகொண்டார்.
அவரது பன்னிரண்டு வயதில் தமது தாயாரின் முன்னிலையிலேயே இறைவனின்
திருக்காட்சியைக் காணும் பேறு பெற்றார். அதுமுதலே பலவித அற்புத
திருக்காட்சிகளைக் கண்டார்.
1580ம் ஆண்டு, பஸ்ஸி "மால்டா சபையினர்" (Order of Malta) நடத்தும்
பெண் துறவியரின் மடத்தில் கல்வி கற்க அவரது தந்தையால் அனுப்பப்பட்டார்.
ஆனால் விரைவிலேயே திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்ட பஸ்ஸி, ஒரு பிரபுக்
குடும்ப இளைஞனை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டார். ஆனால்,
தாம் தமது கன்னிமைக்காக இறைவனிடம் பிரமாணம் எடுத்துக்கொண்டதை
தந்தையிடம் எடுத்துக்கூறினார். இறுதியில், தமது சம்மதத்தை
தெரிவித்த தந்தையார், பஸ்ஸியின் துறவு வாழ்க்கைக்கு சம்மதம்
தெரிவித்தார். பஸ்ஸி, "தூய மரியாளின் கார்மேல் துறவு மடத்தை" (Carmelite
Monastery of St. Mary) தேர்ந்துகொண்டார். 1583ம் ஆண்டு,
புகுமுக (Novice) துறவறம் பெற்ற பஸ்ஸி, "அருட்சகோதரி மேரி மகதலின்"
(Sister Mary Magdalene) என்ற துறவற பெயரை ஏற்றுக்கொண்டார்.
புகுமுக (Novice) துறவறத்தில் ஒருவருட காலம் இருந்த பஸ்ஸி,
ஒருமுறை மிகவும் மோசமாக நோயால் பாதிக்கப்பட்டார். வேதனைகளை
வெளிக்காட்டாத பஸ்ஸியின் இருதயம் கிறிஸ்துவின் அன்பில்
நிறைந்திருந்தது. இதனைக் கண்ட மடத்தின் அருட்சகோதரி ஒருவர்
பஸ்ஸியிடம், "சிறு முணுமுணுத்தல் கூட இல்லாமல் எப்படி உங்களால்
வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிகிறது" என்று கேட்டார். அதற்கு
பதிலளித்த பஸ்ஸி, இறைவனின் பாடுபட்ட சொரூபத்தைச்
சுட்டிக்காட்டியபடி, "கிறிஸ்துவின் பாடுகளை அனுபவிக்க
அழைக்கப்பட்ட எவருக்குமே வலிகளும் வேதனைகளும் இனிமையாகவும்
மகிழ்ச்சியாகவும் இருக்கும்" என்றார்.
இதுபோன்ற இவரது எண்ணங்களும் கிறிஸ்துவுக்குள்ளான இவரது அன்பும்
இவருக்கு தொடர்ந்த இறைவனின் திருப்பாடுகளின் திருக்காட்சிகளை
காண கிட்டியது. இறைவனின் பெயரால் இவர் நிகழ்த்திய அற்புதங்கள்
எண்ணிலடங்காதவை ஆகும். பிறரின் எண்ணங்களைக் கூட அறிந்து கூறும்
வல்லமை பெற்றவராக இவர் திகழ்ந்தார் என்பர். அதுபோலவே,
எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தியும் இவர் பெற்றிருந்தார்.
உதாரணத்துக்கு, "கர்தினால் அலெஸ்ஸான்ட்ரோ டே மெடிசி" (Cardinal
Alessandro de Medici) அடுத்த திருத்தந்தை ஆவார் என்றார்.
அதுபோலவே அவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு, "பதினோராம்
லியோ" (Pope Leo XI) ஆனார்.
அவரது வாழ்நாளில், தூர தொலைவு நாடுகளிலிருந்த பலருக்கு நேரில்
காட்சியளித்து அவர்களது நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.
1607ம் ஆண்டு, தமது 41 வயதில் மரித்த இப்புனிதரின் உடல்,
கெட்டுப்போகாத நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
புனிதர் பட்டமளிப்பு :
இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால்,
இவருக்கு முக்திபேறு பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள்
திருத்தந்தை ஐந்தாம் பவுலின் (Pope Paul V) ஆட்சியில் தொடங்கி
திருத்தந்தை எட்டாம் அர்பனின் (Pope Urban VIII) ஆட்சியில்
1626ம் ஆண்டு, வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப்
பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால் (Pope Clement X),
1669ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 28ம் நாளன்று, புனிதர் பட்டம்
அளிக்கப்பட்டது.
நினைவுத் திருவிழா நாள் :
இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின்
இறந்த நாள் ஆகிய, மே மாதம், 25ம் நாள் எனக் குறிக்கப்பட்டது.
ஆனால் 1725ம் ஆண்டு, அந்நாள் புனித திருத்தந்தை ஏழாம்
கிரகோரிக்கு (Pope Gregory VII) ஒதுக்கப்பட்டதால், மே மாதம்,
29ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது. 1969ம் ஆண்டு நடந்த
மாற்றத்தில் மீண்டும் மே மாதம், 24ம் தேதிக்கு
நகர்த்தப்பட்டது. |
|
|