✠ புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் ✠(St. Joan of
Arc) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(மே/ May 30) |
✠ புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் ✠(St. Joan of
Arc)
* தூய கன்னியர்; மறைசாட்சி :
(Holy Virgin and Martyr)
*பிறப்பு : ஜனவரி 6, 1412
டோம்ரேமி, ஃபிரான்ஸ் அரசு
(Domrmy, Kingdom of France)
*இறப்பு : மே 30, 1431 (வயது 19)
ரோவன், நோர்மண்டி
(அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது)
(Rouen, Normandy - Then under English rule)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
*அருளாளர் பட்டம் : ஏப்ரல் 18, 1909
திருத்தந்தை பத்தாம் பயஸ்
(Pope Pius X)
*புனிதர் பட்டம் : மே 16, 1920
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
(Pope Benedict XV)
*நினைவுத் திருவிழா : மே 30
*பாதுகாவல் :
ஃபிரான்ஸ்; இரத்த சாட்சிகள்; கைதிகள்; இராணுவத்தினர்; நம்பிக்கையினால்
நிந்திக்கப்படுவோர்; "ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பெண் இராணுப்
படையினர்" (Women's Army Corps); "ஐக்கிய அமெரிக்க கடற்படை ரிசர்வ்
(மகளிர் ரிசர்வ்) அல்லது, "இரண்டாம் உலகப் போரின்போது தானாகவே
முன்வந்து சேவையாற்றிய பெண்கள் படை" (Women Accepted for
Volunteer Emergency Service in the World War II)
புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் (St. Joan of Arc), 1412ம் ஆண்டு,
ஜனவரி மாதம், 6ம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள "டாம்ரேமி" (Domrmy)
என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் ஃபிரான்ஸ்
நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.
"ஓர்லியன்ஸ் பணிப்பெண்" (The Maid of Orlans) எனும்
செல்லப்பெயர் அல்லது புனைப் பெயர் (Nickname) கொண்ட இவரது
தந்தை "ஜாக்குஸ் டி ஆர்க்" (Jacques d'Arc) ஆவார். இவரது
தாயார் "இஸபெல்லா ரோமி" (Isabelle Rome) ஆவார். இவர்களுக்கு
பிறந்த ஐந்து குழந்தைகளில், ஜோன் மூன்றாவது குழந்தை ஆவார்.
இவரது தந்தை ஒரு விவசாயி. எனவே ஜோன் தனது குழந்தை பருவத்தில்
தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை
பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் ஜோன் தன் தாயாரிடம்
இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை
பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள்
ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே ஜோன்
ஆழ்ந்த இறை சிந்தனையுடையவராகவே இருந்தார்.
"இறைதூதர் மிக்கேல்" (Archangel Michael), "புனிதர் மார்கரெட்"
(Saint Margaret) மற்றும் "புனிதர் கேதரின்" (Saint Catherine
of Alexandria) ஆகியோர் தமக்குக் காட்சி தந்ததாகவும்,
ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பிலிருக்கும் ஃபிரான்ஸ் நாட்டினை
மீட்க நூறு வருட கால போரிடும் முடியிழந்த ஃபிரெஞ்ச் மன்னன்
ஏழாம் சார்ளசுக்கு (The uncrowned King Charles VII) உதவுமாறு
தமக்கு உத்தரவிட்டதாகவும் ஜோன் கூறினார்.
அந்நியரை "ஓர்லியன்ஸ்" (Orlans) பிராந்தியத்தை விட்டு
விரட்டுவதற்காகவே கடவுள் தம்மைப் படைத்திருப்பதாக இவர்
நம்பினார். மீட்புப் போரின் முதல் கட்டமாக ஓர்லியன்ஸ்
(Orlans) முற்றுகைக்கு செல்லுமாறு ஏழாம் சார்ள்ஸ்
உத்தரவிட்டார். ஜோன் ஃபிரெஞ்சு படையை தலைமை ஏற்று
வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற ஃபிரெஞ்சு வீரர்கள்,
இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர்
ஃபிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய
வெற்றிகள் அடைய காரணமானார். இவையே ஃபிரான்சின் ஏழாம் சார்ளஸின்
முடிசூடலுக்கு வழிவகுத்தது.
ஆயினும் பர்கண்டியர்களால் (Burgundian) 1430ம் ஆண்டு, மே
மாதம், 23ம் நாளன்று, போர்க் கைதியாக பிடிக்கப்பட்ட இவர்,
ஃபிரான்சின் எதிரிகளான ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார். அவர்கள்
"பேயுவைஸ்" ஆங்கில சார்பு ஆயரான "பியேர் கெளசொன்" (pro-English
Bishop of Beauvais Pierre Cauchon) துணையோடு இவரை சூனியக்காரி
எனவும், தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி,
இவரின் 19ம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர்
இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை மூன்றாம்
கலிக்ஸ்டஸால் (Pope Callixtus III) இவரின் வழக்கு மீண்டும்
விசாரிக்கப்பட்டு, இவர் மீதிருந்த குற்றச்சாட்டுகள் தள்ளுபடி
செய்யப்பட்டன. இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவர் கத்தோலிக்க மறைசாட்சி என அறிவிக்கப்பட்டார்.
பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான பணி துவங்கப்பட்டு,
1909ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 18ம் நாளன்று, திருத்தந்தை
பத்தாம் பயஸ் (Pope Pius X) அவர்களால், "நோட்ரே டேம் டி
பாரிஸ்" (Notre Dame de Paris) ஆலயத்தில் அருளாளர் பட்டமும்,
1920ம் ஆண்டு, மே மாதம், 16ம் நாளன்று, திருத்தந்தை
பதினைந்தாம் பெனடிக்ட் (Pope Benedict XV) அவர்களால் ரோம்
நகரின் "தூய பேதுரு பேராலயத்தில்" (St. Peter's Basilica)
புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் நினைவுத் திருநாள் மே
மாதம் 30ம் நாள் ஆகும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோன் ஆப் ஆர்க்
ஜோன் ஆஃப் ஆர்க் சாதாரண மனித தரத்திலிருந்து மிகவும் உயர்ந்த
ஒரு மானிடப் பிறவி. அவளுக்கு இணையான மனிதப் பிறவி ஓராயிரம் ஆண்டுகளிலும்
உதிக்கப்போவதில்லை
- வின்ஸ்டென்ட் சர்ச்சில்
வாழ்க்கை வரலாறு
15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இங்கிலாந்து& பிரான்ஸ் ஆகிய
நாடுகளுக்கு இடையே கடும் போர் நடந்துகொண்டிருந்த காலம் அது. இங்கிலாந்து,
பிரான்ஸின் பல பகுதிகளைக் கைப்பற்றியது. பிரான்ஸ் அரசனான ஏழாவது
சார்லஸ், அதிகாரங்கள் எதுவுமற்ற பொம்மையாக இருக்கும்
நிலைக்குத் தள்ளப்பட்டான்.
இத்தகைய சூழலில் பிரான்ஸ் தேசத்தில், "தோம்ரிமி" என்ற சிறிய
கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள்தான் நம்
புனிதை ஜோன். இவள், தனது தாய்நாடான பிரான்ஸ், இங்கிலாந்திடம்
அடிமைப்பட்டுக் கிடப்பதைப் பற்றி, தன் தந்தையின் மூலம் அறிந்திருந்தாள்.
எப்பாடுபட்டாவது தாய் நாட்டை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து
விடுவிக்க வேண்டும் என்ற விருப்பம் அவளுக்குள் தோன்றியது. நாளடைவில்
இந்த விருப்பம், தீவிரமானது. "தாய் நாட்டை காக்கவே நீ பிறவி எடுத்திருக்கிறாய்.
அதற்கான முயற்சியில் உடனே ஈடுபடு!" என்ற பொருளில் காட்சிகளும்,
குரல்களும் அடிக்கடி தனக்குள் தோன்றுவதாக சொல்லத் தொடங்கினாள்.
அது மட்டுமில்லை, இந்த உயரிய குறிக்கோளுக்காகவே இறைவன் தன்னைப்
படைத்திருப்பதாகவும் அவள் நம்பத் தொடங்கினாள்.
இதை, தன் தாய் தந்தையரிடமும், கிராமத்துப் பெரியவர்களிடமும்
அவள் சொன்னபோது, அவர்கள் நம்ப மறுத்தனர். "இது, வெறும் கற்பனை!"
என்றவர்கள், திரு மணம் செய்து, பிள்ளைகள் பெற்றுக் கொண்டு
வாழும் வழியைப் பார்க்குமாறு அவளுக்கு அறிவுரை கூறினர். "இது
கற்பனை அல்ல; கடவுளின் ஆணை!" என்று உறுதியாக நின்ற அவளை
மெதுவாக நம்பத் தொடங்கினர் சிலர். அவர்களது உதவியுடன் பிரான்ஸ்
அரசன் ஏழாவது சார்லஸை சந்தித்தாள் ஜோன். தான், இங்கிலாந்தின்
ஆதிக்கத்தில் இருந்து பிரான்ஸை மீட்க வந்திருப்பதாக அரசனிடம்
பணிவுடன் தெரிவித்தாள். மேலும், தென் பிரான்ஸில் இருந்த
"ஆர்லேன்ஸ்" என்ற முக்கிய நகரை மீட்க, பிரெஞ்சுப் படையைத் தன்
தலைமையில் அனுப்புமாறு வேண்டினாள். பெரும் தயக்கத்துக்குப்
பின் அவளது கோரிக்கையை ஏற்றான் அரசன்.
போர்க் கவசம் அணிந்து, ஒரு கையில் உருவிய கத்தி, மறு கையில்
"இயேசு மரி" என்று பொறிக்கப்பட்ட வெண் கொடியுடன் குதிரையின்
மீது அமர்ந்து, ஐந்தாயிரம் பிரெஞ்சுப் போர்வீரர்களுடன் புறப்பட்டாள்
ஜோன். இது நடந்தது 1429 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம். அப்போது அவளது
வயது 18. இளம் பெண் ஒருவளது தலைமையில் ஆர்லேன்ஸ் நகரை
நெருங்கிய பிரெஞ்சுப் படையைப் பார்த்து முதலில் சிரித்தனர் ஆங்கிலேயப்
படையினர். ஆனால், சுதந்திர வேட்கை மிகுந்த ஜோனின் உணர்ச்சியூட்டும்
தலைமையின் கீழ் வீரப் போர் புரிந்த பிரெஞ்சுப் படையினரின்
தாக்குதலில், நகரின் கோட்டைகள் ஒவ்வொன்றாக வீழத் தொடங்கின. மிக
முக்கியமான கடைசி கோட்டையைக் கைப்பற்றும் போரில் காயம் அடைந்து,
மருத்துவ சிகிச்சைக்காக ஜோன் போரிலிருந்து விலக நேர்ந்தது. இதைக்
கண்டு மனம் தளர்ந்த பிரெஞ்சு வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினர்.
பிரெஞ்சு வீரர்கள் மனம் தளர்வதை விரும்பாத ஜோன், மீண்டும்
போரில் குதித்தாள். கடும் போருக்குப் பின் கடைசி கோட்டையையும்
வென்று, ஆர்லேன்ஸ் நகரைக் கைப்பற்றினாள். அவளின் இந்த வீரச்
செயலைப் பார்த்து, "இவள் சாதாரண மானிடப் பெண் இல்லை. தெய்வீக
சக்தி மிக்கவள்" என்று பிரான்ஸ் மட்டுமல்லாமல், எதிரி நாடான
இங்கிலாந்தும் நம்பத் தொடங்கியது. "ஆர்லேன்ஸை மீட்ட நங்கை"
என்று சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்றாள் ஜோன்.
ஜோனின் வாழ்க்கை இத்துடன் முடியவில்லை. மேலும் பல போர்களில்
கலந்து கொண்டு, பிரான்ஸ் தேசத்துக்கு வெற்றி மேல் வெற்றியைத்
தேடிக் கொடுத்தாள். அவளது வீரம், ஆங்கிலேயர்களை பிரான்ஸின்
வடக்கு மூலைக்கே விரட்டி அடித்தது. பிரான்ஸின் அரசனாக ஏழாவது
சார்லஸ் முடி சூட்டிக் கொண்டதுடன், அதன் மாட்சிமை நிலை
நாட்டப்பட்டது. ஆனால், விரைவிலேயே வஞ்சகத்தால் பிடிபட்டு,
ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டாள் ஜோன். அவர்கள் அவளுக்கு
மரண தண்டனை விதித்தனர். 30.05.1431 அன்று ஊரின் நடுவே
கழுமரத்தில் கட்டப்பட்டு, சுற்றிலும் மரக் கட்டைகளை அடுக்கி,
தீ வைத்து எரிக்கப்பட்டு ஜோன் கொல்லப்பட்டாள். இவ்வாறு அசாதாரண
வீரத்துடன் வாழ்ந்து, இறுதியில் பெரும் துணிச்சலுடன் மரணத்தைத்
தழுவிய அவள், இந்த பூமியில் வாழ்ந்தது மொத்தம் 19 ஆண்டுகளே.
இவருக்கு 1920 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினைந்தாம்
ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய ஜோன் ஆஃப் ஆர்க்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில்
அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஆபத்தில் அனைத்து வேளையிலும்
- ஆண்டவர் இயேசுவின் பெயரை
உச்சரிப்போம்
ஜோன் ஆஃப் ஆர்க் ஒரு வீர நங்கையாக விளங்கியதோடு மட்டுமல்லாமல்
பக்தியான ஒரு பெண்மணியாகவும் விளங்கினார் என்று சொன்னால் அது
மிகையாகாது. குறிப்பாக அவர் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும்
மிகுந்த பக்தி கொண்டு இருந்தார்.
இங்கிலாந்து நாட்டுக்கு எதிரான போரில் பிரான்ஸ் நாட்டுப்
படைக்குத் தலைமைதாங்கிய ஜோன் தன்னுடைய கையில் இயேசு, மரியின்
பெயர்கள் பொறிக்கப்பட்ட கொடியைத் தாங்கிச் சென்றார். அதுவே
ஜோனுக்கு இங்கிலாந்துக்கு எதிரான போரில் வெற்றியைத் தேடித்
தந்தது. தூய ஜோனைப் போன்று இயேசுவின் பெயருக்கு
- மரியாவின்
பெயருக்கு
- இருக்கும் வல்லமையை நம்முடைய வாழ்க்கையில்
உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "நீங்கள் என் பெயரால்
தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்கு தருவார்" என்று
(யோவா 16:23). இயேசு கூறிய வார்த்தைகள் உண்மையிலும் உண்மை. தூய
ஜோன் இயேசுவின் பெயரை நம்பி உச்சரித்தார். அதனால் வெற்றிகள் பல
கண்டார். நாமும் ஆண்டவர் இயேசுவின் பெயரை நம்பிக்கையுடன்
உச்சரிக்கும் போது ஆசிரைப் பெறுவோம் என்பது உறுதி.
ஆகவே ஜோன் ஆஃப் ஆர்க்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில்
நாமும் அவரைப் போன்று வீரத்தோடு செயல்படுவோம், ஆண்டவர்
இயேசுவின் நாமத்தில் உண்மையான நம்பிக்கை கொள்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|
|