Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் யாக்கோபு (அல்பேயுவின் மகன்) ✠ (St. James, son of Alphaeus)
   
நினைவுத் திருநாள் : (மே/ May 3)
✠ புனிதர் யாக்கோபு (அல்பேயுவின் மகன்) ✠ (St. James, son of Alphaeus)
 
*திருத்தூதர் : (Apostle)

*பிறப்பு : கி. மு. முதல் நூற்றாண்டு
கலிலேயா, யூதேயா, ரோம பேரரசு
(Galilee, Judaea, Roman Empire)

*இறப்பு : கி. பி. 62
எருசலேம், யூதேயா, ரோம பேரரசு அல்லது எகிப்து
(Jerusalem, Judaea, Roman Empire or Aegyptus (Egypt)

*ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

*திருவிழா :
மே 3 (கத்தோலிக்கம்)
1 மே (ஆங்கிலிக்க ஒன்றியம்)
9 அக்டோபர் (கிழக்கு மரபுவழி திருச்சபை)

*சித்தரிக்கப்படும் வகை :
தச்சர்களின் இரம்பம்; கம்பளி; புத்தகம்

*பாதுகாவல் :
மருந்தகப் பணியாளர்; இறக்கும் நிலையில் இருப்போர்; இத்தாலி, கம்பளி நெய்பவர்; தொப்பி செய்பவர்கள்; உருகுவை

அல்பேயுவின் மகனான புனித யாக்கோபு என்பவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவர் அல்பேயுவின் மகன் யாக்கோபு என்றே அனைத்து ஒத்தமை நற்செய்தி நூல்களிலும் உள்ள திருத்தூதர்களின் பட்டியலில் அழைக்கப்படுகின்றார்.

விவிலியத்தில் :
இவரைப்பற்றி விவிலியத்தில் அதிகம் இடம் பெறவில்லை. இவர் புதிய ஏற்பாட்டில் நான்கு முறை மட்டுமே குறிக்கப்படுகின்றார். செபதேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து பிரித்துக்காட்ட இவர் சிரிய யாக்கோபு அல்லது சின்ன யாக்கோபு என்று அழைக்கப்படுகின்றார். (மாற்கு 15:40) இப்பெயரே இவருக்கு பாரம்பரிய சுவடிகளிலும் உள்ளது.

மாற்கு நற்செய்தியில் :
அல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு :
மாற்கு நற்செய்தியாளரே முதன் முதலில் இவரை அல்பேயுவின் மகன் என திருத்தூதர்களைப் பட்டியல் இடும் போது அழைக்கின்றார். அவரும் ஒரே முறை தான் அழைக்கின்றார்.

மாற்கு நற்செய்தியில் இவர் அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பு இடம் பெறுகின்றது. ஆயினும், லேவி திருத்தூதர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் அல்பேயுவின் மகன் யாக்கோபு இடம் பெறுகின்றார்.

மாற்கு நற்செய்தியில் பிற யாக்கோபு :
மாற்கு நற்செய்தியாளர் மூன்று யாக்கோபுகளை விகுதியுடன் குறிப்பிடுகின்றார். அவர்கள், அல்பேயுவின் மகன் யாக்கோபு, செபதேயுவின் மகன் யாக்கோபு, இயேசுவின் சகோதரரான யாக்கோபு. பிற மூன்று இடங்களில் விகுதியற்று குறிக்கின்றார். அவர்கள் உறுமாற்றத்தின் போது ஒலிவ மலையில் உள்ள யாக்கோபு, கெத்சமணி தோட்டத்தில் இயேசுவோடு இருக்கும் யாக்கோபு, தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாவைக்குறிக்க சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியா என்னும் போதும்.

மத்தேயு நற்செய்தியில் :
அல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு :
பேதுரு, அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் அவரின் சகோதரர் யோவான் ஆகியோர் இயேசு கிறிஸ்துவின் சீடராக அழைக்கப் பெற்றனர். இதன் பின்னர் மாற்கு நற்செய்தியில் உள்ள அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பைப் போன்றே மத்தேயு இயேசுவின் அழைப்பை பெறுகின்றார். ஆனாலும் மத்தேயு அல்பேயுவின் மகன் என குறிக்கப்படவில்லை எனினும் மத்தேயுவும் லேவியைப்போல வரி தண்டினவராக குறிக்கப்படுகின்றார். மத்தேயு நற்செய்தியில் வரி தண்டினவரான மத்தோயுவும், அல்பேயுவின் மகன் யாக்கோபுவும் திருத்தூதர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

மத்தேயு நற்செய்தியில் பிற யாக்கோபு :

மத்தேயு தனது நற்செய்தியில் யாக்கோபுவைக்குறிக்கும் போது, அவரின் உறவுவினர்களை வைத்தே பிரித்துக் காட்டுகின்றார். மத்தேயு மூன்று யாக்கோபுகளை தன் நற்செய்தியில் குறிப்பிடுகின்றார். அவர்கள் :

♫ யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரராக
♫ செபதேயுவின் மகனாகவும், யோவான் சகோதரராகவும்
♫ அல்பேயுவின் மகனாகவும்.

உறுமாற்றத்தின் போது இருந்த யாக்கோபு யோவான் சகோதரர் என குறிப்பிடப்படுகின்றார். கெத்சமணி தோட்டத்தில் இருந்தவர் அல்பேயுவின் மகனாக குறிப்பிடப்படுகின்றார். மேலும் தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாளைக்குறிக்க யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாள் என்னும் போதும் யாக்கோபுவுக்கு இவர் மாற்கை போல "சின்ன" என்னும் அடை மொழி இல்லாமல் குறிக்கின்றார்.

பாரம்பரியம் :
புனித யாக்கோபு என்னும் பெயருடன் ஒருவர் சில கிறிஸ்தவர்களோடு சேர்த்து கைது செய்யப்பட்டு, பின்னர் ஏரோது மன்னனால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என திருத்தூதர் பணிகள் நூல் குறிக்கின்றது. ஆனால் அது இவர் அல்ல எனவும், அது செபதேயுவின் மகன் யாக்கோபுவே எனவும் அறிஞர்கள் கொள்கின்றனர்.

இவர் பாரம்பரியப்படி எகிப்தில் மறைப்பணி ஆற்றும்போது சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார் என்பது மரபு.


=================================================================================
=================================================================================
புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள் விழா

நிகழ்வு

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு தூய பிலிப்பு பிரிஜியாவிற்குச் சென்று அங்கேயுள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவித்து வந்தார். அப்போது ஒருசிலர் கருநாகத்தை (Dragon) தெய்வமாக வணங்கிவந்தார்கள். உடனே பிலிப்பு தன்னோடு வைத்திருந்த சிலுவையின் பெயரால் கருநாகத்தை விரட்டி அடித்தார். அந்தக் கருநாகம் போகும்போது தன்னுடைய விஷத்தை அங்கிருந்த மக்கள்மீது வீசி அடித்துவிட்டுச் சென்றது. இதனால் மக்களில் பெரும்பாலானவர்கள் இறந்துபோனார்கள். அங்கே இருந்த அரசனின் மகன்கூட இறந்துபோனான். பின்னர் பிலிப்பு இறைவல்லமையால் கருநாகத்தின் விஷத்தால் இறந்துபோன அத்தனை மக்களையும் உயிர்த்தெழச் செய்தார். இதனால் மக்கள் அனைவரும் ஆண்டவர்மீது நம்பிக்கைகொண்டார்கள்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட கருநாக வழிபாடு செய்யும் ஒருசில குருக்கள் சேர்ந்து பிலிப்புவை கல்லால் எறிந்தார்கள். பின்னர் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள். பிலிப்பு தான் இறக்கும்போது தனக்கு எதிராக தீமை செய்தவர்களை மன்னிக்குமாறு இறைவனிடம் வேண்டிக்கொண்டே தன்னுடைய ஆவியைத் துறந்தார்.

வாழ்க்கை வரலாறு

தூய பிலிப்பு

பிலிப்பு கலிலேயாவில் உள்ள கடற்கரை நகரான பெத்சாய்தாவில் பிறந்தவர். இவர்தான் ஆண்டவர் இயேசுவால் முதன்முறையாக நேரடியாக அழைக்கப்பட்டவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அந்திரேயா தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்து இயேசுவின் சீடராக மாறியவர். பேதுரு தன்னுடைய சகோதரர் அந்திரேயாவால் அழைக்கப்பட்டு வந்தவர். யோவானும் யாக்கோபும் அதன்பிறகே அழைக்கப்பட்டவர்கள். ஆகவே, பிலிப்பைத்தான் இயேசு முதன்முதலில் பிளிப்பைத்தான் நேரடியாக அழைக்கிறார் என்பது உண்மை. இயேசு அழைத்த உடன் அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார் (யோவா 1:46).

பிலிப்பைக் குறித்து ஒத்தமை நற்செய்தி நூல்களான மத்தேயு, மாற்கு, லூக்காவில் நாம் வாசிக்கமுடியாவிட்டாலும், யோவான் நற்செய்தியில் நான்கு முறை வாசிக்கின்றோம். இந்த நான்கு பகுதிகளும் பிலிப்பு என்பவர் எப்பட்டவர் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பிலிப்பு இடம்பெறும் முதலாவது பகுதி யோவான் 1:44 48 ஆகும். இங்கே பிலிப்பு நத்தனியேலிடம், இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர் என்று எடுத்துச் சொல்லி, அவரை இயேசுவிடம் அறிமுகம் செய்துவைக்கிறார். பிலிப்பு இடம்பெறும் இரண்டாம் பகுதியான யோவான் 12: 20-22. இங்கே திருவிழாவிற்கு இயேசுவைக் காணவந்த கிரேக்கரையும் இயேசுவிடம் அறிமுகம் செய்துவைக்கிறார் பிலிப்பு. இவ்வாறு மக்களை இயேசுவிடம் அறிமுகம் செய்து வைப்பதும், அவரைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியையும் சிறப்பாக செய்தார். திருத்தூதர் பணிகள் நூலில் இடம்பெறும் எத்தியோப்பிய ஆளுநனுக்கு இறைவாக்கு நூலை எடுத்துச் சொல்லி, அவருக்கு இயேசுவைப் பற்றி எடுத்துச் சொன்னதையும் நாம் இந்த பின்னணியில் புரிந்துகொள்ளவேண்டும்.

பிலிப்பு இடம்பெறும் மூன்றாவது பகுதி யோவான் 6: 7-10. இப்பகுதியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய போதனையைக் கேட்க வந்த மக்களுக்கு உணவளிக்க நினைத்தபோது, பிலிப்பு மறுமொழியாக இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே என்று சொல்லி அறிவுப்பூர்வமாக சிந்திக்கின்றார். அவர் இடம்பெறும் நான்காவது பகுதியான யோவான் 14: 8-9 ல் இயேசு தந்தையைப் பற்றிப் பேசும்போது பிலிப்பு, ஆண்டவரே! தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும் என்று சொல்லி அறிவுப்பூர்வமான கேள்வியை ஆண்டவர் முன்பாக எடுத்து வைக்கிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பிலிப்பு மக்களை ஆண்டவர் இயேசுவிடம் அறிமுகம் செய்பவராகவும், அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேட்டு, உண்மையை அறிந்துகொள்ள முற்படுபவராகவும் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்.

பிலிப்பு இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு பிரிஜியா (தற்போதைய தெற்கு ரஷ்யா) மற்றும் தற்போதைய துருக்கி பகுதியிலும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து அங்கேயே மறைசாட்சியாக உயிர்துறந்தார். இவர் கொல்லப்பட்ட ஆண்டு கி.பி.62 ஆகும்.


தூய (சின்ன) யாக்கோபு

இயேசுவின் திருத்தூதர்கள் கூட்டத்தில் ஒருவரான யாக்கோபு யூதா ததேயுவின் சகோதரர், இயேசுவின் நெருங்கிய உறவினர். இவரைக் குறித்து நற்செய்தியில் அதிகமாகப் படிப்பதற்கு இல்லை. திருத்தூதர் பணிகள் நூலில்தான் இவரைக் குறித்து ஓரிரு இடங்களில்தான் படிக்கின்றோம். இவர் நீதிமானாகிய யாக்கோபு என்றும் அழைக்கப்படுகின்றார். நசரேயனாக வாழ்ந்த இவர் மது அருந்துவதோ, தலைமுடியைச் சிரைப்பதோ இல்லை. அந்தளவுக்கு தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவர் ஒருமுறை மழைக்காகக் ஜெபித்தபோது உடனே மழை வந்தது என்று இவரைப் பற்றி சொல்லப்படுகின்றது.

கி.பி. 51 ஆம் ஆண்டு நடைபெற்ற எருசலேம் திருச்சங்கத்தில், கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது. ஆனால், சிலைகளுக்கு படைக்கப்பட்டத் தீட்டுப்பட்டவை, கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, இரத்தம் மற்றும் பரத்தமை ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும் என்று சொல்லி, புற இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்யத் தேவையில்லை என்று உறுதியாகச் சொல்கிறார். (திப 15:20). இவர் நேர்மையாளராய் இருந்ததால் மக்கள் இவர் மீது அதிகமான மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். இவர்தான் எருசலேம் திருச்சபையின் முதல் ஆயராக விளங்கினார்.

ஒருமுறை எருசலேமில் இருந்த பரிசேயர்கள் இவரை அணுகி வந்து, இயேசுவை மறுதலிக்கச் சொன்னார்கள். ஆனால் இவரோ மக்கள் அதிகமாகக் கூடியிருந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆண்டவர் இயேசுவைப் பற்றி எல்லா மக்களுக்கும் எடுத்துரைத்தார். இதனால் சினங்கொண்ட பரிசேயர்கள் அவரைக் கல்லால் எறிந்து கொன்றார்கள். இவர் சொல்லப்பட்ட ஆண்டு கி.பி. 62 ஆகும். இவர் எழுதிய யாக்கோபு திருமுகத்தையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இத்திருமுகம் ஐந்து அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும் அதில் சொல்லப்படுகின்ற கருத்துகள் கிறிஸ்தவ வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதவை. குறிப்பாக யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் நம்பிக்கையும் நற்செயல்களும் ஒத்துப்போகவேண்டும் என்றும், நாவடக்கத்தோடு வாழவேண்டும் என்றும் வலியுறுத்திச் சொல்கிறார். இப்போதனை நாம் கடைபிடித்து வாழ்கின்றபோது உண்மையான கிறிஸ்தவர்களாக வாழமுடியும் என்பது உறுதி.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருத்தூதர்களான தூய பிலிப்பு மற்றும் யாக்கோபின் விழாவைக் கொண்டாடும் நாம் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஆண்டவர் இயேசுவை மக்களுக்கு அறிமுகம் செய்தல்


தூய பிலிப்பைக் குறித்து சிந்திக்கும்போது அவர் மக்களை ஆண்டவர் இயேசுவிடம் அறிமுகம் செய்துவைக்கும் பணியை சிறப்பாகச் செய்தார் என்று பார்த்தோம். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று நாமும் ஆண்டவர் இயேசுவை எல்லா மக்களுக்கும் அறிமுகம் செய்துவைத்து அவர்களை கிறிஸ்துவுக்குள் கொண்டுவருகின்றோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதுதான் ஒவ்வொரு கிறிஸ்தவரின் மனப்பான்மையாக இருக்கவேண்டும், நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்.

இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு நடந்ததாக சொல்லப்படும் நிகழ்வு. இயேசு விண்ணேற்றம் அடைந்து தந்தையின் வலப்பக்கம் அமர்ந்தபோது, அங்கே வந்த கபிரியேல் அதிதூதர் இயேசுவிடம், நீர் மண்ணுலகிற்குப் போன காரியம் எல்லாம் நிறைவடைந்து விட்டதா? என்று கேட்டார். அதற்கு இயேசு, இல்லை, இன்னும் கொஞ்சம் நிறைவடையவேண்டி இருக்கிறது, என்னுடைய சீடர்களிடம் அந்த பொறுப்பைக் கொடுத்திருக்கிறேன் என்றார். அதற்கு வானதூதர், அவர்கள் எண்ணிக்கையில் அதிகமா? என்று கேட்டார். இல்லை சொற்பமானவர்கள்தான் இருந்தாலும் நான் அவர்களோடு இருந்து, அவர்கள் நற்செய்திப் பணியாற்ற உறுதுணையாக இருப்பேன் என்றார் இயேசு.

இந்த நிகழ்வு நமக்கு இரண்டு உணமைகளை எடுத்துரைக்கின்றது. ஒன்று இயேசு விட்டுச் சென்ற பணியை நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்பதாகும். இரண்டு அப்படிச் செய்யும்போது இறைவனின் பாதுகாப்பு நமக்கு எப்போதும் உண்டு என்பதாகும். ஆகவே, நாம் இறைவனை எல்லா மக்களுக்கு எடுத்துரைக்கின்ற, அவரை அறிமுகம் செய்யும் பணியை சிறப்பாகச் செய்வோம். இறைவனின் பாதுகாப்பைப் பெறுவோம்.


2. இறையாட்சிப்பணி செய்வோர் குறுகிய எல்லைகளைக் கடந்து செயல்படவேண்டும்


இவ்விழா நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான செய்தி இறையாட்சிப் பணி செய்வோர் இனம், மொழி, குலம் போன்ற எல்லைகளைக் கடந்து வாழவேண்டும் என்பதாகும். யாக்கோபு இயேசுவின் நெருங்கிய உறவினர். அப்படி இருந்தாலும் இயேசு அவருக்கு சிறப்பான இடம் கொடுக்கவில்லை, அவரைத் தனக்குப் பின் திருச்சபையின் தலைவராக நியமிக்கவில்லை. பேதுருவைத் தான் திருச்சபையின் தலைவராக நியமிக்கின்றார். இது இயேசு எந்தளவுக்கு பரந்த கண்ணோட்டத்தோடு செயல்பட்டார் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இறையாட்சிப்பணி புரிவோர் இத்தகைய மனநிலையோடு வாழவேண்டும் என்பதுதான் இயேசு நமக்கு முன்வைக்கும் செய்தியாக இருக்கின்றது.

ஆனால் இன்றைக்கு நடைமுறை வாழ்க்கையில் பொறுப்பில் இருப்பவர்கள் தன் இனம், தன் மக்கள் என்று வாழ்வது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. ஆகவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் பரந்த கண்ணோட்டத்தோடு வாழக் கற்றுக் கொள்வோம், தூய பிலிப்பு, யாக்கோபை போன்று இயேசுவை எல்லா மக்களுக்கும் அறிமுகம் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா