Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் இஸிடோர் ✠(St. Isidore the Laborer)
   
நினைவுத் திருநாள் : (மே/ May 15)
✠ புனிதர் இஸிடோர் ✠(St. Isidore the Laborer)

* விவசாயிகளின் பாதுகாவல் புனிதர் :
(Patron Saint of Farmers)

*பிறப்பு : கி.பி. 1070
மேட்ரிட், கேஸ்டைல் அரசு
(Madrid, Kingdom of Castile)

*இறப்பு : மே 15, 1130 (வயது 59)
மேட்ரிட், கேஸ்டைல் அரசு
(Madrid, Kingdom of Castile)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
அகில்பயன் திருச்சபை (ஃபிலிப்பைன் நாட்டின் தனி திருச்சபை)
(Aglipayan Church)

*முக்திபேறு பட்டம் : மே 2, 1619
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)

*புனிதர் பட்டம் : மார்ச் 12, 1622
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
(Pope Gregory XV)

*நினைவுத் திருநாள் : மே 15

*பாதுகாவல் :
மேட்ரிட், விவசாயம், விவசாயி, தினக்கூலி

புனிதர் இஸிடோர் ஒரு ஸ்பேனிஷ் பண்ணைத் தொழிலாளியும் ஏழைகள் மற்றும் கால்நடைகள் மீது கொண்ட அன்பின் காரணமாக நன்கு அறியப்பட்டவரும் ஆவார். இவர் "மேட்ரிட்" (Madrid) நகர் மற்றும் விவசாயிகளின் பாதுகாவல் புனிதர் ஆவார்.

ஸ்பெய்ன் நாட்டின் "மேட்ரிட்" (Madrid) நகரில் சுமார் 1070ம் ஆண்டு ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்த இவர், கிறிஸ்தவ விசுவாசம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர், "மேட்ரிட்" நகரின் புறநகர் பகுதியில் "ஜுவான் டி வர்காஸ்" (Juan de Vargas) எனும் பணக்கார நிலச்சுவான்தாரின் பண்ணையில் பண்ணைத் தொழிலாளியாக பணிபுரிந்தார்.

நடுத்தர வயதைக் கடந்த இஸிடோர், "மரியா டொர்ரிபியா" (Maria Torribia) எனும் இளம்பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஒருமுறை, இவர்களது குழந்தை மிகவும் ஆழமான ஒரு கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இஸிடோர் மற்றும் மரியா இருவரும் செய்த செபத்தின் பலனாக கிணற்றின் நீர் மேலெழுந்து குழந்தை மேலே வந்ததாகவும் அது காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. தமது செபத்தினால் குழந்தை பிழைத்துக்கொண்டதற்கு நன்றி கூறும் விதமாக, அவர்களிருவரும் பாலியல் உறவைத் தவிர்ப்பதற்காக தனித்தனி வீடுகளில் வாழ்ந்தனர். அவர்களது மகன் பின்னர் இளம் வயதில் மரித்துப்போனான்.

இஸிடோர் ஏழைகளின் மீதும் கால்நடைகளின் மீதும் மிக்க அன்பு கொண்டவராக இருந்தார். தன்னிடம் உள்ள உணவு எதுவாகினும் அதனை ஏழைகளுக்கு கொடுத்தே தாமும் உண்பார்.

இஸிடோர் 1130ம் ஆண்டு, மே மாதம், 15ம் நாளன்று, மேட்ரிட் நகரினருகே மரித்தார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய இசிதோர் (மே 15)

"ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்" (தொநூ 2:15)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவு கூருகின்ற இசிதோர் ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் என்னும் இடத்தில் 1070 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பம் ஒரு சாதாரண விவசாயக் குடும்பம். ஆனாலும் பக்தியில் முன்மாதிரியான குடும்பம். அதனால் இசிதோர் சிறுவயது முதலே பக்தியிலும் ஒழுக்கத்திலும் பிறரன்புச் சேவையிலும் சிறந்து விளங்கி வந்தார்.

இசிதோருக்கு திருமண வயது வந்தபோது மரியா தே லா கபெஸா என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். இவர் பின்னாளில் ஒரு புனிதையாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இசிதோர் தன்னுடைய சொந்த ஊரில் இருந்த ஜான் தே வர்கீஸ் என்பவருடைய தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். நிலத்தை உழுவதாகட்டும், அதில் பயிரிடுவதாக இருக்கட்டும், பயிரிட்டத்தை அறுவடை செய்வதாக இருக்கட்டும் எல்லா வேலையையும் இசிதோர் மிகவும் சிறப்பாகச் செய்து வந்தார். இதனால் இவரைக் குறித்து முதலாளிக்கு நன்மதிப்பு உண்டானது.

இசிதோர் தான் செய்து வந்த விவசாய வேலைகளுக்கு மத்தியிலும் ஆலயத்திற்குச் செல்வதற்கும் காலைத் திருப்பலியில் கலந்துகொள்வதற்கும் மறக்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் பங்காலயத்தில் நடைபெறக்கூடிய திருப்பலியில் தவறாது கலந்துகொண்டு வந்தார். இதற்கு மத்தியில் இசிதோரோடு வேலை பார்த்துவந்த மற்ற பணியாளர்கள் இசிதோர் எப்போதுமே வேலைக்கு தாமதாகவே வருகின்றார் என்று முதலாளியிடம் போட்டுக்கொடுத்தார்கள். இதனால் சினமடைந்த முதலாளி ஜான் தே வர்கீஸ் இசிதோரை சோதித்துப் பார்க்க விரும்பினார்.

ஒருநாள் அவர் இசிதோரை நோட்டம் விடத் தொடங்கினார். இசிதோர் அதிகாலையில் திருப்பலிக்குச் செல்வதைப் பார்த்த முதலாளி, தோட்டத்திற்குத் தாமதமாகத்தான் வருவார் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவருடைய இடத்தில் இன்னொருவர் அதாவது வானதூதர் வேலை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். அதன்பிறகு தோட்டத்தின் முதலாளி இசிதோரை சந்தேகப்படுவதில்லை. இசிதோர் எப்போதும் போல் காலைத் திருப்பலியில் கலந்துகொண்டு விட்டு சரியான நேரத்தில் தோட்டத்திற்கு வந்து வேலை பார்த்து வந்தார்.

இசிதோருக்கு வயது ஆக ஆக, அவருடைய உடல் நலம் குன்றியது. அத்தகைய சூழ்நிலையும் அவர் ஜெபிப்பதற்கும் திருப்பலியில் கலந்துகொள்வதற்கும் மறக்கவே இல்லை. இப்படிப்பட்டவர் 1130 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இசிதோர் இறந்தபிறகு அவருடைய பெயரில் நிறைய புதுமைகள் நடந்தன. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்றாம் பிலிப் என்ற மன்னன் இசிதோரின் புனிதப் பொருட்களை தன்னுடைய அரண்மனைக்கு எடுத்துக்கொண்டு வந்து ஜெபித்தபோது அவரிடம் இருந்த தீராத நோய் நீங்கியது. அது போல அல்போன்சோ என்ற மன்னன் எதிரி நாட்டவரோடு போர் தொடுக்கச் சென்றபோது இசிதோரின் வழிநடத்தலால் அவன் போரில் வெற்றி பெற்றான்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய இசிதோரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. இறைவனோடு இணைந்திருத்தல்

தூய இசிதோரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் தோன்றுகின்ற ஒரே சிந்தனை "இறைவனோடு என்றும் இணைந்திருக்க வேண்டும்" என்பதுதான்.

யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது" (யோவா 15: 5). ஆம், இயேசுவோடு இணைந்திருக்கின்றபோது மட்டுமே நம்மால் கனிதர முடியும். இல்லையென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தூய இசிதோர் எப்போதும் தான் புரிந்து வந்த ஜெபத்தினாலும் பல்வேறு பக்தி முயற்சிகளாலும் இறைவனோடு இணைந்திருந்தார். அதனால் இறைவனுடைய பாதுகாப்பு அவருக்கு எப்போதும் இருந்தது. நாமும் இறைவனோடு இணைந்திருக்கின்றபோது நம்மாலும் இறைவனின் அளப்பெரிய ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆகவே, தூய இசிதோரைப் போன்று இறைவனோடு இணைந்திருப்போம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். நாம் செய்கின்ற எந்த வேலையாக இருந்தாலும் அதில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா