Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் இக்னேஷியஸ் ✠(St. Ignatius of Laconi)
   
நினைவுத் திருநாள் : (மே/ May 11)
✠ புனிதர் இக்னேஷியஸ் ✠(St. Ignatius of Laconi)

 *கப்புச்சின் சபை துறவி : (Capuchin Monk)

  *பிறப்பு : டிசம்பர் 10, 1701
லாக்கோனி, சார்டினியா
(Laconi, Kingdom of Sardinia)

 *இறப்பு : மே 11, 1781 (வயது 79)
கக்ளியரி, சார்டினியா அரசு
(Cagliari, Kingdom of Sardinia)

 *அருளாளர் பட்டம் : ஜூன் 16, 1940
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

 *புனிதர் பட்டம் : அக்டோபர் 21, 1951
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

 *பாதுகாவல் :
ஒரிஸ்டானோ (Oristano)
மாணவர்கள்
யாசகர்கள்

 *நினைவுத் திருநாள் : மே 11

புனிதர் இக்னேஷியஸ், ஒரு சார்டினியன் கப்புச்சின் சபை துறவியும் கத்தோலிக்க புனிதரும் ஆவார். தமக்கு நேர்ந்த ஒரு தீவிர நோயின் காரணமாக தமது வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணித்த இவர், சார்டினியாவிலுள்ள கப்புசின் துறவு மடத்தில் இணைந்து, குருத்துவம் பெறாத ஒரு துறவியானார். ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடம் அக்கறை காட்டியதாலும், அவரது எளிய மனப்பான்மையாலும், அவர் சார்டினியாவில் நன்கு அறியப்பட்டார். தாம் சந்தித்த எல்லா மக்களோடும் கலந்து, நோயுற்றவர்களிடம் தாராள மனப்பான்மையுடன் இருந்தார். ஆனால் அவர் தனது வாழ்நாளில், ஒரு வியக்கத்தக்க அற்புதங்கள் செய்பவர் என அறியப்பட்டார். மற்றும் அவர் தனது வாழ்நாள் முழுதும், 121 அற்புதங்களை நிகழ்த்தியதாக கூறப்பட்டது.

"வின்சென்ஸோ பெய்ஸ்" (Vincenzo Peis) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் இக்னேஷியஸ், 1701ம் வருடம், டிசம்பர் மாதம், பத்தாம் நாளன்று, சார்டினியா (Sardinia) அரசிலுள்ள "லக்கோனி" (Laconi) நகரில் உள்ள ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர், "மட்டியா பெய்ஸ் கடெல்லோ" (Mattia Peis Cadello) ஆகும். தாயாரின் பெயர், "அன்னா மரியா சன்னா கஸு" (Anna Maria Sanna Casu) ஆகும். இவரது திருமுழுக்குப் பெயர், "ஃபிரான்செஸ்கோ இக்னேஸியோ வின்சென்ஸோ" (Francesco Ignazio Vincenzo) ஆகும்.

தமது பெற்றோருக்கு உதவுவதற்காக வயல்வெளிகளில் உழைத்த வின்சென்ஸோ, தமது இள வயதில் தீவிர நோயால் தாக்குண்டு, மிகவும் வேதனை அடைந்தார். தமது நோய் குணமானதும் "கப்புச்சின் இளம் துறவியர் சபையில் சேர்ந்து (Order of Friars Minor Capuchin) தமது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டிக்கொண்டார். இவரின் மன்றாட்டை இறைவன் கேட்டதால் இவர் பூரண குணமடைந்தார். நலமடைந்த இவர், தமது பெற்றோர் "ஃபிரான்சிஸ்கன்" (Franciscans) சபையில் சேர்வதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் தாம் இறைவனிடம் செய்த சத்தியத்தை மறந்துபோனார்.

அதன்பிறகு ஒருநாள் தனது 20ம் வயதில் குதிரை சவாரி செய்கையில் குதிரையின் மீதிருந்து கீழே விழுந்ததில் பலமாக அடிபட்டார். அப்போதுதான் அவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மீண்டும் நினைவு கூர்ந்தார். மீண்டும் இறைவனிடம் இறைவேண்டல் செய்தார். இம்முறை, புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ் (Saint Francis of Assisi) அவர்களை உதவிக்கு வேண்டி செபித்தார். ஆனால் தன் நோயை கண்டிப்பாக குணமாக்க வேண்டுமென்று செபிக்காமல், இறைவன் விரும்பினால் குணமாக்கட்டும் என்று செபித்தார். இம்முறை அவரது பெற்றோர் "ஃபிரான்சிஸ்கன்" (Franciscans) சபையில் சேர்வதற்கு ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கவில்லை. இவர், "புனிதர் லாரன்சை" (St. Lawrence of Brindisi) தனது தனிப்பட்ட முன்மாதிரியாக எடுத்துக் கொண்டார்.

இக்னேஷியஸ் "கக்ளியரி" (Cagliari) என்னுமிடத்திலிருந்த கப்புச்சின் துறவற மடத்தில் இணைய அனுமதி வேண்டினார். ஆனால், இவரது பலவீனமான உடல்நிலை கண்ட துறவு மடத்தின் தலைமைப் பொருப்பிலிருந்தவர்கள் தயங்கினார்கள். செல்வாக்குடைய நண்பர் ஒருவரின் தலையீட்டால் இவருக்கு மடத்தில் அனுமதி கிட்டியது.

இக்னேஷியஸ் நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமது மடத்திலிருந்த துறவியருடன் நட்புடனும், சுமூகமான உறவுடனும், அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியும், உதவி செய்தும் வாழ்ந்தார். பிறருக்கு பணிவிடை செய்து வாழ்ந்தார். ஆனால் அவர் பிறரைப்பற்றி ஒரு சிறிய அளவில் கூட குறை கூறவில்லை. அவரின் உதடு கடுமையான சொற்களை ஒரு நாளும் உச்சரிக்கவில்லை. அவருக்கு வேலை பளு அதிகமானபோதும் பிறரிடம் அதை ஒப்படைக்காமல், புன்முறுவலுடன் செய்து முடிப்பார்.

தனது வாழ் நாட்களில் தனது உடலில் ஏற்பட்ட ஒவ்வொரு நோய்களையும் இறைவனிடம் இறைவேண்டுதல் செய்தே குணம் பெற்றார். தமது வாழ்வின் இறுதி இரண்டு வருட காலம் கண் பார்வையில்லாது வாழ்ந்தாலும் தமது அன்றாட பணிகளை செய்வதை தவிர்க்கவில்லை. இக்னேஷியஸ் 1781ம் ஆண்டு, மே மாதம், 11ம் நாளன்று, மாலை சுமார் மூன்று மணியளவில், "கக்ளியாரி" (Cagliari) நகரில் மரணமடைந்தார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
லக்கோனி நகர தூய இக்னேசியஸ் (மே 11)

நிகழ்வு

இக்னேசியஸ், தன்னுடைய சபையில் இருந்த சகோதரர்களுக்கும் தனக்குமான உணவை மக்களிடமிருந்து யாசித்துத்தான் பெற்றுவந்தார். அவ்வாறு அவர் யாசிக்க - பிச்சை - எடுக்கச் செல்லும்போது நகரில் இருந்த ஒரு பணக்காரரின் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து வந்தார். இதைக் கவனித்த அந்தப் பணக்காரர்,  "எல்லாருடைய வீட்டிலும் உணவு வாங்கக்கூடிய இவர் ஏன் நம்முடைய வீட்டை மட்டும் தவிர்கின்றார், இதில் ஏதோ சதி இருக்கின்றது" என்று நினைத்துக்கொண்டு அவர் இக்னேசியசினுடைய சபைத் தலைவரிடம் அவரைப் பற்றிக் போட்டுக்கொடுத்தார்.

உடனே சபைத் தலைவர் இக்னேசியசை அழைத்து, "பணக்காரர் உம்மைப் பற்றிச் சொல்வது அனைத்தும் உண்மையா?" என்று கேட்டார். அதற்கு இக்னேசியஸ், "ஆமாம், அவர் சொல்வது உண்மைதான்" என்றார். "அப்படியானால் ஏன் அந்தப் பணக்காரிடமிருந்து உணவை யாசிப்பதில்லை?" என்று கேட்டார் சபைத் தலைவர். இக்னேசியசோ அவரிடம், "அந்தப் பணக்காரிடமிருந்து உணவை யாசிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அதனை உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அவருடைய வீட்டிலிருந்து உணவை வாங்கிக்கொண்டு வருகிறேன், அதன்பிறகு நீங்களாகவே புரிந்துகொள்வீர்கள்" என்று சொல்லிவிட்டு இக்னேசியஸ் அந்தப் பணக்காரருடைய வீட்டில் உணவை- ரொட்டியை வாங்கிக்கொண்டு வந்து, சபைத் தலைவரிடம் கொடுத்தார். சபைத் தலைவரோ அந்தப் பணக்காரர் வீட்டில் கொடுக்கப்பட்ட ரொட்டியை பிய்த்து சாப்பிடத் தொடங்கினார்.

அந்தோ பரிதாபம்! அவர் ரொட்டியை உடைத்து சாப்பிடத் தொடங்கியபோது, அந்த ரொட்டியிலிருந்து இரத்தம் வழிந்தது. இதைப் பார்த்துப் பயந்தே போனார் சபைத் தலைவர். அப்போது இக்னேசியஸ் சபைத் தலைவரிடம் சொன்னார், "இப்போது புரிகிறதா நான் ஏன் அந்தப் பணக்காரரின் வீட்டிலிருந்து உணவை யாசிப்பதில்லை என்று. பணக்காரர் ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி சம்பாதிக்கின்றார். அதனாலேயே அவர் கொடுத்த உணவிலிருந்து இரத்தம் வழிந்தோடுகிறது" என்றார்.

ஆமாம், ஏழைகளின் உழைப்பை உறிஞ்சி சம்பாதிப்பவரின் உணவிலிருந்து இரத்தம்தானே வழிந்தோடும்.

வாழ்க்கை வரலாறு

இத்தாலியில் உள்ள லக்கோனி என்னும் இடத்தில் 1701 ஆம் ஆண்டு பிறந்தார் இக்னேசியஸ். இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம். எனவே வறுமை இவருடைய குடும்பத்தில் தலைவிரித்தாடியது. அதனால் இவர் பள்ளியில் சென்று படிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இக்னேசியசுக்கு 17 வயது நடக்கும்போது நோயில் விழுந்தார். மருத்துவர்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்நேரத்தில் இவர் தூய அசிசியாரிடம், "நான் மட்டும் நோயிலிருந்து முற்றிலுமாகக் குணம் பெற்றால், துறவற வாழ்க்கையை மேற்கொள்வேன்" என்று ஜெபித்தார். அவர் ஜெபித்தது போன்றே நோயிலிருந்து முற்றிலுமாக குணமடைந்தார். ஆனால் இவருடைய தந்தையோ இவரிடம்இ "துறவற வாழ்க்கையை எல்லாம் மேற்கொள்ள வேண்டாம், பேசாமல் வீட்டிலிருந்து எனக்கு ஒத்தாசை செய்" என்று சொல்லி அவரை வீட்டிலேயே இருக்கச் செய்தார். தந்தை கட்டாயப்படுத்தியதால் அவர் வீட்டிலேயே இருந்து தந்தைக்கு உதவி செய்து வந்தார்.

இக்னேசியசுக்கு 20 வயது நடக்கும்போது ஒருநாள் குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்தார். திடிரென்று குதிரை கட்டுபாட்டை இழந்து ஓடியது. அப்போது அவர் அசிசியாரிடம் முன்பு ஜெபித்தது போன்று ஜெபித்தார். அதிர்ஷ்டவசமாக குதிரை நின்றது. இந்த நிகழ்விற்குப் பிறகு அவர், "யார் தடுத்தாலும் பரவாவில்லை, உறுதியாக துறவற வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்" என்று உறுதிபூண்டு அதன்படியே துறவறம் பூண்டார். 1722 ஆம் ஆண்டு அவர் தான் சேர்ந்த சபையில் முதல் வார்த்தைப்பட்டையும் எடுத்துக்கொண்டார்.

இக்னேசியஸ், துறவற வாழக்கையை மேற்கொள்ளத் தொடங்கியதிலிருந்து மிகவும் எளிமையாகவும் தாழ்ச்சியாகவும் வாழத் தொடங்கினார். மக்களிடமிருந்து இரந்தே உணவை உண்டு வந்தார். எல்லா வேலைகளிலும் இறைவனை பற்றிக்கொண்டு வாழ்ந்து வந்தார். அவருடைய குடும்பத்தார் அவரிடத்தில் உதவி என்று வந்தபோதுகூட அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பொதுநலனைக் கருத்தில் கொண்டே செயல்பட்டார். இப்படிப்பட்ட இக்னேசியஸ், 1781 ஆம் ஆண்டு மே 11 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1951 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

லக்கோனி நகர தூய இக்னேசியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தன்னலனைக் கருத்தில் கொள்ளாமல், பொது நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

தூய இக்னேசியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நமக்கு மேற்சொன்ன தலைப்புதான் நமக்கு நினைவுக்கு வருகின்றது. தூய இக்னேசியஸ், தன்னுடைய நலம், தன்னுடைய குடும்ப நலன் என்றெல்லாம் பார்க்காமல் பொதுநலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார். இவருடைய நினைவு நாளைக்கொண்டாடும் நாம் பொதுநலத்தோடு, சமூக அக்கறையோடு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கின்ற பலர் தன்னுடைய குடும்பத்தை உயர்த்துவதிலே கண்ணும் கருத்துமாய் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் தூய இக்னேசியசை கருத்தில் கொண்டு செயல்படுவது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஆகவேஇ தூய இக்னேசியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று பொதுநலத்தோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா