Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனித யூஜின் டி மசெனோட் ✠(St. Eugene de Mazenod)
   
நினைவுத் திருநாள் : (மே/ May 21)
✠ புனித யூஜின் டி மசெனோட் ✠(St. Eugene de Mazenod)

* மர்சேல் ஆயர்/ துறவற உறுதிமொழிகள் ஏற்காத அமலமரியாள் சபை நிறுவனர் :
(Bishop of Marseille/ Founder of Missionary Oblates of Mary Immaculate)

*பிறப்பு : ஆகஸ்ட் 1, 1782
ஈக்ஸ்-என்-பிராந்தியம், ஃபிரான்ஸ்
(Aix-en-Provence, France)

*இறப்பு : மே 21, 1861 (அகவை 78)
மார்செயில், ஃபிரான்ஸ்
(Marseille. France)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*முக்கிய திருத்தலங்கள் :
நொட்ரே-டேம் டி லா கார்டே, மார்செயில், ஃபிரான்ஸ்
(Shrine of Notre Dame de la Garde, Marseille, France)

*அருளாளர் பட்டம் : அக்டோபர் 19, 1975
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

*புனிதர் பட்டம் : டிசம்பர் 3, 1995,
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

*நினைவுத் திருவிழா : மே 21

*பாதுகாவல் : சிதைந்த குடும்பங்கள்

புனிதர் யூஜின் டி மசெனோட், ஒரு ஃபிரெஞ்ச் கத்தோலிக்க குரு ஆவார். இவருக்கு 1975ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 19ம் நாளன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் அருளாளர் பட்டமும், 1995ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 3ம் தேதியன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்களால் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.

யூஜின் டி மசெனோட் ஃபிரான்சில் பிரபுக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது தந்தை பெயர் "சார்ள்ஸ்" (Charles Antoine de Mazenod) ஆகும். இவரது தாயார், "மேரி ரோஸ்" (Marie Rose Joannis) ஆவார். 1790ம் ஆண்டு ஏற்பட்ட ஃபிரான்ஸ் புரட்சியை அடுத்து, புரட்சியாளர்களின் வற்புறுத்தலால் தமது குடும்பத்தினருடன் இத்தாலி நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்றார். கையிருப்பிருந்த பணம் கரைந்ததாலும், நிதிச் சுமையாலும் யூஜினின் பெற்றோர் பிரிந்தனர். அவரது தாயாரும் சகோதரியும் ஃபிரான்ஸ் திரும்பினர். அக்காலத்திய புரட்சியாளரின் சட்டப்படி, அவர்கள் விவாகரத்து பெற்றால் அபகரிக்கப்பட்ட அவர்களது சொத்துக்கள் திரும்ப அவர்களிடமே தரப்படும் என்பதால் யூஜினின் தாயார் விவாகரத்துக்கு விண்ணப்பித்து அதனை பெற்றார். இத்தாலியிலும் நிரந்தரமாக வாழ வழியற்ற யூஜின், வெனிஸ், நேப்பிள்ஸ், இறுதியில் சிசிலியிளுள்ள பலெர்மோ (Venice, Naples, Palermo in Sicily) ஆகிய இடங்களில் வசித்தபின்னர் தமது இருபது வயதில் ஃபிரான்ஸ் திரும்பினார். 1808ம் ஆண்டு குரு மடத்தில் இணைந்து இறையியல், மெய்யியல் கல்விகளைக் கற்று 1811ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 21ம் நாளன்று, குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.

அமலமரியாளின் தியாகிகள் (Oblates of Mary Immaculate) சபை உருவாக்கல்:
ஏழைகள் வாழும் சேரிப்புறம், வைத்தியசாலை, சிறைச்சாலை போன்ற இடங்களில் சென்று பணியாற்றினார். தனது பணியின் தேவையை உணர்ந்த இவர் ஒரு புதிய சபையை உருவாக்கினார். 1816ம் ஆண்டில் "மிகவும் கைவிடப்பட்டவர்களுக்கான குழு" (Group for most abandoned of Provence) என்ற பெயருடன் புதிய குழுவாக மறை மாவட்டத்தால் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் 5 குருக்கள் மாத்திரமே இருந்தார்கள்.

1826ம் ஆண்டு ஃபெப்ரவரி 17ம் நாள் இக்குழுவின் பெயர் "அமலமரியின் மறைபரப்புத் தியாகிகள்" (Missionary Oblates of Mary Immaculate) என மாற்றப்பட்டது. 1832ம் ஆண்டு இவர் மார்செயில் ஆயராக பதவி உயர்வு பெற்றார்.

இலங்கையில் அமலமரியாளின் தியாகிகள்:
1847ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை பெரும் சவால்களை எதிர்நோக்கியது. அவர்களின் பணியின் தேவை அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு குருக்களின் தேவையும் அதிகரித்தது. அப்பொழுது இருந்த ஆயர் ஒராசியோ பெற்றக்கினி குருக்களைத் தேடி ஐரோப்பா சென்றார். ஃபிரான்ஸில் அவர் ஆயர் யூஜினை சந்தித்து, அவரை இலங்கையில் பணியாற்ற சில குருக்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட யூஜின் டி மசெனோட் மூன்று அமலமரியாளின் தியாகிகளை இலங்கைக்கு அனுப்ப முன்வந்தார். முதன் முதலில் 1847ம் ஆண்டு, நவம்பர் மாதம், 28ம் தேதி, அருட்தந்தை செமேரியாவின் தலைமையில் மூன்று அமலமரியாளின் தியாகிகள் தென்னிலங்கையின் காலி துறைமுகத்தை வந்தடைந்தார்கள். இவர்கள் அங்கிருந்து 1848ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 4ம் தேதியன்று, வடக்கே மன்னார் வந்தடைந்தார்கள். பின் ஊர்காவற்றுறை சென்றார்கள். அமலமரியாளின் தியாகிகளின் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி விரிந்தது. அமலமரியாளின் தியாகிகளே 1862ம் ஆண்டு, திருக்குடும்ப கன்னியர் சபையினரை இலங்கைக்கு அழைத்து வந்தார்கள்.

1837 - 1861ம் ஆண்டு காலத்தில், தென் கிழக்கு ஃபிரான்ஸ் (South-Eastern France) நாட்டின் "புரொவென்ஸ்" (Provence) பிராந்தியத்திலுள்ள "மார்செய்ல்" (Marseille) மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிய யூஜின், தமது பதவி காலத்தில் "நோட்ரே-டேம்-டி-லா கர்ட்" (Basilica of Notre-Dame de la Garde) பேராலயத்தைக் கட்டினார். இவர், 1852ம் ஆண்டு, உள்ளூர் கத்தோலிக்க குருவான "ஜோசஃப்-மரி டிமோன்-டேவிட்" (Joseph-Marie Timon-David) என்பவரை மார்செய்ல் (Marseille) நகரில், இயேசுவின் திருஇருதய சபை (Congregation of the Sacred Heart of Jesus) நிறுவிட ஊக்குவித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா