✠ புனிதர் டோமினிக் சாவியோ ✠(St. Dominic
Savio) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(மே/ May 06) |
✠ புனிதர் டோமினிக்
சாவியோ ✠(St. Dominic Savio)
*ஒப்புரவாளர் : (Confessor)
*பிறப்பு : ஏப்ரல் 2, 1842
சான் ஜியோவன்னி, ரிவா ப்ரெஸோ சியரி,
பைட்மான்ட், இத்தாலி
(San Giovanni, Riva presso Chieri, Piedmont, Italy)
*இறப்பு : மார்ச் 9, 1857 (வயது
14)
மொன்டொனியோ, பைட்மான்ட், இத்தாலி
(Mondonio, Piedmont, Italy)
*ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
எபிஸ்கோபல் திருச்சபை
(Episcopal Church)
*அருளாளர் பட்டம் : மார்ச் 5,
1950
திருத்தந்தை 12ம் பயஸ்
(Pope Pius XII)
புனிதர் பட்டம் : ஜூன் 12, 1954
திருத்தந்தை 12ம் பயஸ்
(Pope Pius XII)
*முக்கிய திருத்தலங்கள் :
கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம்,
தூரின், இத்தாலி
(The Basilica of Mary Help of Christians in Turin)
*நினைவுத் திருவிழா : மே 6
*பாதுகாவல் :
பீடச்சிறார், பாடகர் குழுச் சிறார், இளம் குற்றவாளிகள்,
தவறுதலாக குற்றம் சுமத்தப்பட்டோர்
புனிதர் டோமினிக் சாவியோ, இத்தாலியைச் சார்ந்த புனித ஜான்
போஸ்கோவின் வளரிளம் பருவ மாணவர்களில் ஒருவர் ஆவார். இவர்
குருவாகும் ஆசையில் படித்துக் கொண்டிருந்தபோது தமது 14ம் வயதில்
"நுரையீரல் அழற்சி" (Pleurisy) நோய் பாதிக்கப்பட்டு இறந்தார்.
பதினான்கு வயதே நிரம்பிய டோமினிக் சாவியோவின், தீரம் நிறைந்த
அன்றாடப் புண்ணிய வாழ்வே இவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தியது.
கத்தோலிக்க திருச்சபையில் மறைசாட்சியாக இறக்காத புனிதர்களில்
இவரே மிகவும் இளையவர்.
தொடக்க காலம் :
வீட்டு வாழ்வு :
டோமினிக் சாவியோ, 1842ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் தேதியன்று,
வட இத்தாலியின் "பியெட்மோன்ட்" (Piedmont) பிராந்தியத்திலுள்ள
"சியரி" (Chieri) நகரின் அருகேயுள்ள "ரிவா" (Riva) எனும் கிராமத்தில்
பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே இயேசுவிடமும், அன்னை மரியாளிடமும்
மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவரது குடும்பமும் சூழ்நிலையும்
இவரை புனிதத்தில் வளர்த்தன. இவரது பெற்றோர் இவரை கிறிஸ்தவ மதிப்பீடுகளில்
வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டினர்.
நான்கு வயதிலேயே தனியாக செபிக்கும் திறமை பெற்றிருந்த சாவியோ,
தான் முதல் நற்கருணை பெற்ற நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது, "என்
வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியானதும் அற்புதமானதுமான நாள் அது"
என்கிறார். இவர் ஆலயத்தின் பீடச் சிறுவர்கள் குழுவில் இணைந்து
திருப்பலியில் குருக்களுக்கு உதவி செய்தார்; அதிகாலை 5 மணிக்கே
ஆலயம் சென்றுவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். மழையிலும்,
குளிரிலும் இவர் ஆலயத்திற்கு தவறாமல் சென்றார்.
ஆரட்டரியில் :
12 வயதில் கடவுளின் அழைப்பை உணர்ந்து, புனிதர் ஜான் போஸ்கோ
(Saint John Bosco) நடத்திய ஆரட்டரியில் சாவியோ சேர்ந்தார்.
1854ம் ஆண்டு, அக்டோபர் மாதம், முதல் திங்கட் கிழமை, தனது தந்தையுடன்
புனிதர் ஜான் போஸ்கோவை சந்தித்த இவர், "நான் தைக்கப்படாத
துணியாக இருக்கிறேன், என்னை இயேசுவுக்கு உகந்த நல்ல சட்டையாகத்
தைப்பது உங்கள் பணி" என்று அவரிடம் கூறினார்.
கெட்ட வார்த்தைகள் பேசிய சிறுவர்களை சாவியோ கண்டித்து
திருத்தினார்; சண்டையிட்டுக் கொண்ட சிறார்களுக்கிடையே சமாதானம்
செய்துவைத்தார். தீய வழிகளில் இருந்து விலகி, களங்கமற்ற
தூய்மையான புண்ணிய வாழ்வு வாழ்ந்தார். தனது செயல்கள் அனைத்தையும்
இறைவனின் புகழ்ச்சிக்காகவே செய்து வந்தார்.
குருத்துவ படிப்பு :
இறுதியில் சாவியோ குரு மடத்தில் சேர்ந்தார். பாவம் செய்வதை
விட சாவதே மேல் என்பது இவரது விருதுவாக்கு ஆகும். 14ம் வயதில்
இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மிகவும் பலவீனம் அடைந்தார்.
1857ம் ஆண்டு, மார்ச் மாதம், 9ம் தேதி, விண்ணகக் காட்சியால்
பரவசம் அடைந்து, "ஆகா, எவ்வளவு இன்பம் நிறைந்த அற்புத காட்சி!"
என்று கூறியவாறே டோமினிக் சாவியோ உயிர் துறந்தார்.
டோமினிக் சாவியோ மரித்ததும் புனிதர் ஜான் போஸ்கோ இவரது
வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினார். அது இவரது புனிதர் பட்டமளிப்பு
நடவடிக்கைகளில் முக்கிய ஆதாரமாக விளங்கியது.
புனிதர் பட்டம் :
சாவியோவின் புனிதர் பட்டத்திற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவைத்த
திருத்தந்தை 10ம் பயஸ் (Pope Saint Pius X), "தோமினிக் என்னும்
இளைஞர், திருமுழுக்கில் பெற்ற புனிதத்தைப் பழுதின்றி
காப்பாற்றிக் கொண்டவர்" என்று இவரைப் புகழ்கின்றார்.
1933ல் இவருக்கு வணக்கத்திற்குரியவர் பட்டம் வழங்கிய திருத்தந்தை
11ம் பயஸ் (Pope Pius XI), "தூய்மை, பக்தி, ஆன்மீகத் தாகம் ஆகியவற்றின்
ஆற்றலால் சாவியோவின் கிறிஸ்தவ வாழ்வு நமக்கு முன்மாதிரியாக உள்ளது"
என்று கூறுகிறார்.
திருத்தந்தை 12ம் பயஸ் (Pope Pius XII), டோமினிக் சாவியோவுக்கு
1950ம் ஆண்டு, மார்ச் மாதம், 5ம் நாளன்று, அருளாளர் பட்டமும்,
1954ம் ஆண்டு, ஜூன் மாதம், 12ம் தேதியன்று, புனிதர் பட்டமும்
வழங்கி உரை நிகழ்த்தியபோது, "இளைஞர்கள் சாவியோவின் வழிகளைப்
பின்பற்ற வேண்டும். தீய சக்திகளின் தாக்கங்களைப் புறக்கணித்து,
தூய்மையில் நிலைத்து நின்ற சாவியோவின் புனித வாழ்க்கை இளைஞர்களுக்கு
சிறந்த எடுத்துக்காட்டு" என்று கூறினார். |
|
|