Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ பிசா நகர் புனிதர் போநா ✠ (St. Bona of Pisa)
   
நினைவுத் திருநாள் : (மே/ Mai- 29)

✠ பிசா நகர் புனிதர் போநா ✠ (St. Bona of Pisa)

கன்னியர்:
(Virgin)

பிறப்பு: கி.பி 1156
பிசா, இத்தாலி
(Pisa, Italy)

இறப்பு: கி.பி 1207
பிசா, இத்தாலி
(Pisa, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: கி.பி 1962
திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான்
(Pope John XXIII)

நினைவுத் திருநாள்: மே 29

பாதுகாவல்:
பயணிகள், கூரியர்கள், வழிகாட்டிகள், யாத்ரீகர்கள், விமான பணிப்பெண்கள், பிசா

பிசா நகர் புனிதர் போநா, அகஸ்தீனிய மூன்றாம் நிலை (Third Order of the Augustinian nuns) கன்னியர் சபையின் உறுப்பினர் ஆவார். அவர் பயணிகளை யாத்திரைகளுக்கு வழிநடத்த உதவினார். கி.பி. 1962ம் ஆண்டில், திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான் இவரை கத்தோலிக்க திருச்சபையில் ஒரு புனிதராக அருட்பொழிவு செய்தார். அவர் பயணிகளின் பாதுகாவல் புனிதராக கருதப்படுகிறார். குறிப்பாக கூரியர்கள், வழிகாட்டிகள், யாத்ரீகர்கள், விமான பணிப்பெண்கள் மற்றும் பிசா நகரம் ஆகியவற்றின் பாதுகாவலராவார்.

வாழ்க்கை:
பிசா நகரை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு சிறு வயதிலிருந்தே தெய்வீக தரிசனங்கள் காணும் அனுபவங்கள் வாய்த்ததாக கூறப்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில், தூய கல்லறை தேவாலயத்தில் (Holy Sepulchre Church) சிலுவையில் அறையப்பட்ட திருச்சொரூபம் ஓன்று, அவளுக்கு கையில் கிட்டியது.

மற்றொரு தேவாலயத்தில், இயேசு, அன்னை கன்னி மரியாள், மற்றும் புனிதர் பெரிய யாக்கோபு (James the Greater) உள்ளிட்ட மூன்று புனிதர்களின் தரிசனத்தைக் கண்டார். இவர்களைச் சுற்றியிருந்த ஒளியால் அவள் பயந்து ஓடிப்போனாள். புனிதர் பெரிய யாக்கோபு, அவளைப் பின்தொடர்ந்து சென்று, அவளை இயேசுவின் திருச்சொரூபத்திடம் அழைத்துச் சென்றார். போநா, தமது வாழ்நாள் முழுதும், புனிதர் பெரிய யாக்கோபுவிடம் தீவிர பக்தி கொண்டிருந்தார். தமது பத்து வயதில், அவர் தன்னை ஒரு அகஸ்தீனிய மூன்றாம் நிலை கன்னியர் (Augustinian tertiary) சபையில் அர்ப்பணித்தார். சிறு வயதிலிருந்தே தவறாமல் உண்ணாவிரதம் இருந்தார். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும், ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே தமது உணவாக எடுத்துக் கொண்டார்.

இவர் மேற்கொண்ட பல பயணங்களின் முதல் பயணமாக, நான்கு வருடங்கள் கழித்து, ஜெருசலேமுக்கு (Jerusalem) அருகே நடந்துவந்த சிலுவைப் போரில் (Crusades) சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது தந்தையைக் காண பயணப்பட்டார். வீட்டிற்கு செல்லும் பயணத்தில், அவர் மத்தியதரைக் கடலில் (Mediterranean Sea) முஸ்லீம் கடற்கொள்ளையர்களால் (Muslim pirates) சிறைபிடிக்கப்பட்டார். அதில் காயமடைந்த அவர், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் தனது நாட்டு மக்களில் சிலரால் மீட்கப்பட்டு, வீட்டிற்கு செல்லும் தனது பயணத்தை முடித்தார்.

அதன்பிறகு, அவர் மற்றொரு புனித யாத்திரைக்கு புறப்பட்டார். இந்த முறை புனிதர் பெரிய யாக்கோபு கௌரவிக்கப்படும் இடமான, வடமேற்கு ஸ்பெய்ன் (Northwestern Spain) நாட்டிலுள்ள, "கலீசியா" (Galicia) பிராந்தியத்திலுள்ள, "சாண்டியாகோ டி காம்போஸ்டெலா" (Santiago de Compostela) நகருக்கு, நீண்ட மற்றும் ஆபத்தான ஆயிரம் மைல் பயணத்தில் ஏராளமான யாத்ரீகர்களை வழிநடத்தினார். இதற்குப் பிறகு, "நைட்ஸ் ஆஃப் செயிண்ட் ஜேம்ஸ்" (Knights of Saint James) என்றழைக்கப்படும், அப்போஸ்தலர் பெரிய யாக்கோபுவால் உருவாக்கப்பட்ட ஆன்மீக சபையினரால், இந்த யாத்திரை வழிப்பாதைகளில், அதிகாரப்பூர்வ வழிகாட்டிகளில் ஒருவராக அவர் நியமிக்கப்பட்டார். அவர், ஒன்பது தடவை, இந்த வழிப்பாதைகளில் வெற்றிகரமாக பயணங்களை நடத்தி முடித்தார்.

பின்னர், தமது உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், அவர் பத்தாவது பயணத்தை மேற்கொண்டு முடித்து, பிசா நகருக்குத் திரும்பினார். சிறிது காலத்திலேயே அவர் பிசா நகரில், உள்ள "சான் மார்டினோ" தேவாலயத்திற்கு (Church of San Martino) அருகில் தாம் தங்கியிருந்த அறையில் மரித்தார். அங்கு அவரது உடல் இன்றுவரை பாதுகாக்கப்படுகிறது.


 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா