Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் பெர்னார்டினோ ✠(St. Bernardino of Siena)
  Limage contient peut-tre : 1 personne  
நினைவுத் திருநாள் : (மே/ May 20)
✠ புனிதர் பெர்னார்டினோ ✠(St. Bernardino of Siena)

 *இத்தாலிய மதகுரு/ ஃபிரான்சிஸ்கன் மறைப்பணியாளர்:
(Italian Priest and Franciscan Missionary)

 *பிறப்பு : செப்டம்பர் 8, 1380
மஸ்ஸா மரிட்டிமா, இத்தாலி
(Massa Marittima, Italy)

 *இறப்பு : மே 20, 1444 (வயது 63)
அக்கிலா, இத்தாலி
(Aquila, Italy)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

 *புனிதர் பட்டம் : மே 24, 1450
திருத்தந்தை ஐந்தாம் நிக்கோலஸ்
(Pope Nicholas V)

 *நினைவுத் திருநாள் : மே 20

 *பாதுகாவல் :
விளம்பரதாரர்கள் (Advertisers), "அக்கிலா" (Aquila),
இத்தாலி (Italy), நெஞ்சு பிரச்சினைகள் (Chest problems),
சூதாட்ட அடிமைகள் (Gambling addicts),
கலிஃபோர்னியா (California),
"சேன் பெர்னார்டினோ மறை மாவட்டம்" (Diocese of San Bernardino)

புனிதர் பெர்னார்டினோ ஓர் இத்தாலிய மதகுருவும், ஃபிரான்சிஸ்கன் சபை மறைப்பணியாளரும் ஆவார். பதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் கத்தோலிக்க விசுவாசத்தினை புனரமைத்ததில் இவரது ஒப்பற்ற முயற்சிகளுக்காக இவர் இத்தாலியின் அப்போஸ்தலர் (The Apostle of Italy) என்றழைக்கப்பட்டார். சிறந்த நாவன்மை கொண்ட இவர், தமது பேச்சாற்றலால் சிறந்த மறை பரப்பாளர் என பெயர் பெற்றார்.

1380ம் ஆண்டு, இத்தாலி நாட்டின் "மஸ்ஸா மரிட்டிமா" (Massa Marittima) என்ற இடத்தின் அப்போதைய ஆளுநரான (Governor) "ஆல்பெர்ட்டோ" (Albertollo degli Albizeschi) என்பவரின் மகனாக பிறந்த பெர்னார்டினோ தமது ஆறு வயதிலேயே அனாதையாக விடப்பட்டார். பக்தியுள்ள தமது அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தார்.

1397ம் ஆண்டு, "அர்ச். மரியா டெல்லா ஸ்காலா பேராலயத்தின்" (Santa Maria della Scala Church) மருத்துவமனையின் "அன்னை மரியாளின் கூட்டுறவு" (Confraternity of Our Lady) எனும் அமைப்பில் இணைந்தார். மூன்று வருடங்களின் பிறகு, தமது 20 வயதில் ஏராளமான இளைஞர்களை நண்பர்களாகக் கொண்டிருந்த பெர்னார்டினோ "பிளேக்" (Plague) நோய் பரவியபோது, தமது நண்பர்களின் ஒத்துழைப்புடன் சமூகசேவை செய்யும் முழு பொறுப்பையும் ஏற்றார். அங்கு நாள்தோறும் குறைந்தது 20 பேர்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு பலியானார்கள். ஆனால் பெர்னார்டினோ இந்நோயைக் கண்டு பயப்படாமல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஈடுபாட்டுடன் தொண்டு புரிந்தார்.

1403ம் ஆண்டு, ஃபிரான்சிஸ்கன் சபையின் இளம் துறவியர் சபையில் (Order of Friars Minor) இணைந்தார். 1404ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். பின்னர் பல இடங்களுக்கும், கால்நடையாகவே சென்று, பல மணிநேரம் மறையுரை ஆற்றினார். ஃபிரான்சிஸ்கன் சபையின் தலைமைப் பொறுப்பேற்றார். நாளடைவில் திருத்தந்தையின் அதிகாரம் பெற்று இப்பதவியிலிருந்து விலகினார். மீண்டும் மக்களிடையே மறையுரையாற்றத் தொடங்கினார். உத்தம மனஸ்தாபம், திருப்பாடுகள், புண்ணியங்கள் மற்றும் அவரது காலத்தில் தாண்டவமாடிய கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றி மறையுரையாற்றினார். இயேசுவின் திருப்பெயரைச் சொல்லும்போது புண்ணியம் அடைகிறோம் என்றும், அன்னை மரியாளைப் பற்றியும், தூய வளனாரைப் பற்றியும் ஏராளமாக எடுத்துரைத்து மறையுரையாற்றினார். IHS என்பது இயேசு என்னும் திருப்பெயரின் சுருக்கம் என்றுணர்ந்து, இந்த 3 எழுத்துக்களையும் அழகாக ஓர் ஏட்டில் வரைந்து, அதை மக்கள் மீது வைத்து அவர்களை அர்ச்சித்து ஆசீர்வதிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இவரது அர்த்தமுள்ள, உருக்கமான மறையுரையைக் கேட்க, சில வேளைகளில் 50,000 பேருக்கும் மேலாக ஆலயத்திலும், வெளியிலும் காத்திருப்பார்கள். குருக்களைப் பற்றியும், கன்னியர்களைப் பற்றியும் பொதுநிலையினர் எப்போதும் தவறாக பேசாமல், மிகவும் கண்ணியமாகப் பேச வேண்டுமென்றும், அவர்களின் குற்றங்களைப் பொதுநிலையினர் பொது இடங்களில் பேசித் திரியக்கூடாது என்றும் இவர் எப்போதும் அறிவுரை கூறி வந்துள்ளார். இவர் IHS என்ற இயேசுவின் பெயருக்கு காட்டிய சிறப்பு பக்தி விளக்கம், விரைவில் மக்களிடையே பரவியது. இச்சின்னம் ஆலயங்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும் வரையப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. இதனால் இவர்மேல் பொறாமைக் கொண்ட சிலர் இவரைப்பற்றி மூன்று முறை திருத்தந்தையிடம் குற்றஞ்சாட்டினர். ஆனால் இவரது புனிதம், இக்குற்றச்சாட்டுகளின் நடுவே, முந்தைய நிலையைவிட மிகவும் அதிகமாகவே கூடியது. இவர் இத்தாலி நாட்டிலேயே மிகச்சிறந்த மறைபோதகப் பேச்சாளராக திகழ்ந்தார்.

இவர் சபைத்தலைவராக இருக்கும்போது வெறும் 300 பேர் மட்டுமே இச்சபையில் இருந்தனர். பல சீர்திருத்தம் பெற்றதன்பின், இச்சபை ஆல்போல் தழைத்து, இவரது இறுதி நாட்களில் ஏறக்குறைய 4000 பேராக பொலிவுடன் விளங்கியது. தன் மறைபோதக பணியால் பலரை இறைவன்பால் ஈர்த்த பெர்னார்டினோ இறைமகன் இயேசு விண்ணேற்பு அடைந்த நாளன்று மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா