Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் கரோலின் கெரார்டிங்கர் ✠(Blessed Karoline Gerhardinger)
   
நினைவுத் திருநாள் : (மே/ May 09)
✠ அருளாளர் கரோலின் கெரார்டிங்கர் ✠(Blessed Karoline Gerhardinger)

* மறை பணியாளர் : (Religious)

*பிறப்பு : ஜூன் 20, 1797
ஸ்டட்டமோஃப், பவரியா, தூய ரோம பேரரசு
(Stadtamhof, Bavaria, Holy Roman Empire)

*இறப்பு : மே 9, 1879 (வயது 81)
மூன்சேன், பவரியா, ஜெர்மன் பேரரசு
(Mnchen, Bavaria, German Empire)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : நவம்பர் 17, 1985
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

*நினைவுத் திருநாள் : மே 9

*பாதுகாவல் :
நோட்ரேடாம் பள்ளி சகோதரியர், கல்வியாளர்கள்
(School Sisters of Notre Dame, Educators)

அருளாளர் கரோலின் கெரார்டிங்கர் ஒரு ஜெர்மன் ரோமன் கத்தோலிக்க மறைபணியாளரும், "இயேசுவின் மரிய தேரேசியா" (Maria Theresia of Jesus) என அழைக்கப்பட்ட " நோட்ரேடாம் பள்ளி சகோதரியர்" (School Sisters of Notre Dame) அமைப்பின் நிறுவனரும் ஆவார். சிறந்த கல்வியாளராகிய இவர், தாம் நிறுவிய சபை ஐரோப்பா முழுதும் பரவ ஆரம்பிக்கும்வரை "பவரியாவில்" பணியாற்றினார்.

1797ம் ஆண்டு, ஜூன் மாதம், இருபதாம் நாளன்று, பவரியாவில் பிறந்த இவரது தந்தையார் "வில்லிபார்ட்" (Willibard) ஆவார். தாயாரின் பெயர் "ஃபிரான்சிஸ்கா கெரார்டிங்கர்" (Franziska Gerhardinger) ஆகும். இவர் தமது பெற்றோரின் ஒரே குழந்தை ஆவார்.

கெரார்டிங்கரின் பங்குத்தந்தை இவரை ஒரு ஆசிரியையாக ஊக்குவித்தார். 1809ம் ஆண்டு, தமது ஆசிரிய பயிற்சியை தொடங்கிய இவர், 1812ம் ஆண்டுமுதல் "ரேகன்ஸ்பர்க்" (Regensburg) நகரில் ஒரு பெண்கள் பள்ளியில் ஆசிரியை பணியாற்ற தொடங்கினார்.

அவர் "ரேகன்ஸ்பர்க்" ஆயரான (Bishop of Regensburg) "ஜார்ஜ் மைக்கேல் விட்மன்" (Georg Michael Wittmann) அவர்களிடம் தாம் துறவு வாழ்வில் நுழைய வழிகாட்டுமாறு வேண்டினார். 1816ம் ஆண்டு முதல் 1833ம் ஆண்டு வரை அவர் அதற்காக கற்றார்.

1833ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 24ம் தேதி முதல் தமது இரு சக அருட்சகோதரியருடன் இணைந்து துறவு வாழ்வினை தொடங்கினார். அதுவே " நோட்ரேடாம் பள்ளி சகோதரியர்" (School Sisters of Notre Dame) அமைப்பு நிறுவப்பட்டதன் முறையான நடைமுறையாக இருந்தது. அதிகாரப்பூர்வ அங்கீகாரத்துக்கான ஆரம்ப சிக்கல்கள் இருந்தாலும், பவரியா அரசனான "முதலாம் லுட்விக்" (Ludwig I) 1834ம் ஆண்டு, மார்ச் மாதம், அவரது கன்னியர் மடத்திற்கு அங்கீகாரம் அளித்தார். ரேகன்ஸ்பர்கிலுள்ள "புனித கல்லஸ்" (Saint Gallus chapel in Regensburg) தேவாலயத்தில் தமது ஆன்மீக உறுதிப்பாடுகளை ஏற்றுக்கொண்டார். அத்துடன், "இயேசுவின் மரிய தேரேசியா" (Maria Theresia of Jesus) என்ற பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார்.

1847ம் ஆண்டு, தமது இணை அருட்சகோதரியருடன் இணைந்து, தமது சபையினை விரிவாக்கம் செய்வதற்காகவும், ஜெர்மனிலிருந்து புலம்பெயர்ந்து வரும் மக்களின் நலன்களுக்காகவும் "ஐக்கிய அமெரிக்க நாடுகள்" (United States of America) சென்றார். 1850ம் ஆண்டு முதல் இவரது சபை இங்கிலாந்து (England) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் பரவ தொடங்கியது. 1865ம் ஆண்டு, இவரது சபைக்கு திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அங்கீகாரமளித்தார்.

1877ம் ஆண்டு, நோயில் வீழ்ந்த கரோலின் கெரார்டிங்கர் 1879ம் ஆண்டு, தமது 81 வயதில் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா