Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர்: இமெல்டா லம்பெர்ட்டினி ✠(Blessed: Imelda Lambertini)
   
நினைவுத் திருநாள் : (மே/ May 13)
✠ அருளாளர்: இமெல்டா லம்பெர்ட்டினி ✠(Blessed: Imelda Lambertini)

* பிறப்பு : 1322
பொலோக்னா, இத்தாலி
(Bologna, Italy)

*இறப்பு : மே 12, 1333 (வயது 11)
வால்டிபியேட்ரா, பொலோக்னா
(Valdipietra, Bologna)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : 1826
திருத்தந்தை 12ம் லியோ
(Pope Leo XII)

*நினைவுத் திருநாள் : மே 13

*பாதுகாவல் : புதுநன்மை பெறுவோர்

அருளாளர் இமெல்டா, இத்தாலி (Italy) நாட்டின் பொலொக்னா (Bologna) எனும் நகரில், "இகானோ லம்பெர்ட்டினி" (Egano Lambertini) மற்றும் "காஸ்ட்ரோ கலுஸ்ஸி" (Castora Galuzzi) ஆகியோரின் ஒரே மகளாக 1322ம் ஆண்டு பிறந்தார்.

5 வயது நிறைந்த இமெல்டா, திருநற்கருணையைப் பெறுவதற்கு அளவு கடந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனால், அவர் வாழ்ந்த 14ம் நூற்றாண்டின் காலகட்டத்தில், திருநற்கருணையைப் பெறுவதற்கு, குறைந்தது 14 வயதாகிலும் நிறைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஒவ்வொரு நாளும், திருப்பலிக்கு முன்னர் அச்சிறுமி பங்குத் தந்தையிடம் தன் ஆவலை வெளியிட்டாலும், பங்குத் தந்தை அவரை காத்திருக்குமாறு கூறிவந்தார்.

தமது 9வது வயதில் சிறுமி இமெல்டா டொமினிக்கன் (Dominican community) துறவு மடத்தில் இணைந்தார். 1333ம் ஆண்டு இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவுக்கு முந்தின நாள், சிறுமி இமெல்டாவின் ஆவல் அற்புதமாக நிறைவேறியது. 10 வயதான சிறுமி இமெல்டா, அன்றையத் திருப்பலி முடிந்தபின், கோவிலில் தனித்து செபித்துக் கொண்டிருந்தார். திருப்பலிப் பீடத்தை ஒழுங்கு செய்துகொண்டிருந்த அருட்சகோதரி ஒருவர், இமெல்டாவுக்கு முன் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைக் கண்டார். அதாவது, சிறுமி இமெல்டாவுக்கு முன், திவ்ய நற்கருணை, ஒளிவடிவில் மேலிருந்து இறங்கி வந்தது.

இதைக் கண்ட அருட்சகோதரி, உடனடியாகச் சென்று பங்குத்தந்தையையும், ஏனைய அருட்சகோதரிகளையும் அழைத்துவந்தார். திருநற்கருணையைக் கண்டதும், பங்குத்தந்தை, திருப்பலி ஆடைகளை மீண்டும் அணிந்து வந்து, அந்தரத்தில் ஒளிவீசியபடி நின்ற அந்த நற்கருணையை கையில் ஏந்தி, அதை, சிறுமி இமெல்டாவுக்கு வழங்கினார். திருநற்கருணையைப் பெற்றுக்கொண்ட இமெல்டா, கண்களை மூடி, ஒரு புன்னகையுடன் செபித்தார். அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று மற்றவர்கள் ஆலயத்தை விட்டுச் சென்றனர்.

பல நிமிடங்கள் சென்று, துறவு இல்லத்தின் தலைமைச் சகோதரி, சிறுமி இமெல்டாவை அழைத்துச்செல்ல கோவிலுக்கு வந்தார். செபத்தில் ஆழ்ந்திருந்த சிறுமியின் வதனத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. அருட்சகோதரி, சிறுமியின் பெயர் சொல்லி அழைத்தார். அவரிடம் அசைவு ஏதும் காணாததால், அவரது தோளில் மெலிதாக தட்டினார். உடனே சிறுமி நிலைகுலைந்து தரையில் வீழ்ந்தார். இமெல்டாவின் உயிர் பிரிந்திருந்தது.

சிறுமி இமெல்டா, போலோக்னா (Bologna) நகரிலுள்ள சேன் சிகிஸ்மோன்டோ (Church of San Sigismondo) ஆயலத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

1826ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் லியோ (Pope Leo XII), இச்சிறுமியை முக்திப்பேறு பெற்றவராக உயர்த்தினார்.

புதுநன்மை பெறும் அனைவருக்கும் இமெல்டா லம்பெர்த்தினி பாதுகாவலராக விளங்குகிறார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா