Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 தவக்காலம்

     
                                   பரிசுத்த வார சிந்தனைகள்
இயேசுநாதருக்குச் செய்யப்பட்ட 15 இரகசிய கொடுமைகள்

{ புனித கிளாரம்மாள் சபையைச் சேர்ந்த மதலேன் என்ற கன்னிகைக்கு கீழ்வரும் வெளிப்படுத்தல் அருளப்பட்டது உரோமையில் வாழ்ந்தவள்}

இயேசு மரிப்பதற்கு முந்திய இரவில் அவர் பூங்காவனத்தில் பிடிப்பட்டபின் வெளியில் தெரியாமல் அவருக்குச் செய்யப்பட்ட இரகசிய உபவாதைகளைப் பற்றி தனக்குக் கொஞ்சம் வெளிப்படுத்தும்படி மரிய மதலேன் நமதாண்டவாிடம் அன்போடு கேட்டு வந்தாள். அவளுடைய விருப்பத்தை ஆண்டவர்  ஏற்றுக் கொண்டு பின்வருமாறு அவளிடம் கூறினார் .

உலகத்திலுள்ள சகல மனிதர் களையும்விட அதிக ஈனமானவன் நான்தான் என்று யூதர்கள் கருதினார்கள். ஆகவே அவர்கள்:

1-- என் கால்களை ஒரு கயிற்றில் கட்டி கற்படிக்கட்டுகளின் படிகள் வழியாக என்னைக் கீழே இழுத்துக் கொண்டு போய் அசுத்தமான குமட்டுகிற நிலவறையில் தள்ளினார்கள்.

2-- என் துணிகளைக் கழற்றிவிட்டு கணுக்கள் உள்ள இரும்பால் என் தேகத்தைத் தேள் கொட்டவது போல் கொட்டினார்கள்.

3--- என்னை மண்ணில் கிடத்தி என் உடம்பைச் சுற்றி ஒரு கயிற்றைப் போட்டு அதன் இரு ஓரங்களையும் பிடித்துத் தரையில் என்னை இழுத்துக் கொண்டு போனார்கள்.

4--- உருவக்கூடிய முடிச்சுப் போட்டு என்னைக் கட்டி ஒரு மரக்கட்டையில் தொங்க விட்டார்கள். முடிச்சு உருவி அவிழ்ந்தபோது நான் கீழே விழுந்தேன். இந்த வாதையின் கொடுமை தாங்கமுடியாமல் நான் இரத்தக் கண்ணீரால் அழுதேன்.

5--- என்னை ஒரு கம்பத்தில் கட்டிவைத்து பற்பல ஆயுதங்களைக் கொண்டு என் தேகத்தில் குத்தினார்கள்.

6-- கற்களைக் கொண்டு என்னை அடித்தார்கள். தணலைக் கொண்டும் எரிபந்தங்களைக் கொண்டும் என்னைச் சுட்டார்கள்.

7--- செருப்புத் தைக்கிற ஊசியால் என்னைக் குத்தித் துளையிட்டார்கள். கூரிய ஈட்டிகளால் என் தோளையும் சதையும் கீறி இரத்த நரம்புகளைக் கிழித்தனர் .

8-- அவர்கள் என்னை ஒரு கம்பத்தில் கட்டி காய்ச்சப்பட்ட உலோகத் தகட்டில் வெறுங் காலாக நிற்க வைத்தார்கள்.

9--- ஒரு இரும்புத் தொப்பியை என் தலைமேல் வைத்து மிக மோசமான அசுத்தம் படித்த கந்தைகளால் என் கண்களைக் கட்டினார்கள்.

10--கூர்மையான ஆணிகளால் நிரம்பிய ஒரு நாற்காலியில் என்னை உட்கார வைத்தார்கள். இதனால் ஆழமான காயங்கள் ஏற்பட்டது.

11-- என் உடலிலுள்ள இக்காயங்களில் காய்ச்சிய ஈயத்தையும், குங்குலியத்தையும். ஊற்றினார்கள். இந்த வாதனைக்குப்பின் மறுபடியும் என்னை அந்த ஆணி நாற்காலியில் உட்காரச் செய்ததால் ஆணிகள் மேலும் ஆழமாக சதைக்குள் சென்றது.

12--- வெட்கமும் வேதனையும் எனக்கு உண்டாகும் படியாக என் தாடி முடிகளைப் பிடிங்கிய துவாரங்களில் ஊசிகளை ஏற்றினார்கள்.பின்னர் என்னைப் புறங்கை கட்டி அந்த நிலவறைச் சிறையில் என்னை அடித்துக் குத்திக் கொண்டே வெளியே நடத்திக்கொண்டு போனார்கள்.

13-- அவர்கள் என்னை ஒரு சிலுவை மேல் கிடத்தி அதிலே இறுக்கமாக என்னைக் கட்டினார்கள், என்னால் மூச்சுவிட முடியவில்லை.

14-- நான் அப்படித் தரையில் கிடக்கும்போது என் தலையில் மிதித்தார்கள். என் உடல்மேல் ஏறி நடந்தார்கள். இதனால் என் மார்பு காயப்பட்டது. பின் ஒரு முள்ளை எடுத்துக் கொண்டு என் நாவினுள் குத்தி செலுத்தினார்கள்.

15-- அவர்கள் என்னைப் பற்றி மிக ஆபாசமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே என் வாய்க்குள் மிக அசிங்கமான மனிதக் கழிவுப் பொருள்களை ஊற்றினார்கள்.

(இயேசுவின் உடலில் பட்ட அடிகள் 5480)

இதன் பின் இயேசு இந்த சகோதரியைப் பார்த்துக் கூறுவார் :
என் மகளே! இப்பதினைந்து கொடுமைகளையும் மதித்து வணங்கும்படியாக இவைகளை நீ எல்லோருக்கும் அறிவி. யார்  யார்  ஒவ்வொரு நாளைக்கு இவற்றில் ஒரு வாதனையை அன்போடு எனக்கு ஒப்புக் கொடுத்து பின்வரும்செபத்தைச் சொல்வார்களோ அவர்களை நடுத்தீர்வை நாளில் நித்திய மகிமையால் சன்மானிப்பேன் என்றார் .

செபம்.

என் ஆண்டவரே என் தேவனே! தேவரீர் உம்முடைய விலையேறப் பெற்ற திரு இரத்தத்தைச் சிந்திய இப்பதினைந்து இரகசிய வாதைகளை மகிமைப்படுத்துவது என்னுடைய மாறா விருப்பமாக இருக்கிறது. சமுத்திரக்கரைகளில் எத்தனை மணல் பரல்கள் இருக்கின்றனவோ, வயல்களில் எத்தனை தானிய மணிகள் உள்ளனவோ, பூமியின் மேடுகளில் எத்தனை புல் இலைகள் காணப்படுகின்றனவே, சோலைகளில் எத்தனை கனிகள் உள்ளனவோ, மரங்களில் எத்தனை மலர்கள் பூக்கின்றனவோ, வானத்தில் எத்துனை சம்மனசுக்களோ, பூமியில் எத்தனை சிருஷ்டிகளோ அத்தனை ஆயிரம் தடவைகள் தேவரீர் மகிமை பெறுவீராக! உயர்வு பெறுவீராக!

ஓ! மகா அன்புக்குப் பாத்திரமான ஆண்டவராகிய இயேசுவே! உம்முடைய மகா பரிசுத்த இருதயமும், உம்முடைய விலையேறப்பெற்ற திரு இரத்தமும், மனுக்குலத்திற்காக நீர் கொடுத்த தெய்வீகப் பலியும் மிகப் பரிசுத்தமான பீடத்தின் தேவதிரவிய அனுமானமும், மிகவும் பரிசுத்த கன்னிகையான மரியாயுடையவும், ஆசீர்வதிக்கப்பட்ட புனிதர்களின் வரிசைகளுடையவும், என்னுடையவும், சகலருடையவும் மகிமையும் புகழையும் உயர்வையும் பெறுவீராக! இப்பொழுதும் எப்பொழுதும் நித்திய காலமும் பெறுவீராக! ஆமென்.

                            
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்