|
|
11 ஜனவரி 2020 |
|
|
திருக்காட்சி விழாவுக்குப்பின் சனி |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாம் எதைக்
கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
5: 14-21
அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப
அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம்
அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை.
நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று
நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம்
என்னும் உறுதி நமக்கு உண்டு.
பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால்,
அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும்
அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச்
செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை.
தீச்செயல் அனைத்துமே பாவம். ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை
அல்ல. கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத்
தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர்
பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை.
நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின்
பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும். இறைமகன் வந்து உண்மையான
இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத்
தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு
கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே
நிலைவாழ்வு. பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 149: 1-2.
3-4. 5-6a,9b (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது:
அல்லேலூயா.
1 அல்லேலூயா, ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய
அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக்
குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை
முன்னிட்டுக் களிகூர்வார்களாக. பல்லவி
3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி,
யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள்மீது
விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றி
அளித்து மேன்மைப் படுத்துவார். பல்லவி
5 அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில்
சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6a அவர்களின் வாய் இறைவனை ஏத்திப்
புகழட்டும். 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும்
உரித்தானது. அல்லேலூயா! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 16
அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி
உதித்துள்ளது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மணமகனின் தோழர் அவர் சொல்வதைக்
கேட்டு பெருமகிழ்வடைகிறார்.
+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
3: 22-30
அக்காலத்தில் இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச்
சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக்
கொடுத்து வந்தார். யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில்
உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில்
அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று
திருமுழுக்குப் பெற்று வந்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்படுமுன்
இவ்வாறு நிகழ்ந்தது.
ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே
தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது. அவர்கள் யோவானிடம்
போய், "ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர்
இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது
அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம்
செல்கின்றனர்'' என்றார்கள்.
யோவான் அவர்களைப் பார்த்து, "விண்ணிலிருந்து அருளப்படா
விட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. `நான் மெசியா
அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்' என்று நான்
கூறியதற்கு நீங்களே சாட்சிகள்.
மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று
அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி
அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி
என்னுள் நிறைந்துள்ளது. அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்;
எனது செல்வாக்குக் குறைய வேண்டும்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யோவான் 3: 22-30
"அவரது செல்வாக்குப் பெருகவேண்டும்"
நிகழ்வு
ஒரு சமயம் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர்
இசை அரசராகத் திகழ்ந்த பீத்தோவன் கடைசிக் காலத்தில் வாழ்ந்த
அவருடைய இல்லத்தைப் பார்க்கச் சென்றார்கள். இல்லத்தில் இருந்த
பணியாளர், அந்த சுற்றுலாப் பயணிகளை இல்லத்தின் ஒவ்வொரு பகுதிக்கும்
கூட்டிச் சென்று, அங்கிருந்த பொருள்களைப் பற்றி விளக்கமாகச்
சொல்லிக்கொண்டு வந்தார்.
ஓரிடத்தில் பியானோ இருந்தது. அதை அந்தச் சுற்றுலாப் பயணிகளிடம்
சுட்டிக்காட்டிய பணியாளர், "இதுதான் பீத்தோவன் பயன்படுத்திய
பியானோ" என்றார். அவர் இவ்வாறு சொன்னதுதான் தாமதம், சுற்றுலாப்
பயணிகளில் இருந்த ஓர் இளம்பெண் பியானோவிற்கு முன்பாக போடப்பட்டிருந்த
இருக்கையில் அமர்ந்துகொண்டு, பீத்தோவன் இயற்றிய இசைத் துணுக்கு
ஒன்றைப் பியானோவில் மீட்டத் தொடங்கினார். அதிலிருந்து அற்புதமான
இசை பிறந்தது.
உடனே பியானோவை வாசித்துக்கொண்டிருந்த அந்த இளம்பெண் அருகிலிருந்த
பணியாளரிடம், "இந்தப் பியானோவைப் பார்த்தும் வாசிக்கத்
தோன்றுகின்றதே...! இங்கு வருகின்ற எல்லாரும் இந்தப் பியானோவை
வாசிப்பார்களா...?" என்றார். பணியாளர் மிகவும் பொறுமையாகப் பேசத்
தொடங்கினார்: "அப்படியெல்லாம் இல்லை. சில நாட்களுக்கு முன்பாக
மிகப்பெரிய பியானோ இசைக்கலைஞரான பதரெவ்ஸ்கி (Paderewski) தன்
குழுவினரோடு இங்கு வந்தார். அப்பொழுது அவருடைய குழுவினர் அவரிடம்,
"இந்தப் பியானோவை வாசியுங்கள். எப்படி இருக்கிறது என்று
கேட்போம்" என்றார்கள். அதற்கு அவர், "மிகப்பெரிய இசைமேதையான
பீத்தோவன் பயன்படுத்திய பியானோவை வாசிப்பதற்கு நான் தகுதியற்றவன்"
என்றார்." இதைக் கேட்ட அந்த இளம்பெண் எதுவும் பேசாமல் அமைதியானார்.
இசை உலகில் பதரெவ்ஸ்கிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. அவரே,
"பீத்தோவன் பயன்படுத்திய பியானோவை வாசிப்பதற்கு நான் தகுதியற்றவன்"
என்று சொன்னது, அவர் எந்தளவுக்குத் தாழ்ச்சி நிறைந்தவராக இருந்திருப்பார்
என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கின்றது. நற்செய்தியில்
தாழ்ச்சி மிகுந்த திருமுழுக்கு யோவானைக் குறித்து
வாசிக்கின்றோம். அவர் எந்தளவுக்குத் தாழ்ச்சி மிகுந்தவராக இருந்தார்
என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மெசியாவிற்கு முன்னோடியாக அனுப்பப்பட்ட திருமுழுக்கு யோவான்
நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் சீடர் சிலரும் யூதர் ஒருவரும்
அவரிடம் வந்து, "யோர்தான், ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு
ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே!
இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார்" என்கின்றார். இதற்கு
திருமுழுக்கு யோவான் என்ன மறுமொழி கூறினார் என்பதைக்
குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன், இதனுடைய பின்னணி
என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
திருமுழுக்கு யோவான் வடக்கு சமாரியாவில் உள்ள சலீம் என்ற இடத்திற்கு
அருகில் இருந்த அயினோன் என்ற இடத்தில் திருமுழுக்குக்
கொடுத்துக் கொண்டிருந்தார். மறுபக்கம் அதாவது யூதேயப் பகுதியில்
இயேசு தன்னுடைய சீடர்களோடு தங்கியிருந்து திருமுழுக்குக்
கொடுத்துக் கொண்டிருந்தார். உண்மையில் திருமுழுக்குக் கொடுத்தது
இயேசுவின் சீடர்கள்தானே ஒழிய, இயேசு அல்ல (யோவா 4:3). இப்பொழுது
என்ன சிக்கல் ஏற்பட்டது என்றால், இயேசுவிடம் திருமுழுக்குப்
பெற வந்த மக்களின் எண்ணிக்கை, திருமுழுக்கு யோவானிடம்
திருமுழுக்குப் பெற வந்த மக்களை விட அதிகமாக இருந்தது. இப்படிப்பட்ட
சூழ்நிலையில்தான் திருமுழுக்கு யோவானின் சீடர்களும் யூதர் ஒருவரும்
அவரிடம் வந்து, மேலே சொன்னதைச் சொல்கின்றார்கள். அவர்கள் சொன்னதைக்
கேட்டு, திருமுழுக்கு யோவான் பொறாமை கொள்ளவில்லை. மாறாக, "நான்
மெசியா அல்ல, மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்" என்று
தான் யார், தன்னுடைய பணியென்ன என்று மிக உறுதியாகக்
கூறுகின்றார்.
மெசியாவின் செல்வாக்குப் பெருகவேண்டும் என்று நினைத்த
திருமுழுக்கு யோவான்
திருமுழுக்கு யோவான் தன்னிடம் வந்தவர்களிடம் சொன்ன, இன்னொரு
சொற்றொடரும் நம்முடைய கவனத்திற்கு உரியது. அதுதான் "அவரது
செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறையவேண்டும்"
என்பதாகும். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், இப்படிப்பட்ட
வார்த்தைகளை உள்ளத்தில் மிகுந்த தாழ்ச்சி உள்ள ஒருவரால் மட்டுமே
சொல்லமுடியும். திருமுழுக்கு யோவான், தான் மெசியா அல்ல,
மெசியாவின் வருகைக்காக மக்களை ஆயத்தம் செய்து, அவர் வந்தபின்
மக்களுக்குச் சுட்டிக்காட்டுவதான் தன்னுடைய பணி என்பதை நன்கு
உணர்ந்திருந்தார். அதை அவர் சிறப்பாகச் செய்தார்.
திருமுழுக்கு யோவானைப் போன்று நாம் ஒவ்வொருவரும் இயேசுவை மக்களுக்குச்
சுட்டிக்காட்டவேண்டும். இப்பணியை நாம் தாழ்ச்சியான உள்ளத்தோடு
செய்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை
"கடவுளுக்கு முன்பாகத் தாழ்ச்சியோடு நடந்துகொள்வதைத் தவிர வேறு
எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?" (மீக் 6:8) என்பார் இறைவாக்கினர்
மீக்கா. ஆகையால், நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று
தாழ்ச்சியோடு இருப்போம்; தாழ்ச்சியோடு பணிசெய்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
1 யோவான் 5: 14-21
கடவுளின் திருவுளமும் நமது இறைவேண்டலும்
நிகழ்வு
புனித அகஸ்டின் தன்னுடைய "The Confessions" என்ற நூலில்
குறிப்பிடுகின்ற நிகழ்வு இது. அகஸ்டின், கார்தேஜிலிருந்து உரோமைக்குச்
செல்ல முயன்றபொழுது அவருடைய தாய் மோனிக்கா, "நீ உரோமைக்குச்
செல்லவேண்டாம்... என்னுடனே இரு" என்று அவரைத் தடுத்தார்.
மோனிக்கா, அகஸ்டினை அவ்வாறு தடுத்ததற்குக் காரணம், அகஸ்டின் உரோமைக்குச்
சென்றால், "கெட்டுப் போய்விடுவார்" என்று நினைத்ததாலேயே. ஆனால்,
அகஸ்டின் உரோமைக்குச் செல்வதில் குறியாய் இருந்தார். அதற்கு
அவர் தன் தாயிடம் சொன்ன காரணம், "உரோமையில் நண்பர் ஒருவர் இருக்கின்றார்.
அவரைப் பார்க்கவேண்டும்" என்பதாகும்.
அகஸ்டின் சொன்ன இந்தக் காரணத்தை மோனிக்காவால் ஏற்க முடியவில்லை.
அதனால் அவர் தன் மகன் உரோமைக்குச் செல்லக்கூடாது என்று இறைவனிடம்
தொடர்ந்து மன்றாடி வந்தார். ஆனால், மோனிக்கா இறைவனிடம்
வேண்டிக்கொண்டதற்கு மாறாக, அகஸ்டின் உரோமைக்குச் சென்றார். அங்குதான்
அவர் மனமாற்றம் அடைந்து புதிய மனிதராக வாழத் தொடங்கினார்.
இது குறித்து அகஸ்டின் குறிப்பிடும்பொழுது, "என்னுடைய தாயின்
விருப்பம் நான் கார்த்தேஜிலேயே இருக்கவேண்டும் என்பதாக இருந்தது.
அதற்காவே அவர் தொடர்ந்து இறைவனிடம் மன்றாடி வந்தார். ஆனால் இறைவனின்
விருப்பமோ திருவுளமோ நான் உரோமை நகருக்குச் செல்லவேண்டும்.
அங்கு நான் மனமாற்றம் அடைந்து, புதியதொரு மனிதனாக வாழவேண்டும்
என்பதாக இருந்தது. இறுதியில் இறைவனின் திருவுளமே நிறைவேறிற்று"
என்று குறிப்பிடுகின்றார்.
புனித அகஸ்டினின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வு நமக்கொரு
முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில்,
சில நேரங்களில் இறைவனிடம் நாம் வேண்டியதற்கு அவரிடமிருந்து பதில்
கிடைக்கவில்லை என்று தோன்றலாம். ஆனால், நாம் கேட்டதை விட மேலான
ஒன்றைத் தருவதற்காகவே அவர் நம்முடைய வேண்டுதலுக்குப் பதிலளிக்காமல்
இருக்கின்றார் என்பதாகும். இன்றைய முதல் வாசகத்தில், புனித
யோவான், "நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின்,
அவர் நமக்குச் செவி சாய்க்கின்றார்" என்று கூறுகின்றார். இவ்வார்த்தைகளைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் கேட்பதற்குச் செவிசாய்க்கும் இறைவன்
சில நேரங்களில் நாம், "இறைவனிடம் நான் ஒரு விண்ணப்பத்தை எடுத்து
வைத்து மன்றாடினேன்; ஆனால் இறைவன் என்னுடைய விண்ணப்பத்தைக்
கேட்கவில்லை" என்று குறைபட்டுக் கொள்வதுண்டு. மற்றவர்களும் இவ்வாறு
குறைபட்டுக் கொண்டதை நாம் கேட்டதும் உண்டு. இத்தகைய
சூழ்நிலையில் நம் மன்றாட்டை இறைவன் ஏன் கேட்கவில்லை எனத்
தெரிந்துகொள்வது நல்லது.
இன்றைய முதல் வாசகத்தில் புனித யோவான், "நாம் கேட்பது திருவுளத்திற்கு
ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கின்றார்" என்று
கூறுகின்றார். அப்படியானால், நாம் கேட்பது இறைவனின் திருவுளத்திற்கு
ஏற்ப இருக்கவேண்டும். அப்பொழுது நாம் கேட்பது இறைவனிடமிருந்து
கிடைக்கும். இயேசுகூட, "உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது
போல, மண்ணுலகிலும் நிறைவேறுக" (மத் 6: 10) என்றுதான் வேண்டச்
சொல்கின்றார். பின்னாளில் அவர், "என் தந்தையே! இத்துன்பக் கிண்ணம்
என்னைவிட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம்
விருப்பப்படியே நிகழட்டும்" (மத் 26: 39) என்று தான் இறைவனிடம்
வேண்டுகின்றார். அப்படியானால், நாம் கேட்பது இறைவனின் திருவுளத்திற்கு
ஏற்ப அமைந்திருக்கின்றபொழுது கிடைக்கின்றது என்ற தெளிவு நமக்கு
இருக்கவேண்டும்.
இறைவனின் திருவுளத்தை எவ்வாறு அறிந்துகொள்வது?
நாம் கேட்பது இறைவனின் திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருக்கின்றபொழுதுதான்
கிடைக்கின்றது என்பதை அறிந்த நாம், இறைவனின் திருவுளத்தை எவ்வாறு
அறிந்துகொள்வது என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
இறைவனின் திருவுளத்தை அறிந்துகொள்வதற்கு நாம் செய்யவேண்டிய முதன்மையான
செயல், இயேசுவோடு ஒன்றித்திருப்பது ஆகும். இயேசுவோடு ஒன்றித்திருக்க,
நாம் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடக்கவேண்டும்
(யோவா 15:7) அப்பொழுது நம்மால் இறைவனோடு ஒன்றித்திருக்க
முடியும். மேலும் நாம் இறைவனின் திருவுளத்தை அறிந்துகொள்வதற்கும்
எதை இறைவனிடம் கேட்கவேண்டும் என்பதற்கும் தூய ஆவியார் நமக்குத்
துணைபுரிகின்றார் (உரோ 8: 26-27)
ஆகையால், நாம் தூய ஆவியாரின் துணையால், இயேசுவோடு ஒன்றித்து இறைவனிடம்
வேண்டினால் கேட்பது நிறைவேறும். ஒருவேளை நாம் கேட்பது
கிடைக்கவில்லை என்றால், அதை இறைவனின் திருவுளம் என ஏற்றுக்
கொள்வது நல்லது.
சிந்தனை
"என் கடவுளே, உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நாம்
மகிழ்ச்சியடைகிறேன்" (திபா 40: 8) என்பார் திருப்பாடல்
ஆசிரியர். ஆகையால், நாம் வேண்டுவது இறைவனின் திருவுளம் ஏற்ற
அளவில் மன்றாடுவோம். அவருடைய திருவுளத்தை நிறைவேற்றுவதில்
மகிழ்ச்சி கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|