|
|
09
ஜனவரி 2020 |
|
|
திருக்காட்சி
விழாவுக்குப்பின்
வியாழன் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும்
அன்பு செலுத்த வேண்டும்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
4: 19-5: 4
அன்பார்ந்தவர்களே, கடவுளே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால்
நாமும் அன்பு செலுத்துகிறோம். கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச்
சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர்.
தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர்,
கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. கடவுளிடம்
அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த
வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை.
இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர்.
நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது,
கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத்
தெரியவரும்.
ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு
அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை.
ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்;
உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 72: 1-2. 14-15bc. 17 (பல்லவி: 11)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை
நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு
வழங்குவாராக! பல்லவி
14 அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும்
விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது.
15bஉ அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது
ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! பல்லவி
17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ள வரையில்
அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசி பெற விழைவராக!
எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 4: 18-19
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர்
என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இந்த
மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
4: 14-22
அக்காலத்தில் இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத்
திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும்
பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார்.
எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி
ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.
இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது.
அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
"ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு
செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர்
விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும்
ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும்
ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.''
பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார்.
தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று
நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள்
கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார்.
அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று,
"இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'' எனக் கூறி எல்லாரும் அவரைப்
பாராட்டினர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 யோவான் 4: 19 - 5:4
"கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர்
சகோதரிகளிடமும்
அன்பு செலுத்தவேண்டும்"
நிகழ்வு
தாமஸ் என்றொரு கிறிஸ்தவர் இருந்தார். அவருக்குக் கடவுள்மீது
ஆழமான நம்பிக்கை உண்டு. அப்படிப்பட்டவர் தங்கச் சுரங்கத்தில்
வேலை பார்த்துவந்தார். அவர் வேலை பார்த்து வந்த பகுதியோ மிகவும்
ஆபத்தான பகுதி. அப்படியிருந்தும் அவர் எந்தவொரு முணுமுணுப்பும்
இல்லாமல், பொறுப்புடன் வேலை பார்த்து வந்தார். அவர் இவ்வாறு
வேலை செய்வதைப் பார்த்துவிட்டு, அவருக்குப் பொறுப்பாக இருந்தவர்
ஒருநாள் அவரை அழைத்தார்.
"தாமஸ்! அர்ப்பண உள்ளத்துடனும் மிகவும் பொறுப்புடனும் வேலை
பார்த்து வரும் உன்னைக் கண்டு நான் வியக்கின்றேன். ஆபத்தான பகுதியில்
நீ வேலை பார்த்து வந்தாலும், எந்தவொரு முணுமுணுப்பும் வேலை
பார்த்துவருகின்றாய். அதனால் நான் உன்னை ஆபத்தில்லாத பகுதியில்
வேலைக்கு அமர்த்துகின்றேன். நாளையிலிருந்து நீ ஆபத்தில்லாத பகுதியில்
வேலை செய்" என்றார் அந்தப் பொறுப்பாளர்.
அவர் சொன்னதைக் கேட்டு ஒரு வினாடி அமைதியாக இருந்த தாமஸ் அவரிடம்,
"ஐயா! என்மீது நீங்கள் காட்டும் கரிசனைக்கு நன்றி; ஆனால், என்னை
விட ஆபத்தான பகுதியில் திரிகோனி என்பவர் வேலை பார்த்து வருகின்றார்.
உடலளவில் மிகவும் வலுக்குறைந்தவரான அவருக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டது
என்றால், அவரை நம்பியிருக்கின்ற குடும்பம் மிகவும் பாதிக்கப்படும்.
எனக்கு உடலில் வலிமை இருக்கின்றது. அதனால் என்னால் எங்கு
வேண்டுமானாலும் வேலை பார்க்க முடியும். வலுக்குறைந்த அவரால்
ஆபத்தான பகுதியில் வேலை பார்க்க முடியாது. அதனால் ஆபத்தில்லாத
பகுதியில் திரிகோனியை வேலைக்கு அமர்த்துங்கள். நான் ஏற்கனவே
வேலை பார்த்து வரும் பகுதியில் வேலை பார்த்துக்கொள்கின்றேன்"
என்றார்.
தாமஸ் சொன்ன இவ்வார்த்தைகள் அவருடைய பொறுப்பாளரின் உள்ளத்தைத்
தொட்டன. அதனால் அவர் பெரிதும் உவகையடைந்து, "தாமஸ்! நீயல்லவா
கிறிஸ்தவர். ஆபத்தில்லாத பகுதியில் வேலை செய்ய வாய்ப்புக்
கிடைத்தும் அதை இன்னொருவருக்கு மனமுவந்து கொடுக்கின்றாயே...!
உன்னை நினைக்கையில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது.
அதனால் திரிகோனியையும் அவரோடு சேர்த்து உன்னையும் ஆபத்தில்லாத
பகுதியில் வேலைக்கு அமர்த்துகின்றேன்" என்றார்.
தாமஸ் கடவுள்மீது நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தார். அந்த
நம்பிக்கையின், அன்பின் வெளிப்பாடாக, தன்னோடு வேலை பார்த்து வந்த
வறியவர் ஒருவர்மீது அன்புகூர்ந்தார். அதனால் அவர் ஆபத்தில்லாத
பகுதியில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். நாமும் ஒருவர் மற்றவரிடம்
அன்பு கூரும்பொழுது கடவுளின் ஆசி நமக்கு மிகுதியாகக்
கிடைக்கும் என்று இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துச்
சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
யார் பொய்யர்?
திருத்தூதர் புனித யோவான் உண்மையான அன்பு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்
என்பதைக் குறித்துத் தொடர்ந்து தன்னுடைய திருமுகத்தில் பேசி வருகின்றார்.
இன்றைய முதல் வாசகத்திலும் அது தொடர்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில்
அவர், "கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக்கொண்டு தன் சகோதர்
சகோதரிகளை வெறுப்போர் பொய்யர்" என்று கூறுகின்றார். யோவான் ஏன்
இவ்வாறு கூறுகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
திருவிவிலியம் இறையன்புக்கு இணையாக பிறரன்பைக் குறிப்பிடுகின்றது
(மத் 24: 37-39). அந்த அடிப்படையில் பார்க்கின்றபொழுது, இறைவனை
அன்பு செய்கின்ற ஒருவர், தன்னோடு வாழும் சகோதர் சகோதரிகளையும்
அன்பு செய்யவேண்டும். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும்
கிடையாது. இன்னும் சொல்லப்போனால், யோவான் கூறுவது போன்று, கண்முன்னால்
இருக்கும் சகோதரர் சகோதரிகளை அன்பு செய்யாத ஒருவர் கண்ணுக்குப்
புலப்படாத கடவுளை அன்பு செய்ய முடியாது. அப்படி ஒருவர் தன் கண்முன்னால்
இருக்கும் சகோதரர் சகோதரியை அன்பு செய்யாமல் கண்ணுக்குப் புலப்படாமல்
இருக்கின்ற கடவுளை அன்பு செய்கின்றார் என்றால், அவர்தான் மிகப்பெரிய
பொய்யராக இருப்பார்.
இறையன்பும் பிறரன்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
கடவுளிடம் செலுத்துவோர் தன் சகோதரர் சகோதரியிடம் அன்பு செலுத்தவேண்டும்
என்று யோவான் மீண்டும் மீண்டுமாகக் கூறக் காரணம், இறைவன்மீது
அன்பு கொள்ளாத ஒருவர் பிறரை அன்பு செய்ய முடியாது... பிறரை அன்பு
செய்யாதவர் கடவுளை அன்பு செய்ய முடியாது என்பதால்தான். இன்னும்
சொல்லப்போனால், பிறரன்புக்கு அடித்தளமாக இருப்பது இறையன்பு. இறையன்போ
பிறரை அன்பு செய்யத் தூண்டுவதாக இருக்கின்றது. அதலால், இறையன்பும்
பிறரன்பும் ஒன்றுக்கொண்டு தொடர்புடையது... ஒன்றில்லாமல் இன்னொன்று
முழுமை பெறாது என்ற உண்மையை உணர்ந்து இறையன்போடும் பிறரன்போடும்
இருப்போம்.
சிந்தனை
"அன்பே திருச்சட்டத்தின் நிறைவு"(உரோ 13: 10) என்பார் புனித
பவுல். ஆகையால், நாம் திருச்சட்டத்தின் நிறைவாக இருக்கும் அன்பை
நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து இறைவனையும் பிறரையும் அன்பு
செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 4: 14-22
"தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று
நோக்கியிருந்தன"
நிகழ்வு
போதிக்கின்றபொழுது ஒருவர் எப்படிப் போதிக்கவேண்டும், யாரைப் பற்றிப்
போதிக்கவேண்டும் என்பதற்கு புனித பெர்னார்டு தன்னுடைய வாழ்க்கை
அனுபவத்திலிருந்து சொல்லக்கூடிய செய்தி இது.
ஒருமுறை அவர் ஒரு தொழுகைக்கூடத்தில் போதிக்க அழைக்கப்பட்டார்.
அவர் அங்கு போதித்தபொழுது, தான் எவ்வளவு பெரிய ஆள் என்று தன்னைக்
குறித்தே அதிகம் போதித்தார். அவருடைய போதனை முடிந்ததும், அவரிடம்
வந்த அந்தத் தொழுகைக்கூடத்தில் இருந்த ஒருசில மெத்தப் படித்த
மேதாவிகள் அவரிடம், "உங்களுடைய போதனை மிகவும் அருமையாக இருக்கின்றது...
மிகப்பெரிய ஆளான நீங்கள் எங்கள் நடுவில் வந்து போதிப்பது எங்களுக்கு
மிகவும் பெருமையாக இருக்கின்றது" என்று அவரைப் புகழ்ந்தார்கள்.
அவர்கள் அவரை அவ்வாறு புகழ்ந்தது, அவருக்கே ஏதோபோல் இருந்தது.
இதற்கடுத்து வந்த நாளில் அவர் (அதே தொழுகைக்கூடத்தில்) இயேசுவையும்
அவருடைய இரக்கத்தையும் முதன்மைப்படுத்திப் போதிக்கத் தொடங்கினார்.
அவருடைய போதனை முடிந்ததும், அவரிடம் வந்த ஒருசிலர்,
"இயேசுவையும் அவருடைய அன்பையும் முழுமையாக உணர்ந்துகொள்ளாமல்,
இத்தனை நாள்களும் நாங்கள் மிகப்பெரிய பாவிகளாக
வாழ்ந்துவிட்டோம். இன்றைய நாளில் உங்களுடைய போதனை மிகவும் அருமையாக
இருந்தது... அது எங்களுடைய உள்ளத்தைத் தொடுவதாக இருந்தது. இனிமேல்
நாங்கள் புது மனிதர்களாக வாழ்வோம்" என்று ஆண்டவரைப் போற்றிப்
புகழ்ந்துகொண்டே சென்றார்கள்.
தன்னுடைய வாழ்வில் நடந்த இந்த இரண்டு நிகழ்வுகளையும்
குறிப்பிட்டுப் பேசுகின்ற புனித பெர்னார்டு, போதிக்கும் பணியில்
ஈடுபட்டிருக்கின்ற ஒவ்வொருவரும் தன்னைப் பற்றியல்ல, இறைவனைப்
பற்றியும் அவருடைய அன்பையும் போதிக்கவேண்டும். அப்பொழுதுதான்
மிகப்பெரிய அளவில் மனமாற்றம் ஏற்படும்" என்பார்.
ஆம், இறைவனைப் பற்றியும் அவருடைய பேரன்பைப் பற்றியும்
போதிக்கின்ற பொழுது, அதனால் மிகப்பெரிய தாக்கம் அல்லது மனமாற்றம்
ஏற்படும் என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில்
போதிக்கின்றார். அவருடைய போதனை மக்கள் நடுவில் எத்தகைய தாக்கத்தை
ஏற்படுத்துகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்த இயேசு
யூதர்களின் சமய வாழ்வில் எருசலேம் திருக்கோயிலை அடுத்து,
தொழுகைக்கூடங்கள் முக்கிய இடம் வகித்தன. இவை யூதர்கள் பாபிலோனியர்களால்
நாடுகடத்தப்பட்டு, அந்நிய மண்ணில் வாழ்ந்துபொழுது, இறைவனிடம்
மன்றாட உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. மேலும் பத்து
யூதக்குடும்பங்களுக்கு ஒரு தொழுகைக்கூடம் இருந்ததாகும் சொல்லப்படுகின்றது.
இந்தத் தொழுகைக்கூடங்களில் ஷெம்மா (Shema) எனப்படும் இறைவார்த்தைப்
பகுதிகள் (எண் 15: 37-41; இச 6: 4-9; 11:13-21 வாசிக்கப்பட்டன;
அவற்றுக்கு விளக்கமும் அளிக்கப்பட்டன. இந்நிலையில் தூய ஆவியாரின்
வல்லமையை உடையவராய் ஊர்கள், நகர்கள்தோறும் போதித்துவந்த இயேசுவைக்
குறித்து நாசரேத்தில் இருந்த தொழுகைக்கூடத் தலைவர் கேள்விப்பட்டிருக்கக்கூடும்.
அதனால் அவர் இயேசுவை தொழுகைக் கூடத்தில் இறைவார்த்தையை
வாசித்து, அதற்கு விளக்க அளிக்கச் சொல்லியிருக்கக்கூடும். இயேசு
இறைவார்த்தையை வாசித்து, அதற்கு விளக்கம் அளித்தபொழுது, என்ன
நடந்தது என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் போதனையைக் கேட்டு வியந்த மக்கள்
தொழுகைக்கூடத்தில் இயேசு இறைவார்த்தையை வாசித்து, அதற்கு விளக்கம்
அளிக்க எழுகையில், இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு கொடுக்கப்படுகின்றது.
அவர் அதைப் பிரிக்கையில் எசாயா நூல் 61 ஆம் அதிகாரம் இடம்பெறுகின்றது.
அந்த அதிகாரத்தில்கூட இயேசு முதல் இரண்டு இறைவார்த்தையை மட்டும்
வாசித்துவிட்டு, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று
நிறைவேறிற்று" என்கின்றார். இயேசுவின் வாயிலிருந்து வந்த இவ்வார்த்தைகளைக்
கேட்டு தொழுகைக்கூடத்திலிருந்தவர்களோ வியந்து போகின்றார்கள்.
இதற்குப் பிறகு இயேசுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனது ஒரு பக்கம்
இருந்தாலும், அவருடைய போதனைக் கேட்டு அவர்கள் வியப்படைவதற்குக்
காரணமாக இருந்தது எது எனத் தெரிந்துகொள்வது நல்லது.
மத்தேயு நற்செய்தி 7:29 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: "அவர் மறைநூல்
அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்தார்." ஆம்,
இயேசு இறைவனின் அன்பையும் இரக்கத்தையும் போதித்தார். அவற்றை அதிகாரத்தோடு
போதித்தார். அதனால்தான் மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
இயேசு அதிகாரத்தோடு போதிக்கக் காரணம், அவர் மறைநூல் அறிஞர்களைப்
போலன்றி (மத் 23:3) வாழ்ந்ததைப் போதித்தார்; போதித்ததையே
வாழ்வாக்கினார்.
ஆகையால், நாமும் இயேசுவைப் போன்று போதித்ததை வாழ்வாக்கவேண்டும்;
ஆண்டவரின் இரக்கத்தையும் அன்பையும் போதிக்கவேண்டும். அப்பொழுதுதான்
நம்முடைய போதனை, நம்முடைய வாழ்க்கை பலருடைய உள்ளத்தைத் தொடும்.
சிந்தனை
"அவர் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்" (லூக் 24: 19) என்பார் லூக்கா நற்செய்தியாளர். ஆகையால், நாம்
சொல்லிலும் செயலிலும் வல்லவர்களாகத் திகழ்ந்து, ஆண்டவரின் அன்பை
எல்லாருக்கும் எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|