|
|
08
ஜனவரி 2020 |
|
|
திருக்காட்சி
விழாவுக்குப்பின்
புதன்கிழமை |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள்
நம்மோடு நிலைத்திருக்கிறார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
(4: 11-18)
அன்பார்ந்தவர்களே, கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால்,
நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு
கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது
அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால்
நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார்
எனவும் அறிந்துகொள்கிறோம். தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக
அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம்.
இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்;
அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள
அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார்.
அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும்
அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில்
இருக்கிறோம். எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை
கொண்டிருப்போம். இவ்வாறு நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது.
அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும்.
ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம்
கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 72: 1-2. 10. 12-13
(பல்லவி: 11) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு
நீதித்தீர்ப்பு வழங்குவாராக.
- பல்லவி
10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக்
கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக்
கொண்டு வருவார்கள்.
11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்;
எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.
- பல்லவி
12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும்
அவர் விடுவிப்பார்.
13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின்
உயிரைக் காப்பாற்றுவார்.
- பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(1 திமொ 3: 16 காண்க)
அல்லேலூயா, அல்லேலூயா! பிற இனத்தாருக்குப் பறை சாற்றப்பட்ட
கிறிஸ்துவே, உமக்கு மகிமை; விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பட்ட
கிறிஸ்துவே, உமக்கு மகிமை. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டனர்.
புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் (6: 45-52)
ஐயாயிரம் பேர் உணவு உண்ட பின் இயேசு கூட்டத்தினரை அனுப்பிக்
கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு
முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார்.
அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக
ஒரு மலைக்குச் சென்றார். பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில்
இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று
அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட
அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து
செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை.
அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, "அது பேய்" என்று எண்ணி அவர்கள்
அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர்.
உடனே இயேசு அவர்களிடம் பேசினார். "துணிவோடு இருங்கள்;
நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார்.
காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள். ஏனெனில்
அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 யோவான் 4: 11-18
எப்பொழுது கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்?
நிகழ்வு
தாயை இழந்த சிறுமி ஒருத்தி தன் தந்தையோடு வாழ்ந்து வந்தாள்.
அவளுடைய தந்தையோ பயங்கரக் குடிகாரர். அதனால் அவர் அவளை அடித்துத்
துன்புறுத்தி வந்தார். இதனால் வீட்டை விட்டு ஓடிப்போன அவள், அருள்சகோதரிகளால்
நடத்தப்பட்டு வந்த ஓர் அநாதை இல்லத்தில் அடைக்கலம் புகுந்தாள்.
அங்கிருந்த அருள்சகோதரிகள் அவளை நல்ல முறையில் கவனித்துக்
கொண்டார்கள்.
சிறுமி மெல்ல வளர்ந்து பெரியவளானாள். அருள்சகோதரிகளின்
வாழ்வால் தொடப்பட்ட அவள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாள். இதற்குப்
பின்பு ஒருநாள் அவள் அங்கிருந்த தலைமை அருள்சகோதரியிடம்
சென்று, தன்னுடைய தந்தையிடம் திரும்பிப் போவதாகச் சொன்னாள்.
"பல ஆண்டுகளுக்குப் பிறகு நீ உன்னுடைய தந்தையிடம்
செல்கின்றாய். அப்படிச் செல்கின்றபொழுது, அவர் உன்னை வீட்டில்
ஏற்றுக்கொள்ளாமல், முன்புபோல் அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினால்,
நீ என்ன செய்வாய்?" என்றார் அந்தத் தலைமை அருள்சகோதரி.
"என்னுடைய தந்தை என்னை வீட்டில் ஏற்றுக்கொள்ளாமல், அடித்துத்
துன்புறுத்தத் தொடங்கினால், நான் அவர் மனம்மாறவேண்டும் என்று
இறைவனிடம் மன்றாடுவேன்" என்றாள் சிறுமி.
"ஒருவேளை நீ அவர் மனம்மாறவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடியபொழுதும்
அவர் மனம்மாறாமல் உன்னை அடித்துத் துன்புறுத்தினால் நீ என்ன
செய்வாய்?" என்றார் தலைமை அருள்சகோதரி. "ஒருவேளை நான் அவர் மனம்மாறவேண்டும்
என்று மன்றாடியபொழுதும் மனம்மாறாமல் அவர் இருந்தால், அதிகதிகமாக
அவரை அன்புசெய்யத் தொடங்குவேன்" என்றாள் அவள். அவள் சொன்ன இவ்வார்த்தைகளைக்
கேட்டு மிகவும் மகிழ்ந்த அந்தத் தலைமை அருள்சகோதரி, "எல்லாம்
நல்லதாக நடக்கட்டும்" என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
இதற்குப் பின்பு அவள் அந்த அநாதை இல்லத்தை விட்டு, தன்னுடைய
வீட்டிற்குச் சென்றாள். அவள் அங்கு சென்றநேரம் அவளுடைய தந்தை
வழக்கம்போல் குடித்துவிட்டு வருவோர் போவோரையெல்லாம் தகாத
வார்த்தைகளால் திட்டிகொண்டிருந்தார். அவள் அவரிடம் சென்று பேசியபொழுது,
அவளை அவர் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அவள் அதனைப்
பொறுத்துக்கொண்டு அவர் மனம்மாறவேண்டும் என்று இறைவனிடம் உருக்கமாக
மன்றாடினாள். மட்டுமல்லாமல், அவர்மீது அவள் மிகுந்த அன்புகாட்டினாள்.
இதனால் அவருடைய உள்ளத்தில் மாற்றம் பிறந்து, அவளை அவர் தன் மகளாக
ஏற்றுக்கொண்டு, அவளைப் போன்று கிறிஸ்தவ மதத்திற்குத்
திரும்பினார்.
ஒருவர் மற்றவர்மீது காட்டும் உண்மையான அன்பு நிச்சயம் ஒருநாள்
பலனளிக்கும். அதை இந்த நிகழ்வு மிகவும் அருமையாக எடுத்துக்கூறுகின்றது
இந்த நிகழ்வில் வருகின்ற சிறுமி தன்னுடைய குடிகாரத் தந்தையிடம்
மிகுந்த அன்புகாட்டி, அவரை நல்வழிக்குக் கொண்டுவந்தாள். அதன்மூலம்
அவள் தன் தந்தையோடும் கடவுளோடும் ஒன்றிணைந்தார். இன்றைய முதல்
வாசகமும் நமக்கு இத்தகைய செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
ஒருவர் மற்றவர்மீது அன்புசெலுத்துவது நம்முடைய கடமை
திருத்தூதரான புனித யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் அன்பைக்
குறித்துத் தொடர்ந்து பேசி வருகின்றார். இன்றைய முதல் வாசகத்திலும்
அது தொடர்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் அவர் "கடவுள் இவ்வாறு
நம்மீது அன்புகூர்ந்தார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது
அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்" என்று
கூறுகூறுகின்றார். கடவுள் தம் ஒரே மகனையும் கையளிக்கும் அளவுக்கு
இவ்வுலகின்மீது அன்பு கூர்ந்தார். ஆதலால் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்
அன்பு செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்று கூறுகின்றார்
புனித யோவான்.
புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில்,
"நற்செய்தி அறிவிக்கவேண்டிய கட்டாயம் (கடமை) எனக்கு உள்ளது" (1
கொரி 9: 16) என்பார். நற்செய்தி அறிவிப்பது எப்படிக் கட்டாயமோ
அல்லது கடமையோ அப்படி ஒருவர் மற்றவரை அன்பு செய்வதும் கடமையாக,
கட்டாயமாக இருக்கின்றது. இதை நாம் உணர்ந்து வாழ்வது நல்லது.
அன்பு செலுத்துவோர் யாவரும் கடவுளோடு ஒன்றித்திருப்பர்
இன்றைய முதல் வாசகத்தில் புனித யோவான் சொல்லக்கூடிய இன்னொரு
முக்கியமான செய்தி, அன்புசெலுத்துவோர் யாவரும் கடவுளோடு ஒன்றித்திருப்பர்;
அவர்களோடு கடவுளும் ஒன்றித்திருப்பார் என்பதாகும். நற்செய்தியில்
இயேசு கூட இதே கருத்தினைத்தான், "என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர்
என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும்
அன்பு கொள்வார்" (யோவா 14: 21) என்று கூறுவார். ஆகையால், நாம்
கடவுளோடு ஒன்றித்திருக்க, அவரையும் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட
ஒவ்வொருவரையும் அன்பு செய்வது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
"அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக" (எபே
3: 17) என்பார் புனித பவுல். ஆகையால், நம்முடைய வாழ்க்கையில்
அன்பை அடித்தளமாகக் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 6: 45-52
"துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்"
நிகழ்வு
"Fear" (அச்சம்) என்ற நூலில் ஜான் ரத்போன் ஒலிவர் என்ற எழுத்தாளர்
குறிப்பிடுகின்ற ஒரு சிறிய நிகழ்வு. ஒரு நகரில் பிரபலமான மருத்துவமனை
ஒன்று இருந்தது. அதில் பெரியவர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை அங்கிருந்த மருத்துவர் நல்லமுறையில் கவனித்துக் கொண்டார்;
நல்ல முறையில் சிகிச்சை சிகிச்சை அளித்தும் வந்தார். எல்லாம்
நன்றாகச் சென்றுகொண்டிருந்த தருணத்தில், திடீரென்று ஒருநாள் அந்தப்
பெரியவருக்கு சாவைக் குறித்த அச்சம் வரத் தொடங்கியது. அதனால்
அவர் அலறத் தொடங்கினார்.
அப்பொழுது அங்கு வந்த மருத்துவர், பெரியவர் அச்சம் கொள்வதற்கான
காரணத்தை அவரிடம் கேட்டார். அவர் காரணத்தைச் சொல்லி முடித்ததும்
மருத்துவர் அவரிடம் பொறுமையாகப் பேசத் தொடங்கினார்: "எனக்குத்
தெரிந்த அளவில் யாரெல்லாம் கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை
கொண்டிருக்கின்றார்களோ, அவர்களெல்லாம் எதைக்குறித்தும்
குறிப்பாக சாவைக் குறித்து அச்சம் கொண்டிருப்பதில்லை. கிறிஸ்து
தன்னிடம் நம்பிக்கை கொள்வோருடைய உள்ளத்திலிருந்து எல்லாவிதமான
அச்சத்தையும் நீக்கிவிடுகின்றார். ஆதலால், நீங்கள்
கிறிஸ்துவின்மீது நம்பிக்கைகொண்டு வாழுங்கள். இனிமேல் உங்களுக்கு
சாவைப் பற்றிய அச்சமே வராது." மருத்துவர் சொன்ன வார்த்தைகளைக்
கேட்டு பெரியவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்.
அதன்பிறகு அவருக்கு சாவைப் பற்றிய அச்சம் வரவே இல்லை.
ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற ஒருவர் எதற்கும் அஞ்சத்
தேவையில்லை என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது
சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம்,
"துணிவோடிருங்கள்; நான்தான் அஞ்சாதீர்கள்" என்று கூறுகின்றார்.
இயேசு தன் சீடர்களைப் பார்த்துக் கூறுகின்ற இவ்வார்த்தைகள் எத்துணை
முக்கியத்துவம் வாய்ந்தவை, இவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கும்
உண்மை என்ன ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
தம் சீடரை உடனே அக்கரைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்திய இயேசு
நேற்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இன்றைய நற்செய்தி
வாசகம் இருக்கின்றது. நேற்றைய நற்செய்தியில் இயேசு ஐந்து அப்பங்களையும்
இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததைத் தொடர்ந்து,
மக்கள் அவரைப் பிடித்து அரசராக்க முயற்சி செய்கிறார்கள் (யோவா
6: 15). இதனால் இயேசு மக்களை அங்கிருந்து அனுப்பத் தொடங்குவார்.
சீடர்களும் அங்கிருக்கக்கூடாது என்று இயேசு அவர்களை அங்கிருந்து
மறுகரைக்கு அனுப்புகிறார். இயேசு தன் சீடர்களை உடனடியாக மறுகரைக்கு
அனுப்புவதற்கு மிக முக்கியமான காரணம், அவர்கள் இயேசுவை வெறுமனே
அருமடையாளங்களும் வல்ல செயல்களும் நிகழ்த்துபவராக மட்டும்
புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காகத்தான்.
பல நேரங்களில் நாமும்கூட இயேசுவை அருமடையாளங்களையும் வல்ல செயல்களும்
நிகழ்த்துபவராக மட்டுமே புரிந்துவைத்திருக்கின்றோம். இத்தகையதோர்
எண்ணத்தை நாம் நம்முடைய வாழ்விலிருந்து அகற்றுவது நல்லது.
தம் சீடர்களுக்குத் துன்பம் என்றதும் உதவ விரைந்து வந்த இயேசு
சீடர்களைத் தனக்கு முன்பாக அக்கரைக்கு அனுப்பும் இயேசு, தனியாக
மலைக்குச் சென்று, இறைவனிடம் வேண்டத் தொடங்குகின்றார். இயேசு
கிறிஸ்து போதிக்கும் பணி, நலப்படுத்தும் பணி என்று பல்வேறு பணிகளைச்
செய்தாலும், இறைவனிடம் வேண்டுவதற்கு நேரம் ஒதுக்குவது என்பது
அவர் தந்தைக் கடவுளிடம் கொண்டிருந்த அன்புறவைக் காட்டுகின்றது.
இன்று பலர் இறைவனிடம் வேண்டுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்று
சொல்வது மிகவும் நகைப்புக்குரியதாக இருக்கின்றது. இவர்கள் இயேசுவின்
எடுத்துக்காட்டைப் பின்பற்றி, இறைவனிடம் வேண்டுவதற்கு நேரம் ஒதுக்குவது
நல்லது.
இயேசு இறைவனிடம் வேண்டிக்கொண்டு மட்டும் இருக்காமல், சீடர்கள்
தண்டு வலிக்கத் துடிப்பதை உணர்ந்ததும், அவர்களுக்கு உதவிட
விரைந்து வருகின்றார். இயேசுவின் இச்செயல், நாம்
கேட்கும்முன்பே நம்முடைய தேவைகளை இறைவன் அறிந்திருக்கின்றார் (மத்
6:8) என்ற இறைவார்த்தைக்கு வலுசேர்ப்பதாய் இருக்கின்றது.
தம் சீடர்களை அஞ்சாதீர்கள் என்று திடப்படுத்தும் இயேசு
சீடர்களுக்கு ஒரு துன்பம் என்று இயேசு உதவ வருகையில், அவர்கள்
இயேசுவை பேயென நினைத்து அலறுகிறார்கள். அப்பொழுதுதான் இயேசு
அவர்களிடம், "துணிவோடிருங்கள்; நான்தான் அஞ்சாதீர்கள்" என்கிறார்.
இயேசு தன் சீடர்களுக்குச் சொல்கின்ற இவ்வார்த்தைகள், வாழ்க்கை
என்னும் பெரும் அலைகளும் புயற்காற்றும் நிறைந்த கடலில், பயணம்
செய்யும் நமக்கு ஆறுதலளிப்பவையாக இருக்கின்றன. ஆம், இயேசு நம்
ஒவ்வொருவருவரையும் பார்ப்பது, ஒவ்வொருநாளும் "அஞ்சாதே!"
"துணிவோடிரு" என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றார். ஆகையால்,
நாம் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, அச்சத்திலிருந்து
விடுபட்டு, துணிவோடு வாழ்க்கையை எதிர்கொள்வோம்.
சிந்தனை
"நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்" (எசா 28: 16) என்கிறது இறைவார்த்தை.
எனவே, நாம் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, எல்லாவிதமான அச்சத்திலிருந்தும்
விடுதலை பெறுவோம். இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
உடனே இயேசு சீடர்களிடம் பேசினார்.
'துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்' என்றார்'' (மாற்கு
6:51)
இயேசுவின் அன்புக்குரியவரே!
-- மனிதரின் வாழ்க்கையில் பல விதமான அச்சங்கள் எழுவதுண்டு. அச்சம்
என்பது நம் உள்ளத்தில் உறுதியான பிடிப்பு இல்லாத வேளையில் எழுகின்ற
கையறு நிலை. இதை அனுபவிக்கும் வேளையில் நாம் துணிந்து செயல்படுகின்ற
தன்மையை இழக்கிறோம். தயக்கம் நம்மை மேற்கொள்கிறது. இயேசுவின்
சீடர்களுக்கு இந்த அனுபவம்தான் ஏற்பட்டது. ''இயேசு கடல்மீது
நடப்பதைக் கண்டு சீடர்கள் அஞ்சிக் கலங்கினார்கள்'' (காண்க:
மாற் 6:49-50). சீடர்களுக்கு ஏற்பட்ட அச்சம் அவர்களுக்கு ஏதோ
தீங்கு நிகழக் கூடுமோ என்பது பற்றியல்ல. அவர்கள் இயேசுவின் செயலைக்
கண்டு அச்சம் கொண்டார்கள். கடல்மீது நடக்கும் செயல் சாதாரண மனிதருக்குச்
சாத்தியமல்ல என்பதால் ''அது பேய்'' என்றெண்ணி அவர்கள் அச்சம்
கொண்டார்கள். இயேசுவைப் பற்றிய உண்மை சீடர்களுக்குத்
தெரியாதிருந்தது.
-- அச்சத்தைப் போக்கும் வழி உண்மையைக் கண்டுகொள்வதே. மாயையை உண்மையென்றும்
உண்மையை மாயை என்றும் நினைக்கும்போது தவறு ஏற்படுவதோடு அத்தவற்றின்
காரணமாக நம் உறுதியான மனநிலை குலையப்போகும் ஆபத்து ஏற்படுமோ என்னும்
உணர்வு நம்மை மேற்கொண்டுவிடும்போதும் நாம் அச்சத்தால் பீடிக்கப்படுகிறோம்.
எனவே உண்மையைக் கண்டுகொள்ள நாம் எப்போதும் முயல வேண்டும். இயேசு
பற்றிய உண்மையை நாம் எவ்வளவு ஆழமாக அறிகிறோமோ அவ்வளவு ஆழமாக நம்
உள்ளத்தில் நம்பிக்கையும் வளரும். அப்போது அச்சத்திற்கு இடமிராது.
நமக்கு வாழ்வளிக்கும் கடவுள் தம் அருள்கொடைகளால் நம்மை நிரப்பி
நம்மை உறுதிப்படுத்துவார்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|