Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ ரோம் திருச்சபையின் முதல் மறைசாட்சிகள் ✠
(The First Martyrs of Rome)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 30)
✠ ரோம் திருச்சபையின் முதல் மறைசாட்சிகள் ✠(The First Martyrs of Rome)
 நினைவுத் திருநாள் : ஜூன் 30

மறைசாட்சி அல்லது இரத்தசாட்சி என்னும் சொல், இயேசு கிறிஸ்து மீது கொண்ட நம்பிக்கைக்காக, துன்புறுத்திக் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது. மேலும் எந்த ஒரு சமய (மறை) நம்பிக்கைக்காக இறந்த ஒரு நபரைக் குறிக்கும் சொல்லாகவும் இதைப் பயன்படுத்தலாம்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைக்காக அல்லது கொள்கைக்காக உயிர் தியாகம் செய்தவரை குறிக்கும் சொல்லாக விளங்கும் (Martyr) என்ற ஆங்கிலப் பதத்தின் தமிழ் வார்த்தை தியாகி என்பதாகும்.

சொல் பிறப்பு :
மறை என்பது சமயத்தைக் குறிக்கிறது. அதைச் சார்ந்து தோன்றும் மறைசாட்சி என்னும் சொல், சமய நம்பிக்கைக்கு சாட்சியாக உயிரைக் கையளித்தவர் என்ற பொருளில் உருவானது.

இரத்தசாட்சி என்னும் வார்த்தை, தங்கள் நம்பிக்கைக்காக இரத்தம் சிந்தி உயிர் நீத்தவர்கள் என்ற பொருளைத் தரும். பலர் நெருப்பில் எரிக்கப்பட்டும், நீரில் மூழ்கடிக்கப்பட்டும், எண்ணெய் கொப்பரையில் போட்டு பொரிக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதால், இச்சொல்லைப் பொதுவானதாக பயன்படுத்த முடியாது.

கிறிஸ்தவத்தில் :
கிறிஸ்தவ சமயம் தோன்றிய கி.பி. முதல் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கிறிஸ்தவர்கள் ரோமப் பேரரசில் அதிகமான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதன் பின்னரும், உலகின் பல்வேறு இடங்களில் நற்செய்தி அறிவிக்க சென்ற கிறிஸ்தவர்களும், பிற சமய அடிப்படைவாத குழுக்கள் நடுவே வாழும் கிறிஸ்தவர்களும் மறைசாட்சியாக இறக்கும் சம்பவங்கள் இந்நாள் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சிலுவையில் அறைதல், கல்லால் எறிதல், எண்ணெயில் பொரித்தல், தலையை வெட்டுதல், உயிரோடு தோலுரித்தல், நெருப்பில் எரித்தல், குளிர்ந்த நீரில் உறைய வைத்தல், ஈட்டியால் குத்துதல், கொடிய மிருகங்களுக்கு இரையாக்குதல், நீரில் அமிழ்த்துதல், நஞ்சு கொடுத்தல், துப்பாக்கியால் சுடுதல் போன்ற பல்வேறு முறைகளில் கிறிஸ்தவர்கள் மறைசாட்சியாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவ திருச்சபையின் மறைசாட்சியாக இறந்தவர் திருத்தொண்டர் ஸ்தேவான் ஆவார். ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். இதனால் யூதர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். அவர் முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார்.

கிறிஸ்துவுக்காக மறைசாட்சியாக உயிர் துறந்த முதல் திருத்தூதர், யோவானின் சகோதரரான யாக்கோபு ஆவார். அவர் வாளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். மேலும், திருத்தூதர் யோவானைத் தவிர மற்ற திருத்தூதர்கள் அனைவரும் மறைசாட்சியாக கொல்லப்பட்டே உயிர் துறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 64ம் ஆண்டில் ரோம் நகரில் நிகழ்ந்த பெரும் தீ விபத்தின் அழிவுக்குப்பின், மாமன்னன் நீரோ (Nero) முதன்முறையாக திருச்சபையை வாட்டி வதைத்தபோது, மெய்யடியார்கள் பலரும் மிகக் கொடிய வேதனைகளுக்கு ஆளாகி கொல்லப்பட்டார்கள். ஏற்பட்ட தீ விபத்தானது, 6 நாள் பகலும், 7 நாள் இரவும் அதற்கு மேலும் கொழுந்து விட்டெரிந்தது. அப்போது மன்னன் நீரோ வெகுளித்தனமாக உடைகள் அணிந்துகொண்டு, ஒரு கோபுர உச்சிக்கு சென்று தீப்பிழம்புகளை கண்டு களித்தான். அவன் வெகுளித்தனமாக இவ்வாறு கண்டுகளித்ததை பார்த்த பலரும், நீரோவே தீயை வளர்க்க ஆணை பிறப்பித்திருப்பானோ என்று ஐயமுற்றனர்.

எப்படியும் தீயை அணைக்க அவன் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. இதனால் நீரோவே தீ தொடர்ந்து தீ எரிய வழிவகுத்திருக்கலாம் என்ற ஐயம் வலுப்பட்டது. இதையறிந்த நீரோ மன்னன், கிறிஸ்தவர்களே இதற்கு காரணம் என்று திசை திருப்பிவிட்டான்.

டாசிட்டஸ் (Tacitus) என்ற வரலாற்று ஆசிரியர், அப்போது இந்த குற்றச்சாட்டை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிடுகின்றார். இருப்பினும் கிறிஸ்தவர்களை ஒன்றாக சேர்க்க ஆணையிட்டான். தனது பெரிய நந்தவனத்திலேயே அவர்களை கூட்டிக் கிறிஸ்தவர்கள் மீது தார் எண்ணெய் ஊற்றி அவர்களை ஓர் இரவு முழுவதும் சுட்டெரித்தான். இதனை கண்ட மக்கள் ஆத்திரமும், பயமும் கொண்டு வெளியேறினார்கள்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா