Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜஸ்டின் ✠(St. Justin)
   
நினைவுத் திருநாள் : (ஜூன்/ juin 01)
✠ புனிதர் ஜஸ்டின் ✠(St. Justin)

* மறைசாட்சி :(Martyr)

*பிறப்பு : கி.பி. 100
ஃபிளேவியா நேபோலிஸ், ஸமரியா (தற்போதைய நப்லஸ்)
(Flavia Neapolis, Samaria (modern-day Nablus)

*இறப்பு : கி.பி. 165 (வயது 65)
ரோம், ரோமப் பேரரசு
(Rome, Roman Empire)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
லூதரனியம்
(Lutheranism)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

*நினைவுத் திருநாள் : ஜூன் 1

புனிதர் ஜஸ்டின், ஆதிகால கிறிஸ்துவுக்காக வாதிடுபவரும், இரண்டாம் நூற்றாண்டின் இறை வார்த்தைக் கோட்பாடுகளின் தலைசிறந்த மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமது சில மாணவர்களுடன் சேர்ந்து மறைசாட்சியாக உயிர்த் தியாகம் செய்தார். இவர் ரோமன் கத்தோலிக்கம், ஆங்கிலிக்கன் சமூகம், கிழக்கு மரபுவழி, லூதரனியம் மற்றும் ஓரியண்டல் மரபுவழி ஆகிய திருச்சபைகளால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இவர் கி.பி. 100ம் ஆண்டில் சமாரியா நாட்டிலுள்ள "ஃபிளேவியா நேபோலிஸ்" (Flavia Neapolis) என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ரோம் நாட்டைச் சேர்ந்தவர்கள். பாகனிய விசுவாசத்தை (Pagan family) சேர்ந்தவர்கள். இவர் தம்மைத் தாமே யூதரல்லாத புர இனத்தவரென வரையறுத்துக்கொண்டார். இவர் நல்ல கல்விப் பயிற்சி பெற்றார். இவரது காலத்தில் கல்வி ஸ்தாபனங்கள் ஒன்றுக்கொன்று மாறான போதனைகளைப் போதித்தன. இந்தப் போதனைகள் எதுவும் இவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இவரது சந்தேகங்களை அகற்றவில்லை.

பல்வேறு பாகன் தத்துவங்களை கற்றறிந்த இவர், கிறிஸ்தவராக மனம் மாறிய பிறகும் இவரது கற்றலும் தேடலும் முடிவுக்கு வரவில்லை. தமது இளமையில் முக்கியமாக "பிளேட்டோ பள்ளியால்" (School of Plato) ஈர்க்கப்பட்டார். கிறிஸ்தவம் வாழ்க்கையின் ஒவ்வொரு பெரிய கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்ததையும், தத்துவவாதிகளை விட நன்றாகவே உள்ளதையும் கண்டறிந்தார்.

பாகனிய விசுவாசத்தை விட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறிய பிறகும் தமது பழைய தத்துவஞானியின் கையற்ற மேலாடையையே அணிந்து வந்தார். கிரேக்க மெய்யியலின் சிறந்த கூறுபாடுகளை அவர் கிறிஸ்தவ மதத்துடன் இணைத்தார்.

அவரைப் பொறுத்தவரை, தத்துவயியல் என்பது, கிறிஸ்தவ போதகர் என்றும், ஒருவனை கிறிஸ்துவை நோக்கி அழைத்துச் செல்லும் கல்வி என்றும் உணர்ந்திருந்தார்.

ஜஸ்டின், பாகன்களின் தவறான புரிந்துணர்வு மற்றும் கிறிஸ்தவத்திற்கெதிரான தாக்குதல்களை எதிர்த்து வக்காலத்து வாங்குபவராக அல்லது எதிர்த்து வாதிடுபவராக (Apologist) இருந்தார்.

கிறிஸ்தவ மதத்தின்பால் இவருக்குள்ள உறுதியான ஈடுபாடு காரணமாக, கி.பி. 165ம் ஆண்டு, ரோம் நகரில் இவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

==================================================================================

தூய ஜஸ்டின் (ஜூன் 01)

"இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவர். மாறாக என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கின்ற எவரும் வாழ்வடைவர்" என்றார் (மத் 16: 24-25)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஜஸ்டின் பாலஸ்தீன நாட்டில் உள்ள சமாரியாவில் கி.பி. 100 வது ஆண்டில் பிறந்தார். இவருக்கு சிறு வயது முதலே நல்ல தத்துவத்தைக் கற்றறிய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனவே இவர் பலரிடம் சென்று தத்துவத்தைக் கற்றறிய முற்பட்டார். ஆனால் யார் கற்றுக்கொடுத்த தத்துவமும் இவருக்கு மனநிறைவைத் தரவில்லை.

இந்த சமயத்தில்தான் இவர் எபேசுஸ் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தபோது பெரியவர் ஒருவர் இவரிடம் கிறிஸ்துவைக் குறித்து போதிக்கத் தொடங்கினார். கிறிஸ்து மானிடர் யாவருக்காகவும் தன்னுடைய உயிரையே தந்தார். அதன்மூலம் மக்களை அவர்களுடைய பாவத்திலிருந்து விடுவித்து அவர்களுக்கு மீட்பினைத் தந்தார். அவருடைய நினைவாக பலரும் அவருக்காக தங்களுடைய இரத்தத்தைச் சிந்தி, மறைசாட்சியாக உயிர்துறக்கிறார்கள் என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்.

பெரியவர் சொன்ன வார்த்தைகளால் தொடப்பட்ட ஜஸ்டின் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவராக மாறினார். மட்டுமல்லாமல், அதுவரைக்கும் மனித வாழ்க்கை தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையையும் கிறிஸ்தவ மறையில் கண்டுகொண்டார். இதனால் கிறிஸ்தவ நெறி அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. எனவே அவர் அதுவரைக்கும் கற்றுவந்த பிளேட்டோவின் தத்துவார்த்த சிந்தனைகளையும் கிறிஸ்தவ நெறியின் தத்துவார்த்த சிந்தனைகளையும் இணைத்து புதிய தத்துவார்த்த சிந்தனையினை உலகிற்கு அளித்தார். அதோடு கூட கிறிஸ்தவ நெறியை எங்கும் துணிவோடு அறிவிக்கத் தொடங்கினார்.

இவர் இப்படித்தான் தன்னுடைய முதல் நற்செய்தி அறிவிப்பைத் தொடங்கினார்: "ஆதித் தாய் ஏவாளால் இந்த உலகத்தில் பாவம் நுழைந்தது. ஆனால், மரியாவால் இந்த உலகிற்கு மீட்பு வந்தது". இவருடைய நற்செய்தி அறிவிப்பினால் பலரும் கிறிஸ்துவைப் பின்பற்றத் தொடங்கினார்கள். ஜஸ்டின் அவர்களை ஆண்டவருடைய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டார். அவரும் அவருடைய அன்புக் கட்டளைக்கு இணங்கி ஆண்டவரின் நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிக்கத் தொடங்கினார்கள்.

இதற்கிடையில் மார்குஸ் அரேலியஸ் என்ற உரோமை மன்னன் கிறிஸ்தவத்தைப் பின்பற்றக்கூடியவர்களை சிறைபிடித்து சித்ரவதை செய்யத் தொடங்கினான். ஜஸ்டினும் அவருடைய நண்பர்களும் கிறிஸ்தவத்தை எல்லாருக்கும் அறிவிக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களை விசாரணைக்கு உட்படுத்தினான். விசாரணையின்போது உரோமை அரசனும் ஆளுநனும் ஜஸ்டின் மற்றும் அவருடைய நண்பர்களிடம், "நீங்கள் கிறிஸ்தவை மறுதலித்துவிட்டு, உரோமைக் கடவுளை வழிபடுங்கள். அப்படிச் செய்தால், நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்" என்று வஞ்சக வார்த்தைகளைப் பேசினார்கள். ஆனால் அவர்கள் நயவஞ்சககர்களின் வார்த்தைகளுக்கு அடிபடியாமல் கிறிஸ்தவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார்கள்.

இதனால் சினம் கொண்ட அரசன் ஜஸ்டினையும் அவருடைய நண்பர்களையும் தலைவெட்டிக் கொன்றுபோட்டான். கி.பி. 165 ஆம் ஆண்டு இதே நாளில் ஜஸ்டின் ஆண்டவர் இயேசுவுக்காக ஜஸ்டின் இரத்தம் சிந்தி தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜஸ்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கிறிஸ்துவ விசுவாசத்தில் உறுதியாக இருத்தல்


தூய ஜஸ்டினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருத்தல் என்பதுதான். உரோமை அரசனும் ஆளுநனும் ஜஸ்டினிடம், "உரோமைக் கடவுளை வணங்கினால், உன்னைக் கொல்லாமல் உயிரோடு விட்டுவிடுவோம்" என்று பசப்பு மொழி பேசினார்கள். ஜஸ்டினோ அதற்கெல்லாம் மயங்காமல் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார். அதனாலே அவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டார்.

தூய ஜஸ்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று கிறிஸ்தவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் சோதனைக்கும் இன்னலுக்கும் இக்கட்டுக்கும் உள்ளாகின்றபோது விசுவாசக் குறைபாடு ஏற்பட்டு வீழ்ந்து போகின்றோம். இந்நிலை நம்மிடத்தில் இருந்து மறைய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் மீது உள்ள விசுவாசத்தில் மிக உறுதியாக இருக்கவேண்டும்.

ஆகவே, தூய ஜஸ்டினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா