Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனித இரேனியஸ் ✠(St. Irenaeus)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 28)
✠ புனித இரேனியஸ் ✠(St. Irenaeus)

 ஆயர், மறைசாட்சி : (Bishop and Martyr)

பிறப்பு : கி.பி. 130
ஆசியா மைனரிலுள்ள ஸ்மைர்னா (தற்போதய துருக்கி)
(Smyrna in Asia Minor (modern-day İzmir, Turkey)

இறப்பு : கி.பி. 202 (வயது 72)
லுக்டுனும், கௌல் (தற்போதய லியோன், ஃபிரான்ஸ்)
(Lugdunum in Gaul (modern-day Lyon, France)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு கத்தோலிக்கம்
(Eastern Catholicism)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
லூதரனிய திருச்சபை
(Lutheran Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
கிழக்கு அசிரியன் திருச்சபை
(Assyrian Church of the East)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)

நினைவுத் திருவிழா : ஜூன் 28

லியோன் நகர புனிதர் இரேனியஸ், அந்நாளைய ரோமப் பேரரசின் ஒரு பகுதியாய் விளங்கிய "கௌல்" (Gaul) பிரதேசத்திலுள்ள (தற்போது லியோன், ஃபிரான்ஸ்) "லுக்டுனும்" என்னும் மறைமாவட்டத்தின் ஆயரும் (Bishop of Lugdunum), துவக்க கால திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவரும், கிறிஸ்தவ மறையின் வாத வல்லுனரும் ஆவார். இவரின் எழுத்துகள் ஆரம்ப கால கிறிஸ்தவ இறையியலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர் திருத்தூதர் யோவானின் (St. John the Evangelist) சீடரான புனிதர் "பொலிகார்ப்பு'வின்" (St. Polycarp) சீடராவார்.

தொடக்க காலத்தில் "மறை நூல்" (Scriptures) என்னும் பொதுப் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்த விவிலிய நூல்களை கடவுள் மனிதரோடு செய்துகொண்ட "உடன்படிக்கையை" (Covenant) குறிக்கும் விதமாக "ஏற்பாடு" (Testament) என்று முதன்முதலில் அழைத்தவர் இவரே.

கி.பி. 185ம் ஆண்டளவில், இவர் ஞானக் கொள்கை (Gnosticism) என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தி "வாலண்டைன்" (Valentinus) என்பவரின் படிப்பினையை தப்பறை என அடையாளம் காட்டினார். அக்கொள்கையினை சாடி இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்த இவர், தமது சமகாலத்தவர்களில் பலரைப் போலல்லாமல், ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.

கி.பி. 161180ம் ஆண்டுகளினிடையே ரோமப் பேரரசன் (Roman Emperor) "மார்கஸ் ஔரெலியஸ்" (Marcus Aurelius) என்பவனின் ஆட்சி காலத்தில் நடந்த கிறிஸ்தவ துன்புருத்தல்களின்போது, இரேனியஸ் "லியோன்" (Church of Lyon) ஆலயத்தின் குருவாக இருந்தார். இக்காலத்தில், நகரத்தின் பல மறைப்பணியாளர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பலர் சேர்ந்து இரேனியஸிடம் "எதிர் கிறிஸ்தவம் மற்றும் அதன் கொள்கைகள்" சம்பந்தமான ஒரு கடிதத்தை கொடுத்து, அதனை ரோம் நகர் சென்று, திருத்தந்தை "எலுதேரியஸ்" (Pope Eleutherius) அவர்களிடம் கையளிக்க வேண்டினார்கள். கி.பி. 177ம் ஆண்டு, இப்பணியை நிறைவேற்ற அவர் ரோம் பயணித்தார். இந்த பணியானது, அந்த சந்தர்ப்பத்தில் அவரது தகுதிக்கு உறுதியான சாட்சியமாக விளங்கியது.

இரேனியஸ், ரோம் நகரிலிருந்த காலத்தில் "லியோன்" (Lyon) நகரில் கிறிஸ்தவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இரேனியஸ் "கௌல்" (Gaul) திரும்பினார். "புனிதர் போதினஸ்" (Saint Pothinus) மறை சாட்சியாக கொல்லப்பட, இரேனியஸ் லியோன் நகரின் இரண்டாவது ஆயராக பொறுப்பேற்றார்.

இவர் ஆயராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் இவருடைய பணிகள் பற்றி வெளியே தெரிய ஆரம்பித்தன என்று சுமார் நூற்றைம்பது ஆண்டுகளின் பிறகு இவரைப் பற்றிய சரித்திரங்களை எழுதிய "யூசேபியஸ்" (Eusebius) கூறுகிறார். கி.பி. 190 அல்லது 191ம் ஆண்டு, நடைமுறையிலுள்ள கொண்டாட்டங்களை விடாமுயற்சியுடன் கொண்டாடும் ஆசியா மைனர் கிறிஸ்தவ சமுதாயங்களை திசை திருப்ப வேண்டாமென்று திருத்தந்தை முதலாம் விக்டர் (Pope Victor I) அவர்களிடம் தமது செல்வாக்கினை செலுத்தியதாக எழுதியிருக்கிறார்.

மரியாளைப் பற்றி விரிவாக எழுதிய முதல் திருச்சபைத் தந்தை இவரே.
"வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால், மரியாள் கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார். மரியாள் தன் கீழ்ப்படிதலால் மனுக்குலம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக் காரணமானார்."
- புனித இரேனியஸ்

இவரது மரணம் பற்றின தகவல்கள் ஏதுமில்லை. ஆனால், ரோமன் கத்தோலிக்க திருச்சபையும், சில மரபுவழி திருச்சபைகளும் இவரை மறைசாட்சியாக ஏற்கின்றன. கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் நினைவுத் திருவிழா நாள் ஜூன் 28 ஆகும். லூதரனியமும், அதே நாளில் இவரின் விழாவினைச் சிறப்பிக்கின்றது. மரபுவழி திருச்சபைகளில் இவரின் விழா நாள், ஆகஸ்ட் 23 ஆகும்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா