Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கிரகொரியோ பார்பரிகோ ✠(St. Gregorio Barbarigo)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 18)
✠ புனிதர் கிரகொரியோ பார்பரிகோ ✠(St. Gregorio Barbarigo)

 கர்தினால் மற்றும் பதுவை மற்றும் பெர்கமோ மறைமாவட்டங்களின் ஆயர் :
(Cardinal and Bishop of Bergamo and Padua)

பிறப்பு : செப்டம்பர் 16, 1625
வெனிஸ், வெனிஸ் குடியரசு
(Venice, Republic of Venice)

இறப்பு : ஜூன் 18, 1697 (வயது 71)
பதுவை, வெனிஸ் குடியரசு
(Padua, Republic of Venice)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : ஜூலை 6, 1761
திருத்தந்தை பன்னிரெண்டாம் கிளமென்ட்
(Pope Clement XIII)

புனிதர் பட்டம் : மே 26, 1960
திருத்தந்தை 23ம் ஜான்
(Pope John XXIII)

நினைவுத் திருநாள் : ஜூன் 18

பாதுகாவல் :
பெர்கமோ மறை மாவட்டம்
(Diocese of Bergamo)
பதுவை மறைமாவட்டம்
(Diocese of Padua)

"கிரகொரியோ ஜியோவன்னி கேஸ்பர் பார்பரிகோ" (Gregorio Giovanni Gaspare Barbarigo) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் கிரகொரியோ பார்பரிகோ, "பெர்கமோ" (Bergamo) மற்றும் "பதுவை" (Padua) ஆகிய மறைமாவட்டங்களின் ஆயரும், இத்தாலிய ரோமன் கத்தோலிக்க கர்தினாலும் (Cardinal) ஆவார்.

கி.பி. 1689ம் ஆண்டு, மற்றும் கி.பி. 1691ம் ஆண்டுகளில் நடந்த திருத்தந்தையர் மாநாடுகளின்போது (Papal conclaves), இவரது இராஜதந்திரம் மற்றும் அறிவார்ந்த தன்மைகளால் இவர் தனித்துவ புகழ் பெற்றதுடன் அடுத்த திருத்தந்தைக்கான போட்டியிலும் முன்னணியில் இருந்தார்.

1625ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 16ம் தேதி, வெனிஸ் நகரில் பிறந்த புனிதர் கிரகொரியோ பார்பரிகோ, தமது பெற்றோரின் நான்கு குழந்தைகளில் மூத்த குழந்தை ஆவார். வெனிஸ் நகரின் செனட் சபையின் உறுப்பினரும், பிரபுவுமான "ஜியோவன்னி ஃபிரான்செஸ்கோ பார்பரிகோ" (Giovanni Francesco Barbarigo) இவரது தந்தை ஆவார். இவரது தாயாரின் பெயர், "லுக்றேசியா லியோனி" (Lucrezia Leoni) ஆகும். இவருக்கு ஆறு வயதாகையில் இவரது தாயார் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு மரித்துப்போனார்.

கிரகொரியோவின் தந்தை இவருக்கு தத்துவ ஆய்வுகள் மற்றும் கணிதம் ஆகியவற்றை கற்பித்தார். பிற ஆசிரியர்கள் இவருக்கு "லத்தீன்" மற்றும் "கிரேக்கம்" (Latin and Greek) மொழிகளைக் கற்பித்தனர்.

கிரகொரியோ, கி.பி. 1643ம் ஆண்டு, "அலாய்ஸ் கொன்டாரிணி" (Aloise Contarini) என்ற "வெநீஷிய" தூதருடன் (Venetian ambassador) இணைந்து "மூன்ஸ்ட்டர்" (Mnster) நகரில் நடந்த "வெஸ்ட்பாலியா" அமைதிப் பேச்சுவார்த்தைக்காக (Peace of Westphalia) சென்றார். (இந்த அமைதி ஒப்பந்தம், 1648ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 24ம் தேதி, கையெழுத்தானது).

அங்கே, "கொலோன்" (Cologne) நகருக்கான திருத்தந்தையின் தூதராக (Nuncio to Cologne) வந்திருந்த "பேராயர் ஃபாபியோ சிகி" (Archbishop Fabio Chigi) அவர்களுடன் நட்பு கிட்டியது. "பேராயர் ஃபாபியோ சிகி" எதிர்கால திருத்தந்தை "ஏழாம் அலெக்சாண்டர்" (The Future Pope Alexander VII) ஆவார். பின்னர் அவர் "ஹோலந்து" (Holland) நாட்டுக்கும், பின்னர் "ஃபிலாண்டேர்ஸ்" (Flanders) நாட்டுக்கும், அதன்பின்னர் "பாரிஸ்" (Paris) நகருக்கும் சென்றார். கி.பி. 1648ம் ஆண்டு, ஜூலை மாதம், வெனிஸ் திரும்பிய இவர், தமது கல்வியை பதுவை (Padua) நகரில் தொடர்ந்தார். கி.பி. 1650ம் ஆண்டு, அரசுப் பணி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தமது அரசியல் வாழ்க்கையை விருப்பமின்றி தொடங்கினார். கர்தினால் சிகியின் (Cardinal Chigi) அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கேட்பதற்காக கி.பி. 1653ம் ஆண்டின் குளிர்காலத்தில் ரோம் (Rome) பயணமானார். அங்கே, ஒரு துறவியாக வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறிய கர்தினால் அவர்கள், திருச்சபை வாழ்க்கையை தொடருமாறும், சட்டக் கல்வியில் முனைவராகுமாறும் ஆலோசனை கூறினார்.

1655ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 25ம் நாளன்று, நியதிச் சட்டம் மற்றும் சிவில் சட்டம் (Canon Law and Civil Law) ஆகிய இரண்டிலும் முனைவர் பட்டம் வென்ற கிரகொரியோ, அதே வருடம் டிசம்பர் மாதம் 21ம் தேதி குருத்துவ அருட்பொழிவு பெற்றார். திருச்சபை வாழ்க்கையை தொடருமாறு முன்னர் அறிவுரை கூறிய கர்தினால் அன்றைய திருத்தந்தை "ஏழாம் அலெக்சாண்டர்" (Pope Alexander VII) அவர்களை சந்திக்க கி.பி. 1656ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், ரோம் பயணித்தார்.

கி.பி. 1657ம் ஆண்டு, ஜூலை மாதம், 9ம் தேதியன்று, புதிய "பெர்கமோ ஆயராக" (Newest Bishop of Bergamo) திருத்தந்தை இவரை நியமித்தார். ஆயராக பொறுப்பேற்ற இவர், கி.பி. 1658ம் ஆண்டு, மார்ச் மாதம், 27ம் தேதியன்று, தமது மறை மாவட்டம் சென்றடைந்தார். மறைமாவட்டத்தின் 279 பங்குகளையும் ஒவ்வொன்றாக, தனித்தனியாக ஆய்வு செய்தார்.

அவர் ஒரு வெற்றிகரமான ஆயராக விளங்கினார். அவருடைய புகழ் மிகவும் பிரபலமாக விளங்கியது, அவரது பழைய நண்பர் (ஏழாம் அலெக்ஸாண்டர்) அவரை கி.பி. 1660ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 5ம் நாளன்று, கர்தினாலவைக்குள் (Cardinalate) உயர்த்தினார்.

கி.பி. 1664ம் ஆண்டு, அவர் புதிய "பதுவை" மறைமாவட்ட ஆயராக (Newest Bishop of Padua) நியமிக்கப்பட்டார். அவர் பதுவை மற்றும் பெர்கமோ குருத்துவ கல்லூரியை பெரிதாக்கினார். அத்துடன், காப்பகம் ஒன்றினையும் அச்சகம் ஒன்றினையும் அதனுடன் இணைத்தார்.

கர்தினால் கிரகொரியோ தமது மறைமாவட்டங்களின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் பயணித்து மறை கல்வி மற்றும் மறை பரப்பும் பணிகளைச் செய்தார். எழைகளின்பால் அவர் கொண்ட இரக்கம் அனைவரும் அறிந்ததே. தமது வீட்டுப் பொருட்களையும் ஆடைகளையும் ஏழைகளுக்கு தந்தார். ஒரு சமயம், தமது படுக்கையைக் கூட விற்று அதனை ஏழைகளுக்கு தந்தார்.

கர்தினால் கிரகொரியோ, ஒரு சுகவீனத்தின் பின்னர் கி.பி. 1697ம் ஆண்டு, ஜூன் மாதம், 18ம் நாளன்று, பதுவையில் மரித்தார். மறைமாவட்ட தேவாலயத்தில் (Diocesan Cathedral) அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா