Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர்கள் மர்செல்லினஸ் மற்றும் பீட்டர் ✠
(Saints Marcellinus and Peter)
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 02)
✠ புனிதர்கள் மர்செல்லினஸ் மற்றும் பீட்டர் ✠ (Saints Marcellinus and Peter)
 *மறைசாட்சியர் : (Martyrs)

*பிறப்பு : தெரியவில்லை

*இறப்பு : கி.பி. 304
ரோம் (Rome)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

*நினைவுத் திருநாள் : ஜூன் 2

புனிதர்கள் மர்செல்லினஸ் மற்றும் பீட்டர் இருவரும் நான்காம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் வாழ்ந்து, மறைசாட்சிகளாக மரித்த கிறிஸ்தவ புனிதர்கள் ஆவர்.

இவர்களைப்பற்றிய தகவல்கள் சிறிதளவே கிடைக்கப்பெற்றுள்ளன. மர்செல்லினஸ் ஒரு மத குரு (Priest) ஆவார். பீட்டர் ஒரு பேய் ஓட்டுபவர் (Exorcist) ஆவார். இருவரும் "டயோக்லேஷியன்" (Diocletian) எனும் ரோம பேரரசனின் ஆட்சி காலத்தில் நேர்ந்த கிறிஸ்தவ துன்புறுத்தல்களில் மரித்தவர்கள் ஆவர்.

திருத்தந்தை "முதலாம் டமாஸ்கஸ்" (Pope Damasus I) அவர்களால் வெளிப்படையாக எழுதப்பட்ட மரண சாசனம் ஒன்றில் புனிதர்கள் மர்செல்லினஸ் மற்றும் பீட்டர் ஆகியோர் துன்புறுத்தப்பட்ட விதம் மற்றும் அவர்களது மரணம் பற்றின விபரங்கள் காணக்கிடைக்கின்றன.

இவர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி "செவெரஸ் அல்லது செரேனஸ்" (Severus or Serenus) என்பவர், இப்புனிதர்கள் கொல்லப்படவேண்டிய இடத்தை தேர்வு செய்ய அவர்களையே சொன்னதாகவும், ரோம் நகரின் வெளியே மூன்று மைல் தொலைவில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அங்கேயே இவர்களிருவரும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், இவர்களை கொலை செய்த இருவர் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இவற்றை திருத்தந்தை "முதலாம் டமாஸ்கஸ்" (Pope Damasus I) எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், தெய்வீக வெளிப்பாடுகளால் தூண்டப்பட்ட "லூஸில்லா" (Lucilla) மற்றும் "ஃபிர்மினா" (Firmina) ஆகிய இரண்டு கிறிஸ்தவ பெண்கள் இப்புனிதர்களின் உடலை கண்டெடுத்து முறையாக அடக்கம் செய்ததாக குறிப்புள்ளது.

இப்புனிதர்களின் நினைவுத் திருநாள் ஜூன் மாதம் இரண்டாம் நாள் நினைவு கூறப்படுகின்றது.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய மார்செலினஸ் மற்றும் பீட்டர் (ஜூன் 02)

"பிலிப்பு நத்தனியேலைப் போய் பார்த்து, "இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிபிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சார்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்றார் (யோவான் 1:45)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூருகின்ற மார்செலினஸ் மற்றும் பீட்டர் இவரும் சமகாலத்தவர். மார்செலினசோ குருவானவர். பீட்டரோ தீய ஆவியை விரட்டக்கூடிய வல்லமை படைத்தவர்.

ஒரு சமயம் தீய பிடித்திருந்த அர்தேமிஸ் என்ற சிறை அதிகாரியின் மகளிடமிருந்து பீட்டர் தீய ஆவியை விரட்டி அடித்ததால் அர்தேமிஸ் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு அவருடைய குடும்பம் முழுவதும் கிறிஸ்தவ மறையைப் பின்பற்றத் செய்தார்.. இப்படி கிறிஸ்தவ மறையைத் தழுவிய அர்தேமிஸ் குடும்பத்தாருக்கு மார்செலினஸ்தான் திருமுழுக்குக் கொடுத்தார்.

இச்செய்தி அப்போது உரோமை அரசனாக இருந்த டயோக்ளசியனின் காதுகளை எட்டியது. உடனே அவன் வெகுண்டெழுந்து மார்செலினசையும் பீட்டரையும் கைது செய்து சிறையில் அடைத்தான். சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் கூட இருவரும் சும்மா இருக்கவில்லை. அவர்கள் இருவரும் அங்கிருந்த சிறைக் கைதிகளுக்கு ஆண்டவருடைய நற்செய்தியை துணிச்சலோடு அறிவிக்கத் தொடங்கினார்கள். இதனால் பலரும் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். இது மன்னனுக்கு கடுமையான சினத்தை உண்டு பண்ணியது. இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்ததற்காக இவர்களைச் சிறையில் அடைத்தால் இவர்களோ அங்கேயும் சென்று நற்செய்தி அறிவிக்கின்றார்களா என்று அவர்கள் இருவரையும் இரவோடு இரவாகப் பிடித்து ஓர் அடர்ந்த காட்டிற்கு இழுத்துச் சென்றான்.

அங்கே அவர்கள் இருவரையும் அவர்களுக்கான கல்லறையை தோண்டச் செய்தான். கொடுங்கோலன் டயோக்ளசியன். அவர்கள் இருவரும் தங்களுக்கான கல்லறைக் குழியைத் தோண்டியபிறகு, மன்னன் அவர்கள் இவருடைய தலையையும் வெட்டி, அந்த கல்லறைக் குழிகளில் அவர்களைக் கிடத்தினான். இவ்வாறு அவர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து தங்களுடைய இன்னுயிரை அவருக்காகத் துறந்தார்கள்.

மார்செலினஸ், பீட்டர் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி திருத்தந்தை டாமாசுசுக்குத் தெரியவந்தது. அவர் அவர்களுடைய கல்லறைக்குச் சென்று உரிய மரியாதை செலுத்தினார். இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கொன்ஸ்டாண்டிநோபில் என்ற உரோமை மன்னன் அவர்களுடைய கல்லறையில் ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினான்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம

தூய மார்செலினஸ் மற்றும் பீட்டரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்!


தூய மார்செலினஸ் மற்றும் பீட்டர் ஆகிய இருவரது வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர்கள் நற்செய்தி அறிவிப்பின்மீது கொண்டிருந்த ஆர்வம்தான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. இவர்கள் இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கின்ற ஆர்வத்தை நாம் கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாகத் தன் சீடர்களைப் பார்த்துச் சொல்வார், "நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்" என்று. (மாற் 16: 15). ஆம், நற்செய்தி அறிவிப்பது அதுவும் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிப்பது என்பது ஆண்டவர் இயேசு நம்முன்னே வைக்கின்ற வேண்டுகோளாக இருக்கின்றது. இந்த வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றுவதுதான் சீடத்துவ வாழ்விற்கு அர்த்தம் சேர்ப்பதாக இருக்கின்றது. நாம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவித்து, சீடத்துவ வாழ்விற்கு அர்த்தம் சேக்ர்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தூய பவுலடியார் ஆண்டவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே உள்வாங்கியவராய், "நான் நற்செய்தி அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உண்டு. நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு" (1 கொரி 9:16) என்கின்றார். ஆகவே, பவுலடியாரின் வார்த்தைகளை வைத்துப் பார்க்கின்றபோது நற்செய்தி அறிவிப்பானது எவ்வளவு முக்கியம், அது ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

ஆகவே, தூய மார்செலினஸ் மற்றும் பீட்டரின் நினைவுநாளைக் கொண்டாடும் அவர்களைப் போன்று நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம் கொண்டு வாழ்வோம். தேவைப்பட்டால் நம்முடைய உயிரையும் தர முன்வருவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா