Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் திருமுழுக்கு யோவானின் பிறப்பு ✠
(Nativity of Saint John the Baptist)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 24)
✠ புனிதர் திருமுழுக்கு யோவானின் பிறப்பு ✠ (Nativity of Saint John the Baptist)

 
இறைவாக்கினர், போதகர், கிறிஸ்துவின் முன்னோடி, மறைசாட்சி :

பிறப்பு : கி.மு. முதல் நூற்றாண்டின் இறுதி
  (Late 1st century BC)

இறப்பு : கி.பி. 31 32
மச்சேரஸ், பெரியா, லெவன்ட்
(Machaerus, Perea, the Levant)

ஏற்கும் சமயம் :
கிறிஸ்தவம்
(Christianity)
இஸ்லாம்
(Islam)

முக்கிய திருத்தலங்கள் :
புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், எருசலேம்,
நபி யமியாவின் கல்லறை, உமய்யாத் மசூதி, டமாஸ்கஸ், சிரியா
(Church of St John the Baptist, Jerusalem,
Tomb of Prophet Yahya, Umayyad Mosque, Damascus, Syria)

நினைவுத் திருவிழா :
ஜூன் 24 (பிறப்பு),
ஆகஸ்ட் 29 (இறப்பு)

இவர், கிறிஸ்துவின் முன்னோடியாக வந்த இறைவாக்கினரும், கிறிஸ்தவ சமயத்தின் பிரபலஸ்தரும் ஆவார். இறைமகன் இயேசுவின் உறவினரான இவர், யோர்தான் நதியில் திருமுழுக்கு கொடுத்து வந்தார். எனவே, மற்ற "யோவான்"களிடம் இருந்து, இவரைப் பிரித்து அடையாளப்படுத்தும் விதமாக "திருமுழுக்கு" என்ற அடைமொழி இவரது பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமில் இவர் "யஹ்யா"என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

யோவானின் பிறப்பு :
திருமுழுக்கு யோவானின் பிறப்பு பற்றிய செய்தி, லூக்கா நற்செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :

யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் செக்கரியா தூபம் காட்டுகிற வேளையில், அங்குத் தோன்றிய வானதூதர் அவரை நோக்கி, "செக்கரியா, உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்; தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார். வானதூதரின் வார்த்தைகளை நம்ப செக்கரியா தயங்கியதால், அவர் யோவான் பிறக்கும் வரை பேச்சற்றவராய் இருப்பார் என்று வானதூதர் கண்டிப்பாக கூறினார். அதன் விளைவாக, செக்கரியா பேச்சற்றவராய் ஆனார்.

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார். அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

குழந்தைப் பருவம் :

திருமுழுக்கு யோவானைப் பற்றி அவரது தந்தை செக்கரியா, "குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்" என்று இறைவாக்கு உரைத்தார்.

லூக்கா நற்செய்தியின் குறிப்புகள், இயேசுவின் தாய் மரியாவும், யோவானின் தாய் எலிசபெத்தும் உறவினர்கள் என்று குறிப்பிடுவதால், இயேசுவும் யோவானும் சிறுவயதில் சேர்ந்து விளையாடி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பல கிறிஸ்தவ ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் இயேசு சாதாரண உடையுடனும், யோவான் ஒட்டக முடியாலான ஆடையுடனும் காணப்படுகின்றனர்.

பழங்கால கிறிஸ்தவ மரபுகளின்படி, யோவானின் பெற்றோர் அவரது சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும், யோவான் பாலை நிலத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இயேசுவை சுட்டிக்காட்டும் காலம் வரும் வரை, யோவான் பாலை நிலத்திலேயே வாழ்ந்து வந்தார். தற்கால அறிஞர்கள், பாலைநிலத் துறவிகளாக வாழ்ந்த எஸ்சேனியர்களில் ஒருவராக யோவானும் இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். இயேசு பிறப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்த பாலைவனத் துறவிகள், தனிமையில் கடவுளை தியானித்து வந்ததோடு இஸ்ரயேலரின் மனமாற்றத்துக்கும் அழைப்பு விடுத்தனர். மனமாற்றத்திற்கு அடையாளமாக திருமுழுக்கு பெறும் சடங்கைத் தொடங்கி வைத்தவர்கள் இவர்களே என்று நம்பப்படுகிறது.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நிகழ்வு

ஹெப்ரோன் என்ற மலைநாட்டில் வாழ்ந்த எலிசபெத்து செக்கரியா தம்பதியினருக்கு அவர்களுடைய முதிர்ந்த வயதில் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. அந்நாளில் அக்கம் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அங்கு வந்திருந்தனர். அவர்கள் குழந்தையின் தந்தையினுடைய பெயரான செக்கரியா என்பதையே அதற்குச் சூட்ட இருந்தனர். ஆனால் குழந்தையின் தாயோ, குழந்தைக்கு யோவான் என பெயரிடச் சொன்னார். இதை கேட்ட மக்கள் குழப்பம் அடைந்தார்கள். வழக்கமாக தந்தையின் பெயரைத்தானே மகனுக்குச் சூட்டுவது வழக்கம். ஆனால் இவர் உறவினர்களிடத்தில் இல்லாத வேறொரு பெயரைச் சூட்டச் சொல்கிறாரே என நினைத்து, குழந்தையின் தந்தையாகிய செக்கரியாவிடம், "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்?"என்று சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் ஒரு எழுது பலகையைக் கேட்டு வாங்கி, அதில் யோவான் என்று எழுதினார். இதைக் கண்ட மக்கள்கூட்டம் வியந்துபோய் நின்றது. அப்போது வானதூதர் கபிரியேல் முன்னறிவித்தது போன்று செக்கரியாவின் நாவு கட்டவிழ்ந்தது.


வரலாற்றுப் பின்னணி

திருச்சபை புனிதர் ஒருவரின் இறப்பை விண்ணகப் பிறப்பைத்தான் விழாவாகக் கொண்டாடும். ஆனால் திருமுழுக்கு யோவானின் இறப்பு விழாவைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறது என்றால் அவர் திருச்சபையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என நாம் புரிந்துகொள்ளவேண்டும். திருச்சபை இறப்பு விழாவோடு பிறப்பு விழாவையும் கொண்டாடுகின்ற மற்ற இருவர் இயேசுவும் (டிசம்பர் 25), அன்னை மரியும் (செப்டம்பர் 08) அவர்.

ஆண்டவர் இயேசு சொல்வது போன்று திருமுழுக்கு யோவான் சாதாரண மனிதர் அல்ல, அவர் மனிதராகப் பிறந்தவர்களுள் பெரியவர் (மத் 11:11), மற்ற இறைவாக்கினர்கள் தாயின் கருவில் இருக்கும்பொழுது தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாக இருக்கலாம், ஆனால் திருமுழுக்கு யோவானோ தாயின் கருவில் இருக்கும்போது தூய ஆவியினால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டவர். (லூக் 1: 41), மற்ற இறைவாக்கினர்கள் மெசியாவைக் குறித்து முன்னறிவித்தார்கள். ஆனால் திருமுழுக்கு யோவானோ ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தார், அவர் வந்தபோது சுட்டிக்காட்டினார், அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். அதனாலேயே திருமுழுக்கு யோவான் மற்ற எல்லா இறைவாக்கினர்களையும் விட உயர்ந்தவராக இருக்கின்றார்.

திருமுழுக்கு யோவானின் பெற்றோர்களான செக்கரியாவும் எலிசபெத்தும் நீண்ட நாட்களாகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் கடவுளுடைய பார்வையில் நேர்மையுள்ளவர்களாக இருந்தார்கள் (லூக் 1:6), அதனால்தான் கடவுள் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுக்கு குழந்தைப் பேற்றினைத் தருகின்றார்.

ஆரோனின் வழிவந்தவரனான செக்கரியா எருசலேம் திருக்கோவிலில் தூபம் காட்டுகின்ற முறை வந்தபோது உள்ளே செல்கிறார். அப்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் காட்சி கொடுத்து, "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்"என்கிறார். இவ்வார்த்தைகளைக் கேட்டு செக்கரியா, "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவர் ஆயிற்றே"என்கிறார். உடனே வானதூதர் அவரிடம், "நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால், அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்"என்று ஆணையிட்டுவிட்டுச் செல்கிறார். விவிலியத்தில் வயது முதிர்ந்த தம்பதியினருக்கு இறைவன் குழந்தைப் பேற்றை அளித்திருகிறார் என்பதைத் தெரிந்தபின்னும்கூட செக்கரியா வானதூதரின் வார்த்தைகளை நம்பாததனால்தான் அவர் வானதூதரின் சினத்திற்கு உள்ளாகின்றார். யோவானின் பிறப்புக்குப் பிறகு அவர்மீது விழுந்த சாபம் விலகுகின்றது, அவருடைய நா கட்டவிழ்கிறது.

செக்கரியாவிற்கு நா கட்டவிழ்ந்த பிறகு அவர், கடவுள் ஆற்றிவரும் இரக்கச் செயல்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துகின்றார். அதே நேரத்தில் தன் மகன் மெசியாவிற்கு முன்னோடியாக இருந்து ஆற்ற இருக்கும் பணிகளைக் குறித்து எடுத்துரைக்கின்றார். யோவான் வளர்ந்த பிறகு தன்னுடைய தந்தை முன்னறிவித்தது போன்று ஆண்டவருக்காக மக்களைத் தயார்செய்து, அவரை மக்களுக்குச் சுட்டிக்காட்டி, அறநெறிக்குப் புறம்பாக வாழ்ந்த ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டி, அவராலேயே கொல்லப்பட்டு இறந்தார். திருமுழுக்கு யோவான் விவிலியத்தில் வந்த கடைசி இறைவாக்கினராக இருந்தாலும் அவர் மனிதர்களாய் பிறந்தவர்களுள் உயர்ந்தவராக விளங்குகின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்து பார்ப்போம்.


தாழ்ச்சி


திருமுழுக்கு யோவான் தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் ஆண்டவருக்காக மக்களைத் தயார்செய்த போது மக்கள் அனைவரும் அவருடைய குரலைக் கேட்பதற்காக கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். அப்போது அவர் நான்தான் மெசியா என்று சொல்லி, மக்களிடமிருந்து பேரையும் புகழையும் சம்பாதித்திருக்காலம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை, மாறாக அவர், "எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமைமிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை"(மத் 3:11) என்று சொல்லி தன்னைத் தாழ்த்திக்கொள்கிறார். அதனால்தான் என்னவோ அவர் எல்லாரையும் விட மேலானவராக உயர்த்தப்படுகின்றார்.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நமக்கு அவரிடத்தில் இருந்த தாழ்ச்சியும் எளிமையும் இருக்கின்றதா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு நாம் ஒரு சாதாரண பொறுப்பில், பதவியில் இருந்துகொண்டு நாம்தான் பெரியவர்கள் என்று காட்ட விளைகிறோம். ஆனால் திருமுழுக்கு யோவானோ மிகப்பெரிய இறைவாக்கினராக இருந்தபோதும் தாழ்ச்சியோடு இருந்தார். அதுதான் நாம் அவரிடமிருது கற்கவேண்டிய முதன்மையாக பாடமாக இருக்கின்றது.

முன்பொரு காலத்தில் தனஞ்ஜெயன் என்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவன் அடிக்கடி தன்னுடைய நாட்டில் இருந்த கவிஞர்களை அரண்மனைக்கு அழைத்து, அவர்களுக்கு இடையே போட்டி நடத்துவான். அந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுகிறாரோ அவருக்கு அரச மரியாதை கொடுத்து அனுப்புவான். அதன்படி ஒருமுறை நடந்த கவி பாடும் போட்டியில் பைரவா என்ற இளைஞன் வெற்றிபெற்றான். அவனுக்கு அரசன் இராஜமரியாதை கொடுத்து, அவனை யானையின்மீது ஏற்றிவைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தான். இது அவனுடைய உள்ளத்தில் கவிதையில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற கர்வத்தை ஏற்படுத்தியது. அதனால் அவன் கர்வத்தோடு யானையின்மீது பவனி வந்து, வீட்டை அடைந்தான்.

வீட்டில் அவனை வரவேற்க இருந்த அவனுடைய பெற்றோர்களை அவன் பேருக்கு வணங்கினானே ஒழிய, கர்வத்தோடு இருந்தான். இதைப் பார்த்த அவனுடைய பெற்றோர்கள் தன்னுடைய மகன் இப்படி மாறிவிட்டானே என சோகத்திற்கு உள்ளானார்கள். அப்போது அவன் தன்னுடைய பெற்றோர்களிடம், "மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய இந்த நேரத்தில், எதற்காக இப்படி சோகத்தோடு இருக்கிறீர்கள்?"என்று கேட்டான். அதற்கு அவர்கள், "மகனே உன்னுடைய முகத்தில் ஒருவிதமான கர்வ உணர்வு தெரிந்தது. அதுதான் எங்களுடைய சோகத்திற்கு காரணம். மேலும் நீ போட்டியில் வெற்றி பெற நாங்கள் இருவரும் எத்தனை நாட்கள் உண்ணாமல் உறங்காமல் உனக்காகப் பாடுபட்டோம், உனக்காக ஜெபித்தோம். அவற்றையெல்லாம் நீ மறந்துவிட்டு, ஏதோ உன்னுடைய முயற்சியினால்தான் போட்டியில் வெற்றிபெற்றதாக நினைத்து, கர்வத்தோடு இருக்கின்றாயே, அதுதான் எங்களுடைய சோகத்திற்குக் காரணம்"என்றார்கள். இதைக் கேட்ட அவன், தன்னுடைய தவறை உணர்ந்து வெட்கித் தலைகுனிந்து நின்றான்.

பதவியும் பெயரும் உயர உயர தாழ்ச்சியும் நம்மிடத்தில் பெருகவேண்டும், கர்வம் அல்ல, அதைதான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. ஆகவே நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று தாழ்ச்சியுள்ளவர்களாக வாழ முயற்சிப்போம்.


உண்மையைத் துணிவோடு எடுத்துரைத்தல்

திருமுழுக்கு யோவான் கடவுளின் வார்த்தையை - உண்மையை - மிகத் துணிவோடு எடுத்துரைத்தார். அதற்காக அவர் யாருக்கும் பயப்படவில்லை. தன்னிடம் திருமுழுக்குப் பெறவந்த யூதர்களிடம் விரியன் பாம்புக் குட்டிகளே என்கிறார். தன்னுடைய சகோதரனுடைய மனைவியோடு முறைதவறி வாழ்ந்த ஏரோதை கண்டிக்கிறார். இப்படியாக அவர் உண்மையின் உரைகல்லாக விளங்குகின்றார். இறுதியிலே தான் கொண்ட கொள்கைக்காக, இலட்சியத்திற்காக உயிர்துறக்கிறார். திருமுழுக்கு யோவானிடம் இருந்த துணிச்சலும் உண்மையை உரக்கச் சொல்லும் மனதிடமும் நம்மிடம் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் எதற்கு வம்பு என்று வாய் பொத்தி, கூனிக் குறுகி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவை போன்று, திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மைக்கு சான்று பகரகூடியவர்களாக இருக்கவேண்டும்.

தென் கொரியாவில் வாழ்ந்த புகழ் பெற்ற கவிஞர் கிம்சிட்டா (Kim Chi Tta) என்பவர். இவர் அரசாங்கம் அங்கே இருந்த ஏழை எளிய மக்களைக் கொடியவிதமாய் நடத்திய விதத்தைக் கண்டு, அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார். அதற்கு அரசாங்கம் அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. அதற்கு அவர், "நான் இறந்த பிறகும் மேலும் எட்டு ஆண்டுகள் எனக்கு சிறைத்தண்டனை விதித்துக்கொள்ளுங்கள். ஆனால் நான் யாருக்கும் பயப்படமாட்டேன்"என்று சொன்னார். எவ்வளவு துணிச்சலான வார்த்தைகள்.

ஆகவே, திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடம் இருந்த சாட்சிய வாழ்வையும், தாழ்ச்சியையும் எளிமையையும் நமதாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா