Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

மரியாள் இறைவனின் தாய் மற்றும் புத்தாண்டு பெருவிழா
  Limage contient peut-tre : 1 personne, texte  
நினைவுத் திருநாள் : ஜனவரி 01
 * தாய்மையுடன் புத்தாண்டில்

கிரகோரியன் காலண்டரின் முதல் நாளாகிய இந்த நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

(1) இது ஆண்டின் தலைநாள். இன்று புத்தாண்டுப் பெருவிழா. புதிய குழந்தை, புதிய மலர், புதிய ஆடை, புதிய மனிதர், புதிய இடம், புதிய வீடு, புதிய வாகனம், புதிய வேலை என புத்துணர்ச்சி அளிக்கும் வரிசையில் புதிய ஆண்டும் அடக்கம். காலண்டர், டைரி என அனைத்தையும் புதிதாகத் தொடங்குகின்றோம்.

(2) இன்று கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள். இந்த நாள்தான் "இயேசுவுக்கு" பெயர் சூட்டப்படும் நாள். "பெயரில் என்ன இருக்கிறது?" எனக் கேட்கிறார் ஷேக்ஸ்பியர். ஆனால் பெயரில் நிறையவே இருக்கிறது. தனக்குச் சூட்டப்பட்ட பெயர்போலவே வாழ்ந்து முடிக்கிறார் இயேசு. நம் மீட்பராகின்றார்.

(3) இன்று மரியாளின் தாய்மையின் விழா. மூவொரு இறைவனின் இரண்டாம் நபரை திருவயிற்றில் தாங்கியதால் இறைவனின் தாய் என்ற நிலைக்கு உயர்கின்றார்.

கிரேக்க கடவுள் "ஜானஸ்" (Janus) (from here is derived "January") போல இரண்டு தலை கொண்டவர்களாக - பின்னோக்கியும், முன்னோக்கியும் - நன்றி மற்றும் நம்பிக்கை கொண்டவர்களாக நிற்கின்றோம்.

முதல் வாசகம் எண் 6:22-27

"யோம் கிப்பூர்" நாளில் பரிகாரப் பலி செலுத்திவிட்டு, திருத்தூயகத்திலிருந்து வெளிவரும் தலைமைக்குரு அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு வழங்கும் ஆசியுரையே (காண். லேவி 9:22) இன்றைய முதல் வாசகம். இந்த ஆசீரின் இரண்டு முக்கிய கூறுகள் அருளும், அமைதியும். இந்த வார்த்தைகளை வைத்தே திருத்தூதர் பவுலும் பிற்காலத்தில் தன் கடிதங்களில் திருஅவையினரை வாழ்த்துகிறார் என்பதையும் நினைவில்கொள்வோம்.

இந்த ஆசீரை இறைவனே மோசே வழியாக ஆரோனுக்கு கற்றுத் தருகின்றார். எபிரேயத்தில் "ஆசீர்" என்றால் "செல்வம்" அல்லது "வளமை" என்பது பொருள். ஆக, ஒருவர் செல்வந்தராக இருக்கிறார் என்றால் அவர் இறைவனின் ஆசீர் பெற்றவர் என்று நாம் சொல்லலாம். அதற்காக செல்வம் இல்லாதவர்கள் எல்லாம் ஆசீர் இல்லாதவர்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த ஃபார்முலாவைத்தான் கால்வின் பயன்படுத்தி தன் சபையில் உள்ள எல்லாரையும் செல்வராக்கினார். எப்படி? கடவுள் உனக்கு ஆசீர் தருகிறார் என்றால் நீ செல்வந்தனாய் இருப்பாய். இதை அப்படியே கொஞ்சம் நீட்டி, நீ நன்றாக உழைத்து, செல்வம் சேர்த்தால், ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் என்று உணரலாமே என்று சொன்னார். இந்த பின்புலத்தில்தான் மேற்கத்திய ஐரோப்பாவில் தொழில்புரட்சி உருவானது.

தமிழ் மொழிபெயர்ப்பில் சின்ன சிக்கல் இருக்கிறது. அதாவது, "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!" என்பது "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!" என்று இருக்க வேண்டும். ஒருவேளை எபிரேயத்தின் மொழிநடை எல்லாவற்றையும் பிரித்து எழுதுகிறதோ என்னவோ.

மேலும், எபிரேய வாக்கிய அமைப்பில் முதல் ஆசியில் மூன்று வார்த்தைகளும், இரண்டாம் ஆசியில் ஐந்து வார்த்தைகளும், மூன்றாம் ஆசியில் ஏழு வார்த்தைகளும் இருக்கின்றன. மூன்று - ஐந்து - ஏழு என ஆசீர் வளர்கிறது. ஆக, இது சும்மா "நல்லா இரு!" என்று சொல்லப்பட்ட ஆசீர் அல்ல. மாறாக, யோசித்து, நிறுத்தி, நிதானமாக எழுதப்பட்டுள்ளது.

மூன்று ஆசிகள். ஒவ்வொரு ஆசியிலும் இரண்டு கூறுகள்.

1. "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!

உன்னைக் காப்பாராக!" இதில் ஆண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர் அளிப்பவர். இருந்தாலும், இங்கே அந்த பணியை இங்கே அருட்பணியாளர்தான் செய்கிறார். ஆக, அருட்பணியாளர் தன் கரத்தில் ஆண்டவரின் கரம் கொண்டு ஆசீரளிக்கின்றார். "உனக்கு" என்பது இரண்டாம் நபர் (முன்னிலை) ஒருமை. ஆக, இது மொத்தமாக கூட்டத்தின்முன் வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு தனிநபருக்கும் உரியது. ஆக, ஆண்டவரின் பிரசன்னத்தில் கூட்டம் போடுவதற்கே இடமில்லை. ஒவ்வொருவரும் அவரின் பார்வையில் விலைமதிப்பு உடையவர். "பராகா" என்பதை "புகழ்வது" என்றும் "ஆசீர்வதிப்பது" என்றும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்திலும் இதை நாம் பார்க்கலாம்: "Let us bless the Lord" என்னும் வாக்கியத்தில் "ப்ளஸ்" என்பது மனிதர்கள் இறைவனைப் புகழ்வதையும், "God பளஸ் யூ" என்னும் வாக்கியத்தில் "ப்ளஸ்" என்பது இறைவன் மனிதர்களுக்கு ஆசீர்வதிப்பதையும் குறிக்கிறது. "பராகா" என்பதை நாம் இரண்டாம் அர்த்தத்தில் எடுத்துக்கொள்வோம். இரண்டாவதாக, "காத்தல்" என்பதை "கண்களைப் பதித்தல்." ஒரு ஆயன் தன் மந்தையைக் காக்கிறான் என்றால், அவன் தன் மந்தையின் மேல் தன் கண்களைப் பதிய வைக்கிறான்.

2. "ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!"
"ஒளி" என்பது விவிலியத்தில் வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின் முகம் எப்போதும் ஒளிரக் கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல் படும்போது அவர்களும் ஒளி பெறுகின்றனர். வாழ்வு பெறுகின்றனர். மேலும், உருவகத்தின் அடிப்படையில் "திருமுகம் ஒளிர்தல்" என்பது "அருள்கூர்தல்" என்றும் பொருள் படும். "ஹனான்" ("அருள்") என்ற வார்த்தை "தன் குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்" செயலைக் குறிக்கிறது. ஆக, ஆண்டவரின் ஒளி சூரியனின் ஒளி போல எல்லாருக்கும் பொதுவாக இல்லாமல், ஒவ்வொருவர் மேலும் அவரின் தனிப்பட்ட அருளாக ஒளிர்கிறது.

3. "ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!" மீண்டும் ஆண்டவரின் திருமுகமே இங்கு செயலாற்றுகிறது. "தாழ்ந்து போன முகம்," அல்லது "குனிந்த முகம்" அவமானத்தை அல்லது கோபத்தைக் குறிக்கும் (தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொள்ளுதல் கோபத்தையும், ஒருவரிடமிருந்து விலகி நிற்பதையும், கண்டுகொள்ளாததையும் குறிக்கும் (இச 31:18, திபா 30:8, 44:25). ஆண்டவர் தன் முகத்தை தாழ்த்திக் கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக் கொள்ளாமல் உன் பக்கம் திருப்புகிறார். இறுதியாக அவர் "ஷலோம்" ("அமைதி, நிறைவு, நலம்") தருகிறார்.

இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன தோன்றுகிறது?

நான் என் உள்ளங்கையில் ஐஃபோனை வைத்திருக்கிறேன் என வைத்துக் கொள்வோம். எனக்கு வெளியில் இருப்பது ஐஃபோன். இந்த ஐஃபோனை தொட்டுக் கொண்டிருப்பது என் தோல். இந்த ஐஃபோனின் நிறையை, குளிர்ச்சியை, வெதுவெதுப்பை உணர்வது என் உள்ளுணர்வு அல்லது மூளை. ஆக, எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே என்று மூன்று எதார்த்த நிலைகள் உள்ளன. இறைவனின் ஆசிமொழி எனக்கு வெளியே தொடங்கி, என்மேல் ஒளிர்ந்து, எனக்குள் பாய்கின்றது. ஆக, இறைவனின் ஆசி முழுமையான ஆசியாக இருக்கிறது.

இதை ஆண்டின் முதல் நாளில் நாம் வாசிக்க என்ன காரணம்?

இறைவனின் ஆசி நமக்கு வெளியில் இருக்கவும் - அதாவது, நம் வெளிப்புற காரணிகளால் நமக்கு தீங்கு நிகழாமல் இருக்கவும், நம் மேற்புறத்தில் தொடர்ந்து, நம் உள்புறத்தில் அமைதியாக நிலைத்திருக்கவும் வேண்டும். இல்லையா?

இந்த ஆசியை ஆண்டின் முதல் நாள் மட்டுமல்ல, ஆண்டின் ஒவ்வொரு நாளும் நாமும் ஒருவர் மற்றவருக்கு வழங்கலாம். வழங்குவதன் வழியாக நாமும் பெறலாம்.

இரண்டாம் வாசகம் கலா 4:4-7

கலாத்திய திருச்சபைக்கு தான் எழுதும் கடிதத்தில் சட்டம் மற்றும் தூய ஆவி என்ற இரண்டு கூறுகளை விளக்கும் பவுலடியார், சட்டத்தின் வழி பிறப்பவர்கள் அடிமைகள் எனவும், தூய ஆவி வழி பிறப்பவர்கள் உரிமைக் குடிமக்கள் எனவும் முன்வைக்கின்றார். சட்டத்திலிருந்து, தூய ஆவியானவரை நோக்கிய நம் பயணம் இயேசுவில் தொடங்குகிறது.

காலத்தையும் இடத்தையும் கடந்தவர் கடவுள். காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும் இருப்பவர்கள் நாம். நம் இருப்பிற்குள் கடவுள் வரவேண்டுமென்றால், அவருக்கு நேருமும் இடமும் தேவை. இந்த நேரத்தையே, பவுல், "காலம் நிறைவுற்றபோது" என்றும், இந்த இடத்தையே, "பெண்ணிடம்" என்றும் குறிப்பிடுகிறார். மேலும், திருச்சட்டம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது என்பதால், கடவுளின் மகனும் திருச்சட்டத்திற்கு உட்படுகின்றார்.

"கடவுளின் மகன்." இயேசுவை ஆண்டவர் என்றோ, கிறிஸ்து என்றோ அழைப்பதற்குப் பதிலாக "கடவுளின் மகன்" என அழைக்கின்றார். இயேசுவின் இந்த கடவுளின் மகன் நிலையை ஏற்றுக்கொள்ளும் அனைவரும், அந்த நிலையில் பங்கேற்கின்றனர். இந்த நிலைதான் தூய ஆவி. இந்த நிலையினால்தான் நாமும் கடவுளை, "அப்பா, தந்தையே" என அழைக்க முடிகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தை இன்று நாம் ஏன் வாசிக்கின்றோம்?

1. "காலம்." இன்று ஆண்டின் புதிய நாளைத் தொடங்குகிறோம். ஆண்டு அல்லது காலம் என்பது கடவுளுக்கும், நமக்கும் வௌ;வேறு எதார்த்தங்கள் அல்ல. காலம் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் பொதுவானது. ஏனெனில் கடவுளின் மகனே இந்தக் காலம் என்னும் நீரோட்டத்தினுள் இறங்கிவிட்டார்.

2. "கடவுளின் மகன்." இன்று அன்னை மரியாளை "இறைவனின் தாய்" என்று கொண்டாடுகிறோம். இயேசு கடவுளின் மகன். ஆகையால், இந்த மகனை கருத்தாங்கிய மரியாள் கடவுளின் தாயாக மாறுகிறார்.

3. "இனி நீங்கள் அடிமைகள் அல்ல. பிள்ளைகள்தாம்!" - இது புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் நமக்கு நல்ல பாடம். நாம் யாருக்கும், எந்தப் பழக்கத்திற்கும், எந்த சூழலுக்கும் அடிமைகள் அல்லர். நாம் அப்படி யாருக்காவது அல்லது எதற்காவது அடிமையாக இருந்தால் அதை நாம் கண்டறிந்து அந்த அடிமைத்தளையிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். எந்த சின்ன நூற்கண்டும் நம்மை சிறைப்படுத்திவிடக் கூடாது.

நற்செய்தி வாசகம் லூக் 2:16-21

i. பாட பின்புலம்

இயேசு பெத்லகேமில் பிறந்துவிட்டார். இந்த பிறப்பு செய்தி வானதூதர் ஒருவரால் இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. பின் வானதூதர் அணி வானில் பாடல் பாடுகின்றது. இந்த பாடல் முடிந்தவுடன், இடையர்கள் என்ன செய்தார்கள் என்பதும், இடையர்களின் வருகை மரியாவில் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதுமே இன்றைய நற்செய்தி வாசகம்.

ii. பாட அமைப்பு

இன்றைய நற்செய்தி வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. இடையர்களின் வருகை

ஆ. இடையர்களின் வியப்பு

இ. மரியாளின் பதிலுணர்வு

ஈ. இடையர்களின் செல்கை

உ. இயேசுவின் விருத்தசேதனம்

அ. இடையர்களின் வருகை

இடையர்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்து பெத்லகேம் நோக்கி புறப்படுமுன் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றனர். "வாருங்கள்!" "போவோம்!" "பார்ப்போம்!" - இந்த மூன்று வினைச்சொற்களால் ஒருவரையொருவர் வேகப்படுத்துகின்றனர். மேலும், "ஆண்டவர் நமக்கு அறிவித்ததை" என அவர்கள் சொல்வதன்வழியாக தங்களுக்குத் தோன்றிய தூதர் வெறும் கனவோ அல்லது காட்சியோ அல்ல, ஆண்டவரின் தூதரே என நம்புகின்றனர்.

ஆ. இடையர்களின் வியப்பு

திருக்குடும்பத்தை காணும் பேறு முதலில் இடையர்களுக்கே கிடைக்கின்றது. சமூகத்தில் யாரும் அங்கீகரிக்காத ஒரு குழுவை இறைவன் அங்கீகரிக்கிறார். குழந்தையைப் பற்றி அவர்கள் மரியாள் மற்றும் யோசேப்பிடம் என்ன சொன்னார்கள்? இக்குழந்தையே "ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்" என்பது ஒரு புதுமையான செய்தி. இந்த செய்தியை கபிரியேல் மரியாளிடம் சொல்லவில்லை. இப்படித்தான் தங்களுக்கு இக்குழந்தை வெளிப்படுத்தப்பட்டது என்று இவர்கள் சொன்னவுடன், அது மரியாளுக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கும்.

இ. மரியாளின் பதிலுணர்வு


மரியாளின் பதிலுணர்வு மௌனமும், தியானமும். எல்லா யூதர்களையும்போல மரியாளுக்கும் மெசியா பற்றிய காத்திருத்தல் இருந்திருக்கும். இந்தக் காத்திருத்தல் நிறைவு பெற்றதை தன் உள்ளத்தில் உணர்ந்தவராய் அப்படியே உறைந்து போகின்றார்.இங்கே "சும்பல்லூசா" என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு "தியானித்தில்" அல்லது "உள்ளத்தில் இருத்துதல்" அல்லது "மனனம் செய்தல்" என்பது பொருள் அல்ல. மாறாக, "ஒன்றுகூட்டுதல்" என்பதே பொருள். அதாவது, ரெவன்ஸ்பர்கர் ஆட்டத்தில், சிதறிக்கிடக்கும் படத் துண்டுகளை ஒவ்வொன்றாக அதனதன் அடத்தில் சேர்த்து பெரிய படத்தை உருவாக்குவதுபோல, மரியாள் இப்போது தன் கையில் கிடைக்கப்பட்டுள்ள புதிய துண்டை ஆச்சர்யமாக பார்க்கிறாள். இன்று மட்டுமல்ல. இயேசுவின் வாழ்வின் இறுதிப்பொழுது வரை இவள் இப்படி குட்டித் துண்டுகளை ஒன்றுகூட்டிக் கொண்டே செல்ல வேண்டும்.

ஈ. இடையர்களின் செல்கை

இது லூக்காவின் கமெண்ட். அதாவது, இடையர்கள் ஏமாற்றம் அடையவில்லை. தாங்கள் கேட்டவையும், கண்டவையும் நிறைவேறியது குறித்து மகிழ்ந்தவர்களாக இல்லம் திரும்புகின்றனர்.

உ. இயேசுவின் விருத்தசேதனம்

இந்த நிகழ்வு பெத்லகேமில் நடந்ததா, அல்லது நாசரேத்தில் நடந்ததா, அல்லது எருசலேமில் நடந்ததா என்ற குறிப்பு நற்செய்தியில் இல்லை. நாள் பற்றிய குறிப்பு - எட்டாம் நாள் - இருக்கிறது. மேலும் இந்த நாளில்தான் "இயேசு" என்ற பெயரும் குழந்தைக்கு வழங்கப்படுகிறது. "யசுவா" என்றால் "ஆண்டவர் மீட்பார்" என்பது பொருள். இந்த "மீட்பர்" என்ற பெயர் இடையர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது. ஆக, இடையர்களின் வருகை வானதூதர் மரியாளுக்கு அறிவித்த முதல் செய்தியை உறுதிப்படுத்துகிறது.

iii. "இறைவனின் தாய்" - இறையியல் விளக்கம்

மரியாளை "கடவுளின் தாய்" என்று சொல்வது சிலருக்கு நெருடலாக இருக்கும். எல்லாம் கடந்த கடவுளுக்கு மனிதர் ஒருவர் எப்படி தாயாக இருக்க முடியும்? என்பது முதல் கேள்வி. மேலும், மரியாள் கடவுளுக்கே தாய் என்றால், கடவுள் தோன்றுமுன்னே மரியா இருந்தாரா? கடவுள் மரியாளிடம் தோன்றினார் என்றால், அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்? - தோற்றம் இல்லாத தோன்றல்தானே கடவுள்!

ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை (கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின் மனித தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை "கிறிஸ்துவின் தாய்" அல்லது "இயேசுவின் தாய்" என அழைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), "இம்மானுவேல்தான் கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்படுக!" என்று அறிவித்தது. ஆக, "இறைவனின் தாய்" என்னும் தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின் இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

iv. இடையர்களின் பத்து கட்டளை

இன்றைய நாளில் நாம் சந்திக்கும் இடையர்கள் நாம் புதிய ஆண்டில் இனியவர்களாக வாழ நமக்கு பத்துக்கட்டளைகத் தருகின்றனர். (இவை பவுலோ கோயலோ அவர்களின் "ரசவாதி" என்ற நூலில் வரும் 10 வாழ்க்கை பாடங்களைத் தழுவியவை. ரசவாதியின் ஹீரோ சந்தியாகுவும் ஆடுமேய்க்கும் சிறுவன்தான். ஆக, இந்த தழுவல் எளிதாக இருக்கிறது. பவுலோ கோயலோவின் வலைப்பூவில் காண இங்கே சொடுக்கவும்:)

1. பயப்பட வேண்டாம்.

அடையவர்களுக்கு வானதூதர் நற்செய்தியை அறிவித்தபோது சொன்ன முதல் வார்த்தை: "அஞ்சாதீர்!" என்பதுதான். தடைகளை விட தடைகள் வரும் என்ற பயமே நம்மை பல நேரங்களில் பலவீனமாக்குகிறது. நாளை நமக்கு தேவைப்படும் என்ற அச்சத்தில் நாம் சரியாக சாப்பிடாமல் இன்றே உணவைச் சேர்த்து வைத்து பட்டினி கிடக்கின்றோம். படிக்கும்போது வேலையைப் பற்றி பயப்படுகிறோம். வேலையில் மொழி பற்றி பயப்படுகிறோம். திருமணத்தில் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயப்படுகிறோம். நமக்கு மேலிருப்பவர்களைப் பார்த்து பயப்படுகிறோம். புதியவர்களைப் பார்த்து பயப்படுகிறோம். புதிய முயற்சிகள் எடுக்க பயப்படுகிறோம். ஏற்கனவே எடுத்து வைத்த புதிய ஆடைகளை அணியப் பயப்படுகிறோம். வாசனை திரவியங்களை மூடி மூடி வைக்கிறோம். நகைகளை நல்ல நாட்களில் அணிந்து கொள்ளலாம் என்று பத்திரப்படுத்கிறோம். மொத்தத்தில், நாம் நம் கண்முன் இருக்கும் பொழுதை வாழாமல், கண்முன் இல்லாத ஒரு பொழுதில் வாழ்வதற்காக நாம் நம் வாழ்வை தள்ளிப்போடுகிறோம். வாழ்வதற்காக தயாரிப்பதை நிறுத்திவிட்டு நாம் வாழத் தொடங்கலாமே!

2. உண்மை என்றும் நிலைத்திருக்கும்

தேன் ஒரு போதும் கெடுவதில்லை. சூரிய ஒளி பட்டால் மின்னும். சூடாகும். பனிக்கட்டி பட்டால் குளிரும். ஆனால், வெயிலோ, மழையோ, பனியோ அதன் இயல்பு மாறுவதில்லை. யாரும் அதைப் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், சுவைத்தாலும், சுவைக்காமல் விட்டாலும் அது அப்படியேதான் இருக்கின்றது. உண்மையும் அப்படித்தான். யாராலும் அதை மூடி வைக்கவோ, கலங்கப்படுத்தவோ முடியாது. இடையர்கள் பொய்யர்கள் என்றும், திருடர்கள் என்றும், அழுக்கானவர்கள் என்றாலும் அக்கால சமுதாயம் சொன்னாலும், அவர்களின் உண்மையான இயல்பை அவர்கள் மறைக்க முடியவில்லை. அவர்கள் மனிதர்கள். அதுதான் உண்மை. இந்த உண்மை வானதூதர்களால் உறுதி செய்யப்படுகிறது. மேலும், இந்த இடையர்கள் தங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாதது பற்றி வருத்தப்படவில்லை. குப்பையில் கிடந்தாலும் வைரம் மின்னும் என்று தங்கள் கடமையை தாங்கள் செய்கிறார்கள். இறுதியில் தாங்களே உலகின் மெசியாவை முதலில் காணும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

3. ஒரே போல் வாழ்வதை விடுங்கள்

"வாருங்கள்! பெத்லகேம் செல்வோம்!" என்று ஒருவர் சொன்னவுடன், எல்லாரும் உடனடியாக வந்திருப்பார்கள் என நினைக்கிறீர்களா? "ஐயயோ! அப்போடு ஆடுகளை யார் பார்ப்பார்?" என்று யாராவது ஒருவர் கண்டிப்பாக கேள்வி கேட்டிருப்பார். எழுதல், ஆடுகளை எழுப்புதல், நடத்தல், மேய்த்தல், உண்ணுதல், உறங்குதல் என்ற ஒரே போல் வாழ்க்கையை உடைக்கிறது இடையர்களின் பயணம். தங்கள் வாழ்வில் இதுவரை செய்திராத செயல்களை இனி அவர்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அவற்றைச் செய்ய துணிவோடு புறப்படுகின்றனர். திங்கள் தொடங்கி வெள்ளி வரை ஒரு வாழ்வு, சன-ஞாயிறு வேறொரு வாழ்வு என நம் வாழ்வும் ஒன்றுபோலவே இருக்கின்றதா?

4. நிகழ்காலத்தை தழுவிக்கொள்ளுங்கள்

தங்கள் கடந்த காலம் இடையர்களின் கண்முன் வரவில்லை. தாங்கள் போய் குழந்தையைப் பார்த்தால், குழந்தையின் பெற்றோர்கள் தங்களை நம்புவார்களா என்ற கலக்கம் இல்லை. ஒவ்வொரு பொழுதும் நமக்கு கொடுக்கப்படும் வேலையை நன்றாக செய்து முடிப்பதே சால்பு என நினைத்துப் புறப்படுகின்றனர்.

5. உன் மகிழ்ச்சி அடுத்தவரையும் பற்றிக்கொள்ளும்

"ஆடுகளோடு இருந்தால் ஆடுகளின் வாடைதான் அடிக்கும்" என்று அவர்களுக்குத் தெரியும். ஆக, மகிழ்வாரோடு இருந்தால், தாங்களும் மகிழலாம். மெசியாவோடு இருந்தால் தாங்களும் மீட்கப்படலாம் என புறப்படுகின்றனர். இவர்களின் மகிழ்ச்சி இவர்களோடு முடியவில்லை. அது திருக்குடும்பத்தையும், மற்றும் சுற்றத்தார், நண்பர்களையும் பற்றிக் கொள்கிறது.

6. முடிவெடு - அதை நீயே எடு!

"போவோம் - பார்ப்போம்!" என உடனடியாக முடிவெடுக்கின்றனர் இடையர்கள். "நாளைக்குப் போவோம்!" "நாளைக்குப் பார்ப்போம்!" என்று முடிவை தள்ளிப் போடவோ, "போகவா?" "வேண்டாமா?" என்று இழுத்துப் பறிக்கவோ இல்லை.

7. முடியாது என்பதை முடியும் எனக் காட்டு

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்ப கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம் மற்றவர்கள் முடியாது என்று சொன்னதை "முடியும்" என முடித்துக் காட்டினார்கள். இடையர்கள் எப்படி நற்செய்தி அறிவிக்க முடியும்? அது குருக்களின் வேலைதானே - என நினைத்தவர்கள்முன், தாங்களே முதல் திருத்தூதர்களாக வலம் வந்தனர் இடையர்கள்.

8. மேல் நோக்கி பயணம் செய்

மெசியாவைப் பார்க்க வேண்டுமானால், ஆடுகளை விடத்தான் வேண்டும். மெசியாவும் வேண்டும், ஆடுகளும் வேண்டும் என கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற நிலை அறவே கூடாது. மேலானது கைகூடும்போது, தாழ்வானதை விட்டுவிட வேண்டும். மேல் படிக்கட்டில் ஏற வேண்டுமென்றால், கீழ் படிக்கட்டில் இருந்து காலை எடுக்க வேண்டும். எல்லாரிடமும் அன்பு பாராட்ட வேண்டுமென்றால், நம் கோபத்தை விட வேண்டும். கீழிருப்பதை விட்டால்தான் மேலிருப்பது கிடைக்கும் என உணர்ந்தவர்கள் இடையர்கள்.

9. உன் பயணத்தில் கருத்தாயிரு

இன்று நாம் எல்லாரும் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கருத்தாயிருக்கிறோமே தவிர, நாம் எப்படி இருக்கிறோம் என்று பார்ப்பதில்லை. பீப் சாங் பாடிய நடிகரை கடிந்து கொள்ளும் நாமே அந்த "பீப்" வார்த்தையை பயன்படுத்துவதில்லையா? அடுத்தவரின் பாதை எப்படி இருக்கிறது என்று ஆராய நேரம் எடுக்கும் நாம் நம் பாதையை ஆராய்வதற்கு நேரமில்லையே. மேலும், அடுத்தவர்களின் பாதையும், பயணமும் நம் பாதையையும், பயணத்தையும் பாதிக்க கூடாது. ஒரு சிலர் எல்லாரையும்போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆசிரியரைப் பார்த்தால் ஆசிரியராக வேண்டும் போல இருக்கும். டாக்டரைப் பார்த்தால் டாக்டராக வேண்டும் என இருக்கும். இப்படி தினமும் ஆயிரம் ஐடியாக்கள் வந்து போகும். நான் ஒரே ஆளே எல்லாவற்றையும் வாழ முடியாது. என் சிறு வட்டத்தில் நான் எனக்கு சரியெனப்படுவதை ஆய்ந்து வாழ்தல் தான் சால்பு. இடையர்கள் திருக்குடும்பத்தை பார்த்துவிட்டு, தங்கள் வழியில் செல்கின்றனர். மேலும், "மரியா! நீங்க கவனமாக இருக்கணும். மெசியா பிறந்திருக்காரு! யோசேப்பு, பத்திரமா இருப்பா!" என்று யோசனை எதுவும் சொல்லவில்லை. தங்கள் வியாபாரத்தை மட்டும் பார்க்கின்றனர் இடையர்கள் (மைண்ட் யுவர் பிசினஸ்).

10. எப்போதும் செயல்படு

நான் டிரைவிங் பழகும்போது எனக்கு சொல்லிக் கொடுத்த சதீஷ், "ஃபாதர், ப்ரேக்கைப் பார்த்தால் மட்டும் வண்டி நிற்காது. ப்ரேக் போட்டால்தான் வண்டி நிற்கும்!" என்பார். இலக்கு முன் நின்று அம்பு எய்ய வேண்டுமென்றால், இலக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும்போதாது. அம்பை எய்ய வேண்டும். இடையர்களும் தங்களுக்கு செய்தி அறிவிக்கப்பட்டவுடன், குழந்தையைக் காண ஓடுகின்றனர். கண்டவுடன் அதை மற்றவருக்கு அறிவித்துக்கொண்டே வழிநடக்கின்றனர்.

மேலும் சிந்திக்க,

இயேசு நம் அனைவரின் சகோதரர் என்ற அடிப்படையில் மரியாள் நம் ஒவ்வொருவரின் தாய் ஆகிறார் இன்று.

இந்த புதிய ஆண்டை இனிய ஆண்டாக வாழ இறைவனின் தாய் வைக்கும் ஏழு வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. எல்லாவற்றுக்கும் ஆச்சர்யப்படுங்க!

வானதூதரின் மங்கள வார்த்தையைக் கேட்ட மரியாவின் முதல் உணர்வு ஆச்சர்யம். "இது எங்ஙனம் ஆகும்?" (லூக் 1:34) என்னும் மரியாவின் வார்த்தைகள் அவரின் நம்பிக்கையின்மையில் உதித்த கேள்வி அல்ல. மாறாக, வியப்பில் உதித்த ஆச்சர்யக்குறி. தன்னந்தனியே அமர்ந்திருந்த ஒரு இளவலுக்குத் தோன்றிய தேவதூதன், "நீ அப்படியாக்கும்! இப்படியாக்கும்! நீ அப்படி இருப்ப! இப்படி இருப்ப!" என அடுக்கிக்கொண்டே போனபோது அந்த இளவல் மௌனமாக ஒரு புன்னகை பூக்கின்றாள். அனைத்தையும் வியந்து பார்க்கின்றாள். நாம் வளர வளர இழந்துபோன ஒரு அற்புதமான உணர்வு "ஆச்சர்யம்". இரயில் ஏன் முன்னால போகுது? செடி ஏன் பச்சையா இருக்கு? பஸ் போகும்போது மரங்கள் ஏன் ஓடுகின்றன? அது ஏன்? இது ஏன்? என்று அனைத்தையும் பற்றி கேள்வி கேட்ட நாம் இன்று எதைப்பற்றியும் கேள்வி கேட்க மறுக்கின்றோம். நம் உள்ளத்தில் ஆச்சர்யம் போய் இன்று சந்தேகம் வந்துவிட்டது. சந்தேகத்தின் உடன்பிறப்பு எல்லாம் தெரியும் என்ற மனநிலை.

மரியாள் மாதிரி எல்லாவற்றுக்கும் ஆச்சர்யப்படுவோம் இந்த புதிய ஆண்டில்.

"சார், உங்களுக்கு சுகர் இருக்கு!" "மேடம், உங்க ப்ரஸர் கூடியிருக்கு!" என்று யார் என்ன சொன்னாலும், "அப்படியா!" என வியந்து பார்ப்போம்.

2. சரண் அடையுங்க!

வாழ்வின் எதார்த்தங்கள் புரியாதபோது அவற்றை எதிர்கொள்ள மிகச்சரியான வழி அவற்றிற்குச் சரணாகதி ஆவதே. "நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே நிகழட்டும்!" (லூக் 1:38) என சரணடைகின்றார் மரியாள். நாம் கேட்கும் பல கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லை. அல்லது நாம் விரும்பும் விடை இல்லை. ஒரு விடையே அடுத்த கேள்வியாகிவிடுகிறது சில நேரங்களில். விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதில் நேரம் மற்றும் ஆற்றல் விரயமாகிறது.

"அவன் ஏன் என்னைப் பார்த்து இப்படிச் சொன்னான்?" என்ற கேள்விக்கு நான் விடை தேடத் தொடங்கி, இறுதியில் அப்படிச் சொன்னவனை என்னால் அன்பு செய்ய முடியாமல் போய்விடுகிறது. "அவன் ஏன் இப்படி இருக்கிறான்?" "எனக்கேன் இப்படி நடக்கிறது?" "அவள் நல்லவளா?" "அடுத்து என்ன நடக்கும்?" "நான் இப்படி செய்தால் அப்படி இருக்கலாமா?" என கேள்விகள் தவிர்த்து மரியாளின் சரணாகதி மனம் கொள்தல் இரண்டாம் பாடம்.

3. மனிதர்களை நாடி ஓடுங்க!

காலையில் நாம் தொடங்கும் வாழ்க்கை ஓட்டம் இரவு ஆகியும் இன்று முடியாமல் போகிறது. பணம், பொருள், பதவி, புகழ், பெயர் என இவற்றை நாம் தேடி ஓடுகிறோம். ஆனால், நாம் எதைத் தேடி ஓட வேண்டும்? மனிதர்களை அல்லவா.

கபிரியேல் தூதரின் வார்த்தைகளைக் கேட்டவுடன் மரியாள் நேராக எருசலேம் ஆலயத்திற்கோ, தலைமைக்குரு அல்லது ஆளுநரின் அலுவலகங்களுக்கோ ஓடவில்லை. மாறாக, தன் உறவினரான எலிசபெத்தின் வீட்டை நோக்கி ஓடுகின்றார். ஒரு பிள்ளைத்தாங்கி (பிள்ளைத்தாச்சி) மற்றொரு பிள்ளைத்தாங்கியை நோக்கி ஓடுகின்றார். சென்ற அவர் தன் பெருமை பற்றிப் பேசாமல் எலிசபெத்தை வாழ்த்துகின்றார்.

மனித உறவு மேம்பட மிக முக்கியமான ஒன்று, "அடுத்தவருக்கும் எனக்கும் எது பொதுவானது" என்று பார்க்கும் மனநிலைதான். "நான் உன்னைவிட பெரியவன், படித்தவன், தெரிந்தவன்" என்ற நிலையில் வேற்றுமையை மையப்படுத்தி நான் மற்றவரோடு உறவை வளர்க்க முடியாது.

"நான் மெசியாவின் அம்மாவாக்கும்!" "நீயோ முன்னோடியின் மகன்தானே!" என்று தன் நிலையை உயர்த்தி, எலிசபெத்து நிலையை தாழ்த்தவில்லை மரியாள். "உன் நிலையில் நீ பெரியவள்!" என அவருக்கு உரியதை அவருக்கு கொடுக்கின்றார். "நீயும், நானும் இறைத்திட்டத்தால் வழிநடத்தப்படுபவர்கள்" என்ற பொதுப்பண்பில் மரியாள் எலிசபெத்தோடு தன்னை இணைத்துக் கொள்கின்றார்.

மேலும், தன்னை விலக்கி விட நினைத்த யோசேப்பின்மேல் எந்த வெறுப்பும் இல்லாமல் வாழ்கின்றார் மரியா. ஆக, பரந்த உள்ளம் கொண்ட மரியா அனைவரையும் தன் அன்புக் கரத்தால் தழுவிக்கொள்ள நினைக்கின்றார்.

4. பாத்ரூம்லயாவது பாடுங்க!

எலிசபெத்தோடு அன்பு பாராட்டும் மரியாள் தன் உள்ளம் நிறை உணர்வுகளைப் பாடலாக வடிக்கின்றார். "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது" (1:47) என்று பாடுகின்றார் மரியாள். மரியாளின் பாடல் கடவுள் வரலாற்றில் நிகழ்த்திய அனைத்து புரட்டிப் போடுதல்களையும் ஒருசேரப் பதிவு செய்கின்றது. இறுதியாக, "இஸ்ரயேலுக்குத் துணையாக ஆண்டவர் இருந்து வருகிறார்" என பாடலை நிறைவு செய்கிறார் மரியாள்.

"வாயில் பாடலை ஹம் செய்து கொண்டிருப்பவர்களை சாத்தான் நெருங்காது!" என்பது போர்த்துகீசிய பழமொழி.

பாடல்கள் மற்றும் நமக்கு இசை பிடிக்கக் காரணம் அவைகளுக்கு நம் மனத்தை ஆட்கொள்ளும் திறன் உண்டு என்பதால்தான். பாடலின் ஒற்றைச் சொல் கூட நம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது.

இந்தப் புதிய ஆண்டில் நல்லதோ, கெட்டதோ அதைப் பாடலாக பாடிவிடுவோம் - பாத்ரூம்லயாவது!

5. இணைந்து தேடுங்க!

காணாமல் போன 12 வயது இயேசுவை தேடுகின்றார் மரியாள். இந்தத் தேடலில் யோசேப்பும் உடன் நிற்கின்றார். மனித குலத்தின் பெருமுயற்சிகள் எல்லாம் கூட்டு முயற்சிகளே. மூன்று ஞானியர் விண்மீன் வழிகாட்டுதலில் இயேசுவைக் கண்டதும் கூட்டுமுயற்சியாலே.

இன்று நாம் தனிமரங்களாக வாழ நினைக்கின்றோம். நான் யாரையும் சாராதவன், சாராதவள் என்று தன்னந்தனியாக நிற்க நினைக்கின்றோம். ஆனால், அது நம்மால் இயலாத ஒன்று. நாம் இருப்பதே அடுத்தவரின் இருப்பால்தான்.

கணிணியை இயக்கும் ஒரு மென்பொருளின் பெயர் "உபுந்து." "உபுந்து" என்றால் ஸ்வாகிலி மொழியில், "நான் இருக்கிறேன். ஏனெனில், நாம் இருக்கிறோம்" என்பது பொருள். "நான்" என்று என்னை அடையாளப்படுத்தக்கூட, "நீ" அல்லது "அவர்;" என்ற ஒருவர் தேவைப்படுகிறார்.

இதையே மேலாண்மையியலில், ஒன்றும், ஒன்றும் மூன்று என்றும், ஒருங்கியக்கம் என்றும் சொல்கின்றனர்.

6. தூலிப்ஸ் விதை போல இருங்க!

எல்லா மலர்களுக்கும் விதைகள் உண்டு. ஒவ்வொரு மலரின் விதையும் அந்தந்த மலரை மட்டுமே உருவாக்க முடியும். உங்க கைநிறைய நான் தூலிப்ஸ் விதைகளைக் கொடுத்து, ரோஜா மலர் கொண்டு வாங்க என்று சொன்னால், உங்களால் உருவாக்க முடியுமா? அழுதாலும், புரண்டாலும் தூலிப்ஸ் தூலிப்ஸை மட்டுமே உருவாக்க முடியும். அப்படி இருக்க மனிதர்கள் மட்டும்தான், "நான் அவரைப்போல இருக்க வேண்டும். இவளைப் போல இருக்க வேண்டும்" என மெனக்கெடுகிறோம்.

"விஜய் வீட்ல இருக்கு, சூர்யா வீட்ல இருக்கு, தனுஷ் வீட்ல இருக்கு, உங்க வீட்ல இருக்கா" என கேட்கும் டேபிள்மேட் விளம்பரம் முதல், நாம் குளிக்கும், துவைக்கும் சோப் வரை நாம் அடுத்தவரைப் போல இருக்க விரும்புகிறோம்.

அவனாக, அவளாக நான் இருக்க முனைந்து கொண்டே கடைசியில் என்னைப்போல இருக்க என்னால் முடியாமல்போய் விடுகிறது.

மரியாள் இறுதி வரை தன்னைப்போல மட்டுமே வாழ்ந்தார்.

"மெசியாவின் தாய்" என்ற புதிய நிலை வந்துவிட்டதால் அவர் உருமாறிவிட விரும்பவும் இல்லை. உருமாறவும் இல்லை.

7. பூக்களிடம் கற்றுக்கொள்ளுங்க!


என்னதான் பூக்கள் அழகாக காலையில் பூத்துக் குலுங்கினாலும் மாலையில் அவை கீழே விழத்தான் வேண்டும். கீழே விழுந்தால்தான் புதிய விதைகளை அவைகள் உருவாக்க முடியும். எனக்கு இந்த காம்பு பிடித்திருக்கிறது என அவைகள் செடிகளையே பற்றிக்கொண்டிருந்தால் அவைகள் வதங்கிவிடும்.

கைகளை விரித்துக் கொடுப்பதுதான் மரியாள் சொல்லும் இறுதிப் பாடம்.

நாம் சேமித்து உழைத்து வாங்கிய ஒரு பைக் அல்லது கார் மேல் ஒரு ஸ்க்ராட்ச் விழுந்து அதை மெக்கானிக்கிடம் எடுத்துச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அவர் அதை கடா முடா என்று கையாள்வார். அது நமக்கே வலிப்பது போல இருக்கும். ஆனால், நம்மால் என்ன செய்ய முடியும்? என்னதான் பாதுகாத்து பொக்கிஷமாக வைத்திருந்தாலும் ஒரு கட்டத்தில் அதை நாம் விடத்தான் வேண்டும். அப்படி விடுவதற்கு தயாராக இருப்பவர்தான் மகிழ்ச்சியை சொந்தமாக்க முடியும்.

கல்வாரியில் தன் மகனை விரித்துக்கொடுக்குமுன், மரியா தன் உள்ளத்திலிருந்து இயேசுவை விரித்துக் கொடுத்தார்.

எடுத்து வைத்தல்போல, விரித்துக் கொடுத்தலும் இனிய செயலே!

இறுதியாக,

இளவல் ஒருத்தி கடற்கரை ஓரம் நடந்து கொண்டிருந்தாள். தூரத்தில் ஏதோ ஒரு குழந்தை விளையாடுவது போல தெரிந்தது. அந்தக் குழந்தையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். குழந்தை கரையிலிருந்து எதையோ கடலுக்குள் தூக்கிப் போடுவது தெரிந்தது. கரைக்கும் நீருக்குமாய் குழந்தை ஓடிக்கொண்டிருந்தது. அதன் கையில் நட்சத்திர மீன். "என்ன செய்கிறாய்?" என்று கேட்கிறாள் இளவல். "இந்த நட்சத்திர மீனை கடலில் தூக்கி போடுகிறேன். கரையில் இருந்தால் அது இறந்துவிடும்" என்கிறது குழந்தை. "கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் ஒதுங்கியிருக்கின்றன. அனைத்தையும் உன்னால் தூக்கிப் போட முடியுமா?" எனக் கேட்கிறாள் இளவல். "அனைத்தையும் தூக்கிப் போட முடியாதுதான். ஆனால், நான் தூக்கிப்போடும் ஒவ்வொரு மீனும் மீண்டும் வாழ ஆரம்பிக்கிறதே!" என்று சொல்லி தொடர்ந்து கரையை நோக்கி, கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது குழந்தை.

கடலுக்கும், கரைக்கும் நடுவில் நாம் நிற்கிறோம் இன்று.

நான் செய்யும் ஒவ்வொரு செயலும் உலகத்தையே மாற்றவில்லை என்றாலும், என்னையும், என் உடனிருப்பவரையும் மாற்றும். பெரிய மாற்றங்கள் சிறியவற்றில்தான் தொடங்குகின்றன.

புத்தாண்டில் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைப்போம். ஒவ்வொரு அடியிலும் அன்னை மரியாள் கற்றுத்தரும் தாய்மை நிரம்பட்டும்.

இத்தாலியன் மொழியில் ஒரு விநோதமான பழமொழி உண்டு:

"உங்கள் கவலைகளெல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல மறைந்து போகட்டும்!"

வாக்குறுதிகள் எடுக்காத புத்தாண்டு மலரட்டும்!

வாழ்த்துக்களும், செபங்களும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)

============================
தாய்மையோடு புத்தாண்டில்

புத்தாண்டு நாள் - அன்னை மரியாள் இறைவனின் தாய்
(ஜனவரி 1, 2019)

கிரகோரியன் காலண்டரின் படி இன்று ஆண்டின் முதல் நாள். கிரேக்க கடவுள் Janus போல இரண்டு தலை கொண்டவர்களாக - பின்னோக்கியும், முன்னோக்கியும் - நன்றி மற்றும் நம்பிக்கை கொண்டவர்களாக இன்றைய நாளில் நிற்கின்றோம். ஆக,
(1) இன்று புத்தாண்டுப் பெருநாள்.
(2) இந்த ஆண்டின் தலைநாளான இன்று திருஅவை மரியாளை இறைவனின் தாயாக  கொண்டாடுகிறது. மேலும்,
(3) இந்த நாள் தான் 'இயேசுவுக்கு' பெயர் சூட்டப்பட்ட நாள்.
(4) இந்த நாள் தான் கிறிஸ்துபிறப்பின் எட்டாம் திருநாள். ஆக, இது கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருவிழா. இவ்வாறாக, நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறும் இந்நாளில், 'தாய்மையோடு புத்தாண்டில்' என்ற தலைப்பில் உங்களோடு சிந்திக்க விழைகின்றேன்.

ஐசக் நியூட்டனின் 'அப்சலூட் தியரி' மறைந்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் 'ரெலடிவிட்டி தியரி' மேலோங்கி நிற்கும் காலத்தில், எல்லாமே சார்பு அல்லது ரெலடிவ் என்ற நிலைதான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இன்று 'தாய்மையைக் கொண்டாடுவோம்' என்று நான் சொன்னால், அது சார்பு நிலையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. ஏனெனில், நான் இப்படிச் சொல்லும்போது, தாய்மையை உடல் அளவில் அடைய முடியாத ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினர், தாய்மையை தாங்களாகவே துறந்த பெண் துறவியர், தாய்மையை அடைய முடியாத நிலையில் உள்ள பெண்கள், வன்புணர்வால் தாய்மை புகுத்தப்பட்டுத் துன்புறும் பெண்கள், குழந்தைகள், மற்றும் வாடகைத் தாய்மார்கள் என பலரை நான் சிந்தனையிலிருந்து அகற்றிவிடுவேன். ஆக, 'தாய்மை' என்ற வார்த்தையை நான் இங்கே உருவகமாகவே பயன்படுத்துகிறேன். அதே போல, 'புத்தாண்டு' என்ற வார்த்தையும் தனிநபர் சார்ந்ததே. கிரகோரியன் காலண்டர் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே இன்று புத்தாண்டு நாள். தமிழ், தெலுங்கு, சீன, ஆப்பிரிக்க, யூத போன்ற பிற காலண்டர்களைப் பின்பற்றுபவர்களுக்கு இதே ஆண்டின் இன்னொரு நாளே தவிர புத்தாண்டு நாள். ஆக, 'புத்தாண்டு' என்ற வார்த்தையையும் நான் இங்கே உருவகமாகவே பயன்படுத்துகிறேன்.

'தாய்மையோடு புத்தாண்டில்' நுழைவது எப்படி?
இன்று மரியாளை இறைவனின் தாயாக அழைத்து, அவரின் தாய்மையைக் கொண்டாடுகிறோம். 'இறைவனின் தாய்' என்றால், அவர் 'இறைவனையே பெற்றெடுத்தார்' என்ற பொருளில் அல்ல. ஏனெனில், 'படைக்கப்பட்டவர்' 'படைத்தவரை' பெற்றெடுக்க முடியாது. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை (கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின் மனித தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை 'கிறிஸ்துவின் தாய்' அல்லது 'இயேசுவின் தாய்' என அழைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), 'இம்மானுவேல்தான் கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்படுக!' என்று அறிவித்தது. ஆக, 'இறைவனின் தாய்' என்னும் தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின் இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபோது, அவரை வாழ்த்தி வரவேற்கும் எலிசபெத்து, 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' (லூக் 1:43) என்று கேட்கின்றார். 'ஆண்டவரின் தாய்' என்ற இந்தச் சொல்லாடல்தான் 'இறைவனின் தாய்' என்று வந்தது என்றும் நாம் சொல்ல முடியாது. ஆனால், எலிசபெத்து மரியாளை 'ஆண்டவரின் தாய்' என்று அழைக்கின்றார். மற்றபடி மரியாளை இறைவனின் தாய் என அழைக்க வேறு குறிப்புக்கள் விவிலியத்தில் இல்லை.

தாய்மை என்றால் என்ன?
தாய்மைக்கான மிகச் சிறந்த வரையறை விவிலியத்தின் முதல் பக்கங்களில் உள்ளது. தொடக்கப் பெற்றோர் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்து, அவர்கள் கடவுளால் தண்டிக்கப்பட்டபோதுதான் அந்த இனிய நிகழ்வு நடக்கிறது. விவிலிய ஆசிரியர் இப்படிப் பதிவு செய்கிறார்: 'மனிதன் தன் மனைவிக்கு 'ஏவாள்' என்று பெயரிட்டான். ஏனெனில், உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்' (தொநூ 3:20). கொஞ்சப் பகுதிக்கு முன்னால் - அதாவது, பாவம் செய்வதற்கு முன், 'ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால் இவள் 'பெண்' (ஈஷா) என அழைக்கப்படுவாள்' (தொநூ 2:23) என்று வேறு ஒரு பெயர் கொடுக்கப்படுகிறது. ஆக, தாய் என்ற பெயர் ஒரு ரொமான்டிக் பெயர் அல்ல. மாறாக, மனுக்குலத்தின் முதல் தாய் ஏவாள் தாய்மை என்ற பேற்றை அடைவது பிள்ளைப் பேற்றினால் அல்ல. மாறாக, தான் செய்த தவற்றினால்.

இதைக் கொஞ்சம் புரிந்துகொள்வோம். ஏவாளிடம் எனக்குப் பிடித்தவை மூன்று: (அ) பாம்பை எதிர்கொள்ளும் துணிச்சல், (ஆ) கணவனுடன் பகிர்தல், மற்றும் (இ) பொறுப்புணர்வு. முதலில், மனுக்குலத்தின் எதிரியாகிய பாம்போடு நேருக்கு நேர் நின்று உரையாடிவள் ஆண் அல்ல. மாறாக, பெண். விவிலியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் உரையாடலும் இதுவே. மேலும், அவளின் உரையாடல் வெறும் பழத்தைப் பற்றியது அல்ல. மாறாக, உண்மை, நன்மை, தீமை போன்ற பெரிய கருத்தியல்கள் பற்றியது. பாம்பு பெண்ணிடம், 'நீங்கள் சாகவே மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்' என்றது (தொநூ 3:4-5). பாம்பின் இந்த வார்த்தைகளை நம்பி பெண் பழத்தை உண்ணவில்லை. பின் எதற்காக உண்டாள்? 'அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்கு களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாவும் இருந்ததைக் கண்டு பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள்' (தொநூ 3:6). ஆக, பாம்பு சொல்லவில்லையென்றாலும் ஏவாள் அந்தப் பழத்தை உண்டிருப்பார். ஆக, தானே விரும்பி தன் முடிவை எடுக்கின்றார் ஏவாள். மேலும், தீமையை நேருக்கு நேர் எதிர்கொள்கின்றார். இரண்டாவதாக, 'அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்' (தொநூ 3:6) என்கிறது விவிலியம். தான் செய்த செயலைத் தன் கணவனோடு பகிர்கிறாள். மூன்றாவதாக, தான் உண்டதற்குப் பொறுப்பேற்கிறார் ஏவாள். 'பாம்பு என்னை ஏமாற்றியது. நானும் உண்டேன்' (தொநூ 3:13) என தன் செயலுக்குப் பொறுப்பேற்கிறார் ஏவாள்.

இந்த மூன்று குணங்களும்தான் அவரைத் தாய்மை நிலை அடைய வைக்கிறது. ஆக, தாய்மை என்பது, (அ) தீமையை நேருக்கு நேர் எதிர்கொள்ளுதல், (ஆ) தன்னிடம் உள்ளதைப் பகிர்தல், (இ) பொறுப்புணர்வோடு இருத்தல். இந்த மூன்றிலும் ஒன்று புலப்படுகிறது. அது என்ன? தாய்மை என்பது ஒரு தயார்நிலை. தாய்மை ஒரு இலக்கு அல்ல. மாறாக, இனி வருபவற்றை எதிர்கொள்வதற்கான தயார்நிலை என்னும் வழிமுறை.

மரியாளின் தாய்மையும் ஒரு தயார்நிலையே. அத்தயார்நிலையில் (அ) அவர் தீமையை நேருக்கு நேர் எதிர்கொண்டு வெற்றி பெறும் மீட்பரைப் பெற்றெடுத்தார், (ஆ) 'உம் சொற்படியே ஆகட்டும்' என்று தன்னிடம் உள்ளதைக் கடவுளோடு பகிர்ந்தார், (இ) பெத்லகேம் முதல் நாசரேத்துக்கு, நாசரேத்து முதல் எருசலேமுக்கு, நாசரேத்து முதல் கானாவுக்கு, கானா முதல் கல்வாரிக்கு எனத் தன் மகனைப் பொறுப்புணர்வோடு வழிநடத்தினார். இன்று புத்தாண்டில் நுழையும் நமக்கு மரியாள் வைக்கின்ற பாடம் இதுவே: 'தாய்மை என்னும் தயார்நிலை.' மேலும், இத்தாய்மை (அ) பொறுப்புணர்வு (Interactive Responsibility), (ஆ) அர்ப்பணம் (Commitment), (இ) தோல்வி தாங்கும் உள்ளம் (Resilience) என மூன்று மதிப்பீடுகளாக வெளிப்பட வேண்டும்.

தாய்மை என்பது எப்படி தயார்நிலையோ, அதுபோல புத்தாண்டு என்பதும் தயார்நிலையே. புத்தாண்டு என்பது நம் இலக்கு அல்ல. மாறாக, நம் இலக்கை அடைவதற்கான வழியே புத்தாண்டு. புத்தாண்டை நாம் கொண்டாடக் காரணம் நாம் காலத்திற்கு உட்பட்டிருப்பதால்தான். காலத்திற்கு உட்படாத கடவுளுக்கும், வானதூதர்களுக்கும், இறந்த நம் முன்னோர்களுக்கும் புத்தாண்டு இல்லை. ஆக, நம் வரையறையை நினைவுகூறும், கொண்டாடும் நாள்தான் இந்நாள்.

காலத்தின் வரையறைக்குள் கடவுளும் வந்ததால், காலம் புனிதமாக மாறியது. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கலா 4:4-7), புனித பவுல், 'காலம் நிறைவேறியபோது, திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகளாக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்' என மொழிகிறார். காலத்தையும் இடத்தையும் கடந்தவர் கடவுள். காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும் இருப்பவர்கள் நாம். நம் இருப்பிற்குள் கடவுள் வரவேண்டுமென்றால், அவருக்கு நேருமும் இடமும் தேவை. இந்த நேரத்தையே, பவுல், 'காலம் நிறைவுற்றபோது' என்றும், இந்த இடத்தையே, 'பெண்ணிடம்' என்றும் குறிப்பிடுகிறார். மேலும், திருச்சட்டம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது என்பதால், கடவுளின் மகனும் திருச்சட்டத்திற்கு உட்படுகின்றார். 'கடவுளின் மகன்' என்று இயேசுவைச் சொல்வதன் வழியாக, மறைமுகமாக மரியாளை 'கடவுளின் தாய்' எனச் சொல்கின்றார் பவுல். மேலும், காலத்திற்கு உட்பட்ட கடவுள், 'இனி நீங்கள் அடிமைகள் அல்ல. பிள்ளைகள்தாம்' என்று கடவுளின் பிள்ளைகளுக்குரிய உரிமைப்பேற்றைக் கொடுக்கின்றார்.

கடவுளே நுழைந்த காலத்தின் நீரோட்டத்தின் ஒரு பகுதியே 2019ஆம் ஆண்டு. இந்த ஆண்டிற்குள் நுழையும் நமக்கு கடவுள் தரும் ஆசீரைப் பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம் (காண்.எண் 6:22-27). 'யோம் கிப்பூர்' நாளில் பரிகாரப் பலி செலுத்திவிட்டு, திருத்தூயகத்திலிருந்து வெளிவரும் தலைமைக்குரு அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு வழங்கும் ஆசியுரையே இது. இந்த ஆசீரின் இரண்டு முக்கிய கூறுகள் அருளும், அமைதியும். இந்த ஆசீரை இறைவனே மோசே வழியாக ஆரோனுக்கு கற்றுத் தருகின்றார். எபிரேயத்தில் 'ஆசீர்' என்றால் 'செல்வம்' அல்லது 'வளமை' என்பது பொருள். ஆக, ஒருவர் செல்வந்தராக இருக்கிறார் என்றால் அவர் இறைவனின் ஆசீர் பெற்றவர் என்று நாம் சொல்லலாம். அதற்காக செல்வம் இல்லாதவர்கள் எல்லாம் ஆசீர் இல்லாதவர்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

தமிழ் மொழிபெயர்ப்பில் சின்ன சிக்கல் இருக்கிறது. அதாவது, 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!' என்பது 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' என்று இருக்க வேண்டும். ஒருவேளை எபிரேயத்தின் மொழிநடை எல்லாவற்றையும் பிரித்து எழுதுகிறதோ என்னவோ. மேலும், எபிரேய வாக்கிய அமைப்பில் முதல் ஆசியில் மூன்று வார்த்தைகளும், இரண்டாம் ஆசியில் ஐந்து வார்த்தைகளும், மூன்றாம் ஆசியில் ஏழு வார்த்தைகளும் இருக்கின்றன. மூன்று - ஐந்து - ஏழு என ஆசீர் வளர்கிறது. ஆக, இது சும்மா 'நல்லா இரு!' என்று சொல்லப்பட்ட ஆசீர் அல்ல. மாறாக, யோசித்து, நிறுத்தி, நிதானமாக எழுதப்பட்டுள்ளது.

மூன்று ஆசிகள். ஒவ்வொரு ஆசியிலும் இரண்டு கூறுகள்: (1) 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' இதில் ஆண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர் அளிப்பவர். 'உனக்கு' என்பது இரண்டாம் நபர் (முன்னிலை) ஒருமை. ஆக, இது மொத்தமாக கூட்டத்தின்முன் வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு தனிநபருக்கும் உரியது. ஆக, ஆண்டவரின் பிரசன்னத்தில் கூட்டம் போடுவதற்கே இடமில்லை. ஒவ்வொருவரும் அவரின் பார்வையில் விலைமதிப்பு உடையவர். 'பராகா' என்பது இறைவன் மனிதர்களுக்கு ஆசீர்வதிப்பதையும் குறிக்கிறது. 'காத்தல்' என்பதை 'கண்களைப் பதித்தல்.' ஒரு ஆயன் தன் மந்தையைக் காக்கிறான் என்றால், அவன் தன் மந்தையின் மேல் தன் கண்களைப் பதிய வைக்கிறான். (2) 'ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!' 'ஒளி' என்பது விவிலியத்தில் வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின் முகம் எப்போதும் ஒளிரக் கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல் படும்போது அவர்களும் ஒளி பெறுகின்றனர். வாழ்வு பெறுகின்றனர். மேலும், உருவகத்தின் அடிப்படையில் 'திருமுகம் ஒளிர்தல்' என்பது 'அருள்கூர்தல்' என்றும் பொருள் படும். 'ஹனான்' ('அருள்') என்ற வார்த்தை 'தன் குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்' செயலைக் குறிக்கிறது. (3) 'ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!' மீண்டும் ஆண்டவரின் திருமுகமே இங்கு செயலாற்றுகிறது. 'தாழ்ந்து போன முகம்,' அல்லது 'குனிந்த முகம்' அவமானத்தை அல்லது கோபத்தைக் குறிக்கும் (தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொள்ளுதல் கோபத்தையும், ஒருவரிடமிருந்து விலகி நிற்பதையும், கண்டுகொள்ளாததையும் குறிக்கும் (இச 31:18, திபா 30:8, 44:25). ஆண்டவர் தன் முகத்தை தாழ்த்திக் கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக் கொள்ளாமல் உன் பக்கம் திருப்புகிறார். இறுதியாக அவர் 'ஷலோம்' ('அமைதி, நிறைவு, நலம்') தருகிறார்.

இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன தோன்றுகிறது? எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே என்று மூன்று எதார்த்த நிலைகள் உள்ளன. இறைவனின் ஆசிமொழி எனக்கு வெளியே தொடங்கி, என்மேல் ஒளிர்ந்து, எனக்குள் பாய்கின்றது. ஆக, இறைவனின் ஆசி முழுமையான ஆசியாக இருக்கிறது. புத்தாண்டு தரும் தயார்நிலையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (லூக் 2:16-21) பின்புலம் இதுதான்: இயேசு பெத்லகேமில் பிறந்துவிட்டார். இந்த பிறப்பு செய்தி வானதூதர் ஒருவரால் இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. பின் வானதூதர் அணி வானில் பாடல் பாடுகின்றது. இந்த பாடல் முடிந்தவுடன், இடையர்கள் என்ன செய்தார்கள் என்பதும், இடையர்களின் வருகை மரியாவில் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதுமே இன்றைய நற்செய்தி வாசகம். இன்றைய நற்செய்தி வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) இடையர்களின் வருகை, (ஆ) இடையர்களின் வியப்பு, (இ) மரியாளின் பதிலுணர்வு, (ஈ) இடையர்களின் செல்கை, மற்றும் (உ) இயேசுவின் விருத்தசேதனம். இவற்றில் மையமாக இருப்பது மரியாளின் பதிலுணர்வு.மரியாளின் பதிலுணர்வு மௌனமும், தியானமும். எல்லா யூதர்களையும்போல மரியாளுக்கும் மெசியா பற்றிய காத்திருத்தல் இருந்திருக்கும். இந்தக் காத்திருத்தல் நிறைவு பெற்றதை தன் உள்ளத்தில் உணர்ந்தவராய் அப்படியே உறைந்து போகின்றார்.இங்கே 'சும்பல்லூசா' என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு 'தியானித்தில்' அல்லது 'உள்ளத்தில் இருத்துதல்' அல்லது 'மனனம் செய்தல்' என்பது பொருள் அல்ல. மாறாக, 'ஒன்றுகூட்டுதல்' என்பதே பொருள். அதாவது, ரெவன்ஸ்பர்கர் ஆட்டத்தில், சிதறிக்கிடக்கும் படத் துண்டுகளை ஒவ்வொன்றாக அதனதன் அடத்தில் சேர்த்து பெரிய படத்தை உருவாக்குவதுபோல, மரியாள் இப்போது தன் கையில் கிடைக்கப்பட்டுள்ள புதிய துண்டை ஆச்சர்யமாக பார்க்கிறாள்.

ஆக, இன்று நாம் கொண்டாடும் மரியாளின் தாய்மை, புத்தாண்டில் நுழையும் நமக்கு, தாய்மை என்ற தயார்நிலையைத் தருகின்றது. ஏவாளின் தாய்மையும், மரியாளின் தாய்மையும் 'ஸ்மைல்' (smile) மற்றும் 'ஸைலன்ஸ்' (silence) என்ற இரண்டு 'எஸ்' ('s') களில் அடங்கியுள்ளன. பாம்பைப் பார்த்துச் சிரித்தார் ஏவாள். வானதூதரைப் பார்த்துச் சிரித்தார் மரியாள். தான் சபிக்கப்பட்டவுடன் மௌனம் காக்கிறார் ஏவாள். இடையர்கள் வாழ்த்தியபோது மௌனம் காக்கிறார் மரியாள்.

தாய்மையும், புத்தாண்டும் இலக்குகள் அல்ல. மாறாக, என் வாழ்வின் நிறைவை நான் அடைய திறக்கப்படும் வழிகள். இவ்வழிகளில் 'ஸ்மைல்' - அது இல்லாதபோது 'ஸைலன்ஸ்' என இரண்டு கால்களால் நடந்தால் பயணம் இனிதாகும். 2019 என்னும் இரயில் நம் வாழ்க்கை என்னும் நடைமேடைக்கு வர சில மணித்துளிகளே உள்ளன.

'உங்கள் கவலைகள் எல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல மறைந்துபோவனவாக' என்பது இத்தாலியப் பழமொழி. மரங்கள், மனிதர்கள், கவலைகள், வாக்குறுதிகள் மறைய இரயில் வேகமாக ஓடும். ஓட்டத்தின் இறுதியில் இலக்கை அடையும்.

உங்கள் பயணம் சிறக்க இனிய வாழ்த்துக்கள்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Faculty Member
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
* மரியாள் கடவுளின் தாய்   - வருடத்தின் முதல் நாள்)

புதிய வருடத்தின் முதல் நாளை புதுவருடத் திருவிழாவென நாம் அகமகிழ்ந்தாலும், ஜனவரி முதல் நாளை அன்னையாம் திருஅவை இறைவனின் தாய், தூய கன்னி மரியாளுக்கு அர்ப்பணித்து விழாவெடுக்கின்றது.

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித வேத நூலான "குரான்" (Quran) ஆகியன மரியாளை "கன்னி" என்றுரைக்கின்றன. புதிய ஏற்பாடு மற்றும் "குரான்" (Quran) ஆகியவற்றின்படி, அன்னை மரியாள் இயேசு கிறிஸ்துவின் தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவர். புனிதர் யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி, மரியாளியல் எனப்படுகிறது.

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் மரியாளை கன்னி எனக்குறிக்கின்றன. கிறிஸ்தவ மரபுப்படி மரியாள் இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருத்தாங்கினார். இது எல்லா கிறிஸ்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு முன்பே மரியாள் புனிதர் யோசேப்புக்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.

மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித் திருச்சபை, மற்றும் ஆங்கிலிக்கன் திருச்சபை ஆகியன செப்டம்பர் மாதம் 8ம் நாளில் கொண்டாடுகின்றன.

புதிய வருடத்தின் முதல் நாளான ஜனவரி முதல் நாள் மட்டுமல்ல, எல்லாம் வல்ல பரலோக தந்தையால் எமது வாழ்வில் புதிது புதிதாகத் தரப்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு புது வருடத் திருவிழாவென நாம் மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி கூறலாம்.

கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசிகளான நாம், இறை மகன் இயேசுவின் தாய் தூய கன்னி மரியாளுக்கு வருடம் முழுவதும் எத்தனையோ பெருவிழாக்கள் எடுப்பது வழக்கம். அவற்றுள் வருடத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும். தூய கன்னி மரியாள், இறைவனின் தாய் என்னும் பெருவிழா தனிச் சிறப்புடையதென இறையியலாளர்கள் பலரும் கருதுகின்றனர்.

இன்றைக்கு 2018 வருடங்களுக்கு முன்னர், பெத்தலகேம் மாட்டுத் தொழுவத்தில் தனக்குப் பிறந்த குழந்தை எவ்வாறானதாக இருக்குமோவென, தங்களுக்கு இடையர்களால் சொல்லப்பட்டவை, தாங்கள் கேட்டவை, கண்டவை தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் தம்முள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்த அன்னை மரியாளை, இன்றைய நாளில் லூக்கா நற்செய்தியாளர் எமக்கு அறிமுகம் (லூக்கா 2: 17-19) செய்து வைக்கின்றார்.

நற்செய்தியை நாம் ஆழமாக உற்றுநோக்குமிடத்து, தாயின் வயிற்றிலே நாம் உருவாகு முன்பே எம்மைக் குறித்து எல்லாம் வல்ல இறைவன் அனைத்தையும் முன்கூட்டியே குறித்து வைக்கின்றார் என்ற உண்மையும் எமக்கு வேறுவிதமாகப் படிப்பிக்கப்படுவதனை நாம் கண்டுணரலாம் என்பது தெளிவாகின்றது.

எமது பிறப்பு எவ்வாறு அமையுமென்பது முன்னரே தெரிவதில்லை. இன்றைய நவீன விஞ்ஞானம் பலவாறு தெரிவித்தாலும், தமக்கு எவ்வாறான குழந்தை பிறக்குமென பெற்றோருக்கும் முழுமையாகத் தெரிவிக்கப்படுவதில்லை. ஆயினும், ஒவ்வொரு மங்கையரும் தமது கர்ப்ப காலத்திலேயே, அன்பும், பாசமும் நிறைந்த தியாகத்தோடு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறேன் என்பதனை தெரிந்து கொள்கின்றனர்.

இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையாலும் பெண்களுக்கு அன்னை என்ற முகவரி மட்டுமல்ல, பெண்மையின் முழுமையான தாய்மை என்ற உயர்நிலையும் இயல்பாக கிடைக்கிறதென பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறே, எமது பிறப்பிற்கு இறைவனே காரணமாக இருந்தாலும், எதுவுமே எமது கையில் இல்லாத நிலையில், எமது அன்னையரால் இந்த உலகம் எமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதனை எவருமே மறுக்க முடியாது.

எமது மனித வாழ்வில் அன்னை எனப்படுபவள் முக்கிய உயர் நிலையைப் பெறுவது போன்றே என்றுமே தூய கன்னி அன்னை மரியாளும் எல்லாம் வல்ல இறைவனின் மீட்புத் திட்டத்தில் "பெண்களுக்குள் ஆசீர் பெற்றவளாக"த் தேர்ந்தெடுக்கப்பட்டு "இதோ உமது அடிமை" (லூக். 1 : 38) எனத் தம்மையே தாழ்த்தியதால், எல்லாம் வல்ல கடவுளால் உலக மீட்பராம் இயேசுவிற்கு மனித உருக்கொடுக்க தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது எமது விசுவாசமாகும்.

தமது சாயலாகப் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும் புதுவாழ்வு கொடுப்பவர் எல்லாம் வல்ல கடவுளாகினும், எல்லா அன்னையரின் உதரத்திலும் குழந்தையாகக் கடவுள் பிறக்க முடியாது. இதற்காகவே, என்றுமே தூய கன்னி அன்னை மரியாளைத் தேர்ந்தெடுத்தார் என்ற உணமையை நற்செய்தி ஏடுகள் சான்று பகருகின்றன. எனவே, என்றுமே தூய கன்னி அன்னை மரியாள் எல்லாம் வல்ல கடவுளின் பார்வையில் விலைமதிப்பேறப் பெற்றவர் என்பது நிறைவாகிறது.

எமது கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாச அடிப்படையில் என்றுமே தூய கன்னி அன்னை மரியாள் இறைவனின் தாய் மட்டுமல்ல, இறைவனின் பார்வையில் விலை மதிப்பேறப்பெற்றவள். அதே அன்னை "நாமே ஆமல உற்பவம்" எனத் தம்மை எமக்கு வெளிப்படுத்தியது மட்டுமல்ல, எமது சதாலாகாயத் தாயாக, எமது மீட்பின் அன்னையாக எமக்குத் தரப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு புத்தாண்டின் போதும் இறைவனின் தாய் என்ற பெருவிழாவை நாம் கொண்டாடி மகிழ்வது முற்றிலும் பொருத்தமானதால், வருடத்தின் முதல் நாளில் மட்டுமல்ல, எந்நாளிலும் இரக்கத்தின் இறைவனான இயேசு ஆண்டவரிடம் இரந்து மன்றாட அன்னை மரியாளின் பரிந்துரையை விசேடமாக வேண்டி நிற்போம்!
ஆமென்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மரியாள் இறைவனின் தாய் (ஜனவரி 01)

நிகழ்வு

மைக்கேல் ஆஞ்சலோவின் ஆகச் சிறந்த படைப்பு Pieta என்பதாகும். (இறந்த இயேசுவை அன்னை மரியாள் தன்னுடைய மடியில் வைத்திருக்கின்ற சிற்பம்). அந்த சிற்பத்தைப் பார்த்து ஒருவர் மைக்கேல் அஞ்சலோவிடம் கேட்டார், "எதற்காக அன்னை மரியாவை மிகவும் இளமையாக இருப்பது போன்று படைத்திருக்கிறீர்கள்?". அதற்கு அவர் அவரிடத்தில் சொன்னார், "மாசுமருவற்ற வாழ்க்கை வாழ்வோர் யாவரும் இப்படித்தான் இளமையாக இருப்பார்கள். மரியாள் மாசற்ற தூய வாழ்க்கை வாழ்ந்தாள். அதனால்தான் அவள் இவ்வளவு இளமையாக இருக்கிறாள்".

வரலாற்றுப் பின்னணி

ஆண்டின் முதல் நாளான இன்று திருச்சபை மரியாள் இறைவனின் தாய் என்ற விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவ்விழா எப்படி, எப்போது தொடங்கப்பட்டது என அறிந்துகொள்வது மிகவும் சிறப்பானதாகும்.

கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த நெஸ்டோரியஸ் என்பவர் 'மரியாள் இயேசுவின் தாய்தானே ஒழிய, இறைவனின் தாய் அல்ல' என்ற புது வாதத்தை முன்வைத்தார். அதற்கு திருச்சபையிலிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. 431 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி எபேசு நகரில் கூடிய திருச்சங்கம், "இயேசுவில் இறைத்தன்மையும் மனிதத் தன்மையும் முழுமையாகக் குடிகொண்டிருகின்றன. ஆகவே மரியாள் இறைவனின் தாய்" என்பதை நம்பிக்கைக் கோட்பாடாக அறிவித்தது. அன்றிலிருந்து இன்றுவரை திருச்சபை மரியாள் இறைவனின் தாய் என்று அன்போடு அழைத்துவருகிறது. நம்முடைய முன்னாள் திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல், தான் எழுதிய 'மீட்பரின் தாய்' என்னும் திருத்தூது மடலில், "மரியாள் திருச்சபையின் தாய்" என்றும் அழைத்து சிறப்பு செய்கிறார். ஆகவே, மரியாள் இறைவனின் தாய் மட்டுமல்ல, திருச்சபையின் தாயாக நம்முடைய தாயாக - விளங்குகின்றாள்.

விவிலியச் சான்றுகள்

விவிலியத்தில் மரியாள் இறைவனின் தாய் என்பதற்கான குறிப்புகள் ஒருசில இடங்களில் காணக் கிடக்கின்றன முதலாவதாக வானதூதர் கபிரியேல் மரியாளுக்குத் தோன்றுகின்றபோது அவர், "அருள்மிகப் பெற்றவரே!, இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" என்கிறார் (லூக் 1:31). இவ்வார்த்தைகள், மரியாள் இயேசுவைப் பெற்றெடுப்பதனால் அவர் இறைவனின் தாயாகிறார் என்பதைக் குறித்துக்காட்டுகின்றது. இரண்டாவதாக மரியாள் தன்னுடைய உறவினரான எலிசபெத்தைச் சந்திக்கின்றபோது, அவர், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" என்கிறார். இவ்வார்த்தைகளும் மரியாள் ஆண்டவரின் தாய் இறைவனின் தாய் என்பதற்கு மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது.

ஆகவே, திருநூலும் சரி, திருத்தந்தையர்களின் நம்பிக்கைக் கோட்பாடும் சரி மரியாள் இறைவனின் தாய் என்பதை மிகச் சிறப்பாக எடுத்துக்கூறுகின்றன.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியாள் இறைவனின் தாய் என்ற விழாவைக் கொண்டாடும் நாம் அன்னை மரியாளிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. கீழ்ப்படிதல்
மரியாள் கீழ்ப்படிதலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. எவ்வாறெனில், வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றி, "மரியா, இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" என்று (லூக் 1:31) சொல்கிறபோது, மரியாள் தொடக்கத்தில் தயங்குகிறாள். ஆனால் வானதூதர் அவளிடம் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னபிறகு, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று இறைவனின் மீட்புத் திட்டத்திற்கு கீழ்ப்படிந்து தன்னையே முற்றிலுமாகக் கையளிக்கிறார்.

பழைய ஏவாள் ஆண்டவர் கொடுத்த கட்டளையான விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ணக்கூடாது என்பதற்குக் கீழ்படியவில்லை, அவள் பாம்பின் பசப்பு மொழியில் மயங்கி, விலக்கப்பட்ட கனியை உண்டு ஆண்டவர் கொடுத்த கட்டளைக்குக் கீழ்படியாமல் போனாள். அதனால் பாவம் இந்த உலகில் நுழைந்தது. ஆனால் புதிய ஏவாளாகிய மரியா ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள், அதனால் இந்த மண்ணுலகிற்கு மீட்பு உண்டாகக் காரணமாக இருந்தாள். நாம் கடவுளின் கட்டளைக்கு கீழபடிந்து நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் கூறுவார், "நீங்கள் அனைவரும் அவருக்குக் (கடவுள்) கீழ்ப்படிந்து அவரை அச்சத்தோடும் நடுக்கத்தோடும் ஏற்றுக்கொண்ட முறையை அவர் நினைவுகூரும்போது அவரது உள்ளம் உங்களுக்குக்காக மிகுதியாக உருகுகிறது". ஆகையால் நாம் அன்னை மரியாவைப் போன்று இறைவனுக்குக் கீழ்படிந்து நடக்கின்றபோது இறைவனின் தயவு நமக்கு உண்டு என்பது உறுதி.

தேவையில் இருப்போருக்கு உதவும் நல்ல உள்ளம்

மரியாள் பிறருக்கு, தேவையில் இருப்போருக்கு உதவுகின்ற நல்ல உள்ளத்தைக் கொண்டவராக இருந்தார். கானாவூர் திருமண நிகழ்வாக இருக்கட்டும், பேறுகால வேதனையில் தவித்த எலிசபெத்துக்கு உதவச் சென்ற நிகழ்வாக இருக்கட்டும் மரியாள் தேவையில் இருப்போருக்கு உதவுவதில் தலைசிறந்தவளாக விளங்கினாள். நாம் ஒவ்வொருவரும் மரியாவைப் போன்று பிறருக்கு உதவவேண்டும் என்பதே நமக்கு முன்னால் இருக்கும் சவால்.

எப்படி உதவுவது?. தமிழில் நாம் சொல்லக்கூடிய "உதவி" என்ற வார்த்தையே நாம் எப்படி பிறருக்கு உதவவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது. (உ உள்ளுணர்ந்து; வி- விரைந்து ; த- தன்னலமின்றி). நாம் உதவி செய்கின்றபோது உள்ளுணர்ந்து உதவிசெய்யவேண்டும். பிறர் கேட்டுத்தான் உதவி செய்யவேண்டும் என்பதில்லை. கேளாமல், நாமாகவே உள்ளுணர்ந்து உதவி செய்யவேண்டும். அதே நேரத்தில் விரைந்து உதவிசெய்யவேண்டும். ஒருவருக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது என்றால், அந்த நொடியிலே செய்யவேண்டும். பிறகு உதவி செய்துகொள்ளலாம் என்பது கூடாத காரியம். இறுதியாக நாம் செய்யும் உதவியை தன்னலமின்றிச் செய்யவேண்டும். ஒன்றைக் கொடுத்தால் இன்னொன்றைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்போடு செய்வது உண்மையான உதவியாகாது.

மரியாள் மேலே சொல்லப்பட்ட இரண்டு நிகழ்வுகளிலும் யாரும் கேளாமலே உள்ளுணர்ந்து உதவிசெய்தாள்; விரைந்து உதவி செய்தாள். அதேநேரத்தில் தன்னலமின்றியும் உதவி செய்தாள். அவளுடைய அன்புப் பிள்ளைகளாகிய நாமும் உள்ளுணர்ந்து, விரைந்து, தன்னலமின்றி உதவி செய்வோம்.

இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்தவள்

மரியாள் இறைவார்த்தைக் கேட்டு, அதன்படி நடந்ததற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. எவ்வாறெனில், ஒருமுறை மரியாள், தன்னுடைய சொந்தங்களோடு இயேசுவை சந்திக்கச் செல்கிறபோது, இயேசு, "யார் என்னுடைய தாய்?, யார் என்னுடைய சகோதரிகள்?" என்று கேட்டுவிட்டு, "விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்பார் (மத் 12:50). இங்கே மரியாள் இரண்டு விதங்களில் தாயாகின்றார். ஒன்று இயேசுவைப் பெற்றெடுத்தனால், இன்னொரு தந்தையின் திருவுளத்தின்படி நடந்ததினால். மரியாள் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவார்த்தையைக் கேட்டு, அதனை தன்னுடைய உள்ளத்தில் இருத்தி சிந்தித்து செயல்பட்டு வந்தாள். அதனால் அன்னை இறைவார்த்தையைக் கடைப்பிடித்து வாழ்வதில் நமக்கெல்லாம் முன்மாதிரி.

நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவார்த்தையைக் கேட்கின்றோம். ஆனால் வாழ்வக்குவதில்லை; நம்முடைய வாழ்வில் செயல்படுத்துவதில்லை. தொடக்கநூல் 22:18 ல் ஆண்டவர் ஆபிரகாமைப் பார்த்துக் கூறுவார், "நீ என் குரலுக்கு செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசிகூறிக்கொள்வர்". ஆம், நாம் இறைவனின் வார்த்தைக்கு செவிமடுத்து வாழ்கின்றபோது என்றுமே ஆசிர்வாதம்தான்.

அன்னை மரியாள் இறைவார்த்தையை வாழ்வாக்கினாள், நாமும் இறைவனின் வார்த்தையை வாழ்வாக்குவோம், இறைவனின் ஆசியை நிறைவாய் பெறுவோம். ஆகவே, மரியா இறைவனின் தாய் என்ற விழாவைக் கொண்டாடும் நாம், அன்னையை நமக்குக் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். அதேவேளையில் அன்னையிடம் விளங்கி கீழ்படிதலை, பிறருக்கு உதவும் நல்ல பண்பினை, இறைவார்த்தையைக் கேட்டு, நடக்கின்ற பண்பை நமதாக்குவோம், ஆண்டவரின் அருளை நிறைவாய் பெறுவோம்.

"தாயின் மடிதான் உலகம், அவள் தாளைப் படிந்திடுவோம்".

- Palay Fr. Maria Antonyraj.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா