Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் தீத்துஸ் ✠ (St. Titus)
      
நினைவுத் திருநாள் : ஜனவரி 26
  ✠ புனிதர் தீத்துஸ் ✠ (St. Titus)

*ஆயர்/ மறைச்சாட்சி : (Bishop and Martyr)

*பிறப்பு : கி.பி. முதல் நூற்றாண்டு

*இறப்பு : கி.பி. 96 அல்லது 107 - கோர்ட்டின், கிரேட் (Gortyn, Crete)

*ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
கிழக்கு மரபுவழி கத்தோலிக்க திருச்சபைகள் (Eastern Catholic Churches)
லூத்தரன் திருச்சபை (Lutheranism)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

*புனிதர் பட்டம் : வழிமுறைகளுக்கு முற்பட்ட காலம்

*முக்கிய திருத்தலங்கள் :
ஹெராக்ளியோன் (Heraklion) கிரேட் (Crete)

*பாதுகாவல் : கிரேட் (Crete)

புனிதர் தீத்துஸ் (St. Titus), பண்டைய கிறிஸ்தவ சமய மறைப்பணியாளரும், திருச்சபையின் ஒரு தலைவரும், அப்போஸ்தலரான புனிதர் பவுலின் துணையாளரும், சீடரும் ஆவார். இவரைப்பற்றிய குறிப்புகள் பவுலின் பல திருமுகங்களில் காணக்கிடைக்கின்றன.

வாழ்க்கைக் குறிப்புகள் :
தீத்துஸ், பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவில் (Antioch) இருந்தார். பின்னர் அவர்களோடு எருசலேம் சங்கத்தில் கலந்துகொள்ளச் சென்றார். "பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் தீத்துசையும் கூட்டிகொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன்" (கலாத்தியர் 2:1) என்று பவுல் எழுதுகிறார். ஆயினும் தீத்துஸின் பெயர் திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படவில்லை.

தீத்துஸ் யூத இனத்தைச் சாராத புற இனத்தவர் (Gentile) என்று தெரிகிறது. அவர் விருத்தசேதனம் செய்ய வேண்டிய தேவையில்லை என்று பவுல் மிகக் கண்டிப்பாகக் கூறியதிலிருந்து இது தெளிவாகிறது: "என்னுடன் இருந்த தீத்துஸ் கிரேக்கராய் இருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை" (கலாத்தியர் 2:3). கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்று வாழ்வதற்கு விருத்தசேதனம் தேவையில்லை என்றுதான் பவுல் வாதாடினார்.

தீத்துஸ் ஆற்றிய அறப்பணி :
பவுல் எபேசு நகரில் கிறிஸ்தவத்தை அறிவித்தபோது, திமொத்தேயு மற்றும் தீத்துஸ் ஆகியோர் அவரோடு பணியாற்றினர். அங்கிருந்து பவுல் தீத்துசை கொரிந்து நகருக்கு அனுப்பினார். அந்நகரிலிருந்து காணிக்கை பிரித்து, எருசலேம் சபையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு தீத்துஸ் அனுப்பப்பட்டார். "எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துசே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக்கொண்டோம்" என்று பவுல் எழுதுகிறார் (2 கொரிந்தியர் 8:6).

பவுல் மாசிதோனியாவில் பணிபுரிந்த போது, தீத்துஸ் அவரிடம் சென்றார். கொரிந்து நகரில் திருச்சபை வளர்ந்து வந்ததை தீத்துஸ் பவுலிடம் எடுத்துக் கூறினார். அது பற்றி பவுல் இவ்வாறு கூறுகிறார்: "மாசிதோனியாவிற்கு வந்து சேர்ந்த போது எங்களிடம் மன அமைதியே இல்லை. வெளியே போராட்டம், உள்ளே அச்சம்; இவ்வாறு எல்லா வகையிலும் துன்புற்றோம். தாழ்ந்தோருக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள் தீத்துஸின் வரவால் எங்களுக்கும் ஆறுதல் அளித்தார். அவரது வருகையால் மட்டும் அல்ல; நீங்கள் தீத்துஸுக்கு அளித்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதல் அடைந்தோம். நாங்கள் மிகுதியான மகிழ்ச்சி அடைந்தோம்" (2 கொரிந்தியர் 7:5-8).

தீத்துஸ் கிரேட் (Crete) சபைக்குப் பொறுப்பேற்றல் :
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தீத்துஸின் பெயர், பவுல் சிறைப்பட்டதை ஒட்டியும், தீத்து கிரேட் (Crete) சபைக்குப் பொறுப்பேற்றது பற்றியும் வரும் குறிப்பில் மீண்டும் காணப்படுகிறது. "நான் உனக்குப் பணித்தபடியே கிரேட் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்" (தீத்து 1:5) என்று பவுல் தீத்துஸுக்கு எழுதுகிறார்.

பவுல் உரோமையில் இருந்தபோது தீத்துஸ் தல்மாத்தியாவுக்குச் சென்றார் என்பதே தீத்துஸ் பற்றிய இறுதிக் குறிப்பு. "தேமா இன்றைய உலகப்போக்கை விரும்பி என்னை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்துஸ் தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டனர்" (2 திமொத்தேயு 4:10) என்று பவுல் குறிப்பிடுகின்றார்.

இறப்பு :
தீத்துஸின் இறப்புப் பற்றிய குறிப்பு புதிய ஏற்பாட்டில் காணப்படவில்லை.

மரபுப்படி, பவுல் தீத்துசை ஆயராகத் திருநிலைப்படுத்தி, கிரேட் தீவின் 'கோர்ட்டின்' நகர ஆயராக அவரை நியமித்தார். தீத்துஸ் கி.பி. 107ல் தமது தொண்ணூற்று ஐந்தாம் வயதில் இறந்தார்.

புனித தீத்துஸின் மீபொருட்கள் :
துருக்கியர் ஆட்சிக்காலத்தில் வெனிசு நகருக்குக் கொண்டுபோகப்பட்டிருந்த புனித தீத்துஸின் மீபொருள்கள் அவர் பணிசெய்து உயிர்துறந்த கிரேட் தீவுக்கு 1969ம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டன. தற்போது அப்பொருட்கள் "கிரேட் தீவில் அமைந்துள்ள ஹெராக்ளியோன்" ஆலயத்தில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளன.

புனித தீத்துஸ் விருது :
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் படைத் திருப்பணியாளர்களில், சிறப்பான சேவை செய்வோருக்கு "புனித தீத்துஸ் விருது" என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.
 

தூய தீத்து விழா (Titus)


வாழ்க்கை வரலாறு

தீத்து


தீத்து அந்தியோக்கியா நகரைச் சேர்ந்த ஒரு புறவினத்துப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். ஒருசில திருச்சபை மரபுகளின்படி இவர் ஆண்டவர் இயேசுவின் எழுபத்தி இரண்டு சீடர்களில் ஒருவராகவும் இருக்கலாம் என்றும் அறியப்படுகின்றார். தீமோத்தேயுவை போன்று இவரும் பவுலடியாரின் அன்பிற்கு உரிய பிள்ளையாக, உடன் உழைப்பாளராக இருந்து பணியாற்றி இருக்கிறார். கி.பி. 52 ஆம் ஆண்டு தூய பவுல் எருசலேமிற்குச் சென்று, அங்கே நடந்த எருசலேம் பொதுச்சங்கத்தில் கலந்துகொண்டபோது, அவருக்கு உறுதுணையாக இவர் இருந்திருக்கின்றார்.

தீத்து, பிரச்சனைகளை தீர்த்து வைப்பத்தில் கைதேர்ந்தவராக இருந்திருந்தார். ஒருசமயம் கொரிந்து நகரிலே பிரச்சனை ஏற்பட்டபோது, பவுலடியார் தீத்துவைத்தான் அங்கே அனுப்பி வைத்து, பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வழிவகை செய்திருக்கிறார். அதேபோன்று இவர் ஏழை எளியவருக்கு உதவிசெய்யும் நல்ல மனத்தையும் கொண்டவராக விளங்கி இருக்கிறார். எருசலேமில் பஞ்சம் ஏற்பட்டபோது இவர் கொரிந்து போன்று நகர்களுக்குச் சென்று அங்கே இருந்தவர்களிடம் நீதி திரட்டி தேவையானவர்களுக்கு உதவி இருக்கிறார். கி.பி.64 ஆம் ஆண்டு இவர் கிரிட் என்ற நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். அங்கே இறைசமூகங்களை சிறப்பாகக் கட்டி எழுப்பும் பணியினைச் செய்து வந்தார். அப்படிப்பட்டார் தனது 94 வயதில் தன்னுடைய மண்ணுலக வாழ்வைத் துறந்தார். கி.பி.823 ஆண்டு இவருடைய உடல் தூய கேத்ரீனா பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தூய மாற்குவின் பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்றுவரை அது அங்கேயே பத்திரமாக இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


பொறுப்புகளில் உண்மையாக இருத்தல்


தூய தீமோத்தேயுவாக இருக்கட்டும், தூய தீத்துவாக இருக்கட்டும் இரண்டு பேருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் மிகவும் உண்மையாகவும் கடமை உணர்வோடும் இருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இருவருமே பவுலடியாரின் உடன்உழைப்பாளர்களாக இருந்து, அதன்பிறகு ஆயர்களாக உயர்ந்தவர்கள். அவர்கள் எத்தகைய சூழ்நிலையிலும் தங்களுடைய பொறுப்புகளிலிருந்து, கடமை உணர்விலிருந்து தவறி நடக்கவே இல்லை. இதுதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய படமாக இருக்கின்றது. தூய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 4:2 ல் தீமோத்தேயுவைப் பார்த்துக் கூறுவார், "இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாய் இரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு இரு". இவற்றையெல்லாம் தீமோத்தேயுவும் தீத்துவும் சிறப்பாகக் கடைப்பிடித்து, தங்களுடைய வாழ்வில் மிகவும் பொறுப்போடு இருந்தார்கள். அதனால்தான் பவுலடியார் இருவரையும் தன்னுடைய அன்புக்குரிய பிள்ளைகள் என்று அழைக்கின்றார்.

கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்புகளில் உண்மையுள்ளவராக, நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்றோமா? என சிந்தத்துப் பார்க்கவேண்டும். நாம் எந்த பொறுப்பை வகித்தாலும் அது ஆசிரியப் பணியோ, குருத்துவப் பணியோ, நாட்டை வழிநடத்தும் தலைமைப்பணியோ எதுவாக இருந்தாலும், அதில் உண்மையாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்த்து, அதன்படி வாழ்வது நமது கடமையாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன் (மத் 25:23).

ஆகவே, நாம் நமக்குக் கொடுப்பப்பட்ட பொறுப்புகளில் தூய தீமோத்தேயுவைப் போன்று, தீத்துவைப் போன்று உண்மையுள்ளவர்களாக இருப்போம்.


இயேசுவுக்காக உயிரையும் இழக்கத் துணிதல்


"கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்" என்பார் தூய பவுல் (பிலி 3:8). அதைப்போன்று தான் தீமோத்தேயுவும் தீத்துவும் கிறிஸ்துவை ஆயத்தமாக்கிக் கொள்ள தங்களுடைய உயிரையே துச்சமாகக் கருதினார்கள். கிறிஸ்துவுக்காக தங்களுடைய உயிரையும் இழந்தார்கள். தீத்து இயற்கையான முறையில் உயிர் துறந்தாலும், தீமோத்தேயுவோ கல்லால் எறிந்து கொல்லப்பட்டார். அந்தளவுக்கு அவர் இயேசுவுக்காக எதையும் இழக்கத் துணிந்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவுக்காக நம்முடைய உயிரை இழக்கத் தயாராக இருக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வட கொரியாவில் கம்யூனிச ஆட்சி வந்தபோது கிறிஸ்தவர்கள் அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள், சித்ரவதை செய்யப்பட்டார்கள். ஒருசமயம் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஓர் ஆலயத்திற்குள் ஒன்றாகக் கூடி ஜெபித்துக்கொண்டிருந்தபொது ஆயுதம் தாங்கிய சிலர் அந்த ஆலயத்திற்குள் நுழைந்து, பீடத்தில் இருந்த இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தைக் கீழே இழுத்துப் போட்டு, அதில் அனைவரையும் எச்சில் துப்பச் சொன்னார்கள். அப்படி யாராரெல்லாம் பாடுபட்ட சிரூபத்தில் எச்சில் துப்புகிறார்களோ அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும், எச்சில் துப்பாதவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாவார்கள் என்று சொல்லி அவர்கள் அவர்களை எச்சரித்தார்கள்.

நிறைய கிறிஸ்தவர்கள் தங்களுடைய உயிருக்குப் பயந்து இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தின்மீது எச்சில் துப்பிச் சென்றார்கள். இறுதியாக வந்த ஒரு பெண்மணி எதற்கும் பயப்படாமல் சிரூபத்தின் மீது இருந்த எச்சில் அனைத்தையும் துடைத்துவிட்டு, "இயேசுவே நான் உன்னை முழுவதும் அன்புசெய்கிறேன்" என்றாள். இதைக் கண்ட ஆயுதம் தாங்கி முரடன் ஒருவன், பாடுபட்ட சிரூபத்தின்மீது எச்சில் துப்பிய மற்ற எல்லா கிறிஸ்தவர்களையும் ஆலயத்திற்கு உள்ளே போகச் சொல்லிவிட்டு, அந்தப் பெண்மணியை மட்டும் வெளியே இழுத்துச் சென்று துப்பாக்கிக் குண்டுக்கு அவளை இரையாக்கினான். அந்தப் பெண்மணியோ கிறிஸ்துவுக்காக சாவைத் துணிவோடு ஏற்றுக்கொண்டாள்.

"தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர், மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார்" என்பார் இயேசு (மத் 16: 25). இயேசுவுக்காக அந்த வட கொரியப் பெண்மணியும், தீமோத்தேயுவும் தங்களுடைய உயிரை இழந்தார்கள். அதனால் காத்துக்கொண்டார்கள். நாமும் இயேசுவுக்காக நம் உயிரை இழக்கத் துணியும்போது அதனைக் காத்துகொள்வோம் என்பது உறுதி.

ஆகவே, தூய தீத்து விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் அவர்களிடம் இருந்த நல்ல பண்புகளை நமதாக்குவோம். இயேசுவுக்காக நம் உயிரையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா