✠ புனிதர் திமொத்தேயு ✠ (St. Timothy) |
|
|
|
நினைவுத் திருநாள் :
ஜனவரி
26 |
✠ புனிதர் திமொத்தேயு ✠ (St. Timothy)
*ஆயர், மறைசாட்சி : (Bishop,
Martyr)
*பிறப்பு : கி.பி. சுமார் 17
- லிஸ்ட்ரா (Lystra)
*இறப்பு : கி.பி. சுமார் 97 (வயது
79/80) -மசெடொனியா (Macedonia)
*ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கீழை மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
லூத்தரன் திருச்சபை (Lutheran Church)
புனிதர் திமொத்தேயு, கிறிஸ்தவ சமயத்தின் முதல் நூற்றாண்டில்
வாழ்ந்து, கி.பி. 97 அளவில் இறந்த ஒரு புனிதரும், பண்டைய
கிரேக்க நகரமான "யூஃபேசஸ்" (Ephesus) எனுமிடத்தின் முதல் ஆயரும்
ஆவார். "திமொத்தேயு" என்னும் பெயருக்கு "கடவுளைப் போற்றுபவர்"
என்றும், "கடவுளால் போற்றப்பெறுபவர்" என்றும் பொருள் உண்டு.
விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின்படி திமொத்தேயு புனித பவுலோடு
பயணம் செய்து கிறிஸ்தவ மறையைப் போதித்தார்; புனித பவுலின் சீடராக
விளங்கினர். புனித பவுல் எழுதிய கடிதங்களுள் இரண்டு
திமொத்தேயுவுக்கு எழுதப்பட்டவை ஆகும்.
(காண்க: 1 திமொத்தேயு, 2 திமொத்தேயு).
வாழ்க்கை வரலாறு :
திமொத்தேயு, "ஆசியா மைனர்" (Asia Minor) என்று அறியப்படும்
"அனடோலியன் தீபகற்பத்தின்" (Anatolian peninsula) மத்திய
பிராந்தியமான "லிஸ்ட்ராவின்" (Lystra) "லிக்கவோனியன்" (Lycaonian)
நகரில் பிறந்தவர் ஆவார். இவரது தாயார் "யூனிஸ்" (Eunice),
கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மனம் மாறிய ஒரு முன்னாள் யூதப் பெண்மணியாவார்.
இவரது தந்தையார் கிரேக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
புனிதர் பவுலும், "அந்தியோக்கியா மற்றும் சைபிரஸ்" (Apostle to
Antioch and Cyprus) ஆகிய நாடுகளின் அப்போஸ்தலருமான புனிதர்
"பர்னபாஸ்" (Saint Barnabas) ஆகிய இருவரும் முதன்முதலாக
"லிஸ்ட்ரா" (Lystra) நகர் வந்தபோது, பிறப்பிலிருந்து ஒரு ஊனமுற்ற
ஒருவரை பவுல் குணப்படுத்தினார். பலர் அவரது போதனைகளை ஏற்றுக்கொள்வதற்கு
வழிநடத்தினார்.
இவர் பற்றின சில குறிப்புகள் திருத்தூதர் பணிகள் நூலில் உள்ளன.
புனித பவுல் தமது இரண்டாம் மறையறிவிப்புப் பயணத்தை மேற்கொண்ட
போது அனத்தோலியா (Anatolia) பகுதியில் "லிஸ்ட்ராவுக்குச்" (Lystra)
சென்றார்.
ஓரிடத்தில் பவுல், திமொத்தேயுவை "என் அன்பார்ந்த பிள்ளை" என்று
அழைத்து, "ஆண்டவருடன் இணைந்து வாழும் அவர் நம்பிக்கைக்குரியவர்"
என்று கூறுகின்றார்.
(1 கொரிந்தியர் 4:17).
மேலும் பவுல், திமொத்தேயுவைக் குறித்து "விசுவாச அடிப்படையில்
என் உண்மையான பிள்ளை" என்கிறார்
(1 திமொத்தேயு 1:1).
இன்னோர் இடத்திலும் பவுல், திமொத்தேயுவை "என் அன்பார்ந்த
பிள்ளை" என்று அழைக்கிறார்.
(2 திமொத்தேயு 1:1).
திமொத்தேயு பவுலோடு சேர்ந்து பல மறையறிவிப்புப் பயணங்களை
மேற்கொண்டார். யூத மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால்
அவர் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று உணர்ந்த பவுல்
திமொத்தேயு யூத முறைப்படி விருத்தசேதனம் செய்ய ஏற்பாடு
செய்தார்.
(காண்க: திருத்தூதர் பணிகள் 16:3).
திமொத்தேயு திருப்பணியில் அமர்த்தப்பட்டார். "இறைவாக்கு
உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில்
அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து
அக்கறையற்றவனாய் இராதே" என்று பவுல் திமொத்தேயுவுக்கு
எழுதுகிறார்.
(காண்க: 1 திமொத்தேயு 4:14).
திமொத்தேயுவின் தாய் "யூனிஸ்" (Eunice) மற்றும் பாட்டி
"லோயிஸ்" (Lois) இருவரும் கடவுள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்ததை
பவுல் எடுத்துக்காட்டுகிறார்.
(காண்க: 2 திமொத்தேயு 1:5). அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருக்கலாம்.
மற்றோர் இடத்தில் பவுல், திமொத்தேயு சிறந்த விவிலிய அறிவு
கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார்: "நீ குழந்தைப் பருவம்
முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு
கிறித்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும்
ஞானத்தை அளிக்க வல்லது."
(காண்க: 2 திமொத்தேயு 3:15).
திமொத்தேயு ஒருமுறையாவது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது
எபிரேயர் திருமுகத்திலிருந்து தெரிகிறது: "நம் சகோதரர்
திமொத்தேயு விடுதலை பெற்று விட்டார்."
(காண்க: எபிரேயர் 13:23).
திமொத்தேயுக்கு ஒருவித வயிற்று நோய் இருந்தது என்பதும் பவுலின்
கூற்றிலிருந்து தெரிகிறது: "தண்ணீர் மட்டும் குடிப்பதை
நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி
ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும்
பயன்படுத்து."
(காண்க: 1 திமொத்தேயு 5:23).
எபேசு நகரில் தவறான கொள்கைகள் பரவும் ஆபத்து இருந்ததால் பவுல்
திமொத்தேயுவிடம் அங்கேயே தங்கி இருக்கும்படி கூறுகிறார்: "நான்
மாசிதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசில் இருக்கும்படி
கேட்டுக்கொண்டேன். அங்கே சிலர் மாற்றுக் கொள்கைகளைக் கற்பிக்கின்றனர்.
அப்படிச் செய்யாதபடி அவர்களுக்குக் கட்டளையிடு."
(காண்க: 1 திமொத்தேயு 1:3).
எபேசு சபையில் தகுதிவாய்ந்த சபைக் கண்காணிப்பாளர்களையும்
திருத்தொண்டர்களையும் தேர்ந்தெடுத்து நியமிப்பது குறித்து பவுல்
திமொத்தேயுக்கு விரிவான வழிகாட்டல் தருகிறார்.
(காண்க: 1 திமொத்தேயு 3:1-13).
இந்த வழிமுறைகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகின்றன.
பிற்கால மரபுச் செய்திகள் :
பிற்கால மரபுப்படி, பவுல் திமொத்தேயுவை கி.பி. 65ம் ஆண்டளவில்
எபேசு சபையின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார். அங்கே
திமொத்தேயு 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். கி.பி. 97ல்,
திமொத்தேயுவுக்கு 80 வயது ஆனபோது, அவர் பேகனிய சமயக் கொண்டாட்டங்களைத்
தடுக்க முயன்றபோது அவர்கள் அவரைத் தெருவில் இழுத்துக்
கொண்டுபோய் கல்லால் எறிந்து கொன்று போட்டனர்.
கி.பி. 4ம் நூற்றாண்டில் திமொத்தேயுவின் மீபொருள்கள்
காண்ஸ்டாண்டிநோபுளில் தூய திருத்தூதர்கள் பேராலயத்திற்கு
கொண்டு செல்லப்பட்டன.
வணக்கம் :
ரோமன் கத்தோலிக்க திருச்பையில் திமோத்தேயுக்கு பவுலின் மற்றொரு
சீடரான தீத்து என்பவரோடு இணைத்து விழாக் கொண்டாடப்படுகிறது. அத்திருவிழா
ஜனவரி 26ம் நாள் ஆகும்.
கீழை மரபுச் சபையில் திமொத்தேயு ஒரு திருத்தூதராகவும், புனிதராகவும்,
மறைசாட்சியாகவும் கருதப்படுகிறார். அவருடைய திருவிழா ஜனவரி
22ம் நாள் கொண்டாடப்படுகிறது.
தூய தீமோத்தேயு விழா (Timothy )
நிகழ்வு
பவுலடியாரின் அன்பிற்குரிய உடன்பணியாளராகிய தூய தீமோத்தேயு எபேசு
நகரில் ஆயராக இருந்தபோது, "ஆண்டவர் இயேசு ஒருவரே மெசியா, அவரே
உண்மையான கடவுள்" என்று எல்லா மக்களுக்கும் எடுத்துத்துரைத்து
வந்தார். கிபி. 97 ஆம் ஆண்டில் ஒருநாள் எபேசு நகரில் போலி தெய்வங்களை
வழிபடுவோர் சிலர் தங்களுடைய தெய்வங்களுக்கு Feast of
Katakogigian எனப்படும் விழா எடுத்துக் கொண்டாடிக்
கொண்டிருந்தார்கள். இதை அறிந்த திமோத்தேயு அங்கு சென்று, ஆண்டவர்
இயேசுவே உண்மையான கடவுள் என மிகத்துணிவோடு எடுத்துரைத்தார்.
அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள்,
இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். இது
பிடிக்காத கயவர்கள் சிலர் அவரைக் கல்லால் எரிந்து கொன்று
போட்டார்கள்.
வாழ்க்கை வரலாறு
தூய தீமோத்தேயு
திமோத்தேயு பவுலடியாரால் "என் அன்பிற்குரிய
மகன்" என்றே அழைக்கப்படுகின்றார்
(1திமோ 1:1). இவர் லிஸ்திராவில் வாழ்ந்த ஒரு புறவினத்து தந்தைக்கும்
யூத தாய்க்கும் மகனாகப் பிறந்தார். கி.பி. 47 ஆம் ஆண்டு பவுலடியார்
தன்னுடைய முதல் திருத்தூது பயணத்தை மேற்கொண்டபோது, அவரால்
திருமுழுக்குப் பெற்றார். அதன்பிறகு இவர் தன்னுடைய தாய் ஐனிகேயாள்
என்பவராலும், இவருடைய பாட்டி லோவிசாள் என்பவராலும் நம்பிக்கையில்
உறுதியடைந்தார். இப்படி இறைநம்பிக்கையில் உறுதியடைந்த
தீமோத்தேயு பவுலடியாருடைய பயணங்களிலும், அவருடைய பணிகளிலும் உறுதுணையாக
இருந்தார். இதனால் பவுலடியார் இவரை எபேசு நகரின் ஆயராகத்
திருப்பொழிவு செய்கிறார்.
எபசு நகரின் ஆயராக உயர்ந்தபிறகு இவர் ஆற்றிய பணிகள் ஏராளம்.
குறிப்பாக இவர் ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை மிகத் துணிச்சலாக
அறிவித்தார். பவுலடியாரோடும் ஏறக்குறைய 13 ஆண்டுகள் உறுதுணையாக
இருந்து பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் போலி தெய்வங்களை
வழிபடுவோருக்கும் இவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அதன்விளைவாக
கி.பி. 97 ஆம் ஆண்டு கயவர்கள் சிலரால் இவர் கல்லால் எறிந்து
கொல்லப்பட்டார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடும்
இந்த நல்ல நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக்
கற்றுக்கொள்ளலாம் என நாம் சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
பொறுப்புகளில் உண்மையாக இருத்தல்
தூய தீமோத்தேயுவாக இருக்கட்டும், தூய தீத்துவாக இருக்கட்டும்
இரண்டு பேருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில்
மிகவும் உண்மையாகவும் கடமை உணர்வோடும் இருந்தார்கள் என்று
சொன்னால் அது மிகையாகாது. இருவருமே பவுலடியாரின்
உடன்உழைப்பாளர்களாக இருந்து, அதன்பிறகு ஆயர்களாக
உயர்ந்தவர்கள். அவர்கள் எத்தகைய சூழ்நிலையிலும் தங்களுடைய
பொறுப்புகளிலிருந்து, கடமை உணர்விலிருந்து தவறி நடக்கவே இல்லை.
இதுதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய படமாக இருக்கின்றது. தூய
பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 4:2 ல்
தீமோத்தேயுவைப் பார்த்துக் கூறுவார், "இறைவார்த்தையை அறிவி.
வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில்
நீ கருத்தாய் இரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை
கூறு; மிகுந்த பொறுமையோடு இரு". இவற்றையெல்லாம் தீமோத்தேயுவும்
தீத்துவும் சிறப்பாகக் கடைப்பிடித்து, தங்களுடைய வாழ்வில்
மிகவும் பொறுப்போடு இருந்தார்கள். அதனால்தான் பவுலடியார்
இருவரையும் தன்னுடைய அன்புக்குரிய பிள்ளைகள் என்று
அழைக்கின்றார்.
கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்புகளில்
உண்மையுள்ளவராக, நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்றோமா? என
சிந்தத்துப் பார்க்கவேண்டும். நாம் எந்த பொறுப்பை வகித்தாலும்
அது ஆசிரியப் பணியோ, குருத்துவப் பணியோ, நாட்டை வழிநடத்தும்
தலைமைப்பணியோ எதுவாக இருந்தாலும், அதில் உண்மையாக
இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்த்து, அதன்படி வாழ்வது
நமது கடமையாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார்,
"நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில்
நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில்
உம்மை அமர்த்துவேன் (மத் 25:23).
ஆகவே, நாம் நமக்குக் கொடுப்பப்பட்ட பொறுப்புகளில் தூய
தீமோத்தேயுவைப் போன்று, தீத்துவைப் போன்று உண்மையுள்ளவர்களாக
இருப்போம்.
இயேசுவுக்காக உயிரையும் இழக்கத் துணிதல்
"கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக்
கருதுகிறேன்" என்பார் தூய பவுல் (பிலி 3:8). அதைப்போன்று தான்
தீமோத்தேயுவும் தீத்துவும் கிறிஸ்துவை ஆயத்தமாக்கிக் கொள்ள
தங்களுடைய உயிரையே துச்சமாகக் கருதினார்கள். கிறிஸ்துவுக்காக
தங்களுடைய உயிரையும் இழந்தார்கள். தீத்து இயற்கையான முறையில்
உயிர் துறந்தாலும், தீமோத்தேயுவோ கல்லால் எறிந்து
கொல்லப்பட்டார். அந்தளவுக்கு அவர் இயேசுவுக்காக எதையும்
இழக்கத் துணிந்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவுக்காக
நம்முடைய உயிரை இழக்கத் தயாராக இருக்கின்றோமா? என சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
வட கொரியாவில் கம்யூனிச ஆட்சி வந்தபோது கிறிஸ்தவர்கள் அதிகமாக
கொடுமைப்படுத்தப்பட்டார்கள், சித்ரவதை செய்யப்பட்டார்கள்.
ஒருசமயம் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஓர் ஆலயத்திற்குள் ஒன்றாகக்
கூடி ஜெபித்துக்கொண்டிருந்தபொது ஆயுதம் தாங்கிய சிலர் அந்த
ஆலயத்திற்குள் நுழைந்து, பீடத்தில் இருந்த இயேசுவின் பாடுபட்ட
சிரூபத்தைக் கீழே இழுத்துப் போட்டு, அதில் அனைவரையும் எச்சில்
துப்பச் சொன்னார்கள். அப்படி யாராரெல்லாம் பாடுபட்ட
சிரூபத்தில் எச்சில் துப்புகிறார்களோ அவர்கள்
விடுவிக்கப்படுவதாகவும், எச்சில் துப்பாதவர்கள் துப்பாக்கிக்
குண்டுகளுக்கு இரையாவார்கள் என்று சொல்லி அவர்கள் அவர்களை
எச்சரித்தார்கள்.
நிறைய கிறிஸ்தவர்கள் தங்களுடைய உயிருக்குப் பயந்து இயேசுவின்
பாடுபட்ட சிரூபத்தின்மீது எச்சில் துப்பிச் சென்றார்கள்.
இறுதியாக வந்த ஒரு பெண்மணி எதற்கும் பயப்படாமல் சிரூபத்தின்
மீது இருந்த எச்சில் அனைத்தையும் துடைத்துவிட்டு, "இயேசுவே
நான் உன்னை முழுவதும் அன்புசெய்கிறேன்" என்றாள். இதைக் கண்ட
ஆயுதம் தாங்கி முரடன் ஒருவன், பாடுபட்ட சிரூபத்தின்மீது
எச்சில் துப்பிய மற்ற எல்லா கிறிஸ்தவர்களையும் ஆலயத்திற்கு
உள்ளே போகச் சொல்லிவிட்டு, அந்தப் பெண்மணியை மட்டும் வெளியே
இழுத்துச் சென்று துப்பாக்கிக் குண்டுக்கு அவளை இரையாக்கினான்.
அந்தப் பெண்மணியோ கிறிஸ்துவுக்காக சாவைத் துணிவோடு
ஏற்றுக்கொண்டாள்.
"தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை
இழந்துவிடுவர், மாறாக, என் பொருட்டுத் தம்மையே
அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார்" என்பார் இயேசு (மத் 16:
25). இயேசுவுக்காக அந்த வட கொரியப் பெண்மணியும்,
தீமோத்தேயுவும் தங்களுடைய உயிரை இழந்தார்கள். அதனால்
காத்துக்கொண்டார்கள். நாமும் இயேசுவுக்காக நம் உயிரை இழக்கத்
துணியும்போது அதனைக் காத்துகொள்வோம் என்பது உறுதி.
ஆகவே, தூய தீமோத்தேயு, தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடும்
இந்த நல்லநாளில் அவர்களிடம் இருந்த நல்ல பண்புகளை
நமதாக்குவோம். இயேசுவுக்காக நம் உயிரையும் இழக்கத் துணிவோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். |
|
|