Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் தியோடசியஸ் ✠ (St. Theodosius the Cenobiarch)
   
நினைவுத் திருநாள் : ஜனவரி 11
 * ✠ புனிதர் தியோடசியஸ் ✠ (St. Theodosius the Cenobiarch)

 *  துறவி, மடாதிபதி, துறவிமடக் கொள்கைகளின் நிறுவனர் மற்றும் அமைப்பாளர்:
     (Monk, Abbot and Founder and Organiser of the Cenobitic monasticism)

 * பிறப்பு : கி.பி. 423
    கப்படோஸியா அருகேயுள்ள மொகாரிஸ்ஸஸ் எனும் கிராமம், தூய பாசில்
    பிராந்தியம்  (Mogarissos, a village in Cappadocia, Saint Basil's province)

 * இறப்பு : கி.பி. 529 (சுமார் 105 வயது)
   ஜெருசலேம் அருகில்  (Near Jerusalem)

 * ஏற்கும் சமயம் :
    ரோமன் கத்தோலிக்க திருச்சபை  (Roman Catholic Church)
    கிழக்கு மரபுவழி திருச்சபை  (Eastern Orthodox Church)

"செனோபியார்ச்" (Cenobiarch) எனும் துறவியர் மட தலைவரான தியோடசியஸ், ஒரு துறவியும் துறவு மடாதிபதியும் கிறிஸ்தவ புனிதரும் ஆவார். இவர், "செனோபைட்டிக்" (Cenobitic) எனப்படும் துறவு வாழ்வியல் முறைகளை நிறுவி அமைத்தவர் ஆவார்.

இவர், "தூய பாசில் பிராந்தியம்" (Saint Basil's province), "கப்படோஸியா" (Cappadocia) அருகேயுள்ள "மொகாரிஸ்ஸஸ்" ((Mogarissos) எனும் கிராமத்தில் மிகவும் பக்தி மார்க்கமான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர், "ப்ரோஹேரசியஸ்" (Proheresius) ஆகும். இவரது தாயார், "யூலோஜியா" (Eulogia) ஆவார். பின்னாளில், இவரது தாயார் யூலோஜியா, தமது மகன் தியோடசியசையே ஆன்மீக தந்தையாக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ பெண் துறவியாக மாறினார்.

துறவியர்களுக்குரிய தொடக்கங்கள் :
கிறிஸ்துவின் அன்புக்காக ஆபிரகாம் தமது பெற்றோர், நண்பர்கள், சொந்தங்கள் மற்றும் அனைத்தையும் விட்டுச் சென்றதைப்போல தாமும் செல்ல விரும்புவதாக தமது சிறு வயதிலேயே தியோடசியஸ் உணர்ந்தார். கி. பி. 451ம் ஆண்டு, "சல்செடன்" (Chalcedon) எனுமிடத்தில் புனித நான்காம் கிறிஸ்தவ பேரவை (Holy Fourth Ecumenical Council) நடந்த சமயத்தில் ஜெருசலேம் சென்று சேர்ந்தார்.

அந்தியோக்கியா (Antioch) சென்றடைந்ததும் புனிதர் சிமியோனை (Saint Symeon the Stylite) சந்தித்து அவரது செபம் மற்றும் ஆசீர் பெறுவதற்காக சென்றார். அவர் புனிதர் சிமியோனின் தூணருகே சென்றபோது, அதிசயிக்கத்தக்க விதமாக, தியோடசியஸின் பெயர் சொல்லி ஒரு அசரீரி அழைத்தது. வாழ்த்து கூறிய அந்த அசரீரி, அவரை நிரலை மேலேறி வரவேற்றது. தூணின் மீது ஏறிச் சென்ற தியோடசியஸ், புனிதர் சிமியோனைப் பணிந்து வணங்கினார். இவரை ஆரத்தழுவிய புனிதர் சிமியோன், இவருக்கு ஆசி வழங்கியதுடன், இவர் பெரும் ஆன்மீக மகிமை பெறுவார் என்றும் தீர்க்கதரிசனம் அறிவித்தார்.

ஜெருசலேம் அடைந்த தியோடசியஸ் புனித ஸ்தலங்களை சென்று தரிசித்தார். தனிமை வாழ்வினை ஆரம்பிக்கும் முன்னர் தமக்கென்று கட்டுப்பாடுகளை உருவாக்கி ஏற்றுக்கொள்ள வேண்டுமென எண்ணினார். "தாவீதின் கோபுரமருகே" (Tower of David) கிரேக்க தத்துவ ஞானியும், துறவி மடாதிபதியுமான "லோங்கினஸ்" (Longinus) என்பவரின் மேற்பார்வையில் துறவியர்களுக்குரிய உழைப்பினைத் தொடங்கினார்.

இக்கால கட்டத்தில், "இகேலியா" (Ikelia) என்ற பணக்கார மற்றும் ஆன்மீக பக்தியுள்ள ஒரு பெண், 'பழைய கதிஸ்மா' (The Old Kathisma) என்ற இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டி அதனை ("Theotokos" கிழக்கு மரபுவழி திருச்சபையில் இறைவனின் அன்னை தூய கன்னி மரியாளுக்கு வழங்கப்படும் பெயர்) அர்ப்பணித்தார். "இகேலியா", தியோடசியஸ் இந்த இடத்திலேயே துறவு மடத்தினை அமைக்குமாறு "லோங்கினசை" (Longinus) வேண்டினார். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். சிறிது காலத்திலேயே எண்ணற்ற யாத்திரிகர்களை தியோடசியஸ் கவர்ந்தார்.

துறவி வாழ்க்கை :
தம்மைப் பாராட்டும் யாத்திரிகர்களிடமிருந்து விலகி மென்மேலும் இறைவனிடம் தம்மை அர்ப்பணிக்க விரும்பிய தியோடசியஸ் "பழைய கதிஸ்மாவை" (Old Kathisma) விட்டு விலகிச் சென்றார். ஒரு மலையின் உச்சியிலே உள்ள ஒரு குகையில் சென்று அமர்ந்தார். இந்த குகைக்கு ஒரு மிகப் பெரிய பாரம்பரியம் உண்டு. ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறந்திருந்த வேளையில் விண்மீன் வழிகாட்ட இறைவனை தரிசிக்க வந்திருந்த ஞானிகள் மூவரும் கடவுளை தரிசித்ததன் பிறகு, இந்த மலைக்குகையிலேயே தங்கியிருந்ததாகவும், அதன் பிறகே ஒரு இறைதூதரின் அறிவுரைப்படி தத்தமது நாடுகளுக்கு வெவ்வேறு வழிகளில் சென்றதாகவும் பண்டைய திருச்சபை தந்தையர்கள் கூறுவர்.

குகையில் வசித்த காலத்தில் தியோடசியஸ் சந்நியாச வாழ்வின் பெரும் சாதனைகளைப் புரிந்தார். எந்நேரமும் ஜெபத்திலே மூழ்கியிருந்தார். இரவு நேரங்களில் கூட அவர் நின்றவாறே ஜெபம் செய்தார். அவர் எப்பொழுதும் பசியை உணரவேயில்லை. ஆனால் தாம் தமது தவ வாழ்விலிருந்து விலகும்படியாக நோயில் வீழ்ந்து விடாதிருக்கும் வகையில் போதுமான உணவு உட்கொண்டார். அவர் பேரீச்சம்பழம் மற்றும் "கரோப்" (Carob) எனப்படும் அரேபிய அரபு நாடுகளில் உற்பத்தியாகும் பழுப்ப-ஊதா நிற காய்களையும் ஊறவைத்த பருப்பு வகைகளையும் உண்டார். முப்பது வருடங்களுக்கும் மேலாக ரொட்டி வகைகளை ருசித்தும் பார்க்கவில்லை.

தியோடசியஸ் "பெத்தலகேம்" (Bethlehem) அருகே துறவியர்க்கான ஒரு சிறிய சமூகத்தினை அமைத்தார். பிற்காலத்தில் அது "தியோடசியஸ் துறவியர் மடம்" (Monastery of St. Theodosius) என்று அழைக்கப்பட்டது. இச்சமூகம் பல்வேறுதரப்பட்ட மொழிகள், கலாச்சாரம் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த துறவியர்களுடன் வேகமாக வளர்ந்தது. நோயாளிகள்,முதியோர் மற்றும் மன நலம் குன்றியோர்களை கவனித்து சேவை செய்வதில் இச்சமூகம் புகழ் பெற்றது.

தியோடஸியஸின் நண்பரும் நாட்டுப்புற வாசியுமான "சப்பாஸ்" (Sabbas) இவருடன் இணைந்தபோது, அவர் மடாதிபதியாக (Archimandrite) நியமனம் செய்யப்பட்டார். பாலஸ்தீனத்தில் (Palestine) தனிமைப்படுத்தப்பட்டிருந்த துறவியர் அனைவரும் "குலபதி" (Patriarch) "சலூஸ்டியஸ்" (Salustius of Jerusalem) என்பவரால் ஒன்றிணைக்கப்பட்டனர். இச்சமூகத்தில் இருந்த அனைத்து துறவியர்களினதும் தலைமைப் பொறுப்பினை தியோடசியஸ் ஏற்றார். இதுவே (The Cenobiarch) எனப்படும் துறவு வாழ்வியல் முறைகளின் தொடக்கமாகும்.

தியோடசியஸ், (Monophysitism) என்ற கிறிஸ்தவயியலை தீவிரமாக எதிர்த்தார். இதன் காரணமாக, பேரரசன் "அனஸ்டாசியஸ்" (Emperor Anastasius) இவரை சில காலம் தற்காலிகமாக துறவு மடத்திலிருந்து விலக்கி வைத்தார்.

தியோடசியஸ் ஜெருசலேம் அருகே சுமார் 105 வயதில் மரணமடைந்தார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய தியோடோசியஸ் (ஜனவரி 11)

"கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்" இயேசு.

வாழ்க்கை வரலாறு

தியோடோசியஸ், கி.பி 425 ஆம் ஆண்டு கப்பதோசியாவில் தற்போதைய துருக்கியில் பிறந்தார். இளம்வயதிலே மிகவும் பக்தியோடு வளர்ந்த இவர், ஒருநாள் ஆலயத்திற்குச் சென்றபோது, அங்கு குருவானவர், "நீ நிறைவுள்ளவனாக இருக்க விரும்பினால், உன் உடைமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு, பின்னர் வந்து என்னைப் பின்தொடர் என்ற இயேசுவின் வார்த்தையைக் குறித்து போதித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு, உள்ளம் தொடப்பட்டு, தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, இறைப்பணியை செய்யப் புறப்பட்டார். தொடக்கத்தில் இவர் லாஞ்சினுஸ் என்னும் துறவியிடத்தில் சீடராக இருந்து பயிற்சிகள் பெற்றுவந்தார். அப்போதெல்லாம் இவர் முதுபெரும் தந்தை ஆபிரகாம் மீது மிகுந்த பக்திகொண்டு, அவரைப் போன்று ஆண்டவருக்காய் எல்லாவற்றையும் துறந்து வாழ நினைத்தார்.

லாஞ்சினுஸ் என்ற அந்த துறவியிடத்திலிருந்து முழுமையாக பயிற்சி பெற்றபின்பு தியோடோசியஸ் எருசலேம் நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். ஆனால், அந்த பொறுப்பு தாழ்ச்சியோடு பணிசெய்வதற்கு தனக்குத் தடையாக இருக்கின்றது என்பதை உணர்ந்து தியோடோசியஸ் ஆயர் பதவியை உதறித் தள்ளிவிட்டு, கதிஸ்முஸ் என்ற இடத்தில் துறவற மடம் ஒன்றை அமைத்து, அதில் வந்துசேர்ந்த இளைஞர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்து வந்தார். இதில் சிறப்பு என்னவென்றால், தியோடோசியஸ் தன்னுடைய துறவறமடத்தில் சேரவேண்டும் என்று யாரையும் வலிந்து அழைக்கவில்லை, அவருடைய முன்மாதிரியான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு நிறையப் பேர் அவருடைய துறவற மடத்தில் சேர்ந்தார்கள். தியோடோசியஸ் தன்னுடைய மடத்தில் சேர்ந்தவர்களுக்கு வெறும் ஆன்மீகப் பயிற்சிகளை மட்டும் அல்ல, நோயாளிகள், அனாதைகள், கைவிடப்பட்டோரை கவனித்துக்கொள்வதற்கும் பயிற்சிகள் அளித்து வந்தார்.

தியோடோசியஸ், உதவி என்று தன்னிடத்தில் வந்தவர்களுக்கு முகம்கோணாமல் உதவிகள் செய்து வந்தார். தன்னிடம் இருந்த உணவை இல்லாத ஏழை எளிய மக்களுக்குப் பகிர்ந்து அளித்து வந்தார். இவ்வாறு அவர் மக்களின் இன்ப துன்பங்களில் பங்குகொண்டு அவர்களில் ஒருவரானார். இப்படிப்பட்டவர் தன்னுடைய 105 வயதில் 529 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய தியோடோசியசின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. பகிர்ந்து வாழ்தல்

தூய தியோடோசியசின் வாழ்வினை ஆழமாக நாம் படித்துப் பார்க்கின்றபோது அவர் தன்னிடம் இருந்ததை எல்லாம், ஒன்றுமில்லாத ஏழை எளியவருக்கும் வறியவருக்கும் பகிர்ந்துகொடுத்தார் என்று அறிகின்றோம். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் பகிர்ந்து வாழும் நற்பண்பில் சிறந்து விளங்குகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சாரா ஹுக்ஸ் என்பவர் குறிப்பிடுகின்றார், "எல்லா வாய்ப்புகளும் வசதிகளும் அமையப் பெற்றவர்களைத்தான் இந்த உலகம் மகிழ்ச்சியான மனிதர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றது. உண்மை அதுவல்ல, யாராரெல்லாம் தங்களிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் கொடுத்து வாழ்கின்றார்களோ அவர்களே மகிழ்ச்சியான மனிதர்கள்". எவ்வளவு ஆழமான உண்மை இது. நாம் நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழும்போது நாம்தான் இந்த உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியான மனிதர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக மும்பையைச் சார்ந்த ஜவுளிக்கடைக்காரர் ஒருவர் தன்னுடைய இருந்த துணிமணிகளை ஐந்தாறு மூட்டைகளாகக் கட்டி, அவற்றை லக்னோவில் இருந்த ஓர் ஆடை வடிவமைப்பாளரிடம் அனுப்பி வைத்து, அவற்றைக் கொண்டு குர்தா செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த ஆடை வடிவமைப்பாளரும் ஒருசில மாத இடைவெளியில் அழகழகான குர்தாக்குள் செய்து, அவற்றை பத்து மூட்டைகளாகக் கட்டி, இரயிலில் வைத்து, ஜவுளிக்கடைக்காரரிடம் அனுப்பி வைத்தார். ஆனால், அவருக்குப் போய்ச் சேர்ந்ததோ வெறும் எட்டு மூட்டைகள்தான். இதனால் கடுப்பான அந்த ஜவுளிகடைக்காரர், குர்தாக்கள் வந்து இறங்கிய மும்பை இரயில் நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் எல்லாவற்றையும் சொல்லி முறையிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பிச்சைக்காரர்களில் ஒருசிலர் குர்தாக்கள் அணிந்து வருவதையும் அந்த குர்தாக்கள் எல்லாம், தான் அனுப்பி வைத்த துணி போன்று இருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டு போய் நின்றார். பின்னர் ஒரு பிச்சைக்காரரை அழைத்து, இந்த குர்தாவை உனக்கு யார் கொடுத்தது?" என்று கேட்டார். அதற்கு அந்த பிச்சைக்காரர், "என்னுடைய நண்பர்தான் எனக்கு இந்த குர்தாவைப் பரிசாகக் கொடுத்தார். "உன்னுடைய நண்பர் யார்? என்று அவர் அந்த பிச்சைக்காரிடம் கேட்டபோது, அவர், "அதோ இருக்கின்றாரே, அவர்தான் என்னுடைய நண்பர்" என்றார். அந்தப் பிச்சைக்காரர் சுட்டிகாட்டிய திசையில் ஒரு பிச்சைகாரர் இருந்தார். அவருக்குப் பக்கத்தில் இரண்டு மூட்டைகள் இருந்தன. அவற்றைப் பார்த்ததும் ஜவுளிக்கடைக்காராருக்கு ஆத்திரமாக வந்தது.

உடனே அவர் அந்த பிச்சைக்காரரிடம் சென்று, "இந்த இரண்டு மூட்டைகளையும் உனக்கு யார் கொடுத்தது?" என்று கேட்டார். அவரோ, "நேற்று இரவு தூங்குவதற்காக இந்த இரயில் நிலையத்திற்கு வந்தபோது இந்த இரண்டு மூட்டைகள் மட்டும் இங்கே கவனிப்பாரற்று அப்படியே கிடந்தன. அவற்றில் என்ன இருக்கின்றன என்று பார்த்தபோதுதான், குர்தாக்கள் இருப்பது தெரிய வந்தது. முதலில் அவற்றை பாதி விலைக்கு விற்கலாம் என்றுதான் முடிவு செய்தேன். அதன்பின்னர்தான் உடுக்க உடையில்லாமல் இருக்கின்றவர்களுக்கு இவற்றைக் கொடுத்து உதவலாம் என்று முடிவு செய்தேன்" என்றார். பிச்சைக்காரர் சொன்னதைக் கேட்டதும் அவருக்கு ஒருவிதத்தில் ஆத்திரம் வந்தாலும், இன்னொரு விதத்தில் தன்னுடைய குர்தாக்கள் உடையில்லாத ஏழைகளுக்குப் பயன்படுகின்றதே என்று சொல்லி அதனை அப்படியே விட்டுப் போய்விட்டார்.

நாம் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுப்பதற்கு நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்பதில்லை, நல்ல மனதிருந்தால் போதும் என்பதை இந்த நிகழ்விலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அந்த பிச்சைக்காரர் தனக்குக் கிடைந்த இரண்டு குர்தா மூட்டைகளையும் பாதிவிலைக்கு விற்று, அதன்மூலம் அவர் மட்டும் நன்றாக இருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் உடையில்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து வாழ்ந்தது பாராட்டுக்குரியதாக இருக்கின்றது.

நாமும் நம்மிடம் இருப்பதை பகிர்ந்து வாழும்போது இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி. ஆகவே, தூய தியோடோசியசின் விழாவைக் கொண்டாடும் அவரைப் போன்று நாமும் நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா