✠ புனிதர் ரேமண்ட் ✠ (St. Raymond of Penyafort) |
|
|
|
நினைவுத் திருநாள் :
ஜனவரி
07 |
* ✠
புனிதர் ரேமண்ட் ✠ (St. Raymond of Penyafort)
*
மறை பரப்புவோர் சபை தலைவர் :
(Master of the Order of Preachers)
*
பிறப்பு : 1175
விலாஃப்ரான்கா டெல் பெநேடேஸ், கடலோனியா, அரகன்
(Vilafranca del Peneds, Catalonia, Crown of Aragon)
*
இறப்பு : ஜனவரி 6, 1275 (வயது 100)
பார்சிலோனா, அரகன் (Barcelona, Crown of Aragon)
*
ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
*
முக்திபேறு பட்டம் : 1542
திருத்தந்தை மூன்றாம் பவுல் (Pope Paul III)
*
புனிதர் பட்டம் : ஏப்ரல் 29, 1601
திருத்தந்தை எட்டாம் கிளமென்ட் (Pope Clement VIII)
*
முக்கிய திருத்தலங்கள் :
புனித திருச்சிலுவை பேராலயம், புனித யூலேலியா பேராலயம், பார்சிலோனா,
கடலோனியா, ஸ்பெயின்
(Cathedral of the Holy Cross and Saint Eulalia, Barcelona,
Catalonia, Spain)
*
பாதுகாவல் :
நியதி - சமய வழக்கறிஞர்கள்; ஸ்பெயின்;
அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள்
"பென்யஃபோர்ட் புனிதர் நகர ரேமண்ட்" (St. Raymond of Penyafort)
பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஸ்பேனிஷ் டொமினிக்கன்
துறவி (Spanish Dominican Friar) ஆவார். ரோமன் கத்தோலிக்க
திருச்சபையில் இருபதாம் நூற்றாண்டு வரை அமலில் இருந்த, திருத்தந்தை
ஒன்பதாம் கிரெகோரியின் (Pope Gregory IX) கத்தோலிக்க சமய சட்ட
திட்டங்களை தொகுத்து எழுதியவர் ஆவார். இவர் வழக்கறிஞர்களின் -
முக்கியமாக நியதி - சமய வழக்கறிஞர்களின் பாதுகாவலர் ஆவார்.
வாழ்க்கை :
புனிதர் ரேமண்ட், "கடலோனியாவின்" (Catalonia) "பார்சிலோனா"
(Barcelona) அருகேயுள்ள "விலாஃப்ரான்கா டெல் பெநேடேஸ்" (Vilafranca
del Peneds) என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். "அரகனின்"
(Aragon) அரச வம்சாவழியின் உறவுகளை கொண்டு ஒரு பிரபுத்துவ
குடும்பத்தில் இருந்து தோன்றியவர். பார்சிலோனாவில் ஆரம்ப கல்வி
பயின்ற இவர், "போலாக்னா பல்கலையில்" (University of Bologna)
உயர் கல்வி கற்று, சிவில் மற்றும் நியதி
- சமய சட்டங்களில்
(Civil and Canon Law) வல்லுநர் பட்டம் பெற்றார். 1195ம் ஆண்டு
முதல் 1210ம் ஆண்டு வரை நியதி
-சமய சட்டம் கற்பித்தார்.
1210ம் ஆண்டு, போலோக்னா சென்ற அவர், 1222ம் ஆண்டு வரையான பன்னிரண்டு
வருட காலம் அங்கேயே தங்கி இருந்தார். இதில் மூன்று வருடங்கள்
"போலாக்னா பல்கலையின்" நியதி
- சமய சட்ட பிரிவின் தலைமை ஏற்றார்.
அங்கே, அவர் புதிதாய் தோற்றுவிக்கப்பட்ட "டொமினிக்கன் சபையை" (Dominican
Order) பற்றி கேள்வியுற்றார். போலோனாவிலுள்ள டொமினிக்கன் சபையின்
முன்னவர் அருளாளர் "ரெஜினால்டின்" (Blessed Reginald) மறையுரைகளால்
கவரப்பட்டார். தமது 47ம் வயதில் பார்சிலோனாவிலுள்ள (Barcelona)
"டொமினிக்கன்" பள்ளியில் (Dominican Convent) இணைந்தார்.
கருணையின் அர்ச்சிஷ்ட அன்னை மரியாள் சபை :
(Order of the Blessed Virgin Mary of Mercy)
1218ம் ஆண்டு, இச்சபை நிறுவப்பட புனிதர் ரேமண்டும் ஒரு கருவியாக
செயல்பட்டார். "பீட்டர் நொலாஸ்கோ" (Peter Nolasco) இவரை சபை
நிறுவுதல் சம்பந்தமாக அணுகியபோது, இவர் அவரை உற்சாகமாக ஊக்கப்படுத்தினார்.
சபை நிறுவும் ஒப்புதல் வேண்டி அரகனின் அரசன் "முதலாம் ஜேம்சை"
(King James I of Aragon) அணுகி ஒப்புதல் பெற்றனர். "ஸ்டடியா
லிங்குவரம்" (Studia Linguarum) என்ற முதல் பள்ளியை "டுனிஸ்"
(Tunis) எனும் நகரில் ஆரம்பித்தார். இப்பள்ளிகளின் முக்கிய
நோக்கம், இஸ்லாமிய நாடுகளில் கைதிகளாய் இருந்த கிறிஸ்தவர்களை
விடுவிப்பதில் டொமினிக்கன் துறவியர்க்கு உதவுவதாம்.
இவர், ஒப்புரவாளர்களுக்காக (The Summa de casibus poenitentiae)
எனப்படும் ஒரு வழக்குகள் புத்தகத்தை எழுதினர்.
இவர், 1229ம் ஆண்டு, "சபீனாவின் கர்தினால் பேராயரான" (Cardinal
Archbishop of Sabina) "ஜான்" (John of Abbeville) என்பவரின்
இறையியல் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 1230ம் ஆண்டு,
அவர் திருத்தந்தை "ஒன்பதாம் கிரகொரியால்" (Pope Gregory IX)
ரோம் நகருக்கு வரவழைக்கப்பட்டு தனியார் சிற்றாலய குருவாகவும்
பெரும் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார்.
ரேமண்ட், அரகனின் மன்னன் "முதலாம் ஜேம்ஸின்" (King James I of
Aragon) ஒப்புரவாளராகவும் பணியாற்றினார். திருச்சபையின் விசுவாசமான
மகனான மன்னன், சிற்றின்ப வேட்கைகள் நிறைந்தவனாகவும் இருந்தார்.
அவருடைய இவ்வேட்கைகள், அவரைக் குலைத்தன. ஒருமுறை, "மஜோர்க்கா"
(Majorca) தீவில் நடந்த இஸ்லாமியர்களை மனம் மாற்றும் பிரச்சாரத்தை
ஆரம்பிக்க வந்திருந்த அரசன், தம்முடன் தமது ஆசைநாயகியான
பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். அரசனை கடிந்துகொண்ட ரேமண்ட்,
அவரது ஆசைநாயகியை விலக்கிவிடுமாறு பலமுறை வற்புறுத்தினார். ஆனால்
அரசன் அதை மறுத்துவிட்டார். இறுதியில், தாம் இனிமேலும் அங்கே
தங்கியிருக்க இயலாது என்றும் என்றும், பார்சிலோனாவுக்கு
(Barcelona) செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் இவர் அரசனிடம்
கூறினார். ஆனால், அவர் பார்சிலோனா செல்வதை தடை செய்த அரசன்,
அவரை யாராவது கப்பல் தலைவன் அழைத்துச் செல்ல முயன்றால் அக்கப்பல்
தலைவனை தீவிரமாக தண்டிப்பதாகவும் எச்சரித்தார். ரேமண்ட் தமது
டொமினிக்கன் துறவியர் நண்பர்களிடம், இந்த தொடக்க கால அரசனின்
பொல்லாத செயல்களை விண்ணக அரசர் எவ்வாறு குழப்பப் போகிறார் என்பதை
நீங்கள் விரைவில் காண்பீர்கள் என்றும், அவரே தமக்கு ஒரு கப்பலையும்
தருவார் என்றும் கூறினார்.
பின்னர், டொமினிக்கன் துறவியர் கடற்கரைக்கு சென்றனர். அங்கே,
ரேமண்ட் தமது கருப்பு நிற நீண்ட அங்கியின் ஒரு பாகத்தை கடல்
நீரிலும் மறு பாகத்தை நிலத்திலுமாக விரித்தார். பின்னர், அவர்
தமது டொமினிக்கன் நண்பர்களை அதில் தாவி வருமாறு அழைத்தார். ஆனால்,
விசுவாசமில்லாதிருந்த அவர்கள் அதற்கு மறுத்தனர். ரேமண்ட் தாம்
மட்டும் தமது அங்கியின் மீது தாவி, விடை பெற்றார். காற்றில்
சிலுவை அடையாளம் வரைந்தவுடன், பாய்மரக்கப்பலாக மாறிப்போன அங்கி,
அதிசயிக்கும் விதமாக கடலில் பயணிக்க தொடங்கியது. அவரை மேலும்
போகவிடாமல் தடுப்பதற்காக சுற்றிலும் படகுகள் வந்தன. அவற்றையெல்லாம்
மீறி அவர் சென்றார். அவர் சாதாரண ஒரு மேலங்கியை படகைப்
பாவித்து கடலில் பயணித்ததை பல கடல் பயண மாலுமிகள் கண்டனர். அவர்கள்
மலைத்துப் போய் உற்சாகக் குரலெடுத்து கூக்குரலிட்டனர். 160
மைல் தூரத்தை சுமார் ஆறு மணி நேர கடல் பயணத்தில் நிறைவு செய்த
ரேமண்ட், இறங்கும்போது, எண்ணற்ற மக்கள் நேரில் கண்டனர். அவர்
செய்த இவ்வற்புதம், அரசன் முதலாம் ஜேம்சை (King James I) தொட்டது.
அவர் தமது அவரது தீய வழிகளை கைவிட்டு, அதற்குப் பிறகு ஒரு நல்ல
வாழ்க்கை வாழ்ந்தார்.
60 வயதானதும் தனிமை வாழ்க்கை வேண்டி ஓய்வு பெற்றார். ஆனால், ஒரு
வருடத்துக்குள்ளேயே அவர் "அரகன் அரசின்" (Kingdom of Aragon) "டர்ரகோனா"
(Tarragona) மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். ஆனால்,
அவர் அதை நிராகரித்துவிட்டார்.
1236ம் ஆண்டு பார்சிலோனா திரும்பிய ரேமண்ட், நெடுநாட்கள் தனிமையில்
வாழ இயலவில்லை. அவரை "மறை பரப்புவோர் சபை தலைவர்" (Master of
the Order of Preachers) 1238ம் ஆண்டின் பொதுக்குழு நியமித்தது.
அவர் உடனடியாக சபையின் துறவியர் மற்றும் அருட்சகோதரியரின் இல்லங்களுக்கு
வருகை தந்தார். அவர் செல்லுமிடமெல்லாம் காலணிகள் இல்லாமலேயே
பயணித்தார். இதற்கிடையில், சபையின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கான
உட்பிரிவு உள்ளிட்ட, சபைக்கான புதிய அமைப்பு விதிகளை எழுதினர்.
பின்னர், அந்த உட்பிரிவை பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்குள்
அவர் தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
1275ம் ஆண்டு, தமது நூறு வயதில் மரணமடைந்த இவர்,
பார்சிலோனாவிலுள்ள "புனித யூலேலியா பேராலயத்தில்" (Cathedral
of Santa Eulalia in Barcelona) அடக்கம் செய்யப்பட்டார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புனித ரேமண்ட் பொன்யபார்ட்(1175-1275).
திருச்சட்ட வல்லுநர்கள் மற்றும் வழக்குரைஞர், ஆசிரியர்களின்
பாது காவலர், ஸ்பெயினில் பிறந்தவர், டொமினிக்கன் சபைத்துறவிகளில்
திருச்சபைச் சட்ட வல்லுநர், திருச்சபை சட்டத்தைத்தெகுத்தவர்
யார்? புனித ரேமண்ட் பொன்யபார்ட்
திருச்சபைச் சட்டத்தின் மூலைக்கல்லான ரெய்மண்ட் பென்யபோர்ட்
1175ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் பார்சலோனா அருகில் உள்ள
வில்லாஃபிரான்சா தே பெனதிஸ் என்னும் இடத்தில் பிறந்தார். குழந்தைப்பருவம்
முதலே அன்னை மரியா மீது அளவுகடந்த அன்பும், பக்தியும்
கொண்டிருந்தார். கடவுள் தமக்களித்த கல்வி ஞானத்தைக் கண்டுகொண்டு
தமது 20ஆவது வயதிலேயே திருச்சபைச் சட்டத்தின் பேராசிரியராகப்
பணியாற்றினார். இது 15 ஆண்டுகள் தொடர்ந்து திருச்சபை சட்டத்தில்
உயர்கல்வி கற்று முழுமதியாய் ஒளிவீசிய ரெய்மண்ட் ஸ்பெயினில் இருந்து
பொலக்னா என்னும் இடத்திற்கு 1210-இல் புறப்பட்டார். மங்காத தீபமாக
ஒளிர்ந்த ரெய்மண்ட் படிப்பு முடிந்த பிறகு அதே பல்கலைக்கழகத்தில்
மூன்று ஆண்டுகள் திருச்சபை சட்ட பேராசிரியராக பணியாற்றினார்.
ரெய்மண்ட்டின் திறமைகளைக் கண்ணுற்ற திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
திருச்சபை சட்டங்கள் அனைத்தையும் தொகுத்து எழுதும் பணியை 1230-ஆம்
ஆண்டு இவரிடம் கொடுத்தார். அதுவரை இங்கொன்றும் அங்கொன்றுமாகவே
சட்டங்கள் விரவிகிடந்தன. திருச்சட்ட நூலை ஐந்து பகுதிகளாகப்
பிரித்து இவர் செய்து கொடுத்த இச்சட்ட புத்தகம்தான் 1917-இல்
புதிய சட்டத் தொகுப்பு வெளியாகும் வரை நடைமுறையில் இருந்தது.
அரசர் ஜேம்ஸ் மற்றும் புனித பேதுரு நொலாஸ்கோ இருவருடனும்
நெருங்கிய நட்பு கொண்டிருந்த ரெய்மண்ட் இவர்களுடன் இணைந்து
1222 ஆம்ஆண்டு டொமினக்கன் துறவு சபையில் நுழைந்தார். புனித
பீட்டர் நொலாஸ்காவுடன் இணைந்து அடிமைகளை மீட்க உபகார அன்னை சபையைத்
தோற்றுவித்தார். மூர் இனத்தவர்களால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட
கிறிஸ்தவ மக்களைக் காப்பாற்றுவது இச்சபையினரின் முக்கியப்பணியாக
இருந்தது.
ஒருமுறை மஜோர்கா என்னும் தீவுக்கு நற்செய்திப் பணியாற்ற ரெய்மண்ட்
சென்றார். அங்கு அரசர் ஜேம்ஸ் வந்திருந்தார். இவர் நல்ல குணமுடையவராக
இருந்தாலும் உணர்ச்சிகளுக்கு அடிமையானவராகவும் இருந்தார். ஒரு
பெண்ணை தன்னுடன் வைத்திருந்தார். அப்பெண்ணை அனுப்பிவிடுமாற
ரெய்மண்ட் கூறினார். அரசரும் சரி என்றார். ஆனால் சொன்னபடி செய்யவில்லை.
எனவே தீவை விட்டு வெளியேற ரெய்மண்ட் முடிவெடுத்தார். இந்நேரம்
அரசரின் மூளை குரூரமான முடிவெடுத்தது. "யார் இவரை கப்பலில்
கொண்டு சென்றாலும் அந்த மாலுமியின் தலை முதலைகளுக்கு இரை" என்று
அறிவித்தார்.
ரெய்மண்ட் எதற்கும் அஞ்சவில்லை. தனது மேலங்கியை எடுத்து தண்ணீரின்
மீது விரித்தார். அதன் ஒரு முனையை ஒரு கம்புடன் இணைத்துக் கட்டினார்.
சிலுவை அடையாளம் வரைந்துவிட்டு அங்கி மேல் அமர்ந்து கம்பைத்
துடுப்பாக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார். ஆறு மணி நேரத்திற்குப்
பிறகு கரைக்கு வந்து சேர்ந்தார். அரசர் இந்த புதுமையைக் கண்ட
உடன் ரெண்மண்ட்டின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்.
கிழக்கத்திய மொழிகளைச் சொல்லி கொடுக்கவும், அம்மொழி பேசும் மக்களுக்குப்
பணி செய்யவுமாக பார்சலோனா மற்றும் ட்யூனிஸ் போன்ற இடங்களில் பள்ளிக்கூடங்களைத்
திறந்தார். 1238-இல் சாமிநாதர் சபையின் தலைவராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார்.
இரண்டே ஆண்டுகளில் அப்பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். ஆனாலும்
அந்த குறுகிய நாள்களில் சாமிநாதர் சபையின் சட்டத் தொகுப்பையும்
திருத்தி அமைத்தார். இவர் மிகச் சிறந்த மொழியியல் வல்லுநராகவும்
விளங்கினார். மேலும் புனித தாமஸ் அக்குவினாஸ் சும்மா கான்ட்ரா
ஜென்ட்லன்ஸ் என்ற மிகச்சிறந்த படைப்பைப் படைக்கத் தூண்டிவர்
யார் என்றால் அது புனித ரேமண்ட் பொன்யபார்ட் தான் என்பது
குறிப்பிடத்தக்கது. 100 வயது வாழ்ந்து 1275, ஜனவரி ஆறாம் நாள்
பார்சலோனாவில் இறந்தார். திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் 1601-இல்
இவரை புனிதராக்கினார். ஆரம்ப காலங்களில் ஜனவரி 23 அன்று நினைவு
கூறப்பட்ட இவர் 1969 முதல் ஜனவரி ஏழாம் தேதி நினைவு கூறப்படுகிறார்.
திருச்சபையின் வளர்ச்சிக்கும், திருச்சமூகத்தின் வளர்ச்சிக்கும்
உழைக்கும்போது உன்னதரின் அருளாசிரைப் பெற்றுக்கொள்கிறோம்.
இறை வார்த்தை: இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால்
ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல்
போகார் (மத். 10:42)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய ரெய்மன்ட்
நிகழ்வு
ரெய்மன்ட்டுக்கும், ஸ்பெயின் நாட்டு மன்னர் ஜேம்சுக்கும் இடையே
நட்புரீதியாக நல்லதொரு உறவு நீடித்து வந்தது. ஒருவர் மற்றவர்மீது
அளவுகடந்த மதிப்பினை வைத்திருந்தார்கள்.
இதற்கிடையில் ஒரு சமயம் மஜோர்கா என்னும் தீவிற்கு இரண்டுபேரும்
நற்செய்தி அறிவிப்பதற்காகச் சென்றிருந்தார்கள். அங்கே சென்றதும்
ரெய்மன்ட் மிக ஆர்வத்தோடு அங்கிருந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்து
வந்தார். ஆனால், மன்னர் ஜேம்சோ அங்கிருந்த பணிப்பெண் ஒருவருடன்
தவறான வாழ்க்கை வாழத் தொடங்கினார். இது ரெய்மன்ட்டிற்கு சுத்தமாகப்
பிடிக்கவே இல்லை. அதனால், அவர் மன்னரைக் கடிந்துகொண்டுவிட்டு,
தீவிலிருந்து புறப்பட நினைத்தார். ஒரு சாதாரண மனிதர் நம்மைக்
கடிந்துகொள்வதா? என்று நினைத்த மன்னர், ரெய்மன்ட்டை அத்தீவிலிருந்து
போகவிடாமல் தடுக்கப் பார்த்தார். ஆனால் ரெய்மன்ட்டோ தன்னுடைய
மேலாடையைக் கழற்றி கடலில் வீசி, அதன் ஒரு நுனியை ஒரு கம்பில்
மாட்டி அதனைத் தோணிபோல பயன்படுத்தி, 150 கிலோமீட்டர் தொலைவில்
இருந்த பார்சிலோனாவை ஆறு மணி நேரத்திற்குள் கடந்தார். இதையெல்லாம்
பார்த்து மிரண்டு போன மன்னர் தன்னுடைய தவற்றுக்காக ரெய்மன்ட்டிடம்
மன்னிப்புக் கேட்டார், அது மட்டுமல்லாமல், இனிமேலும் அப்படிப்பட்ட
தவறு செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டார்.
ரெய்மன்ட் தன்னுடைய மேலாடையை தோணிபோல பயன்படுத்தி. கடல்மீது வந்ததைப்
பார்த்த மக்கள் அனைவரும் அவர் உண்மையிலே இறையடியார் என்று நம்பத்
தொடங்கினார்கள்.
வாழ்க்கை வரலாறு
ரெய்மன்ட், 1175 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள பெனபோர்ட்
என்னும் ஊரில் பிறந்தார். ரெய்மன்ட்டின் குடும்பம் ஆரோகன் என்னும்
மன்னருக்கு நெருங்கிய உறவு. இதனால் ரெய்மன்ட் செல்வச்
செழிப்பான வாழ்க்கை அமையப் பெற்றார். அவருடைய பெற்றோர் அவருக்கு
மிக உயர்ந்த கல்வியை வழங்கினார்கள். ரெய்மன்ட்டும் தனக்கு வழங்கப்பட்ட
கல்வியினால் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கினார். எந்தளவுக்கு
என்றால், தன்னுடைய இருபதாவது வயதிலேயே திருச்சபை சட்டத்தில்
முனைவர் பட்டம் பெற்றார். அடுத்த ஒருசில ஆண்டுகளிலேயே, போலன்ஜோ
என்னும் இடத்தில் இருந்த பல்கலைக்கழத்தில் திருச்சபை திருச்சட்ட
பாடத்திற்கு பேராசிரியராக உயர்ந்தார். அவ்வாறு அவர் பேராசிரியராக
இருந்து திருச்சபையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்தார்.
இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்போது ரெய்மன்ட்,
ரெஜினால்டு என்பவரின் மறையுரையைக் கேட்டு, மனம் உந்தப்பட்டு
தொனிக்கன் சபையில் சேர்ந்தார். அங்கேயே ஒருசில ஆண்டுகள் இருந்து
தன்னுடைய பணியினைச் செய்து வந்தார். இதற்கிடையில் அப்போது இருந்த
திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரியார் ரெய்மன்ட்டைக் குறித்து
கேள்விப்பட்டு, அவரை அழைத்து திருச்சபை திருச்சட்டங்களை ஒழுங்குபடுத்தி
வரிசைப் படுத்தச்சொன்னார். அதுவரைக்கும் திருச்சபை சட்டங்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்தன. ரெய்மன்ட்தான்
திருச்சபை திருச்சட்டங்களை ஒன்றாகத் தொகுத்து ஐந்து தகுதிகளாக
வழங்கினார். இதனால் திருத்தந்தைக்கு ரெய்மன்ட்டை மிகவும்
பிடித்துப்போனது. எனவே, அவர் அவரை தெரகொனா என்னும் இடத்திற்கு
பேராயராக உயர்த்தினார். ரெய்மன்ட்திற்கு அந்த உயர்ந்த பொறுப்பு
பிடிக்கவே இல்லை, இதனால் ஒருசில ஆண்டுகளிலேயே அந்தப் பதவியை
ராஜினாமா செய்துவிட்டு, மீண்டுமாக தொனிக்கன் சபையில் சேர்ந்து
தன்னுடைய பணிகளைச் செய்து வந்தார்.
தொமினிக்கன் சபையும் அவரைச் சும்மா விடவில்லை, அவரை சபைத் தலைவராக
உயர்த்தி அழகு பார்த்தது. அந்த பதவியும் தனக்கு வேண்டாம் என்று
சொல்லி உதறித்தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஒரு சாதாரண தொனிக்கன் சபைக்
குருவாகவே வாழ்ந்து வந்தார்.
ரெய்மன்ட் மரியன்னையின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்.
அந்த பக்தியின் உந்துதலால், உபகார அன்னையை சபையை நிறுவினார்.
அதில் சேர்ந்த இளைஞர்களுக்கு சிறந்த விதமாய் பயிற்சி கொடுத்து,
மரியன்னையின் புகழை எங்கும் பரவிச் செய்தார். இப்படி பல்வேறு
விதங்களில் திருச்சபையின் வளர்ச்சிக்கு வித்திட்ட ரெய்மன்ட் தன்னுடைய
நூறாவது அகவையில் அதாவது 1275 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
இவருக்கு 1601 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய ரெய்மன்ட்டின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன
பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
1. பதவிக்கு ஆசைப்படாதிருத்தல்
ரெய்மன்ட்டை நோக்கி எத்தனையோ உயர் பதவி தேடிவந்தன. பேராயர் பதவியும்,
தொமிக்கன் சபைத் தலைவர் பதவியும்கூட அவரைத் தேடி வந்தன. ஆனால்,
அவர் அந்தப் பதவிகள் தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு,
சிறிது காலத்திலேயே அந்தப் பதவிகளிலிருந்து விலகி ஒரு சாதாரண
குருவாக இருந்து, மிகவும் தாழ்ச்சியோடு பணிசெய்து வந்தார்.
ரெய்மன்ட்டிம் இருந்த தாழ்ச்சி, பதவிக்கு ஆசைப்படாத நிலை நம்மிடம்
இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில்
நாம் நற்செய்தியில் வரும் செபதேயுவின் மக்களான யோவானையும்
யாக்கோபையும் போன்று அந்தப் பதவி வேண்டும், இந்தப் பதவி
வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதிலே நாம் சிக்கி சின்னாபின்னமாகி
விடுகின்றோம். ஆண்டவர் இயேசு இறைமகனாக இருந்தபோதும் தொண்டு
செய்யவே வந்தேன் என்று உரைக்கின்றார். அவருடைய வழியில் நடக்கும்
நாம் எந்தவொரு பதவிக்கும் ஆசைப்படாமல், தாழ்ச்சியோடு பணிசெயவதே
சாலச் சிறந்த ஒன்றாகும்.
ஆகவே, தூய ரெய்மன்ட்டின் விழாவாக் கொண்டாடும் நாம், அவரைப்
போன்று தாழ்ச்சியோடு பணிசெய்வோம், இறைவனுக்கு உகந்த வாழக்கை
வாழ்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல். |
|
|